“பெரியார் - அம்பேத்கர் நட்புறவு -ஒரு வரலாறு” - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, April 10, 2021

“பெரியார் - அம்பேத்கர் நட்புறவு -ஒரு வரலாறு”

 - தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி -

தந்தை பெரியாருக்கும், அண்ணல் டாக்டர் அம்பேத்கருக்கும் ஏற்பட்ட  உறவு  -  நட்புக்கும்  மேலான  லட்சியப்  பூர்வமான  கொள்கை உறவாகும்.

ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்துப் பேசி பழகுமுன்பே, முகிழ்த்த கொள்கை லட்சிய நட்புறவு!

1924 இல் வைக்கத்தில், கீழ்ஜாதியர் - ஈழவர் - வைக்கத்தப்பன் கோவில் உள்ளது. அந்த கோயிலைச் சுற்றியுள்ள முக்கிய வீதிகளில் நடமாட முடியாது என்ற சமூக அநீதியை - மனித உரிமைப் பறிப்பை, எதிர்த்துத் தொடங்கப்பட்ட சத்தியாக்கிரக அறப்போரை நடத்தியவர்கள் - கைது செய்யப்பட்ட நிலையில், போராட்டத்தைத் தொடர்ந்து நடத்த முடியாத நிலை ஏற்பட்டது.

அதனால்  போராட்டத்தைத்  தொடங்கி  சிறையில் அடைக்கப்பட்டவர்கள் சார்பில், அதன் அமைப்பாளர் ஜார்ஜ் ஜோசப் அவர்கள் ஒரு கடிதம் எழுதினார் - தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரான தந்தை பெரியார் அவர்களுக்கு.

அதனைப் படித்து, வைக்கம் விரைந்து, சத்தியாக்கிரகத்திற்குத் தலைமை தாங்கி, தொடர்ந்து அறப்போரை தொடங்கினார்; ஏராளமானவர்களை தனது பேச்சாற்றலாலும், செயல் திறத்தாலும் ஒன்று திரட்டி, வைக்கம் சத்தியாக்கிரகம் ஒரு மனித உரிமைப் போராட்டம் என்பதை தனது  இரண்டு முறை சிறைத்தண்டனை மூலம் வரலாற்றில் பதிய வைத்தார்;  வைக்கம் வீரர்என்று திரு.வி..வால் பாராட்டப்பட்டார் தந்தை பெரியார். தெருக்கள் இதன் காரணமாகத் திறந்துவிடப்பட்டன.

அப்போராட்டத்திற்கு, திருவிதாங்கூர் சமஸ்தானம் சென்று நடத்திட தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் தந்தை பெரியார் .வெ.ராமசாமி முனைந்ததை, வர்ணாசிரமத்தில் நம்பிக்கை உள்ள காந்தியார் விரும்பவில்லை; இது அங்குள்ளோர் தீர்த்துக் கொள்ளவேண்டிய ஒரு பிரச்சினை என்பது போன்ற கருத்தோட்டத்தை காந்தியார் தொடக்க நாளில் கொண்டிருந்தார். அந்தக் கருத்தையொட்டி அவர் தந்தை பெரியாருக்கு எழுதிய கடிதத்திற்கு, காந்தியாரின் அணுக்கத் தொண்டன் என்ற முறையில் அவருக்கு மரியாதை கலந்த முறையில் எழுதிய பதில் கடிதத்தில் - “காந்திஜி அவர்களே, இங்கே அதே தெருக்களில் நாயும், கழுதையும், பன்றியும் அலைந்து திரிகின்றன - நடமாடுகின்றன. அவை என்ன சத்தியாக்கிரகம் செய்தா அந்த உரிமையைப் பெற்றன? ஆனால், ஆறறிவு படைத்த நம் ஈழவ - இழிஜாதி சகோதரர்களுக்கு அந்த உரிமை கிடைப்பதற்கு அமைதி வழியில் அறப்போர் - சத்தியாக்கிரகம் செய்வதில் என்ன தவறு என்று எனக்குப் புரியவில்லைஎன்று எழுதினார் தந்தை பெரியார்.களத்தில் இறங்கி தன் கடமையை ஆற்றினார்; தான் மட்டுமல்ல, தனது வாழ்விணையர் அன்னை .வெ.ரா.நாகம்மையார், தனது தங்கை எஸ்.ஆர்.கண்ணம்மாள் மற்றும் தாய்மார்களையும், தனது தொண்டர்கள், தோழர்களையும் ஈடுபடுத்தினார். ஓராண்டுக்குமேல் நடந்த அறப்போராட்டம், அந்த அரசர் இறப்புக்குப் பின் பொறுப்பேற்ற ராணியார் காலத்தில் வெற்றியுடன் முடிவுக்கு வந்தது; தெருக்கள் திறக்கப்பட்டன! சமூக உரிமை, மனித உரிமை மீட்டெடுக்கப்பட்டது!

