இதுவரை எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். படிப்புகளுக்கு மட்டுமே 'நீட்' தேர்வு நடத்தப்பட்டு வந்த நிலையில், புதிய கல்விக் கொள்கையின்படி, கலை, அறிவியல் உள்ளிட்ட அனைத்து படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு கட்டாயம் என்று அனைத்திந்திய தொழில்நுட்பக் கவுன்சிலின் தலைவர் அனில் சஹஸ்ரபுத்தே தெரிவித்துள்ளார்.
அனைத்துக் கலை, அறிவியல் படிப்புகளுக்கும் நுழைவுத் தேர்வு நடத்தப்பட்டால், ஒடுக்கப்பட்ட ஏழை எளிய மாணவர்கள், முதல் தலைமுறை பட்டதாரிகள் எனப் பல்வேறு தரப்பினரும் பாதிக்கப்படுவார்கள் என்று கல்வியாளர்கள் எச்சரிக்கின்றனர். அதோடு, கல்வித்துறைக்கு இது போன்ற மோசமான நுழைவுத் தேர்வு முறைகளை பரிந்துரைத்துள்ள புதிய கல்விக் கொள்கை 2020, அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. அதனால், ஏற்படும் ஆபத்தைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு அளிக்கப்பட வேண்டியது அவசியமான ஒன்றாகும்.
இந்தியாவில் இன்னும் பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) சட்டம் அப்படியேதான் இருக்கிறது. யுஜிசி சட்டப்படி, ஒரு பல்கலைக்கழகத்தில் அதன் கல்லூரிகளில் ஒரு மாண வனை சேர்த்துக்கொள்வதற்கு என்ன கல்வித் தகுதி வேண்டும் என்பதை பல்கலைக்கழகம்தான் முடிவு செய்யும். இன்றுவரை 10, + 2 தான் அதற்கான கல்வித் தகுதியாக உள்ளது.
இப்போது ஏஅய்சிடிஇ தலைவர், புதிய கல்விக் கொள்கை 2020-இல் இருப்பதைத் தான் கூறியிருக்கிறார். தேசிய தேர்வு முகமை அனைத்து இளநிலை படிப்புகளுக்கும் தகுதித்தேர்வு நடத்தி, அதில் மாணவர்கள் பெறும் மதிப்பெண்ணை வைத்துதான் அனைத்துப் பல்கலைக்கழகங்களிலும் கல்லூரிகளிலும் மாணவர்களை சேர்க்க வேண்டும் என்று புதிய கல்விக் கொள்கை கூறுகிறது.
ஜனநாயகம் பற்றி எனக்கு யாரும் பாடம் எடுக்க வேண்டாம் என்று சொல்கிறார் பிரதமர் மோடி. ஆனால், தேசிய கல்விக் கொள்கை பற்றி நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் விவாதிக்கப்படவில்லை. நேடியாக சட்டம் அமல்படுத்தப்படுவதாக செய்தியாளர்கள் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
கல்வி ஒத்திசைவுப் பட்டியலில்தான் இடம் பெறுகிறது.
அப்படியென்றால், அதில், மத்திய - மாநில அரசுகளுக்கு அதிகாரம் இருக்கிறது. அதனை மத்திய அரசு முழுமையாக எடுத்துக் கொள்வதற்கு அரசமைப்புச் சட்டம் அனுமதிக்கவில்லை. இது சட்டத்துக்கு எதிரானது. எந்த மாநில அரசுகளும் புதிய கல்விக் கொள்கை குறித்து இன்னும் முழுமையாக விவாதிக்கவில்லை. இதனை மாநில அரசுகள் எப்படி ஏற்றுக்கொண்டன? இதில், மாநிலங்களின் நிலைப்பாடு என்ன?
"சட்டம் கூட்டாட்சி தத்துவத்தின் அடிப்படையில் அமைந்திருக்கிறது. கூட்டாட்சித் தத்துவத்தில் மாநிலத்துக்கு இருக்கக்கூடிய உரிமையை மத்திய அரசு, தான் நினைத்த மாதிரி எல்லாம் மாற்ற முடியாது" என்று டாக்டர் அம்பேத்கர் விளக்குகிறார். இதுதான் அரசமைப்புச் சட்டத்தின் வலிமை.
புதிய கல்விக் கொள்கை 2020 பள்ளிக் கல்விக்கும், கல்லூரிப் படிப்புக்கும் தொடர்பு இல்லை என்று கூறுகிறது. மேல்நிலைப் படிப்பில் தேர்ச்சி பெற்றால் அந்த சான்றிதழுக்கு எந்த மதிப்பும் இல்லை என்று கூறுகிறது. அப்படி என்றால் +2 வரையான கல்வி தேவையற்றது தானா?
'நீட்' தேர்வு என்பது மருத்துவப் படிப்புக்கு மட்டும் என்று நாம் நீண்ட நாளாக தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறோம்.
'நீட்' தேர்வை எந்த விதமான நிபுணர் குழுவும் பரிந்துரைக்கவில்லை. நிபுணர் குழு பரிந்துரைத்தது சி.எம்.இ.டி தான். அதையும்கூட விரும்பாத மாநிலங்களுக்கு விலக்கு அளியுங்கள் என்று ரஞ்சன் ராய் சவுத்ரி தலைமையிலான நிபுணர் குழு தெரிவித்துள்ளது. இதை நாடாளுமன்ற நிலைக்குழுவிலும் குறிப்பிட்டுள்ளார்கள்.
மோடியின் முதல் 5 ஆண்டு ஆட்சியின்போது இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டது. இந்தக் குழு தனியார் மருத்துவக் கல்லூரிகளில் முறைகேடு நடக்கிறது. அதைத் தடுப்பதற்காக சி.எம்.இ.டி வேண்டும் என்று கூறினார்களே தவிர
'நீட்' வேண்டும் என்று கேட்கவில்லை.
“இந்த புதிய கல்விக் கொள்கை அனைத்து குழந்தைகளும் 6ஆம் வகுப்பில் இருந்தே ஒரு கைத்தொழிலை கற்றுக்கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. ரமேஷ் பொக்ரியால் ஒரு பேட்டியில் சமுதாயத்துக்கு தச்சு வேலை செய்பவர்கள் தேவை. இப்போது இருக்கும் பள்ளிகள் தச்சர்களை உருவாக்குவதில்லை. தேசிய கல்விக் கொள்கை 2020 நடைமுறைக்கு வந்தால் பள்ளிகள் அத்தகைய திறன்கொண்ட மாணவர்களை உருவாக்கும்” என்று எழுதுகிறார். இதைவிட
அப்பட்டமான குலக்கல்வி என்ற புதிய கல்விக் கொள்கையை யாரால் இவ்வளவு தெளிவாக எழுத முடியும்?
குறிப்பாகச் சொல்லப் போனால் மத்திய பா.ஜ.க. அரசின் கொள்கை அடி மட்டத்தில் உள்ள தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் உயர்நிலை மேனிலைக் கல்வியைத் தாண்டக் கூடாது என்பதை வெளிப்படையாகக் கூறாமல், பார்ப்பனீயத்துக்கே உரித்தான மனு தர்மப் பார்வையோடு பின்னப்பட்ட சூழ்ச்சி வலையே!
குறிப்பிட்ட இந்தச் சிறுபான்மைக் கூட்டத்தின் வலைகளைக் கிழித்தெறியும் பெரியார் மண் - அது இந்தியத் துணைக் கண்டம். முழுவதும் எதிரொலிக்கும் என்பதில் அய்யமில்லை.
No comments:
Post a Comment