மூடநம்பிக்கை ஒழிப்பில் எதிர்ப்புகளை, தாக்குதல்களை நேர்கொள்ளும் நிலையில்வழங்கப்பட்ட 'விருதை ' முனைப்பாகக் கருதுவோம்முன்னிலும் வேகமாக பிரச்சாரப் பணி புரிவோம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 7, 2021

மூடநம்பிக்கை ஒழிப்பில் எதிர்ப்புகளை, தாக்குதல்களை நேர்கொள்ளும் நிலையில்வழங்கப்பட்ட 'விருதை ' முனைப்பாகக் கருதுவோம்முன்னிலும் வேகமாக பிரச்சாரப் பணி புரிவோம்

 மராட்டிய அறக்கட்டளை வழங்கிய 'டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருது' நிகழ்ச்சியில் தமிழர் தலைவர் உரை

மும்பை, மார்ச் 7 மூடநம்பிக்கை ஒழிப்பு போராளி டாக்டர் நரேந்திர தபோல்கரின் நினைவாக ஒவ்வொரு ஆண்டும் விருது வழங்கப்படுகின்றது. அமெரிக்கா வாழ் மராட்டியர்களால் உருவாக்கப்பட்ட மராட்டிய அறக்கட்டளை  (Maharashtra  Foundation) நிறுவனம் 'விருதினை வழங்கி வருகின்றது. 2021ஆம் ஆண்டுக்கான நரேந்திர தபோல்கர் நினைவு விருது  (Dr. Narendra Daboolkar Memorial Award) திராவிடர் கழகத்தின் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணிஅவர்களுக்கு வழங்கப்பட்டது. விருது வழங்கிடும் நிகழ்வு 6.3.2021 அன்று இணைய வழியில் நடைபெற்றது.

டாக்டர்  நரேந்திர தபோல்கர் நினைவு விருது

மராட்டிய அறக்கட்டளையால் வழங்கப்படும் விருது - விருது  பட்டயத்துடன் (Citation) ரூபாய் ஒரு லட்சம் பணமுடிப்பும் கொண்டது. கடந்த டிசம்பர் மாதம் விருது தெரிவுக் குழுவின் தலைவர் டாக்டர் ஹமீது தபோல்கர்  (டாக்டர் நரேந்திர தபோல்கரின் மகன்) 2021-ஆம் ஆண்டுக்கான விருதிற்கு தமிழர் தலைவர் தெரிவு செய்யப்பட்ட செய்தியினை அறிவித்தார். பல துறைகளில் சமூகப் பங்களிப்பு ஆற்றிவரும் சிறப்பாளர்களுக்கு மராட்டிய அறக்கட்டளை விருதுகளை வழங்கி சிறப்புச் செய்துவருகிறது. மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியில் குறிப்பிடத்தக்க பங்காற்றியுள்ள போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் விருதினை கடந்த ஆறு ஆண்டுகளாக மராட்டிய அறக்கட்டளை வழங்கி வருகிறது. 7ஆம் ஆண்டுக்கான விருது தமிழர் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் மும்பாய் மாநகரில் விருது வழங்கப் பெறும் நிகழ்ச்சி நடைபெற்று  வந்த நிலையில், கரோனா தொற்று, ஊரடங்கு கட்டுப் பாட்டின் எச்சங்கள் தொடர்ந்துவரும் நிலையில் 2021ஆம் ஆண்டுக்கான விருது - வழங்கும்  நிகழ்ச்சிஇணைய வழியில் நடைபெற்றது.

விருது தெரிவுக் குழுவின் உறுப்பினர் டாக்டர் ஹமீது தபோல்கர் மராட்டிய மாநிலம் புனே அருகிலுள்ள சதாரா நகரிலிருந்து நிகழ்ச்சியை ஒருங்கிணைந்தார். விருது பெற்ற தமிழர் தலைவர் சென்னையிலிருந்து பங்கேற்றார். தமிழர் தலைவர் சார்பாக மும்பையில் டாக்டர் நரேந்திர தபோல்கர் மகளின் இல்லத்திற்கு சென்று திராவிடர் கழகபகுத்தறிவாளர் கழகத் தோழர்கள் விருதினை

