அறிஞர் அண்ணாவின் உரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் உரை
சென்னை, மார்ச் 9 திராவிடத்தை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது! உறுதியாக சொல்கிறோம் "திராவிடம் வெல்லும்" என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.
நூல்கள் வெளியீட்டு விழா
5.3.2021 அன்று மாலை சென்னை பெரியார் திடலில் இயக்க நூல்களை வெளியிட்டு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் உரையாற்றினார். அவரது உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:
இந்தப் புத்தகம் ஓர் அரசியல் ஆவணம்!
அண்ணா பேசுகிறார்:
‘‘தோழர்களே! சுயமரியாதை இயக்கத்தில் அறிவு, அனுபவம், ஆண்டு யாவற்றாலும் என்னிலும் மிக்கார் பலரிருக்க, மிக சமீப காலத்திலே இயக்கத்தில் ஈடுபட்டு, தொண்டனாக இருந்து வரும் என்னை, இந்த மகாநாட்டிற்குத் தலைவனாக இருக்கும்படி கட்டளையிட்டது, எனக்கு வியப்பையே அதிகமாகத் தருகிறது. என் போன்ற வாலிபருக்கு, இது போன்ற கவுரவம் கிடைப்பது, காலப்போக்கையும், நமது இயக்கத்தின் வேகத்தையுமே காட்டுகிறது. என்னை இம்முறையில் கவுரவித்த உங்களுக்கு என் மனமார்ந்த வந்தனத்தைச் செலுத்துகிறேன்'' என்றார் அண்ணா.
ஏன் இந்த உரையைப் போட்டிருக்கின்றோம் என்றால், 30 ஆண்டுகள் கழித்து 1967 இல் ஆட்சிக்கு வருகிறார். இந்தப் புத்தகம் ஒரு பொலிட்டிக்கல் டாக் குமெண்ட் - இது ஒரு அரசியல் ஆவணம். சாதாரண புத்தகத்திற்கும், இந்தப் புத்தகத்திற்கும் வித்தியாசம் உண்டு. ஏனென்றால், இன்றைய காலகட்டத்தில், திராவிடத்தை அழிப்போம் என்று சொல்கிறார்கள்; ஒழிப்போம் என்று சொல்கிறார்கள்.
‘‘திராவிடத்தை எந்தக் கொம்பனாலும்
அசைக்க முடியாது!''
ஆனால், நாம் உறுதியாக சொல்கிறோம், ‘‘திரா விடம் வெல்லும்'', ‘‘திராவிடத்தை எந்தக் கொம்ப னாலும் அசைக்க முடியாது'' என்பதற்கு ஆதாரம் என்னவென்றால், ஒரு கொள்கைப் போர் - லட்சியப் போர் இப்பொழுது நடந்துகொண்டிருக்கின்றது.
வரப் போவது வெறும் தேர்தல் அல்ல நண்பர்களே - இது ஒரு போர் - அதற்கு என்ன அடிமுனை என்பதைக் கண்டுபிடிக்க முடியாது.
புராண காலத்து ஒரு கதையை சொல்வார்கள் - ஆனால், சுவையானது. மயில்ராவணனின் உயிரைக் கண்டுபிடிக்கவேண்டும் என்றால், ஏழு, எட்டு குகைகளைத் தாண்டி, அதற்குள் ஒரு சிங்கம் இருக் கும் - அதனிடம் போராடி - அதற்குப் பிறகு ஒரு வண்டு இருக்கும் - அந்த வண்டிடம் போராடினால் தான், மயில்ராவணனின் உயிரைக் கண்டுபிடிக்க முடியும் என்று சொல்வார்கள்.
அதுபோன்று, எந்தக் கொம்பனாலும், பெரியார் போட்ட விதையைக் கண்டுபிடித்து அழிக்கலாம் என்று யாராலும் முடியாது.
அதைத்தான் இங்கே அருள்மொழி அவர்களும், கவிஞர் அவர்களும், அறிவுக்கரசு அவர்களும் சொன்னார்கள். இந்தப் புத்தகத்தில் உள்ளவற்றை எடுத்துச் சொன்னார்கள்.
