உங்களுக்கு எது வேண்டும்? சிந்தித்து வாக்களிப்பீர்!
புதுவை, கடலூர், நெய்வேலியில் தமிழர் தலைவர் பரப்புரை
கடலூர், ஏப். 1- நாட்டில் நடப்பது - திராவிடத்துக்கும், சனாதனத்துக்கும் இடையிலான கருத்து ரீதியான தேர்தல் - திராவிடம் என்பது சமத்துவம், சுயமரியாதை, சமூகநீதி - சனாதனம் என்பது ஏற்றத் தாழ்வுகளுக்கு நியாயம் கற்பிப்பது - நிலை நிறுத்துவது என்பதை நினைவில் கொண்டு திராவிட தத்துவத்திற்கு வாக்களியுங்கள் என்று திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சட்டமன்ற வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (31.3.2021) புதுச்சேரி மாநிலம் மற்றும் கடலூர், நெய்வேலி தொகுதிகளில் தமிழர் தலைவர் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார்.
அதன் விவரம் வருமாறு:
புதுச்சேரி தேர்தல் பரப்புரை
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் சட்டமன்ற வேட்பாளர்களை ஆதரித்து புதுச்சேரி சுதேசி மில் அருகில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரையாற்றினார். (31.3.2021)
புதுச்சேரி மாநில மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி யின் வேட்பாளர்களை ஆதரித்து திராவிடர் கழகத்தின் சார்பில் புதுச்சேரி சுதேசி மில் அருகில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு புதுச்சேரி மாநில தலைவர் சிவ.வீரமணி தலைமை வகித்தார். மண்டல தலைவர் இரா.சடகோபன் வரவேற்புரை வழங்கிட கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் பேசினர்.
நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது,
புதுவை மாநிலத்தைப் பொறுத்தவரை மிகவும் வித்தியாச மான தேர்தல். இங்கே நடக்கக் கூடிய தேர்தல் இந்தியாவே உற்றுப்பார்க்கும் தேர்தலாகும். காரணம் மதச்சார்பின்மை, சமதர்மம், ஜனநாயகம் இவற்றின் மீது நம்பிக்கை வைத்துள் ளவர்கள் சந்திக்கும் தேர்தலாகும்.நமது மேனாள் முதல்வர் நாராயணசாமி அவர்கள் பல்வேறு பொறுப்புகளில் இருந் தவர், சமூகநீதியிலே ஆழ்ந்த நம்பிக்கை உள்ளவர், மக்கள் வாக்களித்து ஆட்சிக்கு வந்தவர், அந்த ஆட்சியைக் கெடுத்துவிட்டவர்கள் டில்லியிலிருந்து கொல்லைப்புற வழியாக வந்துள்ளார்கள். மக்களிடம் நியாயம் கேட்கிறோம். புதுவை மக்களின் மானப்பிரச்சினை. எப்படி குறுக்கு வழியில் ஆட்சியைப் பிடிக்கலாம் என்று இன்றுகூட ஆங்கில நாளிதழில் செய்தி வந்துள்ளது. புதுச்சேரி முதல்வர் தொடர்ந்து நான்கரை ஆண்டுகள் ஆட்சி செய்ததே சாதனைதான். ஒவ்வொரு நாளும் முள் படுக்கையில் இருந்து வந்தது போல் ஆட்சியை நடத்தினார். கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் நடந்த தேர்தலில் 30 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் 29 இடங்களில் பா.ஜ.கவுக்கு டெபாசிட் போனது என்று ஆங்கில 'இந்து' பத்திரிக்கை தலையங்கத்தில் எழுதியுள்ளது.
'பே! பே!! எல்லாருக்கும் பே! பே!!'
பொய் சொன்னதாகப் போடப்பட்ட வழக்குக்குப் போனவரிடம் அவரது வழக்குரைஞர் "உன்னிடம் எதைக் கேட்டாலும் பேச இயலாதவர் போல 'பே! பே!' என்று சொல்லி நடி" என் சொல்லி கொடுத்திருந்தார்.
