காவல்துறையில் பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 2, 2021

காவல்துறையில் பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா?

தாமாக முன்வந்து விசாரித்த நீதிபதி உத்தரவு

சென்னை, மார்ச் 2- முதல்வர் பாதுகாப்பு பணியின்போது காவல்துறையில் பெண் அதிகாரிக்கு பாலியல் தொல்லை கொடுத்த சிறப்பு டிஜிபி மீதான வழக்கை உயர்நீதிமன்றம் கண்காணிக்கும் என்று சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சிறப்பு டிஜிபி மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பாக  நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் தானாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்தார். நேற்று (1.3.2021) காலை நீதிமன்றம் தொடங்கியதும், காவல்துறையில் பெண் அதிகாரிக்கே இந்த நிலைமையா. இந்த பிரச்சினையை இந்த நீதிமன்றம் தானாக முன்வந்து விசாரிக்கவுள்ளது. மதியம் இந்த வழக்கு விசாரிக்கப்படும் என்று தெரிவித்தார்.

இதையடுத்து மதியம் 2.15 மணிக்கு மீண்டும் நீதிமன்றம் கூடியது. நீதிபதி தானாக முன்வந்து வழக்கை விசாரிக்கவுள்ள தகவல் வழக்குரைஞர்கள் மத்தியில் பரவியது. ஏராளமான பெண் வழக்குரைஞர்களும், ஆண் வழக்குரைஞர்களும் நீதிமன்ற அறையில் 2 மணிக்கே கூடத்தொடங்கினர். இதையடுத்து, 2.20 மணிக்கு தனது இருக்கைக்கு வந்த நீதிபதி, தன் மீதான பாலியல் தொந்தரவு குறித்து புகார் தர ஒரு பெண் அதிகாரி இந்த அளவுக்கு அலைக்கழிக்கப்பட்டுள்ளார் என்றால் காவல்துறை பெண் உதவி ஆய்வாளர், பெண் காவலர்களின் நிலையை யோசிக்க முடியவில்லை. இது மிகுந்த வருத்தத்தை அளிக்கிறது.

இதை உணர்ந்துதான் அரசமைப்பில் நீதிமன்றத்திற்கு தரப்பட்டுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தானாக வழக்கு விசாரணக்கு எடுக்கப்பட்டுள் ளது. பெண் அதிகாரி மீதான பாலியல் தொந்தரவு வழக்கை நீதிமன்றம் கண்காணிக்கும். இந்த விவகாரத்தை அரசியலாக்க வேண்டாம். மேலும், சம்பந்தப்பட்ட பெண் அதிகாரியின் பெயரை பயன்படுத்தவோ, வெளியிடவோ கூடாது. இந்த வழக்கை விசாரிக்கும் விசாரணை அதிகாரி அப் போதைக்கப்போதைய விசாரணை முன்னேற்றம் குறித்து அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். இந்த வழக்கு தலைமை நீதிபதிக்கு உரிய உத்தரவுக்காக பரிந்துரைக்கப்படுகிறது என்று உத்தரவிட்டார்.

No comments:

Post a Comment