எங்களை அழிக்கலாம் என்று நினைக்கிறார்கள்; ஆனால், அவர்களால் முடியவில்லை. ஆட்சியை நீங்கள் மாற்றலாம் என்று நினைத்தீர்களே தவிர, இந்தத் தத்துவத்தின்மீது உங்களால் கை வைக்க முடிந்ததா?
நான்தான் சொல்லவேண்டும் என்பது முக்கியமல்ல; கருத்துத்தான் முக்கியம்!
எங்கள் தோழர்களைப் பாருங்கள் - எங்களுக்கு ஒரே மாதிரி சிந்தனைதான்.
இந்த நூலில் நான் எந்தப் பகுதியை சொல்ல வேண்டும் என்று நினைத்தேனோ, அதை கவிஞர் அவர்கள் பேசும்போது சொன்னார். அதனால் என் னுடைய வேலை மிச்சம். நான்தான் சொல்லவேண்டும் என்பது முக்கியமல்ல; கருத்துத்தான் முக்கியம்.
இந்தப் புத்தகத்தின் இன்னொரு பகுதியை மிக அழகாக சொன்னார் நம்முடைய அருள்மொழி அவர்கள். அந்தப் பகுதியில், காங்கிரஸ் இருப்பதை எடுத்து விட்டு, அகில இந்திய கட்சி என்கிற வார்த் தையைப் போட்டுக்கொள்ளுங்கள்.
அப்போதும் பாரத் மாதாகீ ஜே! இப்போதும் பாரத் மாதாகீ ஜே!
காந்தியாரைச் சுட்டுக் கொன்றவர்களே, இன்றைக்குக் காந்திக்கு ஜே என்று சொல்கிறார்கள்.
தேசிய நீரோட்டத்திற்கும் - ஈரோட்டு நீரோட்டத் திற்கும் வித்தியாசம் உண்டு.
கலைஞர் சொன்னதைப் பற்றி நிறைய மேடைகளில் நான் சொல்லியிருக்கிறேன்.
நெருக்கடி (மிசா) காலத்தில் கலைஞரிடம் ஒரு கேள்வி கேட்டார்கள் - மிகத் துணிச்சலாக அந்தக் கேள்விக்கு மிக அழகாகப் பதில் சொன்னார்.
‘நீங்கள் தேசிய நீரோட்டத்தில் கலக்கவில்லை என்பதுதான் உங்கள்மீது உள்ள குற்றச்சாட்டு' என்றார்கள்.
‘‘நான் ஈரோடு போனவன்; நீரோடு போக மாட்டேன்'' என்றார்.
இங்கே வெளியிடப்பட்ட புத்தகத்தை நீங்கள் எல்லாம் ஒருமுறை அல்ல பலமுறை படித்துப் பார்க்க வேண்டும்.
புத்தகம் வாங்கிய தோழர்களுக்கும், வாங்காத தோழர்களுக்கும் சொல்கிறேன். இந்த நூலை இரவே படியுங்கள்; நாளைக்கும் படியுங்கள்; படித்து மறு படியும் அதை அசை போடுங்கள். இங்கே நண்பர் அறிவுவழி அமைப்பின்மூலம் நன்றாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
அண்ணா நமக்குப் படமல்ல - பாடம்!
சிலர் அண்ணாவை கொடியில் வைத்திருக் கிறார்கள்; பெயரில் வைத்திருக்கிறார்கள். காற்றில் ஆடுகிறார் அண்ணா. ஆனால், அண்ணா நமக்குப் படமல்ல - அண்ணா நமக்கு பாடம் என்பதுதான் மிக முக்கியமானது.
அண்ணா பேசுகிறார்:
இந்த நூலில் அண்ணா சொல்கிறார்,
‘‘எந்த ஆட்சி வந்தாலும் சரி; தமிழர் காப்பாற்றிக் கொள்ளவேண்டியவை சில உள்ளன. அவர்களுக்கு எந்தக் கட்சிமீது அபிமானம் இருப்பினும் தமிழரின் ஜீவநாடி தளரவிடலாகுமா? அந்த ஜீவநாடிகளுக்கு ஆபத்து வரக் கூடுமா? காலம் மாறுகிறதல்லவா? புதிய புதிய ஆபத்துகள் வரலாம். ஆகவே, கீழ்க்கண்ட வைகளைத் தமிழ்நாட்டவர், எப்பாடு பட்டாலும் காப்பாற்றியே தீரவேண்டும் அந்த ஜீவநாடிகள்.