நேரில் பெற்றுக் கொண்டனர். மராட்டிய அறக்கட்டளையின் பொறுப்பாளர்கள் அமெரிக் கவிலிருந்தும், மும்பையிலி ருந்தும் நிகழ்ச்சியில் பங் கேற்றனர். விருது வழங் கிடும் நிகழ்ச்சியில் டாக்டர் நரேந்திர தபோல்கரின் சகோதரரும், மூத்த விஞ்ஞானியும், எழுத்தாளருமான தத்தா பிரசாத் தபோல்கர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு விருதினை வழங்கினார். தமிழகம், பிற மாநிலங்கள், உலகின் பல்வேறு நாடுகளிலிருந்தும் பகுத்தறிவாளர்கள் மனிதநேயர்கள் பலரும் இணைய வழியில் பார்வையாளர்களாகப் பங்கேற்றுச் சிறப் பித்தனர்.

நிகழ்ச்சி சரியாக மாலை 6 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கியது. நிகழ்ச்சிக்கு வந்திருந் தோரை வரவேற்று டாக்டர் ஹமீது தபோல்கர் உரையாற்றினார்.

வரவேற்புரை

டாக்டர் ஹமீது தபோல்கர்: டாக்டர் நரேந்திர தபோல்கரின் நினைவு விருதினை - இந்த  ஆண்டுக்கான விருதினை (2021) பெற்றுக் கொள்ள ஒப்புதல் அளித்த திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணி  அவர்களுக்கு எங்களின் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறோம். மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியை ஒரு இயக்கமாக நரேந்திர தபோல்கர் நடந்தி வந்தார். மூடநம்பிக்கை ஒழிப்பில் தந்தை பெரியார் வழித் தடத்தில் பெரும் அளவில் களப்பணிகளை ஆற்றி வரும் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு விருது வழங்கப்படுவது மிகவும் பொருத்தமானதாகும். மூடநம்பிக்கை ஒழிப்பில் தந்தை பெரியார் தோற்றுவித்த இயக்கத்தின் செயல்பாட்டில் மூடநம்பிக்கை பிரச்சாரப் பணி பெரிய அளவில் மற்ற மாநிலங்களும் பின்பற்றத்தக்க அளவில்  நடத்தப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் இந்த விருது பல பகுத்தறிவாளர்களுக்கும், பகுத்தறிவாளர் அமைப்புகளுக்கும் வழங்கப்பட்டது. இந்த  ஆண்டுக்கான விருது நாயகர் தலைவர்

கி. வீரமணி அவர்களுக்கு இந்த விருது வழங்கப்படுவது   கூடுதல்  சிறப்பு பெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ள மராட்டிய அறக்கட்டளையினைச் சார்ந்த பொறுப்பாளர்கள், உறுப்பினர்களையும் திராவிடர் கழகத் தோழர்களையும், பார்வையாளர் களையும், வருகை தந்துள்ள பல்வேறு தரப்பினரையும் வரவேற்று மகிழ்கிறோம்.

விருது பற்றிய உரை

டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருது பற்றிய சிறப்புகளை மராட்டிய அறக்கட்டளையின் பொறுப்பாளர் சுனில் தேஷ்முக், அமெரிக்காவிலிருந்து பங்கேற்று எடுத்துரைத்தார்.

சுனில்தேஷ்முக், அமெரிக்கா: கடந்த 40 ஆண்டுகளாக மராட்டிய அறக்கட்டளை பல்வேறு பொது நலப்பணிகளை ஆற்றிவருகிறது. பொது நலப் பணிக்கு குறிப்பிடத்தக்க பங்காற்றியவர்களுக்கு சிறப்புச் செய்து வருகிறது. சமூக சீர்திருத்தத்திற்காக பாடுபட்டு வரும் பெரு மக்கள் விருதினை டாக்டர் நரேந்திர தபோல்கருக்கு வழங்கி ரூ.10 லட்சத்திற்கான பண முடிப்பையும் மராட்டிய அறக்கட்டளை வழங்கியது. 2013ஆம் ஆண்டில் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டபின், அவரது பெயரால் நினைவு விருது வழங்கிட அறக்கட்டளை முடிவு எடுத்ததுமூடநம்பிக்கை ஒழிப்புப் பணிக்கு சிறப்பாகப் பங்காற்றிய பெரு மக்களுக்கு கடந்த ஆறு ஆண்டுகளாக டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருதினை வழங்கி கவுரவப்படுத்தி வருகிறோம். இந்தியாவின் தென் மாநிங்களில் குறிப்பாக தமிழ்நாட்டில் தந்தை பெரியார் நிறுவிய இயக்கத்தின் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது வெகு சிறப்புக்கு உரியது.

