திராவிடர் கழக இளைஞரணி இணையவழி தொடர் சொற்பொழிவு (22) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, April 30, 2021

திராவிடர் கழக இளைஞரணி இணையவழி தொடர் சொற்பொழிவு (22)

 சமத்துவமின்மைக்கான ஆணிவேரை அகற்றி சமத்துவ சமுதாயம் படைத்தது

பெரியாரும்,திராவிடர் கழகமுமாகும் -  வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி

தஞ்சை, ஏப்.30 இன்றைய தினம் உலக நாடுகள் அனைத்தும் கரோனா எனும் பெரும் தொற்றின் கோரப்பிடியில் சிக்கி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கும் சூழ்நிலையில் கழகத் தோழர்கள் சோர்வடைந்து விடக்கூடாது. இந்த ஊரடங்கு காலத்தையும் இயக்கத் தோழர்களுக்கு பயிற்சிக்களமாக மாற்றிக்கொள்கிற வகையில் காணொலி வாயிலாக பரப்புரைக் கூட்டங்களை நடத்த வேண்டும் என்ற தமிழர் தலைவரின் அறிவிப்பாணையை ஏற்று திராவிடர் கழக இளைஞரணி சார்பில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் இணையவழி தொடர் சொற்பொழிவு நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக 22 ஆவது இணைய வழி தொடர் சொற்பொழிவு கூட்டம்  சமத்துவமே திராவிடம் எனும் தலைப்பில்  ஏப்.25 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை மாலை 6.30 மணி முதல் 8.25 மணி வரை நடைபெற்றது.

தஞ்சை மாவட்ட இளைஞரணி செயலாளர் நா.வெங்கடேசன் வரவேற்புரையாற்றினார். விழுப்புரம் மண்டல இளைஞரணி செயலாளர் தா. இளம்பரிதி தலைமை வகித்தார். மாநில இளைஞரணி செயலாளர் இளந்திரையன் இக்கூட்டத்தை ஒருங்கிணைத்து இணைப்புரை வழங்கினார்.  மாநில இளைஞரணி துணைச் செயலாளர்கள் ஈரோடு காமராஜ், பொழிசை கண்ணன், ஆத்தூர் சுரேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

கரோனாவும் திராவிடத்தின் சாதனையை உறுதி செய்துள்ளது

திராவிடர் கழக பொதுச்செயலாளர் ஜெயக்குமார் தொடக்க உரையாற்றினார்.அப்போது, திராவிடர் இயக்கம் செய்த சாதனைகள் ஒவ்வொரு காலகட்டத்திலும் மிகத் தெளிவாக நாட்டு மக்கள் விளங்கிக் கொண்டிருக்கிறார்கள். இப்போது கரோனாவும் திராவிடத்தின் சாதனையை உறுதி செய்துள்ளது. ஏனென்றால் குஜராத் உள்ளிட்ட

வடமாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டில் சிகிச்சை பெற வருகின்றனர். ஆக்சிஜனுக்காக மற்ற மாநிலங்கள் திண்டாடும் போது தமிழகத்தில் மருத்துவமனைகளிலேயே அதனை உற்பத்தி செய்யும் வாய்ப்பை உருவாக்கி வைத்தது திராவிடத்தின் சாதனை என்றார்.

"சமத்துவமே திராவிடம்"

