பின்னாளில் அந்த ஆரியத்தை சமூகநீதிக்காக பயன்படுத்திய வரலாறு திராவிடர் கழகத்திற்கு உண்டு
அறிஞர் அண்ணாவின் உரைத் தொகுப்பு நூல் வெளியீட்டு விழாவில் தமிழர் தலைவர் உரை
சென்னை, மார்ச் 6- தந்தைபெரியாருக்கு காணிக்கையாக்கப்பட்ட, பொன்விழா கண்ட ‘அண்ணாவின் ஆட்சி’ பொறுப் பேற்ற நாள் (6.3.1967) சிறப்புக்கூட்டத்தில் Ôமுறியடிக்க முடியாத முப்பெரும் சாதனைகள்Õ புத்தக வெளியீடு மற்றும் ‘தொடக்கம்-திராவிடர்ப் படை’ பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று (5.3.2021) மாலை சென்னை பெரியார் திடல் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது.
திராவிட மகளிர் பாசறை மாநில அமைப்பாளர் சே.மெ.மதிவதனி வரவேற் புரை ஆற்றினார். கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தலைமை வகித்து உரையாற்றினார். கழக செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி கருத்துரை ஆற்றி னார்கள். திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரை ஆற்றினார்.
தமிழர் தலைவர்
தமிழர் தலைவர் ஆற்றிய சிறப் புரையில் குறிப்பிட்டது வருமாறு:
திரைப்படத்துறை பொழுதுபோக்கு என்றாலும், அது திராவிட இயக்கத்தால் கொள்கை பிரச்சாரத்துக்கு பயன்பட்டது. அண்ணா பெயர் வேலைக்காரி படத்தில் வரும்போது கைதட்டி வரவேற்போம். பொதுக்கூட்டங்களில் பேசச் சென்ற இடங்களில் வேலைக்காரி திரைப்படத்தை பலமுறை கண்டுள்ளேன்.
நாடகம், கலைத்துறைமூலம் அண்ணா சந்திரோதயம், சந்திரமோகன் (அ) சிவாஜி கண்ட இந்து ராஜ்ஜியம், ஓர் இரவு என கொள்கைகளை பரப்பியுள்ளார்.
1937இல் முசிறி தாலுகா துறையூரில் அண்ணா ஆற்றிய உரை இந்த புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது.
கட்சிகளுக்கு தொடக்கம், முடிவுகூட இருக்கும். ஆனால் இயக்கத்துக்கு அப்படி இல்லை. சுயமரியாதை இயக்கம் 1908இலேயே பெரியாரிடம் கொள்கையாக நிலைத்திருந்தது. பெரியார் தன் தங்கை மகளுக்கு மறுமணம் செய்யும் அந்த உறுதி இருந்தது.
பெரியாருக்கு தோற்றம் மறைவு என்று கிடையாது. பெரியார் என்றால் தத்துவம். என்றைக்கும் தத்துவம் மறைவது இல்லை. திருவள்ளுவர், புத்தருக்கு இறப்பு இல்லை. சித்தார்த்தர் மறைந்திருக்கலாம் ஆனால் புத்தருக்கு இறப்பு இல்லை. புத்தத் தத்துவம் துரத்தப்பட்டது.
இந்த நூல் Political Document - அரசியல் ஆவணம்.
idealogical fight, war - கொள்கைப் போர்.
இதன் அஸ்திவாரமான பெரியார் போட்ட விதையை கண்டுபிடித்து அழிக்க முடியாது.
அண்ணா கூறுகிறார் எந்த கட்சிமீது அபிமானம் இருந்தாலும், தமிழரின் ஜீவ நாடிகளை விட்டுவிடக்கூடாது.
பெரியாருடைய இயக்கம் காலத்தைத் தாண்டி சிந்திப்பது.
புதிய புதிய ஆபத்துகள் வரலாம் என்று அண்ணா அன்றே எச்சரிக்கிறார்.