சமூக முன்னேற்றத்தில் மேலை நாடுகளுக்கும் இந்தியாவிற்கும் ஒரு வேறுபாடு உண்டு. மேலை நாடுகளில் அறிவியல் வளர்ச்சியை சரியாகப் பயன்படுத்தி முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும் அனைத்தையும் தகர்த்தெறிந்து முன்னோக்கி நகரும் நிலை தொடங்கியது. ஆனால் இந்தியாவில் அறிவியல் வளர்ச்சியை ஓரளவிற்குப் பயன்படுத்திக் கொண்டாலும் மூடநம்பிக்கைப் பெருக்கத்திற்கு அறிவியலையே பயன்படுத்திக் கொள்ளும் அணுகுமுறை உண்டு. அறிவியலை சமூக பின் நகர்விற்கு பயன்படுத்தி வரும் அளவிற்கு மூடநம்பிக்கைகளின் தாக்கம்  நிலவுகிறது. இந்த மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிக்கு தனது வாழ்வினை அர்ப்பணித்த டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவாக வழங்கப்படும் விருதினை அருமையாக, தந்தை பெரியார் இயக்கத்திற்கு உரிய தனித்துவத்துடன், மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியினை ஆற்றிவரும் தலைவர் கி. வீரமணி அவர்களுக்கு   வழங்கப்படுவதில் மராட்டிய அறக்கட்டளை பெருமை பெறுகிறது.

விருது பெறுநர் பற்றிய உரை

விருதினை பெறக் கூடிய தமிழர் தலைவர் பற்றிய குறிப்புகளை மராட்டிய அறக்கட்டளை வழங்கிடும் விருதுகளின் கூட்டமைப்பாளர் திருமதி மனிஷா குப்தா விரிவாக எடுத்துரைத்தார்.

திருமதி மனிஷா குப்தா, மாசும், மும்பாய்: விருது பெற்றிடும் தலைவர் கி. வீரமணி அவர்கள் பத்து வயதில் மேடை  ஏறிப் பேசி பொது வாழ்க்கைக்கு வந்தவர். 1944இல் நடைபெற்ற சேலம் நீதிக்கட்சி மாநாட்டில் உரையாற்றினார். தமிழக முன்னாள் முதல்வர் சி.என் அண்ணாதுரை (அண்ணா) அவர்களால் முதல் மேடைப் பேச்சிலேயே பாராட்டப்பட்டவர். பள்ளிப் படிப்பு, பல்கலை படிப்பில் முதுகலை பொருளா தாரத்தில் பட்டம் பெற்றார். பின்னர் சட்டத்திலும் பட்டம் பெற்றார். படிக்கின்ற காலங்களிலும் பெரியார் இயக்க நிகழ்ச்சிகளிலும் பங்கேற்று இயக்கத் தொண்டுடன் இருந்தார். வழக்குரைஞர் பணியில் ஓராண்டு நிறைவடைந்த நிலையில் பெரியாரின் அழைப்பை  ஏற்று கடலூரிலிருந்து - சென்னை சென்று விடுதலை ஏட்டின் முழுப் பொறுப்பினை ஏற்று சிறப்பாக செயல்பட்டார். தந்தை பெரியாருக்குப்பின் மணியம்மையார்  தலைவரானதும் உடன் இருந்து இயக்கத்தை செயல்படுத்தியவர்

1978-க்குப் பின்னர் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பினை ஏற்று பெரியார்தம் கொள்கைகளை நடைமுறைப் படுத்த பல்வேறுபட்ட பணிகள், போராட்டங்கள் நடத்தினார். 50க்கும் மேற்பட்ட போராட்டங்களை நடத்தினார். கைது செய்யப்பட்டு பல முறை சிறை சென்றவர். மிசா காலத்தில் தடுப்பு நடவடிக்கையால் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறையில் இருந்தார். அப்படி சிறையில் இருந்த பொழுது கி. வீரமணி அவர்களின் தந்தையார் காலமானார். சமூகநீதி, பகுத்தறிவு, மூடநம்பிக்கை ஒழிப்பு என பல்வேறு தளங்களில் பொதுப் பணி ஆற்றிவரும் கி. வீரமணி மக்கள் நிகர் இயக்கமாக பெரியார் இயக்கத்தை வலிமைப்படுத்துவதில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இவரது பொதுப் பணியைப் பா£ராட்டி காரைக்குடி அழகப்பா பல்கலைக் கழகம் கி. வீரமணி அவர்களுக்கு மதிப்புறு முனைவர் பட்டம் வழங்கி பெருமைப்படுத்தியுள்ளது. மூடநம்பிக்கை ஒழிப்பில் நாடு தழுவிய அளவில் பணி ஆற்றிவரும் கி. வீரமணி அவர்களுக்கு மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளி டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருது இன்று வழங்கப்படுகிறது.

