'நூலோர்' ஆதிக்கத்தை வீழ்த்தும் நூல் வெளியீட்டு விழா - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 6, 2021

'நூலோர்' ஆதிக்கத்தை வீழ்த்தும் நூல் வெளியீட்டு விழா

சென்னை பெரியார் திடலில் நேற்று (5.3.2021) மாலை - திராவிடர் கழகத்தின் சார்பில் நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது.

அறிஞர் அண்ணா அவர்களின் புகழ் பெற்ற எட்டு உரைகளின் தொகுப்பாக ஆசிரியர் அவர்களின் தனிப்பட்ட கவனத்துடன் முயற்சி எடுத்து தொகுக்கப்பட்ட "முறியடிக்க முடியாத முப்பெரும் சாதனைகள்" எனும் நூல் வெளியீட்டு விழாதான் அது.

திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்கள் நூலை வெளியிட்டுக் கருத்துரை வழங்கிட, திராவிடர் கழகத் துணைத் தலைவர் கலி. பூங்குன்றன் தலைமையில் நடைபெற்ற அந்நிகழ்ச்சியில், திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் சு. அறிவுக்கரசு, திராவிடர் கழகப் பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அருள்மொழி ஆகியோர் கருத்துரை வழங்கினர்.

அண்ணாவின் பெயரைக் கட்சியில் தாங்கியும் கட்சியின் கொடியில் அண்ணாவின் உருவத்தையும், பொறித்துக் கொண்டுள்ள அண்ணா திமுக என்னும் கட்சியும், ஆட்சியும் அண்ணாவின் கொள்கைகளுக்கும், கோட்பாடுகளுக்கும் முரண்பாடாக - கொள்கை எதிரிகளின் வலையில் சிக்கிச் சீரழிந்து கொண்டு இருக்கும் இந்தக் கால கட்டத்தில் அறிஞர் அண்ணாவின் இந்த உரைத் தொகுப்பு என்னும் கருவூலம் மிகவும் தேவையானதே!

தேர்தலில் போட்டியிடுவது, ஆட்சியைப் பிடிப்பது, அமைச்சராவது என்பதுதான் அரசியல் பொது வாழ்வு என்று கருதும் ஒரு சூழ்நிலை இருந்து வருவது வேதனைக்குரியது.

தந்தை பெரியாரை விட்டு 18 ஆண்டு காலம் பிரிந்திருந்த அறிஞர் அண்ணா அவர்கள் தேர்தலில் பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்த நிலையில், தனது ஆசான் இருந்த திருச்சியை நோக்கி விரைந்து சென்று, ஆசியைப் பெற்றதும், ஆட்சியில் அமர்ந்த நிலையில், "இந்த ஆட்சியே தந்தை பெரியாருக்குக் காணிக்கை!" என்று சட்டப் பேரவையிலேயே பிரகடனம் செய்ததும் எந்த அடிப்படையில்?

அண்ணாவின் உடல் நலம் பாதிக்கப்பட்ட காரணத்தால் குறுகிய காலமே அண்ணா அவர்கள் ஆட்சிப் பொறுப்பில் இருந்தாலும், அந்தக் குறுகிய கால கட்டத்தில் அவர் பொறித்த மூன்று சாதனைகள்:

(1) சென்னை மாநிலத்துக்குத் "தமிழ்நாடு" என்று பெயர் சூட்டல்;

2) சுயமரியாதைத் திருமணத்துக்குச் சட்ட வடிவம்

(3) தமிழ் நாட்டில் தமிழ், ஆங்கிலம் இரண்டு மட்டுமே, மூன்றாவது மொழியான இந்திக்கு இடமில்லை என்று சட்டரீதியாக உறுதிப்படுத்தியதுமான இந்த மூன்று சாதனைகளும் காலத்தால் அழிக்கப்படவே முடியாத கல்வெட்டுச் சாசனமாகும்.