1. தமிழ் மொழி - இதுவே நாம் தமிழர் என்பதைக் காட்டுவது. இதற்கு ஆபத்து வந்துவிட்டால், நமது ஒற்றுமை, கலை, நாகரிகம், யாவும் நாசம்! ஆகவே தமிழைக் காப்பாற்றுங்கள்.
இன்றைக்கு ஏன் நாமெல்லாம் முகக்கவசம் போடு கிறோம்; கைகளை சோப்பு போட்டு கழுவுகிறோம். கண்ணுக்குத் தெரிந்த கிருமியைவிட, கண்ணுக்குத் தெரியாத கிருமி தொற்றிவிடக் கூடாது என்பதற் காகத்தான். நம் கைக்கு மட்டுமா? நம் மூளைக்குள் நுழைகின்ற கிருமியைத் தடுக்கின்ற சோப்புதான் நம்முடைய இயக்கமாகும்.
மேலும் அண்ணா பேசுகிறார்:
2. வகுப்புவாரி பிரதிநிதித்துவம் - இது சமூகத்திலே ஒரே வகுப்பார் - ஏகபோக மிராசு செலுத்தும் ஆபத்தைப் போக்குவது; சகல வகுப்பாரின் பிள்ளை குட்டிகளுக்கும் - இது உரிமை தருவது. இது அழிந்தால் எங்கும் ஒரே வகுப்புதான் அதிகாரம் செலுத்தும். மற்ற வகுப்புகள், தாசர்களாகத்தான் வாழவேண்டும். அது நியாயமா? ஆகவே வகுப்புவாரிப் பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றியே தீரவேண்டும்.
வருகின்ற ஏப்ரல் 6 ஆம் தேதியன்று, வாக்குச் சாவடிக்குள் செல்லும்பொழுது - பொத்தானை அழுத்துவதற்கு முன் உங்களுடைய ஞாபகத்திற்கு என்ன வரவேண்டும்? நம்முடைய பிள்ளைகள் படிக்கவேண்டாமா? படித்த நம்முடைய பிள்ளைகள் உத்தியோகத்திற்குப் போகவேண்டாமா? ஒடுக்கப் பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் டாக்டர்களாக வேண்டாமா? கிராமப்புற மாணவர்கள் உத்தியோகத் தில் முன்னேற வேண்டாமா? நம்முடைய மொழி, கலாச்சாரம் காப்பாற்றப்பட வேண்டாமா? நம்முடைய வாழ்வாதார உரிமைகள் பாதுகாக்கப்பட வேண் டாமா? நம்முடைய பெண்களுக்குப் பாதுகாப்பு வேண்டாமா? சமதர்மமம் நாட்டிற்கு வேண்டாமா?
எவ்வளவு தைரியத்தோடு கேட்கிறார்கள் பாருங் கள் - ஆட்சி அவர்களுடைய கைகளில் இருக்கின்றது என்பதற்காக - ‘‘நீ பிள்ளை பெற்றுவிட்டால், அதற்காக நாங்கள் அரசாங்கத்திலிருந்து கொடுக்கவேண்டுமா?'' என்று கேட்கிறார்கள். இது எவ்வளவு திமிரான பேச்சு என்பதை நினைத்துப் பாருங்கள் நண்பர்களே!
அவருக்காக, இவர் வரவேண்டும்; இவருக்காக அவர் வரவேண்டும் - ஆட்சிக்கு வரவேண்டும் என்று நினைக்கவேண்டாம்; திராவிட முன்னேற்றக் கழக கூட்டணி வெற்றி பெறவேண்டும் என்பது - திராவிட முன்னேற்றக் கழகத்திற்காக அல்ல; தளபதி மு.க.ஸ்டாலின் முதலமைச்சராக வரவேண்டும் என்பது அவருக்காக அல்ல - பிளஸ் - மைனஸ் போன்ற குணாதிசயங்களைப் பேசுவதல்ல. கொள் கைதான் முக்கியம்.