அண்ணா கூறும் தமிழர்களுக்கு வேண்டிய ஜீவநாடிகள்
1. தமிழ் மொழி
2. வகுப்புவாரி பிரதிநிதித்துவம்
3. இந்துகோயில் பரிபாலனம்
4. சமதர்மம்
கண்ணுக்குத் தெரியாத கிருமிகள் தொற்றிவிடக்கூடாது என்பதற்காகத்தான் முகக்கவசம், கையுறை அணிதல், சோப்பு போட்டு கழுவுதல் எல்லாம்.
கண்ணுக்கு தெரியாத கிருமி மூளைக்கு ஆபத்தை ஏற்படுத்தி விடக்கூடாது என்பதற்குத்தான் பாதுகாப்பாக உள்ளது திராவிட இயக்கம்.
திராவிட இயக்க ஆட்சி என்பது ஆட்சிக்காக அல்ல. நம் பிள்ளைகளுக்காக. நீதிக்கட்சியிலிருந்து காப்பாற்றப்பட்டு வந்த வகுப்புரிமை என்பது எல்லார்க்கும் எல்லாம் என்பதாகும்.
நம்மை பாதுகாத்துக்கொள்ளவே உண்மையான திராவிடர் ஆட்சி வேண்டும். திமுக ஆட்சி வரவேண்டும்.
நீட் ஊழலுக்கு அப்பாற்பட்டதா?
இந்து அறநிலையத்துறை ஏற்படுத்திய பானகல் அரசரின் சாதனையே முதன்மையான சாதனையாகும்.
ஜீவானந்தம் பெரியாரை விட்டு பிரிந்து சென்றவர். ஆனால் அவர் மகளின் திருமணத்தையே தந்தைபெரியார் நடத்தினார்.
கருத்து மாறுபாடு இருந்தால் மீண்டும் சேரலாம். ஆனால், கொள்கை மாறுபாடு ஏற்பட்டால் மீண்டும் சேர முடியாது. சேர வேண்டிய அவசியமும் இல்லை.
17 ஆண்டுகள் பிரிவுக்குப்பின் அண்ணா ஜீவா மகளின் திருமணத்தில் தந்தை பெரியாருடன் பங்கேற்றார். அதற்குப்பின்னர்தான் நாகரசம்பட்டி பள்ளித்திறப்புவிழாவில் அண்ணா கலந்துகொண்டார்.
"என் உள்ளத்தில் பெரியார் இருக்கிறார்; அவர் உள்ளத்தில் நான் இருக்கிறேன். என் வாழ்நாளில் நான் ஏற்றுக் கொண்ட ஒரே தலைவர் தந்தை பெரியார் அவர்கள்தான். பிறரை தலைவராக ஏற்றுக் கொள்ளும் தேவை எனக்கு எழவே இல்லை. அப்படிப்பட்ட தலைவரின் வழியில் தொடர்ந்து நடை போட வேண்டும். அந்த உணர்வோடுதான் அவரது ஆணைகளை நிறைவேற்றுகிறோம்" என்பதாக அறிஞர் அண்ணா கூறியது பெரியாருக்கும், அண்ணாவுக்கும் இடையிலான உள்ளக் கிடக்கினை உணர்த்துவதாக இருந்தது. அதன் தாக்கமேதான் பின்னாளில் "திமுக அமைச்சரவையே தந்தை பெரியாருக்குக் காணிக்கை" என அண்ணா சட்டமன்றத்தில் கூறினார்.
தந்தைபெரியார் பிறந்த நாள் விழா மலருக்காக அண்ணா அளித்த ‘அந்த வசந்தம்’ கட்டுரையில் Ôநான் கண்டதும், கொண்டதும் ஒரே தலைவர் தந்தைபெரியார்தான்Õ என்றார்.