குறிப்பாக முசிறி தாலுகா மூன்றாவது சுயமரியாதை மாநாடு துறையூரில் நடைபெற்றது (22.8.1937). அம்மாநாட்டுக்கு  இயக்கத்திற்கு வந்து மூன்றே ஆண்டுகள் ஆன 28 வயதுடைய அண்ணா அவர்களுக்கு தலைமை வகிக்கும் வாய்ப்பினைத் தந்தை பெரியார் தந்தார்.

அம்மாநாட்டில் அண்ணா அவர்கள் ஆற்றிய உரை இன்றைக்கும் பொருந்தக் கூடியதாகும்.

(1) தமிழ்மொழி - இதுவே நாம் தமிழர் என்பதைக் காட்டுவது. இதற்கு ஆபத்து வந்து விட்டால் நமது ஒற்றுமை, கலை, நாகரிகம் யாவும் நாசம். ஆகவே தமிழைக் காப்பாற்றுங்கள் என்று அண்ணா அவர்கள் தனது தலைமை உரையில் இன்றைக்கு 84 ஆண்டுகளுக்கு முன் எச்சரித்ததை நினைவு கூர வேண்டும்.

மத்திய அரசு நடத்தும் பள்ளிகளில் தமிழுக்கு இடம் கிடையாது. மூன்றாவது மொழியாக இந்திஅல்லது சமஸ்கிருதம் படிக்க வேண்டும் என்பதுதான் இப்பொழுது பா... தலைமையிலான மத்திய அரசின் புதிய தேசிய கல்விக் கொள்கை.  தமிழ்நாட்டிலிருந்து ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் எழுதும் கடிதத்துக்கு மத்திய அரசிடமிருந்து இந்திமொழியில் பதில் வருவது எதைக் காட்டுகிறது? இதனை 84 ஆண்டுகளுக்கு முன்பே அண்ணா எச்சரித்ததை அண்ணா தி.மு.. உணர வேண்டாமா? தமிழை நசுக்க நினைக்கும் பா...வுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாமா? பா...வின் கட்டளைகளுக்கெல்லாம் கீழ்ப்பணிந்து தண்டனிட்டுக் கிடக்கலாமா?

(2) வகுப்புவாரி பிரதிநிதித்துவம் - இது சமூகத்திலே ஒரே வகுப்பார் ஏகபோக மிராசு செலுத்தும் ஆபத்தைப் போக்குவது; சகல வகுப்பாரின் பிள்ளைக் குட்டிகளுக்கும் - இது உரிமை தருவது. இது அழிந்தால் எங்கும் ஒரே வகுப்புதான் அதிகாரம் செலுத்தும். மற்ற வகுப்புகள் தாசர்களாகத் தான் வாழ வேண்டும். இது நியாயமா? ஆகவே வகுப்புவாரி பிரதிநிதித்துவத்தைக் காப்பாற்றித் தீர வேண்டும் என்று 84 ஆண்டுகளுக்கு முன் அறிஞர் அண்ணா எவ்வளவுத் தொலைநோக்கோடு கூறி இருக்கிறார்?

இன்றைக்கு மத்தியில் இருக்கக் கூடிய பா... அரசு சமூக நீதிக்கான ஆணி வேரையே வெட்டும் வேலையைத் திட்டமிட்டுச் செய்து வருகிறதே.

'நீட்' தேவையில்லை என்று தமிழக சட்டப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களை மத்திய பா... ஆட்சி நிராகரிக்கவில்லையா?

நமது மாநிலத்திலிருந்து மருத்துவக் கல்லூரிகளுக்கு இடங்களைப் பெற்றுக் கொண்டும் அகில இந்திய இடஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு இடஒதுக்கீடு கிடையாது என்று கூறியது அதிமுக கூட்டணியில் இருக்கும் பா... அரசு தானே!

அண்ணா பெயரில் உள்ள கட்சி அண்ணாவின் கருத்தை மதிக்க வேண்டாமா? திராவிடர் கழகம் வெளியிட்ட நூலினை முதலில் அதிமுக முன்னணியினரும் அமைச்சர்களும் படித்துப் பார்க்கட்டும். இந்த நூலினை பட்டி தொட்டிகளில் எல்லாம் பரப்புவோம்! பரப்புவோம்!!

No comments:

Post a Comment