அவரும் எதிர் வழக்குரைஞர் கேள்வி கேட்டதற்கு பேச இயலாதவர் போல நடித்து, "பே! பே!" என்று சொன்னார். நீதிபதி கேள்வியை கேட்டார். அதற்கும் "பே! பே!" என்றார். "என்னய்யா இது?" என்றார் நீதிபதி. அதற்கு இவரின் வழக்குரைஞர் "அவர் வாய் பேச முடியாதவர்ங்க!" என்றார். "அடடா வாய்பேச முடியாதவர் எப்படி பொய் சொல்லியிருப்பார்? அவருக்கு எப்படி தண்டனை தருவது" என்று சொல்லி விட்டு அவருக்கு சாதகமாகத் தீர்ப்பைக் கொடுத்தார் நீதிபதி.
வெளியே வந்ததும் "பரவாயில்லையா நான் சொல்லிக் கொடுத்தது போல நல்லா நடிச்சய்யா! சரி எனக்கு ஃபீஸ் கொடு" என்று கேட்டார் வழக்குரைஞர். அதற்கும் அவன் "பே! பே!!" என்று சொல்லிவிட்டான். இதுதான் இப்போது புதுச்சேரி அரசியலில் நடக்கப்போகிறது.
ரங்கசாமிக்கும் பே!பே!! தான்.
நமச்சிவாயத்துக்கும் பே! பே!!
வேறு யாராக இருந்தாலும் பே! பே!! தான்.
(புதுச்சேரி தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தமிழர் தலைவர்)
ஜனநாயகம் பிழைக்க வேண்டும். மக்களாட்சி என்பது காக்கப்பட வேண்டும்.அதுதான் எங்களுக்குக் கவலை. கிரண் பேடி என்ற ஒருவரை இங்கே அமரவைத்து முதல் வருக்கு நெருக்கடி கொடுத்தெல்லாம் மறக்க முடியுமா? இந்தியாவிலேயே ஒரு முதலமைச்சர் மக்கள் மத்தியில் வந்து போராட்டத்தில் ஈடுபட்டது இங்கேதான்.
புதுச்சேரியில் திரிசூலங்களைப் பயன்படுத்தித் தான் இத்தனையும் செய்தார்கள். மூன்று நியமன எம்.எல்.ஏ.க்கள், மத்திய அரசின் ஆறு அதிகார மய்யங்கள், அளவில்லாத பணம் - இவை மூன்றும் தான் என்று 'ஃபிரண்ட் லைன்' ஏடு எழுதியுள்ளது.
பலர் இப்போது முதல்வர் கனவோடு வலம் வருகிறார்கள். ரங்கசாமியும் சரி, இங்கிருந்து போன நமச்சிவாயமும் சரி, வேறு யாரும் இங்கு முதல்வராக வரமுடியாது. அவர்கள் வேறு ஒரு நபரை, ஓர் அம்மையாரைத் தயார் செய்து வைத்திருக்கிறார்கள். அவரைக் கொண்டு வந்து இங்கு அமர வைக்கத்தான் இவ்வளவு முயற்சியும் நடக்கிறது.
பொய்யைப் பரப்புகிறார்கள்
மத்திய ஆட்சியில் இருக்கும் கட்சி இங்கே இருந்தால்தான் புதுச்சேரிக்கு உரிய நிதி, வசதிகள் கிடைக்கும் என்று சிலர் பொய்யைப் பரப்பிக் கொண்டிருக் கிறார்கள். அவர்களுக்குக் கட்சிக்கும், ஆட்சிக்கும், அரசுக்கும், அரசியலுக்கும் வேறுபாடு தெரியவில்லை என்பதோடு, அரசமைப்புச் சட்டமும் தெரியவில்லை. இம்மக்களின் ஜனநாயக உரிமையை யாரும் பறித்து விட முடியாது என்று தமது உரையில் குறிப்பிட்டார்.
பரப்புரை கூட்டத்தில் இ.யூ.மு.லீக் தலைவர் ஜிகினி முகமது அலி, ம.ம.க. தலைவர் சகாபுதீன், கழக காப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, மண்டல செயலாளர் அறிவழகன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.
முடிவில் மண்டல அமைப்பாளர் ராஜு நன்றி கூறினார்.
கடலூர் தொகுதி பரப்புரை
கடலூர் சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் கோ. அய்யப்பனை ஆதரித்து புதுப்பாளையத்தில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (31.3.2021)
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் கடலூர் தொகுதி தி.மு.க. வேட்பாளர் கோ. அய்யப்பன் அவர்களை ஆதரித்து புதுப்பாளையத்தில் நடைபெற்றத் தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் தென்.சிவக்குமார் தலைமை வகித்தார். நகர தலைவர் எழிலேந்தி வரவேற்புரையாற்றினார்.
