ரத யாத்திரையை அனுமதித்தால் சட்டம்-ஒழுங்கு, மதப் பிரச்சினைகள் ஏற்படும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 3, 2021

ரத யாத்திரையை அனுமதித்தால் சட்டம்-ஒழுங்கு, மதப் பிரச்சினைகள் ஏற்படும்

மதுரை காவல் ஆணையர் மேல்முறையீடு

 மதுரை, மார்ச்3- அயோத்தியில் உள்ள ராமர் கோவிலுக்கு நிதி சேகரிக்க மதுரையில் ரத யாத்திரை நடத்த அனுமதித்தால் சட்டம்-ஒழுங்கு, மதப் பிரச்சினைகள் ஏற்படும் சூழல் உள்ளது. எனவே, தனி நீதிபதி அளித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென மதுரை மாநகர் காவல் ஆணையர் சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மேல்முறையீடு செய்துள்ளார்.

மதுரை மாநகர காவல் ஆணையர்  தரப்பில் சென்னை உயர்நீதிமன்ற மது ரைக் கிளையில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவில்,

மதுரையில் 100 வார்டுகளிலும் ரத யாத்திரையை நடத்த அனுமதி வழங்கி தனி நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். சட்டம்-ஒழுங்கைப் பாதிக்கும் வகை யிலும், மதக் கலவரத்தை ஏற்படுத்தும் வகையிலான பொதுக்கூட்டங்கள், ஊர் வலங்கள், கட்சி மற்றும் கட்சி சாராத நிறுவனங்களின் பொது நிகழ்வுகள் போன்றவற்றுக்கு அனுமதி வழங்க வேண்டாம் என்பதைக் கருத்தில் கொள்ளாமல் இந்த உத்தரவு பிறப்பிக் கப்பட்டுள்ளது.

கரோனா நோய்த்தொற்றின் இரண் டாம் அலை தீவிரமாகப் பரவி வரும் சூழலில் இதுபோன்ற யாத்திரைக்கு அனுமதி வழங்குவது மிகப் பெரும் விளைவுகளை ஏற்படுத்தும்.  ட்ரஸ்ட்தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்வி களுக்கு முறையாக பதில் அளிக்காததன் மூலம், அவர்கள் சட்டத்தை மதிக்காதது தெரிய வருகிறது.  பிப்ரவரி 19-ஆம் தேதி மதுரை கரிமேடு பகுதியில் கூடி சட்டம், ஒழுங்குப் பிரச்சினையை ஏற்படுத்தும் வகையில், சட்டவிரோத ரத யாத்தி ரையை மேற்கொண்டதன் காரணமாக அப்பகுதியில் இரண்டு மணி நேரத் திற்கும் மேலாக போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது. சட்டம், -ஒழுங்கு மற்றும் மதக்கலவர பிரச்சினைகளைக் கருத்தில் கொண்டும், கரோனா நோய்த்தொற்றின் இரண்டாம் அலையைக் கருத்தில் கொண்டும் மதுரையில் ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கிய தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்எனக் கூறப்பட்டிருந்தது.இந்த வழக்கு நீதிபதிகள்  எம்.எம்.சுந்தரேஷ். ஆனந்தி அமர்வு முன்பாக நேற்று (2.3.2021) விசாரணைக்கு வந்தது.

அப்போது அரசுத்தரப்பில்,” கேட்கப் பட்ட கேள்விகளுக்கு அந்த அமைப்பு சார்பில் உரிய பதிலளிக்க வில்லை. ரத யாத்திரைக்கு அனுமதி வழங்கினால், சட்டம்- ஒழுங்கு, மதப் பிரச்சனை ஏற்படும் வாய்ப்புள்ளது. ஆகவே தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து உத்தரவிட வேண்டும்என வாதிடப் பட்டது.

இதையேற்ற நீதிபதிகள், குறிப்பிட்ட நேரத்தில்  காவல்துறையினர் அனுமதி அளிக்கும் வழித்தடத்தில் மட்டும், அனுமதிக்க இயலுமா? என்பது குறித்து தகவல் பெற்று தெரிவிக்க அரசு வழக் குரைஞருக்கு உத்தரவிட்டு வழக்கை இன்று (3.3.2021) ஒத்திவைத்து உத்தரவு பிறப்பித்தனர்.

No comments:

Post a Comment