இக்காணொலி கூட்டத்தில் திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் வழக்குரைஞர் சே. மெ. மதிவதனி கலந்துகொண்டு "சமத்துவமே திராவிடம்" என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார். அவ்வுரையில் புதிதாக தங்களை பிரபலப்படுத்த நினைக்கக் கூடியவர்கள் திராவிடத்தை எதிர்ப்பது, பெரியார் என்ன செய்தார் என்று பேசுவது திராவிடர் கழகத்தையும் அதன் தலைமையையும் குறை சொல்வது போன்ற கேள்விகளை முன்வைக்கிறார்கள், அவர்களுக்கெல்லாம் பதில் சொல்லும் விதமாக இந்த தலைப்பு இங்கே தரப்பட்டுள்ளது எனவும், இரண்டாயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணிலே நிலவிவரும் சமத்துவமின்மையை உணரச் செய்தது திராவிடம். கல்வி, வேலைவாய்ப்பு, கலை, இலக்கிய பண்பாட்டுத் துறைகளில் ஒரு சமூகத்தினர் மட்டும் ஆதிக்கம் செலுத்தும் சூழ்நிலை இருந்தது, இந்த சமத்துவமின்மையை எதிர்த்து நிறைய தலைவர்கள் போராடினார்கள். அவர்களில் யாரும் செய்யாத ஒரு செயலை செய்தவர்தான் தந்தை பெரியார். போராடிய தலைவர்கள் அனைவரும் கீழ்த்தட்டு மக்களை பார்த்து நீங்கள் படிக்கவேண்டும், முன்னேற வேண்டும் என கூறினார்கள். ஆனால் இந்த சமத்துவமின்மைக்கு காரணமான ஆணிவேரை, ஆரியத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்யவில்லை, தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் தான் அதனை எதிர்த்து பிரச்சாரம் செய்தது.

திராவிடம் என்பது அனைத்தையும் விட வலிமையானது

திராவிடம் என்பது அனைத்தையும் விட வீரியமானது. எப்படி என்றால் திராவிடம் என்ற வார்த்தையிலே ஜாதி ஆதிக்கம் இருக்காது, மேட்டுக்குடி தன்மை இருக்காது, ஜாதி ஒழிப்புத்தான் முதன்மையாக இருக்கும். ஜாதியை பாதுகாப்பது ஆரியம், ஜாதியற்ற நிலையை உருவாக்குவது திராவிடம். மதவாதத்தையும், மதம் சார்ந்த பிரச்சினைகளையும், கலவரங்களையும் பறைசாற்றுவது ஆரியம். மதவாதத்தை நேரடியாக எதிர்த்து நிற்பது திராவிடம். மூடநம்பிக்கைகளை ஊக்குவிப்பது ஆரியம். அறிவியலை நம்புவது திராவிடம். பெண்ணடிமைத்தனத்தை பறைசாற்றுவது ஆரியம். பெண்ணுரிமை பேசுவது, அதற்காக பிரச்சாரம் செய்வது திராவிடம். ஆதிக்கத்தின் ஆணிவேராக இருப்பது ஆரியம். அனைவருக்கும் அனைத்தும் என்று சொல்லுவது திராவிடம். சனாதனம் என்பது ஆரியம். சமத்துவம் என்பது திராவிடம். மனுவை ஏற்றுக் கொள்வது ஆரியம். மனிதத்தை போற்றுவது திராவிடம். என்று திராவிடத்திற்கு ஆரியத்திற்கும் உள்ள வேறுபாடுகளை எடுத்துக்கூறினார்.