மாவட்ட தலைவர் தண்டபாணி, மண்டல செயலாளர் தாமோதரன், மண்டல தலைவர் அரங்க.பன்னீர்செல்வம், தி.மு.க.நகர செயலாளர் ராஜா, மண்டல இளைஞரணி செயலாளர் பஞ்சமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க.தேர்தல் பணிக்குழு செயலாளர் இள. புகழேந்தி தொடக்க வுரையாற்றினார்.
ம.தி.மு.க.மாவட்ட செயலாளர் இராமலிங்கம், காங் கிரஸ் கட்சி தலைவர் சந்திரசேகரன், வி.சி.க. நிர்வாகி ஸ்டீபன் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.
தொடக்கத்தில் கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றினர்.
நிறைவாக திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.
அவர் தனது உரையில் குறிப்பிட்டதாவது:
அடிமை ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும்
இந்த கடலூரில் உங்களிடம் உரிமையோடு வாக்குகள் கேட்டு வந்திருக்கிறேன். நான் இந்த மண்ணின் மைந்தன். அந்த காலத்திலிருந்து - 1947லிருந்து தேர்தலை சந்தித்துள் ளோம். இப்போது நடக்கும் தேர்தல் மிக விசித்திரமான தேர்தல். தமிழ்நாட்டு மக்களின் உயிரும் மானமும் மிக முக்கியம். பத்தாண்டு கால அடிமை ஆட்சிக்கு முடிவு கட்ட வேண்டும். கருத்துக் கணிப்பை விட மக்கள் கணிப்பை வைத்து சொல்கிறோம்.எடப்பாடிக்கு சென்று விட்டு வந்து இதை சொல்லுகிறேன். ஒரு அமைச்சரும் தப்ப முடியாது.
செய்கூலி இல்லாமல் சேதாரம் இல்லாமல் சிந்தாமல் சிதறாமல் உருவான கூட்டணி இந்தக் கூட்டணி. இரட்டை வேடம் போடுவதுதான் அந்தக் கூட்டணியின் தன்மை. நீட் தேர்வு என்று கொண்டு வந்து 14 பிள்ளைகள் உயிரை பறித்து விட்டார்களே! மோடி அடிக்கடி வருவதன் மூலம் தான் தி.மு.க.விற்கு நல்லது. ஆட்சியை அடகு வைத்து விட்டார்களே என்று கேட்டால் மத்திய அரசுடன் ஒத்து போகனும் என்று விளக்கம் தருகிறாரே முதல்வர். நீங்கள் செய்வது ஒத்து போவதல்ல.ஒத்து ஊதுகிறீர்கள்.
திராவிடம் என்பது மூச்சுக்காற்று. திராவிடம் என்பது சமூகநீதி. திராவிடம் என்பது வெற்றி, வெற்றியே! எனவே அய்யப்பன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று கேட்டுக் கொண்டார்.
முடிவில் நகர கழக செயலாளர் சின்னத்துரை நன்றி கூறினார்.
நெய்வேலி பரப்புரை
நெய்வேலி சட்டமன்ற தொகுதி தி.மு.க. வேட்பாளர் சபா. இராஜேந்திரன் அவர்களை ஆதரித்து ஆர்ச்கேட் அருகில் நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்தில் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் உரை கேட்கத் திரண்டிருந்தோர் (31.3.2021)
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் நெய்வேலி தொகுதி தி.மு.க. வேட்பாளர் சபா.இராஜேந்திரன் அவர்களை ஆதரித்து ஆர்ச்கேட் முன்பு
நடைபெற்ற தேர்தல் பரப்புரை கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் தண்டபாணி தலைமை வகித்தார்.மாவட்ட அமைப்பாளர் மணிவேல் வரவேற்புரையாற்றினார்.
