* பெரியார் திரைப்பட இயக்குநர் ஞான. இராசசேகரன் அய்.ஏ.எஸ். (ஓய்வு)
உலகில் எல்லா மொழிகளிலும் பெரியார் பற்றி நூல்கள் தேவை
* முனைவர் கே. சுபாஷினி (ஜெர்மனி) கருத்துரை
தொகுப்பு: மின்சாரம்
சென்னை - நந்தனம் ஓய்.எம்.சி.ஏ. மைதானத்தில் நடைபெற்று வரும் புத்தகக் கண்காட்சி அரங்கில் நேற்று (28.2.2021) பிற்பகல் 3.45 மணியளவில் நடைபெற்ற புத்தக வெளியீட்டு விழா இயக்க வரலாற்றில் குறிப்பிடத் தக்கதாகும்.
தந்தை பெரியார் பற்றிய நூல்கள் தமிழில் ஏராளமாக வெளி வந்துள்ளன என்றாலும், ஆங்கிலத்தில் வெளிவரும் நிலையில்தான் உலகெங்கும் சென்று அடையும் என்ற ஒரு கருத்து எல்லாத் திசைகளிலும் கூறப்படும் கருத்தாகும்.
சிறியதும், பெரியதுமாக 88 நூல்களை ஆங்கிலத்தில் கழகம் கொண்டு வந்துள்ளது என்றாலும், மேலும் விரிவான நூல்கள் ஆங்கிலத்திலும், பிற மொழிகளிலும் கொண்டு வரப்பட வேண்டும் என்ற கருத்து மேலோங்கி வருகின்றது.
அந்த வகையில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களின் வேண்டுகோள்படியும் வழிகாட்டு தலின்படியும்
'டெக்கான் கிரானிக்களில்' பணியாற்றும் பாபு ஜெயகுமார் அவர்களால் எழுதப்பட்ட "Periyar E.V. Ramasamy A Man Ahead of His Time" எனும் 253 பக்கங்களில் 20 தலைப்புகளில் 'எமரால்டு' பதிப்பகத்தினரால் பதிப்பிக்கப் பட்டது. அந்நூலின் வெளியீட்டு விழா நேர்த்தியான முறையில் வெளியிடப்பட்டது.
விழாவிற்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தலைமை ஏற்றார். 'எமரால்டு' பதிப் பகத்தின் உரிமையா ளரும், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத் தின் மாநிலத் துணைத் தலைவருமான கோ. ஒளிவண்ணன் வரவேற்புரையாற்றினார்.
அவர் தனது வரவேற்புரையில் - உலகில் பல நாடுகளிலும் வழக்கமாக நடத்தப்பட்டு வந்த புத்தகக் கண்காட்சிகள் கரோனா காரணமாக நடத்தப்படாத நிலையில், விதி விலக் காக சென்னையில் மட்டும், தங்குத் தடையின்றி நடைபெற்று வருவதைக் குறிப்பிட்டபோது பலத்த கரஒலி எழுந்தது.
உலக முழுவதும் ஆங்கிலம் கோலோச்சும் இந்தக் கால கட்டத்தில், தந்தை பெரியார் பற்றி ஆங்கிலத்தில் இப்படி ஒரு நூல் வெளிவருவது சிறப்பானது - எனது தந்தையார் கோபாலகிருஷ்ணன் அவர்கள் தந்தை பெரியார் அவர்கள் பற்றி Periyar the Father of Tamil Race எனும் என்ற நூலை 30 ஆண்டுகளுக்கு முன் வெளியிட்டுள்ளதையும் குறிப்பிட்டார்.
(தமிழில் "தமிழர் தலைவர்" எனும் நூல் சாமி. சிதம்பரனார் எழுதிய முதல் பகுதியும், 'உலக தலைவர் பெரியார்' எனும் பெயரில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்களால் எழுதப்பட்ட ஏழு தொகுதிகளும் கவிஞர் கருணானந்தம் அவர்களால் எழுதப்பட்ட தந்தை பெரியார் எனும் வாழ்க்கை வரலாற்று நூலும் A Pen Portrait of Periyar Ramasamy
என்ற Prof. தருமலிங்கம் அவர்களால்
எழுதப்பட்ட நூலும் ஏற்கெனவே வெளி வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது). கே.எம். பாலசுப்பிரமணியம் அவர்கள் Periyar E.V. Ramasamy என்ற தலைப்பில் (1943இல்) ஆங்கிலத்தில் எழுதினார்.
முனைவர் சுபாஷினி
(Director Tamil Heritage Foundation)
மலேசியாவைப் பூர்விகமாகக் கொண்டு ஜெர்மனியில் வாழ்ந்து வரும் - ஆய்வாளர் முனைவர் கே. சுபாஷினி தன் உரையில் முக்கியமாகக் குறிப்பிட்டதாவது:
ஜெர்மனியில் வாழ்ந்து வரும் எனக்கு இந்நூலில் தந்தை பெரியார் ஜெர்மனியில் ஆறு நாட்கள் சுற்றுப் பயணம் செய்த தகவல் கிடைத்து மகிழ்கிறேன். "Exploring the world" எனும் தலைப்பில் 18 பக்கங்களில் தந்தை பெரியாரின் உலக சுற்றுப் பயணம் குறித்து குறிப்பிடப்பட்டுள்ளது. உலகை வலம் வந்து பல அனுபவங்களை அறிந்து மனித குலத்துக்குத் தேவையான கருத்துகளைப்
பெரியார் வழங்கியுள்ளார்.