சமத்துவத்தை நேசித்த தலைவர் தந்தை பெரியார்

"எந்தப் பார்ப்பானும் பணக்காரனாக இருப்பதை நான் எதிர்க்கவில்லை அதனால் தன்னை உயர்ந்தவனாகவும் மற்றவர்களை தாழ்ந்தவனாகவும் கூறிக்கொண்டு ஜாதியை யார் ஆதரிக்கிறார்களோ, ஜாதிக்கு எது ஆணிவேராக இருக்கிறதோ அந்த பார்ப்பனியத்தை தான் பெரியார் எதிர்க்கிறார். எந்தக் கடவுளின் பெயரால், எந்த ஜாதியின் பெயரால், எந்த மதத்தின் பெயரால் நம்முடைய மக்களை எதிர்க்கிறார்களோ அவை அனைத்தையும் நான் எதிர்ப்பேன் என்று ஆதிக்கத்தின் எதிர்ப்புதான் தனது நோக்கமாக கொண்டு செயல்பட்டவர் பெரியார். 1946இல் திராவிடர் கழகம் பெயர் மாற்றம் செய்த போது இந்த இயக்கம் எதிர்ப்பு உணர்ச்சி ஸ்தாபனம் என்று பறைசாற்றியவர் தந்தை பெரியார். அரசியல் துறையில் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்க்கிறோம், கலை இலக்கியத்துறையில் ஆரியப் பண்பாட்டை எதிர்க்கிறோம், சமுதாயத்தில் பார்ப்பனர்களின் ஆதிக்கத்தை எதிர்க்கிறோம் என்று பட்டியல் போட்டு ஆரம்பிக்கப்பட்டதுதான் இந்த திராவிடர் கழகம். இவற்றையெல்லாம் பெரியார் எதிர்க்க வேண்டிய நோக்கம் என்னவென்றால் பெரியார் சமத்துவத்தை நேசித்தார் அந்த சமத்துவத்திற்கு எதிராக இருந்த அனைத்தையும் எதிர்த்தார், எதிர்த்த இயக்கம் திராவிடம். கோவிலுக்கு தேவையான பணத்தை கொடுக்கும் தமிழர்கள், கோவிலுக்கு போகக்கூடிய தமிழர்கள் சமஸ்கிருதம்தான் தேவபாசஷை என்பதை நம்பினார்கள். அப்போதுதான் பெரியார் கேட்டார் உன்னுடைய பாஷை சமஸ்கிருதம்தான் தேவபாஷை என்றால் தமிழ் நீஷ பாஷை என்று நீ சொல்வதற்கு என்ன உரிமை இருக்கிறது என்று. மதத்தின் பெயரால், அந்த மதத்தை வைத்து கடவுளின் பெயரால் ,அந்த கடவுளோடு பேசக்கூடிய சட்டம்தான் மனுநீதி என்று சொல்லி அந்த மனு நீதியில் சூத்திரன் படிக்க கூடாது என்று இருக்கு, நீ படிக்காதே என்று சொன்னவுடனே மக்கள் அதனை நம்பினார்கள், அப்போது பெரியார் அந்த மதத்தை எதிர்த்து பிரச்சாரம் செய்தபோது மனுநீதி அடித்து நொறுக்கப்பட்டது. அதன் விளைவாக இன்று ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்கள் படிக்கும் சூழ்நிலை ஏற்பட்ட உடனே இன்றைக்கு வேறுவழியில் தேசியம் என்ற பெயரில், இந்தி என்ற பெயரில் சமஸ்கிருத ஆதிக்கத்தை செலுத்த நினைக்கிறார்கள். அன்றைக்கு பெரியார் மொழியில் சமத்துவம் வேண்டும் என்று போராடியது அது இன்றளவும் தேவைப்படுகிறது, எப்படி என்றால் புதிய கல்விக்கொள்கை 17 மொழிகளில் மொழிபெயர்க்கப்படுகிறது தமிழைத் தவிர, இதிலிருந்து அவர்களின் நோக்கம் என்ன என்பதை மக்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