நம்முடைய பிள்ளைகளுடைய எதிர்காலம் நல்லமுறையில் உருவாக்கப்பட வேண்டுமானால், அதற்கு ஒரே வழி இன்றைய சூழலில், திராவிட முன்னேற்றக் கூட்டணியைத் தவிர வேறு வழியில்லை. அதற்காகத்தான் அந்தக் கூட்டணி வெற்றி பெறவேண்டும் என்று சொல்கிறோம்.
நூறு ஆண்டுகளுக்கு மேலாகப் பாடுபட்,டு, நீதிக் கட்சி காலத்திலிருந்து பாடுபட்டு, இன்றைக்கு 69 சதவிகித இட ஒதுக்கீட்டை கொண்டு வந்திருக்கின் றோம். நாம் சமைத்து வைத்தால், சில பேர் வந்து, எங்களுக்கு ஒரு 20 சதவிகிதம் கொடு என்கிறார்கள்; உடனே ஆட்சியாளர்கள் 10.5 சதவிகிதம் தருகிறோம் என்று சொல்கிறார்கள். 10.5 சதவிகிதம் கொடுப்ப தைப்பற்றி நாங்கள் எதுவும் சொல்லவில்லை. ஆனால், அந்த 10.5 சதவிகிதத்தை எங்கே இருந்து எடுத்துக் கொடுப்பீர்கள்? 69 சதவிகிதத்திலிருந்து தானே எடுத்துக் கொடுத்தீர்கள். அதற்காக ஒரு துரும்பையாவது அசைத்திருப்பீர்களா? என்று கேட்டால், அதைப்பற்றி எதுவும் பேசாதீர்கள் என் கிறார்கள். வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்பது எல்லாருக் கும் எல்லாமும்!
சுயமரியாதை இயக்கத்தைத் தந்தை பெரியார் ஆரம்பிக்கும்பொழுது, இரண்டே வரியில் தந்தை பெரியார் சொன்னார் - வகுப்புவாரி பிரதிநிதித்துவம் என்றால் என்ன என்று கேட்டால், "அனைவருக்கும் அனைத்தும்"; "எல்லாருக்கும் எல்லாமும்" என்றார்!
நீட் தேர்வால் எத்தனை மாணவ - மாணவிகளின் உயிர்கள் பறிபோயிருக்கின்றன!
எனவே, நம்மைப் பாதுகாத்துக் கொள்ள - இன்னொருவரை உயர்த்துவது என்பதைவிட - நம்மைப் பாதுகாத்துக் கொள்ள. இந்த லட்சியங்கள் யாருக்காக? உங்களுடைய பிள்ளைகளுக்காக. திரா விடர் கழகத் தோழர்கள் மிகத் தெளிவாகச் சொல்ல வேண்டும் - எங்கள் பிள்ளைகளுக்காக அல்ல - உங்களுடைய பிள்ளைகள் படிக்கவேண்டாமா? நீட் தேர்வால் எத்தனை மாணவர்களுடைய உயிர் போயிருக்கின்றன; இதுவே உண்மையான திராவிட ஆட்சி இருந்திருந்தால், இதுபோன்ற நடந்திருக்குமா?
அடிமைகளின் ஆட்சிதானே நீட்டை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். நீட் என்ன ஊழலுக்கு அப் பாற்பட்டதா? சந்தி சிரிக்குதே - நீதிமன்றத்தில் கேள்வி கேட்டார்களே - நீட் தேர்வில்தானே ஆள்மாறாட்டம் நடைபெற்று இருக்கிறது.