அந்தக் காலகட்டத்தில் மராத்திய மண்ணுக்கு - மேல்நாட்டுப் படிப்பை முடித்துத் திரும்பிய அண்ணல் அம்பேத்கர் அவர்கள், குரலற்றவர்களின் குரல் () ஊமையர்களின் குரல் என்ற பொருளில் வந்த மராத்திய ஏடான மூக்கநாயக் என்ற ஏட்டில் மராத்தியத்திலிருந்தே இந்த வைக்கம் சத்தியாக்கிரகத்தை வரவேற்றுப் பாராட்டித் தலையங்கம் எழுதினார்!

அதை டாக்டர் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாற்றை சிறப்பாக எழுதிய தனஞ்செய்கீர் அவர்கள் பதிவு செய்திருக்கிறார்

‘But  the  most  outstanding  event  of  the  year  concerning  the  struggle of the Depressed Classes was the satyagraha or the passive resistance sponsored by Ramaswami Naicker, a non Brahmin leader, at  Vaikam  in  the  Travancore  State  for  vindicating  the  rights  of  the  Untouchables  to  use  a  certain  road  to  which  they  were  forbidden  entry. Its moral pressure and the spirit of righteous assertion had a tremendous  effect,  and  the  orthodox  Hindus,  for  a  while,  regained  their  civic  sense  and  sanity,  and  the  road  was  thrown  open  to  the  Untoucables.

Another  incident  took  place  at  this  time.  It  shook  both  sensible  touchables  and  self-respecting  Untouchables.  In  March  1926  an  Untouchable by name Murgesan entered a Hindu temple in Madras despite the customary ban on the Untouchables. He was discovered, arrested and convicted on a charge of defiling the Hindu temple.

Ambedkar was watching these developments very carefully He referred to the Vaikam struggle, a few months later, very touchingly in one of his editorials, on the eve of the Mahad satyagraha. These were notable events. Coming events cast their shadows before!’

மகத் சத்தியாக்கிரகத்திற்கு வைக்கம் சத்தியாக்கிரகம் முன்னோடியாக மட்டுமல்ல - வழிகாட்டியாகவும் திகழ்ந்தது.

அண்ணல் அம்பேத்கர் மகத் சத்தியாக்கிரகம் ஒரு சமூகப் புரட்சியை ஏற்படுத்த தந்தை பெரியாரின் வைக்கம் சத்தியாக்கிரகம் ஒரு முன்னோட்டம் செயல் ஊக்கியாக - சிந்தனை என்ற உலைக் கூடத்தில் செயல் வடிவமெடுக்கப் பெரிதும் துணை நின்றது!

மூக்கநாயக் பத்திரிகையில் அம்பேத்கர் எழுதிய தலையங்கம் - மராத்திய மொழியில் இருந்ததால், அதுபற்றிய தகவல்கூட தந்தை பெரியாரை எட்டியிருக்கக் கூடிய வாய்ப்பில்லை என்றாலும், கொள்கைப்பூர்வ நட்புறவு எந்தளவு வளர்ந்து கொண்டு வந்தது என்பதற்கு எடுத்துக்காட்டாக அம்பேத்கர் பற்றிய செய்திகளை தனதுகுடிஅரசுவார ஏட்டில் வெளியிட்டுக் கொண்டே இருந்தார்!

கொள்கையால் கொண்ட உறவு வளர்ந்தோங்கியே வந்துள்ளது என்பதற்கான தரவுகளைத் திரட்டித் தந்துள்ளோம்.

1936 ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற ஜாட்-பட்-தோடக் மண்டல் என்ற ஜாதி மறுப்பு சங்கத்தின் மாநாட்டிற்குத் தலைமை தாங்கிட, அந்த சங்கத்தில் உள்ள சிலரின் எதிர்ப்பையும் மீறி அம்பேத்கர் அவர்களைத் தலைமை தாங்கிட அழைத்தனர்.