சமத்துவத்தை நிலை நாட்டியது திராவிடமே

ஒருவருடைய பெயரை வைத்து ஜாதியை மதத்தை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு, இன்னும் ஒரு படி மேலே போய் சொன்னால் பாலின வேறுபாடு கூட அறிய முடியாத அளவுக்கு பெயரிலும் சமத்துவ மிக்கபெயர்களை சூட்டி புரட்சி செய்தது திராவிடம். ஜாதி ஏற்றத்தாழ்வு, பொருளாதார ஏற்றத்தாழ்வு இப்படி ஏதும் இன்றி அனைவருக்கும் சமமான கல்வி பெற வேண்டி சமச்சீர் கல்வி கொண்டு வந்ததுதான் திராவிடம். வரலாற்றில் நிறைய தலைவர்கள் இருந்தார்கள் அவர்கள் அனைவரும் குறிப்பிட்ட ஒரு வகுப்புக்காக பேசியிருப்பார்கள், தன் ஜாதிக்காக பேசியிருப்பார்கள், தன்னுடைய மதத்தை பரப்புவதற்காக பேசியிருப்பார்கள். ஆனால், இவை அனைத்தையும் தாண்டி மனித சமத்துவத்தை, மானிட சமத்துவத்தை பேசிய தலைவர் தந்தை பெரியார் ஒருவரே, அதற்காக பெரியார் எடுத்த ஆயுதம் தான் இந்த திராவிடம், ஒரு காலத்தில் ஜாதி பெயர்களை தாங்கி நின்ற தெருக்கள் இருந்த இந்த நாட்டிலே அனைத்து சமூகத்தவரும் சமமாக வாழ கொண்டுவரப்பட்டது தான் சமத்துவபுரம். இப்படி எந்த நாடும், எந்த மாநிலமும் சிந்திக்காத ஒன்றினை சிந்தித்து செயல்படுத்தி சமத்துவத்தை நிலைநாட்டியது திராவிடம் என்று கூறி சிறப்புரையாற்றினார்.

கூட்டத்தில்,தஞ்சை மண்டல இளைஞரணி செயலாளர் ராஜவேல், புதுவை இளைஞரணி தலைவர் தி.இராசா, கடலூர் மண்டல இளைஞரணி செயலாளர் பஞ்சமூர்த்தி, குடந்தை மாவட்ட இளைஞரணித் தலைவர் .சிவகுமார், பட்டுக்கோட்டை மாவட்ட இளைஞரணி செயலாளர் அரவிந்த், தஞ்சை மாவட்ட இளைஞரணி தலைவர் சுப்பிரமணியன், அரியலூர் மாவட்ட இளைஞரணி தலைவர் சு.அறிவன், போடி இளைஞரணித் தலைவர் வெற்றி,  அமைப்புச் செயலாளர்கள் மதுரை செல்வம், பொன்னேரி பன்னீர்செல்வம், தஞ்சை மண்டல திராவிடர் கழக செயலாளர் குருசாமி, மண்டல தலைவர் சடகோபன், செயலாளர் பட்டாபிராமன்,  தஞ்சை மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் அமர்சிங், மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் அருணகிரி, திருத்துறைப்பூண்டி மாவட்ட செயலாளர் கிருஷ்ணமூர்த்தி, விருதுநகர் மாவட்ட செயலாளர் ஆதவன், தாராபுரம் மாவட்ட செயலாளர் சண்முகம், கடலூர் மாவட்டத் தலைவர் தண்டபாணி, பட்டுக்கோட்டை மாவட்டத் தலைவர் வீரையன்,  திருச்சி மாவட்டத் தலைவர் ஆரோக்கியராஜ், குடந்தை மாவட்டத் தலைவர் நிம்மதி, திருவாரூர் மாவட்டச் செயலாளர் வீர.கோவிந்தராசு,சாமிநாதன், தயாளன், கோபால், பிரகாஷ், சங்கர், இராமச்சந்திரன், திருத்துறைப்பூண்டி புகழேந்தி, . முருகேசன், கோவை இராஜா, கோவை இரமேசு, திருச்செங்கோடு சுரேசு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

புதுவை மாநிலத் தலைவர் சிவ.வீரமணி இணைய வழியாக ஒருங்கிணைப்பு செய்து உதவினார்.

கூட்டத்தின் நிறைவில் தஞ்சை மாநகர இளைஞரணி தலைவர்

.பெரியார்செல்வம் நன்றி கூறினார்.

தொகுப்பு :  நூலகர் முனைவர் வே.இராஜவேல் தஞ்சை

No comments:

Post a Comment