மண்டல தலைவர் அரங்க.பன்னீர்செல்வம், மண்டல செயலாளர் தாமோதரன், மாவட்ட செயலாளர் சிவக்குமார், மண்டல இளைஞரணி செயலாளர் பஞ்சமூர்த்தி, மண்டல மகளிரணி செயலாளர் ரமாபிரபா ஜோசப், பொதுக்குழு உறுப்பினர் புத்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தி.மு.க.ஒன்றிய குழு பொறுப்பாளர் குணசேகரன், காங்கிரஸ் கட்சி மாநில பொதுச்செயலாளர் இளஞ்செழியன், வி.சி.க. தொகுதி பொறுப்பாளர் அதியமான், தொ.மு.ச. தலைவர் இராமச்சந்திரன், ம.ம.க. மதார்ஷா, சி.பி.அய் நகர செயலாளர் வெங்கடேசன், சி.பி.எம்.நிர்வாகிகள் திருஅரசு, பாலமுருகன், ம.ஜ.க. பசீர் அஹமது உள்ளிட்ட கூட்டணி கட்சிகளைச் சேர்ந்த தோழர்கள் கலந்து கொண்டனர்.
கழக சொற்பொழிவாளர் இரா.பெரியார் செல்வன், திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் ஆகியோர் உரையாற்றினர்.
நிறைவாக சிறப்புரையாற்றிய திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தனது உரையில் குறிப்பிட்டது வருமாறு:
ஸ்டாலின் அலை
நம்முடைய பாதுகாப்புக்கு நம்முடைய அறிவார்ந்த சிந்தனை காக்கப்பட வேண்டும். தமிழகம் முழுவதும் சுற்றி வந்து விட்டோம்.ஒன்று உறுதியாகிவிட்டது.வெற்றி பெற்று கோட்டைக்கு செல்லவிருப்பவர் நம்முடைய தளபதி ஸ்டாலின் அவர்கள் தான். ஸ்டாலின் அலை என்பது சாதாரண அலை அல்ல. சுனாமி போல அலை வீசுகிறது. இரண்டு கூட்டணி தான் இப்போது! ஒன்று திராவிடம்.மற்றொன்று சனாதனம்! ஒன்று சமதர்மம். மற்றொன்று குலதர்மம். மிஸ்டு கால் கொடுத்து ஆள் சேர்க்கும் கூட்டம்.அவர்கள் சொந்த காலில் நிற்பவர்கள் இல்லை.மிஸ்டு காலில் நிற்பவர்கள். அவர்களை நம்பி வாக்களித்தால் அது தற்கொலைக்கு சமம்.
கட்சியையும், ஆட்சியையும் பிரதமர் மோடி வழி நடத்துகிறார் என்று முதல்வர் பழனிசாமி சொல்கிறார். உங்கள் அம்மா அப்படியா சொன்னார்.லேடியா? மோடியா? என்றல்லவா கேட்டார். இப்போது அவரைத் தேடி ஓடி சேடி ஆகிவிட்டீர்களே பெண்களுக்குப் பாதுகாப்பு இல்லை, பெண்களை அவமரியாதை செய்து விட்டார்கள் என்று திராவிட இயக்கத்திற்கு மனுதர்ம வாதிகளாகிய நீங்கள் சொல்லிக் கொடுப்பதா? எங்களிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டுமே தவிர வடநாட்டில் இருந்து யாரும் வரத் தேவையில்லை. பா.ஜ.க. தேர்தல் அறிக்கையை தொலைநோக்குப் பத்திரம் என்று போட்டுள்ளார்கள்.அது தொலைநோக்குப் பத்திரம் அல்ல! தொல்லை நோக்குப் பத்திரம். எனவே சபா.இராஜேந்திரன் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றிபெறச் செய்யுங்கள் என்று தமது உரையில் குறிப்பிட்டார்.
மேற்கண்ட தேர்தல் பரப்புரை பயணத்தின் மூன்று கூட்டங்களிலும் திராவிடர் கழகப் பொதுச்செயலாளர் இரா.ஜெயக்குமார், மாநில கழக அமைப்பாளர் இரா.குணசேகரன், பெரியார் வீர விளையாட்டு கழக தலைவர் பேரா.ப.சுப்பிரமணியம், மாநில மாணவர் கழக செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், அமைப்புச் செயலாளர் மதுரை செல்வம், மாநில மாணவர் கழக அமைப்பாளர் இரா.செந்தூரபாண்டி, தி.என்னாரெசு பிராட்லா உள்ளிட்ட தோழர்கள் பங்கேற்றனர்.
No comments:
Post a Comment