அழி - பழி வழக்குகள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 9, 2021

அழி - பழி வழக்குகள்

கடந்த 6ஆம் தேதி திருச்சி மாநகரில் மக்கள் இயக்க உரிமைகளுக்கான கூட்டமைப்புச் சார்பில் உரிமை முழக்கப் பேரணி மாநாடு ஒன்று நடைபெற்றது.

அம்மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களும், உரைகளும் ஒரு ஜனநாயக நாட்டில் கருத்துரிமை மதிக்கப்பட வேண்டும், மாறுபட்ட கருத்துள்ளவர்கள் மீது அழி - பழி வழக்குகளைத் தொடர்வது, சிறையில் அடைப்பது குறித்து ஆரோக்கியமான முறையில் அமைந்திருந்தன அத்தீர் மானங்களும், உரைகளும் என்பது சுட்டிக்காட்டப்பட வேண்டியவையாகும்.

இனப்படுகொலைக்கான பன்னாட்டு விசாரணை மற்றும் ஈழத்துக்கான பொது வாக்கெடுப்பு ஆகிய இரண்டையும் வலியுறுத்தி மே பதினேழு இயக்கத்தின் சார்பில் வீரவணக்கப் பொதுக்கூட்டம், 2019 மே 19-ஆம் தேதி சென்னை தியாகராயர் நகரில் நடந்தது. இனப்படுகொலையின் பத்தாம் ஆண்டு நினைவுப் பொதுக்கூட்டத்தில், மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி பேசினார். அப்போது விடுதலைப் புலிகள் குறித்துப் பேசியிருக்கிறார். இதனால் அவர்மீது இரண்டு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்திருக்கிறது காவல்துறை.  தடைசெய்யப்பட்ட இயக்கம் குறித்து பேசியதற் காகவும், விதிமுறைகளை மீறியதற்காகவும் 153- மற்றும் 505 ஆகிய இரண்டு பிரிவுகளில் திருமுருகன் காந்தி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக காவல்துறை தெரிவித்தது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்து அய்.நா., மனித உரிமைகள் மாநாட்டில் பேசியதற்காகவும் ஏற்கெனவே திருமுருகன் காந்தி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். அப்போதே கூடுதலாக மூன்று வழக்குகள் அவர்மீது போடப்பட்டது. இந்நிலையில் தற்போது அவர்மீது இரண்டு வழக்குகள் போடப்பட்டிருக்கிறது. தந்தை பெரியார் சிலைக்கு மாலை போட்டதற்கும் கூட ஒரு வழக்கு!

திருவாரூர் மாவட்டத்தில் அய்ட்ரோ கார்பனுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட 430 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அய்ட்ரோ கார்பன் திட்டம் தமிழக விளை நிலங்களை அழிக்கும், மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் என்று கூறி அத்திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, திருவாரூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் தொடர் முழக்கப் போராட்டம் நடைபெறும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் ஏற்கெனவே அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி திருவாரூர் மாவட்டத்தில், திருவாரூர், கோட்டூர், மன்னார்குடி, நீடாமங்கலம், நான்காம்சேத்தி, சேரன்குளம் உள்ளிட்ட 13 இடங்களில்  போராட்டங்கள் நடைபெற்றன. பல்வேறு இடங்களில் வயல்களிலும் குளங்களிலும் இறங்கி விவசாயிகள், பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் அனுமதியின்றி போராட்டம் நடத்தியதாக அவர்கள் மீது காவல் துறையினர் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளனர். 80 பெண்கள் உள்பட 430 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. (2.6.2019)

தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பாக சிபிஅய் இயக்குநர் தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மேலும் ஓய்வு பெற்ற நீதிபதி அருணா ஜெகதீசனின் ஆய்வு அறிக்கையும் வெளியாகியுள்ளது

தூத்துக்குடி மக்கள், ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தி 100 நாள் தொடர் போராட்டங்களில் ஈடு பட்டனர். மேலும் 100-ஆவது நாள் போராட்டத்தின் போது தூத்துக்குடி மக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நோக்கி பேரணியாக சென்றனர். போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தமிழக காவல்துறை துப்பாக்கிச்சூடு நடத்தியது. இதில் 15 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

மேலும், இது தொடர்பான வழக்குகளை சிபிஅய் விசார ணைக்கு மாற்றி உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். நீதிமன்ற உத்தரவின் பேரில் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு வழக்கை சிபிஅய் விசாரித்து வருகிறது. 

 புயல் தாக்கியதில் காணாமல் போன மீனவர்களை மீட்க போராட்டம் நடத்திய 15,000 பேர்கள்மீது வழக்கு பதிவு செய்துள்ளது தமிழக அரசு.

    இப்படி வழக்கு வழக்கு என்று போட்டுக் கொண்டே போனால் வழக்கு என்பதற்குத்தான் என்ன மரியாதை?

கூடங்குளம் போராட்டக்காரர்கள்மீது வழக்கு - 2019 டிசம்பர் 27ஆம் தேதியன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இலங்கை அகதிகள் முகாமில் உள்ள தமிழர்களிடம் தேசிய குடியுரிமைச் சட்டம் குறித்து கருத்தறியச் சென்ற செய்தியாளர், ஒளிப்படக்காரர் கைது.

உத்தரப்பிரதேசத்தில் ஆட்சிப் பொறுப்புக்கு வந்த சாமியார் ஆதித்யநாத் ஒரே ஆணையில் 22 ஆயிரம் வழக்குகளை ரத்து செய்தார். இதில் ஆதித்யநாத்மீது இருந்த 57 வழக்குகளும் அடங்கும்.

வரும் நல்லாட்சி சட்ட விரோத வழக்குகளை ரத்து செய்தும், சட்ட விரோத கைதிகளை விடுதலை செய்தும் தன் கடமையைச் செய்யும் என்று எதிர்பார்ப்போம்.

No comments:

Post a Comment