நீதிபதிகளைத் தரக்குறைவாக விமர்சித்த பா.ஜ.க. ராஜாமீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததைச் சுட்டிக்காட்டி எச்சரித்துள்ளது உயர்நீதிமன்றம்; பா.ஜ.க.வைக் கண்டு அஞ்சுகிறதா - அடிபணிகிறதா அ.தி.மு.க. அரசு?
உயர்நீதிமன்ற நீதிபதிகளைக் கொச்சைப்படுத்திப் பேசிய பா.ஜ.க. பிரமுகர்மீது இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது ஏன் என்ற வினாவை மதுரைக் கிளை உயர்நீதிமன்றம் எழுப்பியுள்ளது. மத்தியில் உள்ள பா.ஜ.க.வுக்கு மாநில அ.தி.மு.க. அரசு அடிபணிந்து கிடப்பதால்தான் இந்த நிலையாகும். தமிழ்நாட்டையும், பா.ஜ.க.வுக்கு அடிபணிந்து கிடக்கும் அ.தி.மு.க.வையும் மீட்கும் இரட்டைப் பொறுப்பு தி.மு.க.வுக்கு இருக்கிறது என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
உயர்நீதிமன்றம் குறித்து இழிவாகப் பேசிய பா.ஜ.க.வின் முக்கிய நிர்வாகியான (காரைக்குடி) எச்.ராஜாமீது இன்னமும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யாதது ஏன்? என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை காவல்துறையை நோக்கி கடும் எச்சரிக்கை விடுத்ததுடன், ஏப்ரல் 27 ஆம் தேதிக்குள் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யாவிட்டால், நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை தொடரப்படும் என்றும் காவல்துறைக்கு அறிவித்துள்ளது சென்னை உயர்நீதி மன்றத்தின் மதுரை கிளை.
சென்னை உயர்நீதிமன்றத்தை கொச்சைப்படுத்தும் வகையில் எழுதக் கூசும் சொற்களால் விமர்சித்தவர்!
2018 ஆம் ஆண்டில் புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே நடைபெற்ற ஊர்வலத்தின்போது, மேடை அமைத்து பேசுவதற்குக் காவல் துறை அனுமதி மறுத்தது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட அன்றைய பா.ஜ.க.வின் தேசிய செயலாளராக இருந்த எச்.ராஜா, காவல்துறையை மதிக்காததோடு, மிரட்டும் வகையில் பேசியதோடு, சென்னை உயர்நீதிமன்றத் தையும் கொச்சைப்படுத்தும் வகையில் எழுதக் கூசும் சொற்களால் விமர்சித்தார்!
இதன் தொடர்பான வழக்கு திருமயம் காவல் நிலையத்தில் பதிவானது; நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது.
இந்த வழக்கு விசாரணையை முடித்து விரைவில் எச்.ராஜாமீது குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. ஆனால், இதுவரை குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படாத நிலையில், குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்ய தந்தை பெரியார் திராவிடர் கழகம் சார்பில் மனுதாக்கல் செய்யப்பட்ட வழக்கில், மதுரைக் கிளையான சென்னை உயர் நீதிமன்றம், இரண்டு மாதத்தில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
இதுவரை நடவடிக்கை ஏதும் தொடரவில்லை என்பதால், சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை யில் நீதிபதி ஹேமலதா அவர்கள் முன்னிலையில் நேற்று (3.3.2021) வழக்கு விசாரணைக்கு வந்தது,
ஏப்ரல் (2021) 27 ஆம் தேதிக்குள்
குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய உத்தரவு
‘‘இந்த வழக்கில் குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்வது தொடர்பான உத்தரவை ஏப்ரல் (2021) 27 ஆம் தேதிக்குள்ளாக நிறைவேற்றவேண்டும்.
தவறும்பட்சத்தில், காவல்துறை அதிகாரிகள்மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்க நேரிடும்'' என்று நீதிபதி ஹேமலதா எச்சரித்து வழக்கை ஏப்ரல் 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.
தமிழ்நாடு அரசும் - காவல்துறை (முதல்வர் பொறுப்பின்கீழ் உள்ள காவல்துறை) எப்படி பா.ஜ.க. வினர்மீதுள்ள வழக்குகளை ‘‘ஊறுகாய் ஜாடியில்'' ஊறப் போடுகிறது பார்த்தீர்களா? குற்றவாளிகள் ‘பெரிய இடத்துச் செல்வாக்கு' என்ற திரைமறைவில் புகுந்து கொள்ளும்படிச் செய்து, அவர்களைப் பாதுகாப்பது ஒரு தலைப்பட்சமான நீதிப் போக்கு அல்லவா?
ஆளுங்கட்சி, காவிகள்மீது
கருணை காட்டுவது ஏன்?
இதுபோல மற்றவர்கள் மீது உடனடியாகப் பாயும் வழக்குகளும், குற்றப் பத்திரிகைகளும் ஏன் அரு வருக்கத்தக்க முறையில் உயர்நீதிமன்ற நீதிபதி களையே அர்ச்சித்த காவிகள்மீது இல்லாது கண் ஜாடையும், கருணையும் காட்டுவது ஏன்? மத்திய ஆளுங்கட்சியின் கோபத்திற்கு ஆளாகக் கூடாது என்ற அ.தி.மு.க. அரசின் அச்சத்தினாலா?
‘மடியில் கனம்; வழியில் பயம்' என்பதுதானே ஒரே பதில்!
இல்லையானால், தேர்தலில் கூட்டணிக்கு முன்பே, நோட்டாவோடு போட்டி போடும் தகுதியுள்ள தமிழ்நாட்டு பா.ஜ.க., தமிழ்நாட்டில் தங்கள் கட்சி வேட்பாளர்கள் இந்தத் தொகுதியில் என்று தொகுதியைப் ‘பட்டா' போட்டு விளம்பரம் செய்யும் அரசியல் விநோதம் ஒரு பக்கம்; அதைக் கண்டும் காணாமற் கண்ணை மூடிக் கொள்ளும் அ.தி.மு.க. ருசி கண்ட பூனைகளும் வாய்ப் பொத்தி, கைகட்டி, இப்படி அக்கட்சியைப் பா.ஜ.க.வுக்கு அடகு வைப்பார்களா?
வருகின்ற தேர்தலில் தி.மு.க.வின் பொறுப்பு இரட்டைப் பொறுப்பு!
எனவே, வருகின்ற தேர்தலில் தி.மு.க.வின் பொறுப்பு இரட்டைப் பொறுப்பாகும்!
தமிழ்நாட்டை மட்டுமல்ல, அ.தி.மு.க. என்ற அண்ணா பெயரில் உள்ள கட்சியையும் அடகு வைக்கப்பட்டதிலிருந்து மீட்டெடுக்க வேண்டிய வேலையும், தோல்வியைத் தந்து பாடம் கற்பிக்க வேண்டிய கடமையும் இருக்கிறது.
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
4.3.2021
No comments:
Post a Comment