04.03.1928 - குடிஅரசிலிருந்து.
டாக்டர். சுப்பராயன் அவர்கள் இப்போது பார்ப்பனர்களின் தாளத்திற்குத் தகுந்தபடி ஆடாததால் அவர் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வந்துவிட்டார்கள். நமது சட்டசபை என்பது பெரிதும் விளையாட்டுத் தனத்திற்கும், அயோக்கியத்தனத்திற்கும் உறைவிடமாகி விட்டதாக கருத வேண்டி இருக்கின்றதே தவிர ஏதாவது ஒரு கவுரவமோ கண்ணியமோ, பிரதிநிதித்துவமோ பொருந்தியது என்று சொல்வதற்கில்லை. இந்த ஒரு வருஷத்திற்குள்ளாக 3,4, தடவை நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டு வரப்பட்டாய்விட்டது. இதைப் போன்ற விளையாட்டு விஷயங்களே மிகுதியும் சட்ட சபைகளில் நடக்கின்ற தேயல்லாமல் பொதுஜனங்களுக்கு அனுகூலமாக ஒரு காரியமாவது நடந்திருப்பதாகச் சொல்வதற்கில்லை.
இப்போது கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லாத் தீர்மானத்தில் ஒரு குறிப்பிடத்தக்க விஷயம் என்னவென்றால் பார்ப்பனர் கட்சியாகிய காங்கிரஸ் என்கின்ற கட்சியில் 23பேரும், மந்திரி கட்சியில் 7 பேரும், ஜஸ்டிஸ் கட்சியில் 6 பேரும் எழுந்து நின்றதாகத் தெரிகின்றது. ஆகவே மூன்று கட்சிகளிலும் பிளவு ஏற்பட்டிருக்கிறதாகத் தெரிகிறது. ஆனால் ஜஸ்டிஸ் கட்சியிலும் ஆறு பேர்கள் எழுந்து நின்றதாக ஏற்பட்டதானது பெரிய முட்டாள்தனமான காரியம் என்றே சொல்லுவோம். ஜஸ்டிஸ் கட்சியார் பார்ப்பனரல்லாதார் நன்மைக்காக சர்க்காருடன் ஒத்துழைப்பதைப் பற்றியும், சர்க்காரோடு ஒத்துழையாமை செய்வதைப் பற்றியும், அவர்களும் பார்ப்பனர்களைப் போல் தேசிய வேஷம் போடுவதைப் பற்றியும் நமக்கு சிறிதும் கவலையில்லை. ஆனால் அந்த அறிவு அதாவது பார்ப்பனரல்லாதார் நன்மைக்கு என்கின்ற அறிவு ஒரு சிறிதும் இல்லாமல் நூற்றுக்கு மூன்றுபேர் கொண்ட பார்ப்பன சூழ்ச்சிக்கு அனுகூலமான வழிகளில் பார்ப்பனருடன் ஒத்துழைக்கப் போவது நமது சமுகத்திற்கும் நாட்டிற்கும் ஆபத்தான காரியம் என்பதே நமதபிப்பிராயம். கொஞ்ச காலமாக பனகால் ராஜா அவர்களின் போக்கு மிகுதியும் ஒழுங்கற்றதாகவே போய்க் கொண்டிருக்கின்றது. கோயமுத்தூர் மகாநாட்டிலிருந்து குற்றத்தின்மேல் குற்றம், அறியாமை யின்மேல் அறியாமையாகவே, நடவடிக்கைகள் நடந்து கொண்டு வருகின்றன. இது ராஜா அவர்களின் பெரிய யுக்தியான காரியமாயும் இருக்கலாம். அதனால் ஏதாவது சில வெற்றி ஏற்பட்டதாகவும் காணலாம். ஆனால் இதெல்லாம் பார்ப்பனரல்லாதார் கட்சி தேய்ந்து போகும்படி யானதாகிவிடும் என்று நாம் பயப்படுவதுடன் ராஜா அவர்களும் கண்டிப்பாய் சீக்கிரத்தில் உணரக் கூடும் என்றே சொல்லுவோம். டாக்டர். சுப்பராயனிடம் இப்போது ஜஸ்டிஸ் கட்சிக்கு ஏற்பட்ட அவநம்பிக்கை என்னவென்று கேட்கின்றோம். இந்த விஷயத்தில் ஜஸ்டிஸ் கட்சிக்குள்ளும் ஏன் பிரிவு ஏற்பட இடம் உண்டாக வேண்டும்? பார்ப் பனர்கள் சைமன் கமிஷன் விஷயமாய் இந்த நம்பிக்கை இல்லாத் தீர்மானம் கொண்டு வந்தார்கள் என்பது ராஜா அவர்களுக்குத் தெரியாதா என்று கேட்கின்றோம்.
உண்மையில் இரட்டை ஆட்சியை ஒழிக்கத் தீர்மானம் கொண்டு வந்திருந் தால் அது வேறு விஷயம். அப்படிக்கில்லாமல் இரண்டு மந்திரிகளை இரட்டை ஆட்சிக்கு உதவிபுரிய விட்டுவிட்டு பார்ப்பன ஆட்சியின் அனுகூலத்திற்காக ஒரு தீர்மானம் பார்ப்பனக் கட்சியார் கொண்டு வந்தால் அதற்கு பார்ப்பனரல் லாதார் கட்சித் தலைவர் என்பவர் உதவி அளிக்கலாமா? என்பது நமக்கு விளங்கவில்லை. சூதாடுவதில் லாபமே ஏற்பட்டாலும் அதுகெட்டகாரியம் என்பதையும் அது எப்படியானாலும் கடைசியாக நஷ்டத்தையும் கஷ்டத்தையும் கொடுத்தே தீரும் என்பதையும் உணர்ந்து இனியாவது ராஜா அவர்கள் தயவு செய்து இந்த அரசியல் சதுரங்கத்தை விடுத்து கட்சியை உருவாக்க முயற்சிப்பாராக!
No comments:
Post a Comment