ஏப்ரல் ஒன்று என்றால் 'முட்டாள்கள் தினம்' என்று சொல்லப்படுவதுண்டு - உலகம் முழுவதுமே இப்படி ஒரு வழக்கு உண்டு.
ஏதோ ஆண்டுக்கு ஒரு நாள்தான் முட்டாளாக இருப்பது போன்ற ஒரு நினைப்பு! எந்தெந்த வகைகளில், பிரச்சினைகளில் எல்லாம் முட்டாளாக இருக்கிறார்கள் என்பதைப் பகுத்தறிவோடு சிந்தித்துப் பார்த்தால் புலனாகாமல் போகாது.
இப்பொழுது தேர்தல் நேரம், வாக்காளர்களை முட்டாள்களாக நினைத்துக் கொண்டு சில அரசியல் கட்சிகள் வாக்குறுதிகளை வாரி வாரி வழங்கிக் கொண்டு இருக்கின்றன.
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு
கி. வீரமணிஅவர்கள் நேற்று முதல் நாள் (30.3.2021) சென்னை சைதாப்பேட்டைத் தொகுதியைச் சார்ந்த ஈக்காட்டுதாங்கலில் ஆற்றிய உரையில் குறிப்பிட்டதுபோல -
"வீட்டுக்கு வீடு யானை தருகிறேன்" என்று அ.இ.அ.தி.மு.க. சொன்னாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை!
கடந்த தேர்தல் அறிக்கையில் கொடுக்கப்பட்ட, அளிக்கப்பட்ட உறுதிகள் எந்த அளவுக்கு நிறைவேற்றப்பட்டன என்பதுதான் முக்கியமான கேள்வி.
மக்கள் மறதிக்குப் பெயர்போனவர்கள் - அதனால் நினைவில் வைத்துக் கொண்டு ஆளும் கட்சியினரைப் பார்த்துக் கேட்கப் போவதில்லை என்ற அசட்டுத் துணிச்சல்!
இதில் வேடிக்கை - வினோதம் என்னவென்றால், கடந்த தேர்தல் அறிக்கையில் இடம் பெற்றவைகளே, வேறு சொற்களில் புதிய தேர்தல் அறிக்கையிலும் இடம் பெற்றதுதான்
தி.மு.க.வின் தேர்தல் அறிக்கை என்பது தான் ஆழ்ந்த ஆய்வு நோக்கத்துடன், போதிய அவகாசம் எடுத்துக் கொண்டு, பொது மக்களையும் சந்தித்து, அறிவார்ந்த அனுபவமிக்கவர்களால், பொறுப்புணர்ச்சியுடன் தயாரிக்கப்பட்ட ஒன்றாகும். திமுகவின் கூட்டணி கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளும் நடைமுறைக்கு ஏற்ற வகையிலான உறுதிமொழிகளின் கொள்கலனாக அமைந்துள்ளன.
ஆனால் தமிழ் நாட்டில் அஇஅதிமுக தலைமையிலான பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகளால் தனித்தனியே தயாரித்து வெளியிடப்பட்ட தேர்தல் அறிக்கைகள் முரண்பாட்டின் அவியலாகவே உள்ளன.
வேளாண் சட்டங்கள் மூன்றையும் நாடாளுமன்றத்தில் அதிமுக உறுப்பினர்கள் ஆதரித்ததன் மூலம்தான் இம்மூன்று சட்டங்களும் நிறைவேற்றப்பட முடிந்தது.
அன்று நாடாளுமன்றத்தில் வேளாண் சட்டங்களை ஆதரித்து விட்டு இப்பொழுது வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் அஇஅதிமுக குறிப்பிட்டு இருப்பது என்ன?
"மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை (CAA) கைவிட வேண்டும் என்று மத்திய அரசை அ.இ,அண்ணா திமு கழகம் தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வலியுறுத்தும்."