மலேசியாவும் - வெண் தாடி வேந்தரும்
நான் பிறந்த மலேசியாதான் பெரியார் பயணித்த முதல் வெளி நாடாகும். 11 மாதங்கள் அய்ரோப்பாவில் சுற்றுப் பயணம் செய்து தந்தை பெரியார் எழுதி வந்த பிரயாணக் குறிப்புகள் மிகவும் பயனுள்ளவையாகும்.
வெண்தாடி வேந்தர் பெரியார் என்று இன்று அவரைப் பாராட்டுகிறோம். வெறும் மீசையோடு மலேசியாவுக்கு வந்த பெரியார் தாடியோடு வெளி வந்தார். வெண்தாடி பெரியாராக வெளி வந்ததற்கு எங்கள் மலேசியாதான் காரணம் என்று நினைக்கும் பொழுது பெருமையாக இருக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
பெரியார் அவர்களைப் பற்றிய நூல்கள் பிரெஞ்சு, ஸ்பானிஸ் மொழிகளிலும் வர வேண்டும். புதிய தலைமுறைக்குப் போய்ச் சேர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.
ஞான. இராசசேகரன் அய்.ஏ.எஸ். (ஓய்வு)
பெரியார் திரைப்படப் புகழ் (பெரியார் படத் திரைக்கதை மற்றும் இயக்குநர் - தேசிய விருது பெற்றது 'பெரியார்' திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது) ஞான இராசசேகரன் அவர்கள் தன் உரையில் முக்கியமாக முத்திரை பதித்தது போல குறிப்பிட்டதாவது:
இந்த ஆங்கில நூலை பாபு ஜெயக்குமார் நேர்த்தியான ஆங்கிலத்தில் வெகு சிறப்பாக செறிவாக எழுதியுள்ளார் - அவருக்கு என் பாராட்டுக்கள்.
வினோதமான மாமனிதர் பெரியார்
பெரியார் ஒரு வினோதமான மா மனிதர்! நம் நாட்டில் காலத்தைக் கடந்த இரு தலைவர்களில் ஒருவர் திருவள்ளுவர். இன்னொருவர் பெரியார் ஆவார். 2000 ஆண்டு கடந்தும் பேசப்படக் கூடியவர்கள். காலத்தைக் கடந்து சிந்தித்தவர் பெரியார். திருவள்ளுவருக்குக் காவி சாயம் பூசுகின்றனர். பெரியார் சிலையைச் சேதப்படுத்துகின்றனர் என்பதிலிருந்தே இவர்கள் யாருக்கு எதிரிகள் என்பது விளங்குகிறது.
பெரியார் மட்டும் உத்தரப்பிரதேசத்தில் பிறந்திருந்தால், இந்தியாவே மாறியிருக்கும். இந்தியாவிலேயே தமிழ்நாடு தனித் தன்மையோடு விளங்குகிறது என்றால் காரணம் பெரியார் அவர்களே!
தமிழ்நாடும் கேரளமும்
கேரள மாநிலத்தில் கூட சமூக நிலை என்ன? வர்க்கப் பிரச்சினையில் ஏற்பட்டுள்ள விழிப்புணர்வு அளவுக்குச் சமூகப் பிரச்சினையில் போதிய அளவு விழிப்புணர்வு இல்லை என்று கம்யூனிஸ்ட் தலைவர்களே ஒப்புக் கொள்கிறார்கள். பெரியார் போல சமூகப் புரட்சித் தலைவர் இங்கு உருவாகவில்லை என்று யதார்த்தமாக ஒப்புக் கொள்கின்றனர்.
பெரியார் பற்றிய நூல் இந்தியா முழுமைக்கும் தேவைப்படும் கால கட்டம் இது. மதவாத சக்திகளை எதிர் கொள்ள வடக்கே பெரியார் என்ற போர் ஆயுதம் இல்லை. பெரியார் இந்தியா முழுமைக்கும் மிகவும் தேவை.
சமீபத்தில் உ.பி. லக்னோ சென்றபோது தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் பெரிய அதிகாரிகளின் நெற்றியில்கூட திருநீறும், குங்குமமும் பரவலாகக் காணப்படுவதைக் கண்டேன். பெரியாரின் அருமை பிற மாநிலங்களுக்குச் சென்றால்தான் விளங்கும்.
பெரியார்பற்றி இன்னும் மூன்று திரைப்படங்கள் எடுக்கலாம்
பெரியாரைப்பற்றி திரைப்படம் எடுத்தேன். இன்னும் மூன்று பெரியார் படங்களை எடுக்கலாம்; அவரின் பொது வாழ்வு என்பது அவ்வளவு அடர்த்தியும், ஆழமும் கொண்டது என்று குறிப்பிட்டார். திரைப்பட இயக்குநர் ஞான. இராசசேகரன் அய்.ஏ.எஸ்.(ஓய்வு).
No comments:
Post a Comment