டாக்டர் அம்பேத்கர் அந்த அழைப்பினை ஏற்றார்; அவரது ஜாதி - தீண்டாமை ஒழிப்பு - ஒரு அறுவை சிகிச்சை நிபுணரின் அணுகுமுறையாகவே இருக்கும்; ஏதோ புண்ணுக்குப் புனுகு பூசும் வகையில் ஒருபோதும் இருக்காது என்பதை மோப்பம் பிடித்த உயர்ஜாதி ஹிந்துக்களானவர்கள் (அக்குழுவில் இடம்பெற்றவர்களில் சிலர்) டாக்டரிடம் ஒரு தந்திரத்தைக் கையாண்டு, உங்கள் உரையை அச்சிட்டு நூலாக வெளியிடவிருக்கிறோம்; எனவே, நீங்கள் நிகழ்த்தப் போகும் தலைமை உரையை முன்கூட்டியே எங்களுக்கு அனுப்புங்கள் என்று கேட்டனர்; வெள்ளை உள்ளம் கொண்ட டாக்டர் அம்பேத்கரும் அவ்வாறே அவ்வுரையை அனுப்பி வைத்தார்!

அதில், ஹிந்து மதத்தை, பார்ப்பனீ யத்தை, கீதை போன்ற மத நூல்களைத் தாக்கிக் கண்டனம் செய்யும் பகுதிகளை நீக்கிவிடுமாறு கேட்டனர். டாக்டர் அம்பேத்கர் மறுத்துவிட்டார்!

அவர்களது தன்மையை - அவர்களைப் பற்றிய உண்மையை டாக்டர் அம்பேத்கர் உணர்ந்து புரிந்துகொண்டார்; எனது உரையில் எந்த மாற்றத்தைச் செய்தாலும், நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன் என்று திட்டவட்டமாகக் கூறி, உரையின் நகலை திருப்பி அனுப்பி வைக்கச் சொன்னார்! அவ்வுரையைஜாதியை ஒழிக்க வழி!’ எனத் தலைப்பிட்டுAnihilation of casteஎன்ற நூலாக பிறகு, ஆங்கிலத்தில் வெளியிட்டார்.

அதை அறிந்த தந்தை பெரியார், அந்நூலை தமிழில் மொழி பெயர்த்து வெளியிட்டுப் பரப்ப அவரிடத்தில் அனுமதி பெற்று, 1936 ஆம் ஆண்டிலேயே ஜாதியை ஒழிக்க வழி! என்ற தலைப்பில் குடிஅரசு பதிப்பகம் சார்பில் முதன்முதலில் வெளியிட்டார்!

டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் அந்த உரை ஆங்கிலம் தவிர மற்ற மொழிகளில் வெளிவந்ததில் முதலாவது தமிழில் தந்தை பெரியார் வெளியிட்டஜாதியை ஒழிக்க வழி!” தமிழ் நூல்தான் என்பது பெருமைக்குரிய செய்தி மட்டுமல்ல; பலரும் அறிந்திராத செய்தியுமாகும்.

மிகப் படித்த அறிவுலகத்தவர் மட்டுமே அறிந்திருந்த புரட்சியாளர் அம்பேத்கர் பெயர் தமிழகத்தில் பிரபலமாவதற்கு இந்த நூலே ஒரு முரசொலித்த முதல் நூலாகும்!

தந்தை பெரியார் - டாக்டர் அம்பேத்கர் கொள்கை உறவு அதற்கு முன்பே சில பல சுயமரியாதை இயக்கக் கொள்கைப்பூர்வ நடவடிக்கைகள்மூலம் வளர்ந்து வந்திருந்தது என்பதற்கு இடையில் பல நிகழ்வுகளை தந்தை பெரியாரின் பச்சை அட்டைக்குடிஅரசுதெளிவாகப் பதிவு செய்துள்ளதன் மூலம் எவரும் புரிந்துகொள்ள இயலும்!

பார்ப்பனர்களும் மற்ற உயர்ஜாதி படித்த கூட்டமும் டாக்டர் அம்பேத்கரின் பெயரை இருட்டடித்த காலகட்டத்தில் தென்னாட்டில் டாக்டர் அம்பேத்கர் வரவேற்கப்பட்டார் - தந்தை பெரியாரின் இதுபோன்ற நடவடிக்கைகள்மூலம்!