(அஇஅதிமுக தேர்தல் அறிக்கை வரிசை எண்:
80 பக்கம் 50)
என்று குறிப்பிட வேண்டிய அளவுக்குத் தலைகீழ் பல்டி அடித்துள்ளது. தன்னை ஒரு விவசாயி என்று மார்தட்டும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி செல்லும் இடங்களில் எல்லாம் ஒட்டு மொத்த வாக்காளர்களின் எதிர்ப்பு அலைகளின் 'கோபாக்கினி'யை சந்திக்க வேண்டிய அவசியமும், நெருக்கடியும் ஏற்பட்டு விட்டது. அதனுடைய தாக்கம்தான் அஇஅதிமுகவின் இந்தத் தேர்தல் அறிக்கையில் இப்படிப்பட்ட அறிவிப்பு.
பா.ஜ.க.வை பொறுத்த வரையில் அது போட்டியிடும் அத்தனை இடங்களிலும் படுதோல்வியைச் சந்திக்கத்தான் போகிறது. பா.ஜ.க.வுக்கும் அது வெள்ளிடை மலையாகத் தெரியவே செய்யும்.
ஆனால் அதைப்பற்றி பா.ஜ.க. கவலைப்படப் போவதில்லை. இன்னும் சொல்லப் போனால், அஇஅதிமுகவும் இந்தத் தேர்தலில் தோற்க வேண்டும் என்பதுதான் அதன் அடிமனத்தில் பதுங்கி இருக்கும் ஆசையும்கூட!
அஇஅதிமுக நலிவடைந்து, அந்த இடத்தைத் தாம் பற்றிக் கொள்ள வேண்டும்; திமுக - எதிரான பா.ஜ.க. என்ற இரு நிலை அரசியல் ஏற்பட வேண்டும் என்ற திட்டம்தான் பா.ஜ.க.வின் கையிருப்பில் உள்ள மோ(ச)டியான திட்டமாகும்.
இப்பொழுதுள்ள நெருக்கடியிலிருந்து கரை சேர்ந்தால் போதும் என்று
அ.இ.அ.தி.மு.க.வின் தலைமை கருதக் கூடும். இது அக்கட்சியின் தொலைநோக்கோடு பார்க்கும் புத்திக் கூர்மையற்ற நிலைதான்.
சட்டமன்றத்திலேயே முதல் அமைச்சர் எம்.ஜி.ஆர். சொன்ன துண்டு. "இந்த நாட்டில் இரண்டே கட்சிகள்தான்
- ஆட்சிகள் - திமுக - அஇஅதிமுகதான்" என்று சொல்லவில்லையா? 'புரட்சித் தலைவர் ஆட்சி!' என்று பொத்தாம் பொதுவில் பக்திக் கோஷம் போல ஒலித்து என்ன பயன்?
வருமுன்னர்க் காவாதான் வாழ்க்கை எரிமுன்னர்
வைத்தூறு போலக் கெடும். (குறள் - 435)
திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் தம் தேர்தல் பரப்புரையில் "அடமானம் வைக்கப்பட்ட அஇஅதிமுகவை மீட்கும் பொறுப்பும் திமுக தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களுக்குத் தான் இருக்கிறது" என்று சொன்னது - வெறும் சொல்லாடல் அல்ல!
எந்த நிலையிலும் திராவிட அடிப்படை அரசியலுக்கு தந்தை பெரியார் தமிழ் மண்ணில் சேதாரம் ஏற்பட்டு விடக் கூடாது என்ற பொறுப்புணர்ச்சியின் அடிப்படையில் தான்.
நேரடியாக தேர்தல் அரசியலில் கால் பதிக்காத திராவிடர் கழகத்தால் தான் இந்த வகையில் நுட்பமாக, கூர்மையாக சிந்திக்கவும் முடியும்.
தேர்தலில் ஏப்ரல் முட்டாளாக இல்லாமல் ஏப்ரல் முதல் தேதி உட்பட எந்த நாளிலும் அறிவைப் பயன்படுத்துபவர்கள் தமிழ்நாட்டு மக்கள். சிந்திக்கட்டும் - செயல்படட்டும் - உதய சூரியன் வெற்றிக் கதிர்களைப் பரப்பட்டும்! பரப்பட்டும்!!
No comments:
Post a Comment