வரலாற்று நெடுகிலும் ஆரியம்தான், திராவிடத்தை ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது. ஆட்சி செய்து வந்துள்ளது. திராவிடத்தை ஆரியம் தனது ஆதிக்கத்திற்குப் பயன்படுத்திக் கொண்டதுதான் வரலாறு. ஆனால் 1967இல் தமிழகத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையில் அமைந்த கூட்டணியில் ஆரியத்தை பயன்படுத்திய வரலாற்றை படைத்தார் அறிஞர் அண்ணா. ஆரியத்தை நமது பயனுக்கு ஏற்றவாறு வேலை வாங்கிட வேண்டும். அப்பேர்ப்பட்ட வேலை வாங்கும் செயலை 1993ஆம் ஆண்டில் 69 விழுக்காடு இடஒதுக்கீட்டிற்கு சட்ட பாதுகாப்பை ஏற்படுத்திட ஆரியத்தை பயன்படுத்திய லரலாறு திராவிடர் கழகத்திற்கு உண்டு.
ஆரியத்தை பயன்படுத்துவது வேறு, ஆரியத்துக்கு பயன்படுவது வேறு.
கொள்கை, இலட்சியப்பிடிப்புடன் திராவிடர் ஆட்சிஇருக்க வேண்டும். ஆட்சி எதற்காக? காட்சிக்காக அல்ல; இலட்சியத்தை செயல்படுத்தவே.
நீதிக்கட்சியும், சுயமரியாதை இயக்கமும் இணைந்து செயல்பட்டதைப்போல், திராவிடர் கழகமும், திமுகவும் இணைந்து செயல்படும்.
கழகத்துணைத் தலைவர்
கழகத்துணைத் தலைவர் தலைமையுரையில்:-
தேர்தலுக்கு அச்சாணியான கருப்பொருளை கொடுப்பது இந்தக் கூட்டம். திராவிடர் கழக நிகழ்ச்சிகளில் நூல் வெளியீடு என்பது இயக்கப்பிரச்சாரமாகும். சமுதாயத்தில் நூல்களின் ஆதிக்கத்தை ஒழிப்பதற்காகவே நூல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. திராவிடர் கழகத்தின் சார்பில், சுயமரியாதை பிரச்சார நிறுவனத்தின் சார்பில் தந்தைபெரியார், ஆசிரியர் அவர்களின் நூல்கள் மட்டுமின்றி, திராவிட இயக்கக் கொள்கைகள் சார்ந்த நூல்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. 1934இல் திருப்பூர் மாநாட்டில்தான் தந்தைபெரியாரால் அண்ணா அழைத்து வரப்பட்டார். அதேபோல், காரைக்குடியில் ஆசிரியராக பணியாற்றிய ஜீவாவிடம் மாணவர்களைவிட பெரியவர்களுக்கு சொல்லவேண்டியது உள்ளது என்று கூறி தந்தை பெரியார் கையோடு அழைத்து வந்தார். 20.8.1937இல் உரையாற்றிய அண்ணாவின் உரை இந்த நூலின் முதல் கட்டுரையாக வெளியிடப்பட்டுள்ளது. தமிழ்மொழியை காக்க வேண்டியதன் அவசியம்குறித்து அண்ணா அவர்கள் குறிப்பிட்டுள்ளார். இன்று வாக்குக்காக தமிழைப்பேசி வருபவர்கள் செம்மொழி நிறுவனத் செயல்படவிடாமல் முடக்கிப்போடுகின்றனர் என்றார்.
பிரச்சார செயலாளர்
பிரச்சார செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி உரையில்:-
putting centuries into a capsule என்பதைப்போல் தந்தைபெரியார் சிந்தனைகள் உள்ளன என்று அண்ணா கூறுகிறார். தந்தைபெரியார் வீட்டில் தோழர் ஜீவா மகளின் திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தில் அண்ணா, அடிகளார் உள்பட தலைவர்கள் பலர் கலந்துகொண்டனர். அந்த திருமண நிகழ்ச்சியில், எனக்கு கிடைத்த ஒரே தலைவர் பெரியார் என்று முதல்வரான அண்ணா பேசினார். தந்தைபெரியார் அவர்களுடன் பழகிய சிந்தனையாளர்கள் அவரைவிட்டு விலகினாலும், அவர் யாரையும் வெறுத்து ஒதுக்காதவர். இந்தியைத் தடுப்பதற்கு ஆங்கிலம்தான் பயன்படும் என்றார் அண்ணா. முசிறி தாலுகா மாநாட்டில் அண்ணா உரையில் எதிர்கால போராட்டம் குறித்து கூறியுள்ளார். 1937லிருந்து 1967 வரையிலான காலக்கட்டத்தின் அண்ணாவின் உரைகள் அரசியல் பாடமாக நூலில் இடம்பெற்றுள்ளன.