சகப் போராளிகளை அடையாளம் கண்டு, அவர்களை திராவிட மக்களுக்குள் பிரபலப்படுத்த தந்தை பெரியார் தயங்கியதே இல்லை!

1929 ஆம் ஆண்டு செங்கற்பட்டில் நடைபெற்ற முதல் சுயமரியாதை மாநாட்டின் காலத்தில், மராத்தியில் சுயமரியாதை மாநாடு நடக்கிறது பம்பாயில் - நாசிக்கில். பரஸ்பர வாழ்த்துகள் பரிமாறிக் கொள்ளப்படுகின்றன. நீதிக்கட்சி ஆட்சியின் கொள்கை சிறப்புகளை உணர்ந்த அவ்வாட்சியின் பலவீனம்பற்றி தந்தை பெரியாருக்கு என்ன கருத்தோ அதே கருத்துதான் டாக்டர் அம்பேத்கரின் கருத்தாகவும் இருந்தது. மனதிற்பட்டதை ஒளிக்காமல், மறைக்காமல் திறந்த மனதோடு எடுத்துச் சொல்பவர்கள் இந்த இரண்டு சமூகப் புரட்சியாளர்களும்!

ஹிந்து மதம் என்பது ஜாதி, வருணாசிரமம் என்ற பேதத்தின்மீதே கட்டப்பட்ட - சனாதன மதமே! நீங்கள் (தாழ்த்தப்பட்டவர்கள்) தீண்டத்தகாதவராகவும், சமமற்றவராகவும் நடத்தப்படுவதற்கு ஏதாவது காரணம் இருக்குமானால், அது நீங்கள் ஹிந்துவாக இருப்பதனால் மட்டுமே என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்! - இதே கருத்துதான் தந்தை பெரியாருக்கும்.

அதுபோலவே, காந்தியாரின் வர்ணாசிரம பிடிப்புப்பற்றி டாக்டர் அம்பேத்கர் மிக அழகாகப் படம் பிடித்தார்!

வர்ணாசிரமக் கொள்கையை தன்னால் கைவிட முடியாது; தேவையுமில்லை என்று காந்தியார் உறுதியாய் நின்றார். எனவேதான், காந்தியை எதிர்ப்பதுதான் சரியான வழி - ஜாதியை, தீண்டாமையை ஒழிப்பதற்கு வேறு வழி கிடையாது என்று திட்டவட்டமாக எழுதினார்.

(காந்தி - ரானடே நூலில்)

அரிஜன் என்ற பெயரை ஒருபோதும் தந்தை பெரியாரோ, டாக்டர் அம்பேத்கரோ ஏற்றுக்கொண்டதே கிடையாது.

ஜாதி, தீண்டாமை ஒழிப்புக்கு முக்கியமானது பார்ப்பனீய ஒழிப்பு என்பதில் இருவருக்குமே ஒரே நோக்குதான்!

சமத்துவத்திற்காகப் போராடி, அதற்கு எதிராக உள்ள அத்துணைத் தடைகளையும் ஒழிக்கவேண்டும் என்கின்ற சமத்துவப் போரில் - பார்ப்பனீய எதிர்ப்பு - அழிப்பு என்பது தேவையானது - நோயின் மூலமும் அதுதானே!

பார்ப்பனீயமும் எவ்வளவு கொடுமையானது என்பதைகாந்தியும், காங்கிரசும் தீண்டப்படாத மக்களுக்குச் செய்ததென்ன?” என்ற நூலில் மிகவும் அறிவியல்பூர்வமாக டாக்டர் அம்பேத்கர் எழுதுகிறார்.

ஆறு அம்சங்களானது பார்ப்பனீயம்

1) பல ஜாதியினரிடையே படிக்கட்டு ஜாதி முறையாக ஒருவர் கீழ் மற்றொருவர் என்று சமத்துவமின்மையில்கூட படி நிலை உருவாக்கம் - தந்திரம் - சூழ்ச்சி (Graded Inequality)

2. சூத்திரர்கள், தீண்டாதார்கள்மீது எந்த ஆயுதங்களையும் பிரயோகப்படுத்தத் தயங்காத நிலை.

3. அறவே கல்வி அறிவு இவ்விரு பிரிவினர்களுக்கும் மறுக்கப்படக் காரணமாகவும், தடை செய்யும் அதிகாரம் வாய்ந்த, சக்தி வாய்ந்தவர்களால் தடை.