மேலும் அண்ணா அவர்கள் பேசுகிறார்:
3. இந்து மத தர்ம புரிபாலன சட்டம் - நமது தமிழ் நாட்டிலே, கோடிக்கணக்கில் பணம் தர்மத்திற்காக, கோயில்களிடம் ஒப்படைத்து வைக்கப்பட்டிருக்கிறது. தர்மம் தழைக்க வேண்டுமென்று நமது பெரியவர்கள் அதைச் செய்தனர். அந்தத் தர்ம சொத்து நியாயமாக செலவழிக்கப்பட வேண்டுமல்லவா? அதை யாரும் சொந்த உபயோகத்திற்கு எடுத்துக்கொள்ளாமல் நாம் பார்த்துக்கொள்ள வேண்டாமா? சொத்திலிருந்து வரும்படி சரியாக பெறப்படுகிறதென்பதற்கு கணக்கு வேண்டுமல்லவா? இவை பார்க்கத்தான் மேற்படி சட்டம் ஏற்படுத்தி இருக்கிறது. இதற்கு ஆபத்து வந்தால், தர்ம சொத்தில் கண்டவர் கைவைத்து விடு வார்கள் ஆகவே, அந்த சட்டத்தைக் காப்பாற்றுங்கள்.
அன்றைக்கு கோவில் பூனைகள் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அதனை சட்டம் போட்டு அண்ணா அவர்கள் தடுத்தார். இன்றைக்கு மறுபடியும் கோவில் பூனைகள் சாப்பிட ஆரம்பித்துவிட்டன.
பனகல் அரசரின் சாதனைகளில்
முதல் சாதனை!
பனகல் அரசருடைய சாதனையில் முதல் முக்கிய சாதனை என்று சொன்னால், எச்.ஆர்.என்.சி.தான். (H.R & N.C. Dept) (இந்து அறநிலைய பாதுகாப்புத் துறை).
கோவில் சொத்துக்களை சாப்பிட்டுக் கொண்டிருந் ததைத் தடுத்து நிறுத்தி, அரசாங்கத்திற்குக் கொண்டு வந்தார்கள். இன்றைக்கு அந்த சட்டத்தைத் தவறாக பயன்படுத்துகிறார்கள்.
சரியாகச் சொன்ன இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம்தான். நெடுஞ்செழியன் அவர்களை, அற நிலையப் பாதுகாப்புத் துறை அமைச்சராக நியமித்தார் அண்ணா அவர்கள்.
சிதம்பரம் நடராஜர் கோவிலுக்குச் சென்றுவிட்டு, அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் உரையாற்றும் பொழுது சொல்கிறார், நான் நடராஜர் கோவிலுக்குச் சென்றுவிட்டு வந்ததால், நான் மாறிவிட்டேனோ என்று நினைக்காதீர்கள். எட்டு மரக்கால் அளந்து போட்டால், எட்டு மரக்கால் வடித்திருக்கிறானா? என்று பார்ப்பதுதான் என்னுடைய வேலை; ஆடிட் வேலைதான் என்றார்.
4. இனாம் சட்டம் - உலகத்திலே எங்கு பார்த்தாலும் சமதர்மம் பேசப்பட்டு வருகிறது! அந்த சமதர்மத்தின் அடிப்படையான கொள்கை தான் இந்த சட்டம். லட்சக்கணக்கான குடியானவர்களுக்கு, இந்த சட்டத் தால், நில பாத்யதை உரிமை ஏற்பட்டது. பரம்பரையாக பாவம் இந்தக் குடியானவர்கள் உழுது, உழுது, ஒரு குழி நிலம்கூட தங்களுக்கு என்று இல்லாமல் வாடினார்கள். அப்படிப்பட்ட குடியானவர்களில் இலட்சக்கணக்கானவர்களுக்கு இந்த சட்டம் நன்மை தந்தது. இதை ஒழிக்கக் கங்கணங்கட்டிக் கொண்டு பலரிருக்கிறார்கள். தமிழரே! சமதர்மிகளே! வாலிபர்களே! இனாம் சட்டத்தைக் காப்பாற்றத் தயாராக இருங்கள்.
"தமிழா! நீ எங்கு இருந்தாலும் - சற்று ஜாக்கிர தையாகவே இரு! உஷார்!"
என் மனதிலே எழுந்த பல கருத்துகளை ஒருவாறு கூறிவிட்டேன் என்று அண்ணா அவர்கள் அந்த மகாநாட்டில் உரையாற்றினார்.
(தொடரும்)
No comments:
Post a Comment