செயலவைத்தலைவர்
செயலவைத்தலைவர் சு.அறிவுக்கரசு
அண்ணாவின் முப்பெரும் சாதனைகள் யாராலும் கைவைக்க முடியாதவை. முன்பு காங்கிரஸ் ஆட்சியின்போது போளுர் சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் தனிநபர் மசோதா கொண்டுவந்தார். அமைச்சராக இருந்த செ.மாதவன் தீர்மானம் கொண்டுவந்தார். சட்டம் இயற்றப்படும் என்றார்கள். ராஜகோபாலாச்சாரி ஆட்சியில் ரங்கசாமி ரெட்டியார் கொண்டுவந்த சட்டத்தில் கூட இனி நடக்கவிருக்கும் திருமணம் செல்லும் என்றுதான் இருந்தது. அண்ணா கொண்டு வந்த சட்டத்தின்படிதான் எங்களைப்போன்றவர்கள் செய்துகொண்ட சுயமரியாதை திருமணங்களும் செல்லும் என்று ஆனது. பக்தவச்சலம் ஆட்சியின்போது இந்தி திணிப்பை எதிர்த்த மாணவர் போராட்டத்தில் செஞ்சியில் துப்பாக்கி சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். 1967இல் அண்ணா முதல்வராக இருந்தபோது போதனா மொழி குறித்து மருத்துவ மாணவர் போராட்டம் நடைபெற்றது. அண்ணா அவர்களே நேரில் சென்று மாணவர்களிடம் பேசினார்.
வரலாறுதான் ஆசான். அதை மறந்தால் வரலாறு தண்டிக்கும்.
செங்கற்பட்டு மாநாட்டின் 80ஆவது ஆண்டு விழாவில் கலைஞர் பேசினார். திராவிட இயக்க வரலாறு குறித்து அறிந்துகொள்ளவேண்டுமானால் பெரியார் திடலில் இளவல் ஆசிரியர் வீரமணியிடம் கேட்டுத்தெரிந்துகொள்ளலாம் என்றார். எனக்குள்ள வருத்தமெல்லாம் அண்ணாமலைப்பல்கலைக்கழகத்தில் அண்ணாவின் ஆற்றங்கரையோரம் உரை இன்னமும் நூலாக வெளியாகவில்லை என்பதுதான்.
தமிழ்நாடு என்று பெயர் கூறும்போதுகூட ராஜகோபாலாச்சாரியோ Tamilnad என்று கூறினார். Tamilnadu என்று அண்ணாதான் கூறினார்.
அரசியல்வாதியாக, இலக்கியவாதியாக திகழ்ந்த அண்ணாவின் உரைகளை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் தொகுத்துக்கொடுத்துள்ளார்.