4. பெரும் பதவிகளில் சூத்திரர்களோ, தீண்டத்தகாதவர்களோ அமர முடியாதவாறு தடை.

5. எந்த சொத்தும் அடிமைகளான சூத்திரர்களோ, தீண்டத்தகாதவர்களோ வாங்கும் உரிமைத் தடை

6. பெண்களை அடிமைகளாக்கும் தன்மை!

மனிதத் தன்மையை - மனித உரிமையை அழித்த ஆதிக்கச் சின்னம் பார்ப்பனீயம் என்பதற்கு இரண்டு பழைய நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டுகிறார் (தனது, ‘காந்தியும், காங்கிரசும் தீண்டாத மக்களுக்குச் செய்ததென்ன?’ நூலில்).

1. கேரளத்தில் முன்பு, மண முடித்த கீழ்ஜாதி பெண்களின் முதலிரவுக்கு உயர்ஜாதி பார்ப்பனர்கள் உரிமை கொண்டாடி, நடத்திய அநாகரிகக் கொடுமை.

2. வங்காளத்தில் ஒவ்வொரு நாளும் உயர்ஜாதி பார்ப்பனர்களின் காலைக் கழுவிய தண்ணீரைப் பருகிய பிறகே தங்கள் பணியைத் தொடங்கிய கொடுமை!

தந்தை பெரியாரும் இதுபோன்ற பல நிகழ்வுகளைச் சுட்டிக்காட்டி, அடிமைகளே இதனை மனமுவந்து செய்து மோட்சத்திற்கு வழி இது என்று நம்பிய கொடுமை இது! என்றார் - பற்பல மேடைகளில்!

வகுப்புரிமை - சமூகநீதி - இட ஒதுக்கீடு எல்லாவற்றிலும் இருவருடைய கருத்தும், செயற்பாடும் ஒரே வகைதான்!

மனுஸ்மிருதியை எதிர்த்து எரித்தது; அரசமைப்புச் சட்டம், ஜாதியைப் பாதுகாக்கும் தன்மைக்காக அதனை எரித்தது.

எரிப்பேன் என்று முன்பே முழங்கினார் டாக்டர் அம்பேத்கர் - அதன் சூழ்ச்சியை உணர்த்தினார்.

இருவருடைய திட்டங்கள் பெரிதும் ஒத்த கருத்தும், அணுகுமுறையும் கொண்டவையே!

சமத்துவத்திற்கான சமர் புரிந்துள்ள இந்த இருபெரும் தலைவர்கள் தாங்கள் வாழ்ந்த காலத்தில் பெரிதும் தூற்றப்பட்டவர்கள் - இருட்டடிப்புச் செய்ய நினைத்து, இன எதிரிகள் ஏமாந்தனர்

இங்குள்ள சிலர் (குறிப்பாக மேனாள் ஆளுநரும், அரசு தலைமைச் செயலாளருமான திரு..பத்மநாபன் அய்..எஸ். (மாணவப் பருவத்தில்) உள்பட சிலர்) அண்ணல் அம்பேத்கரை சந்தித்தபோது, பெரியார் .வெ.ரா.வின் வழியைப் பின்பற்றுங்கள் என்று கூறியவர் அண்ணல் அம்பேத்கர். (திரு..பத்மநாபன் அவர்களின் பேட்டி, 2002, டிசம்பர் 1-15, உண்மை இதழ்).

சேலம் (1944) மாநாட்டினைத் தொடர்ந்து பெரியாருக்கு எதிராக மேனாள் நீதிக்கட்சித் தலைவர்கள் அம்பேத்கர் அவர்களை விருந்துக்கு அழைத்து, பெரியாரின் முடிவைக் குறித்து குறை சொன்னபோது, பெரியாரைப் பின்பற்றுங்கள் என்று அறிவுரை கூறினார்.

இதனைசோறு போட்டு உதை வாங்கிய கதைஎன்று குடிஅரசு இதழ் (30.9.1944) வர்ணித்தது!தந்தை பெரியாரைப் பொறுத்தவரை அவர் அதிகமான தடவை சந்தித்து கலந்து உரையாடிய தேசியத் தலைவர் ஒருவர் உண்டென்றால், அது பாபா சாகேப் அண்ணல் அம்பேத்கர் அவர்களேயாவார்.

No comments:

Post a Comment