விருது வழங்கிச் சிறப்பித்தல்

விருது பற்றியும், விருது பெறுநர் பற்றியும் பெருமக்கள் உரையாற்றிய பின்னர், விருது தெரிவுக் குழுவின் தலைவர் டாக்டர் ஹமீது தபோல்கர், தமிழர் தலைவருக்கு மானமிகு டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருது வழங்கப்படுவதாக அறிவித்தார். மூத்த விஞ்ஞானி தத்தா பிரசாத் தபோல்கர் விருதினை தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்களுக்கு வழங்கினார். இணைய வழி நிகழ்ச்சியால் விருது பட்டயத்தை மும்பையில் உள்ள அனில் பட்னாயக் இல்லத்திற்கு நேரில் சென்று மும்பை திராவிடர் கழகத் தலைவர் கணேசன் மற்றும் மும்பை பகுத்தறிவாளர் கழகத் தலைவர் .ரவிச்சந்திரன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர்.

தமிழர் தலைவரது விருது ஏற்புரை

டாக்டர் நரேந்திர தபோல்கர் விருதினைப் பெற்றுக் கொண்ட தமிழர் தலைவர் தமது ஏற்புரையினை வழங்கினார்.

ஏற்புரையில் குறிப்பிட்டதாவது: தந்தை பெரியாரின் வாழ்நாள் மாணவனாக இதுவரை பெரும்பாலானவர்கள் பயணிக்காத பாதையில் பயணித்து வரும், எதிர் நீச்சல் போட்டு வரும் என்னைப் போன்றவர்களுக்குப் பாராட்டு என்பது மிகவும் குறைவு. எனது. 75 ஆண்டுகால பொது வாழ்க்கை பல்வேறு எதிர்ப்புகளை, தாக்குதல்களை மேற்கொண்டு வந்துள்ளது. நாங்கள் ஆற்றிவரும் பணிகளுக்குப் பாராட்டு வராது. விமர்சனங்களும், எதிர்ப்புகளும் தான் ஏராளமாக எழும். அப்படிப்பட்ட நிலையில் மராட்டிய அறக்கட்டளையை நிறுவி, மூடநம்பிக்கை ஒழிப்பிற்கு தன் வாழ்நாளையே அர்ப்பணித்தப் போராளி டர்கடர் நரேந்திர தபோல்கரின் பெயரில் அமைந்த விருதினைப் பெறுவது மகிழ்ச்சிக்கு உரியதாக இருக்கிறது. அறக்கட்டனைக்கும், உரியவர்களுக்கும் முதலில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று வழங்கப்பட்ட விருது எனக்காக வழங்கப்பட்டதாக நான் கருதவில்லை. விருது பெறுவதற்குக் காரணமாக, அடித்தளமாக, மூடநம்பிக்கை ஒழிப்பில் களப்பணி ஆற்றிவரும் தந்தை பெரியாரின் இயக்கத் தோழர்களுக்கு வழங்கப்பட்டதாகவே கருதுகிறேன். தந்தை பெரியாரின் இயக்கத்திற்கு இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