கழகப் பொதுச்செயலாளர் வீ.அன்புராஜ், பொருளாளர் வீ.குமரேசன், அமைப்புச்செயலாளர்கள் வி.பன்னீர்செல்வம், ஊமை.ஜெயராமன், மாநில மகளிரணி செயலாளர் தகடூர் தமிழ்செல்வி, தென்சென்னை மாவட்டத் தலைவர் இரா.வில்வநாதன், வடசென்னை மாவட்டச்செயலாளர் தி.செ.கணேசன், திருவொற்றியூர் மாவட்டத் தலைவர் எண்ணூர் வெ.மு.மோகன், நீலாங்கரை மாவட்டத் தலைவர் ஆர்.டி.வீரபத்திரன், தாம்பரம் மாவட்டத் தலைவர் ப.முத்தையன் உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
‘தொடக்கம்-திராவிடர்ப் படை’ பாடல்கள் வெளியீடு
மக்கள் கவிஞர் மாரி கருணாநிதி இயக்கத்தில் தமிழ்நாட்டின் இன்றைய முதன்மை சிக்கல்களான நீட்தேர்வு, இடஒதுக்கீடு வகுப்புவாரி உரிமை, குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டல், ஜாதி மறுப்பு திருமணம், உயர்கல்வி நிறுவனங்களில் பாதிக்கப்படும் மாணவர்கள், தந்தைபெரியார், அம்பேத்கர் வழியில் சமூகத்தின் செயல்பாடுகள், திராவிடம் சார்ந்த புரிதல் உள்ளிட்ட கருத்துகளைக்கொண்ட ‘தொடக்கம்-திராவிடர்ப் படை’ திரைப்படத்தின் பாடல்கள் வெளியீட்டு விழா நேற்று (5.3.2021) மாலை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் நடைபெற்றது.
‘தொடக்கம்-திராவிடர்ப் படை’ பாடல்களை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட்டு, குழுவினரை வாழ்த்தி பெரிதும் பாராட்டினார்.
மாரி கருணாநிதி குழுவினர் சார்பில் கழகத் தலைவர் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவிக்கப்பட்டு சிறப்பு செய்யப்பட்டது. கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், செயலவைத் தலைவர் சு.அறிவுக்கரசு, பொருளாளர் வீ.குமரேசன், பிரச்சாரச் செயலாளர் வழக்குரைஞர் அ.அருள்மொழி ஆகியோருக்கு திரைப்படக் குழுவினர் பயனாடை அணிவித்து சிறப்பு செய்தனர். மாரி கருணாநிதி மற்றும் குழுவினருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பயனாடை அணிவித்து பாராட்டினார்.
இசையமைப்பாளர் ஆதி இந்திரவர்மன், ஒளிப்பதிவாளர் உமாநாத், படத்தொகுப்பாளர் சிறீதர், சண்டை இயக்குநர் இளங்கோ, பின்னணி குரல் சே.மெ.மதிவதனி, பாடகர் சுந்தர்அய்யார், முதன்மை நடிகர்கள் மாதேஸ், மாரி கருணாநிதி, சித்து, இனியவன், ஊமை.ஜெயராமன், சி.கே.செந்தில்குமார், கனிஷ்கா, ஹேமா, ஜீவிதா உள்ளிட்ட குழுவினருக்கு தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பாராட்டை தெரிவித்தார்.
புத்தக வெளியீடு
அறிஞர் அண்ணா புத்தகங்கள், பெரியார் பிஞ்சு தொகுப்பு புத்தகங்களை திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் வெளியிட்டார்.
அண்ணா புத்தகங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து திராவிடர் வரலாற்று ஆய்வு மய்ய செயலாளர் பேராசிரியர் ந.க.மங்கள முருகேசன் பெற்றுக்கொண்டார்.
பெரியார் பிஞ்சு தொகுப்பு புத்தகங்களை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடமிருந்து கழகப்பொருளாளர் வீ.குமரேசன் பெற்றுக்கொண்டார்.
முறியடிக்க முடியாத முப்பெரும் சாதனைகள் (நன்கொடை ரூ.80), அறிஞர் அண்ணா அறிவுரைகள் (நன்கொடை ரூ.50) ஆக மொத்தம் ரூ.130இல் ரூ.30 தள்ளுபடி போக ரூ.100க்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
பெரியார் பிஞ்சு சார்பில் அண்டத்தைப்பார்க்கலாம் வாங்க (நன்கொடை ரூ.60), யாச்சியின் குமிழி ஆசை (நன்கொடை ரூ.60), புத்தர் படக்கதை (நன்கொடை ரூ.100) வுங்கா,சிங்கா மங்கா (நன்கொடை ரூ.60) ஆக மொத்தம் ரூ.280இல் ரூ.80 தள்ளுபடி போக ரூ.200க்கு புத்தகங்கள் வழங்கப்பட்டன.
No comments:
Post a Comment