விருது நிறுவப்படுவதற்குக் காரணமான நரேந்திர தபோல்கர் மூடநம்பிகை ஒழிப்பில் ஒரு மாபெரும் போராளியாக விளங்கினார். இயக்கமாகச் செயல்பட்டார். அவர் நிறுவியது தான் மகாராட்டிரா அந்தஸ்திருத நிர்மூலன் சமிதி எனும் பகுத்தறிவாளர் அமைப்பு. அந்த அமைப்போடு இணைந்து பல்வேறு மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரப் பணியில் கடந்த காலங்களில் நாங்கள் ஈடுபட்டு வந்துள்ளோம். மகாராட்டிர மாநிலம் முற்போக்குக் கருத்துகளை நடைமுறைப்படுத்துவதில் முன்னோடி மாநிலம். அதற்கென ஒரு சமூகப் பாரம்பரியம் உண்டு. புரட்சியாளர்கள் மகாத்மா ஜோதிபா பூலே, சாகு மகராஜ், டாக்டர் பி.ஆர்.அம்பேத்கர் ஆகியோரது பொது வாழ்க்கைப் பணியின் தாக்கங்களால் முன்னேறி வரும் மாநிலமாகும். சனாதன தர்மம், சமுதாயத்திற்கு ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்திய சூழ்நிலையில் அந்த ஏற்றத் தாழ்வுகள் நிலை பெறுவதற்கு மூடநம்பிக்கைகள் ஆதாரமாக விளங்கி வந்துள்ளன. மனித ஆற்றலை மட்டுப்படுத்துபவை மூடநம்பிக்கைகள். அவைகளை ஒழிக்க நாம் வாழும் காலத்தில் அளப்பரிய பணி ஆற்றியவர் டாக்டர் நரேந்திர தபோல்கர். அவர் அவ்வாறு பணியாற்றிய தற்காகவே மதவெறியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். மூடநம்பிக்கை ஒழிப்புப் பணி ஆற்றுவதற்கு துணிச்சல் வேண்டும். அத்தகைய துணிச்சல் மிக்கவராக நரேந்திர தபோல்கர் இருந்தார்.

அவருடைய உயிருக்கு ஆபத்து நேரிடாமல், காவல்துறை பாதுகாப்பு அளித்திட முன்வந்த நிலையில், ‘எனக்கு பாதுகாப்பு எதுவும் வேண்டாம். இந்த நாட்டுக் குடிமகனாக, அவர்களின் மேம்பாட்டிற்காக மூடநம்பிக்கையினை ஒழித்திடும் பிரச்சாரப் பணியினை அமைதியான வழியில் செய்வதற்கு காவல்துறை பாதுகாப்பு எதற்கு?' எனக்கேள்வி எழுப்பி பாதுகாப்புடன் மக்களைச் சந்திப்பது தேவையில்லை எனக் கருதிய போராளி நரேந்திர தபோல்கர். இந்திய அரசமைப்புச் சட்டம் பிரிவு 51 (எச்) - தபோல்கர் ஆற்றிய பணியினை, எங்களைப் போன்றவர்கள் ஆற்றிவரும் பணியினை ஒவ்வொரு இந்தியக்குடிமகனும் கடமையாக(Fundamental duty)செய்திட வேண்டும் என வலியுறுத்துகிறது.

அறிவியல் மனப்பான்மையினை வளர்ப்பதையும், எதையும் கேள்விக்கு ஆட்படுத்திப்பார்க்கும் அணுகுமுறையினைக் கொள்வதிலும், சீர்திருத்தம் மேற்கொண்டு, மனித நேயத்தை வளப்படுத்துவதையே ஒவ்வொரு குடிமகனும் தனது அடிப்படைக் கடமையாகக் கொள்ள வேண்டும்!,

- இவ்வாறு இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகிறது. சட்டம் கூறும் கடமையைச் செய்ததற்காக டாக்டர் நரேந்திர தபோல்கர் சுட்டுக் கொல்லப்பட்டார். எங்களைப் போன்றவர்களும் தாக்குதலுக்கு ஆளாகி உள்ளோம் எனது உயிருக்கு குறி வைத்துத் தாக்கும் செயல்கள் அய்ந்து முறை நடைபெற்றுள்ளன. நாம் ஏற்றுக் கொண்டுள்ள பணி எவ்வளவு கடுமையானது, எதிர்ப்புகளை உருவாக்கவல்லது என்பது மதவெறியர்களின் செயலால் எளிதில் விளங்கும்.

கடவுள், மதம் ஆகியவற்றிற்கு எதிராக மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிகள் இருக்கின்றன என்ற காரணத்தால் மதவெறியர்கள் வன்முறையைக் கையில் எடுத்து உயிர்களை பலிவாங்கிக் கொண்டிருக்கிறார்கள். 25 ஆண்டுகளுக்கு முன்புவிநாயகர் சிலை' பால் குடிக்கிறது என மதவாதிகள் மூடநம்பிக்கையினை கட்டவிழ்த்து விட்டார்கள். அதை எதிர்த்து நரேந்திர தபோல்கர் பிரச்சாரம் செய்தார். நாங்களும் தமிழ்நாட்டில்டாம் டாம்' அடித்துசிலை பால் குடிக்கும்' வினோதத்தை தோலுரித்துக் காட்டினோம். அந்த மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியின் 25 ஆம் ஆண்டு விழாவினை தபோல்கர் நிறுவிய மகாராட்டிர அந்தஸ்திருத நிர்மூலன் சமிதி அமைப்பு நடத்தியது. 25 ஆண்டுகள் கடந்து அந்த நிகழ்ச்சியிலும் நாங்கள் பங்கேற்றோம். மூடநம்பிக்கை ஒழிப்புப்பணி தொடர்ந்து நடைபெற வேண்டிய அவசியம் உள்ளது.

அண்மையில் ஆந்திராவில், படித்துப்பட்டம் பெற்று கல்விப்பணி ஆற்றிவரும் பெற்றோர் ஜோதிட நம்பிக்கையில், தங்களது இரு மகள்களையும் கொன்ற கொடும் நிகழ்வு நடந்துள்ளது. கொல்லப்பட்ட மகள்கள் உயிர் பெற்று வருவார்கள் என ஜோதிடர் கூறியதைக் கேட்டு நடந்ததால் அந்தப் பெற்றோர் தங்களது மகள்களை இழந்து நிற்கின்றனர்.

ஒரு வாரத்திற்கு முன்பு தமிழ்நாட்டில் நன்னிலம் என்ற ஊரில் ஒரு தந்தை 4 வயது தனது மகனை மண்ணெண்ணெய் ஊற்றிக் கொன்ற கொடும் சம்பவம் நடந்துள்ளது. தனது மகன் இருந்தால் தனது எதிர்காலம் பாழாகும் எனக் கூறிய ஜோதிடத்தில் நம்பிக்கை கொண்டு தந்தையும், தாயும் தங்களது மகனை இழந்துள்ளனர்.

இத்தகைய நிகழ்ச்சிகளை காண்கின்ற பொழுது மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியை முன்னிலும் வேகமாக எடுத்துச் செல்லப்பட வேண்டியுள்ளது.

விருது தொகை ஒரு லட்சத்தை

மூடநம்பிக்கை ஒழிப்பிற்கு நன்கொடை

இன்று வழங்கப்பட்டுள்ள விருதின் பண முடிப்பை - ரூபாய் ஒரு லட்சத்தை மூடநம்பிக்கை ஒழிப்புப் பணிக்காக நரேந்திர தபோல்கர் நிறுவிய மகாராட்டிர அந்தஸ்திருத நிர்மூலன் சமிதி அமைப்பிற்கு நாம் நன்கொடையாக அளிக்கிறோம். மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சாரப் பணிக்கு அவர்தம் பண முடிப்பு பயன்பட வேண்டும். நரேந்திர தபோல்கர் கண்ட கனவு நிறைவேற விழா கொடை பயன்பட வேண்டும். அதற்குரிய வழிமுறைகளை மராட்டிய அறக்கட்டளை செய்திட வேண்டுகிறோம்.

விருது என்பதை செய்கின்ற பணிக்கு மேலும் வலுப்படுத்திடும் ஒரு முனைப்பிற்கானதாகவே நாம் கருதுகிறோம். இந்த விருதை நாம் எதிர்பார்க்கவில்லை. எதிர்பார்த்துப் பணியாற்றுவது பகுத்தறிவாளர்களின் இயல்பல்ல. மராட்டிய அறக்கட்டளை வழங்கிய டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருதினை மிகவும் பணிவுடன் பெற்றுக் கொள்கிறோம். தொடர்ந்து மூடநம்பிக்கை ஒழிப்புப் பணியினை மேற்கொள்வோம். இணைந்து போராடுவோம். மனிதநேயம் நிலைத்து, மனித சமுதாயம் நிலைக்கப் பாடுபடுவோம். நன்றி.

வாழ்க பெரியார், வளர்க பகுத்தறிவு.

தொகுப்பு:

வீ. குமரேசன்

 

 

 

No comments:

Post a Comment