சு.அறிவுக்கரசு
1910இல் பிரிட்டானிய நாடாளுமன்ற உறுப்பினர் கேய்ர் ஹார்டிக் என்பவர் சென்னை வந்தார். உழைக்கும் வர்க்கப் பிரதிநிதி. தோல் தொழிலிலோ, இரும்புத் தொழிலிலோ இருந்தவர். அவர்களின் பிரதிநிதியாக நாடாளுமன்ற உறுப்பினர். அவரை பார்ப்பனர்கள் சிறப்புடன் வரவேற்று பெருமைப்படுத்தினர் என்று அப்போது வெளியாகிய 'சூர்யோதயம்' எனும் ஏடு எழுதியுள்ளது. (20.3.1910) கீழ் ஜாதியைச் சேர்ந்த வெள்ளைக்காரரைச் சென்னைப் பார்ப்பனர் பெருமைப்படுத்தியமைக்காகச் சினம் கொண்டது அவ்ஏடு. வெள்ளையர் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவர்களாக இருந்ததையும் அன்னிபெசன்ட்டை வழிகாட்டியாக ஏற்றுக் கொண்டதையும் கிண்டல் செய்தது. ஏன்? சனாதன தர்மத்திற்கு விரோதமாம். மனு(அ)தர்மத்தை மேற்கோள்காட்டி மஞ்சேரி ராமய்யர் என்பவர் கீழ்க்கண்டவாறு எழுதினார்.
“சாஸ்திர சம்பிரதாயங்கள் எல்லாம் செத்துப் போய்விட்டன. ஒன்றுமே தெரியாத புரோகிதர்கள் மந்த்ரம் என்ற பெயரில் எதையோ முனகுகின்றனர். சடங்கு செய்ய அழைத்த யஜமான் ரொம்ப பிசி. சீக்கிரம் முடியுங்கோ என்கிறார். சந்தியாவந்தனம் செய்யும் பல பார்ப்பனர்கள் ஆல்கஹால் அருந்துபவர்கள். மனு சாஸ்திரப்படி பார்ப்பனர்கள் பூண்டு, வெங்காயம், காளான் போன்றவற்றை சாப்பிடக்கூடாது. ஆல்கஹால் பருகக்கூடாது. அது போல உப்பு, பால், சோறு, எள்ளு விற்கக்கூடாது. இப்படியெல்லாம் கட்டுப்பாட்டுடன் இருக்கும் பார்ப்பனர்களை எங்கே தேடுவது? படித்த பார்ப்பனர்களில் யாராவது சுத்தபத்தமாக உண்டா? திருத்தப்படவே முடியாத அளவுக்கு பார்ப்பன சமுதாயம் கெட்டுப் போய்விட்டது. நாகரிகமான பார்ப்பனர்கள் ஒய்.எம்.சி.ஏவுக்குப் போய் சாப்ஸ், கறித்துண்டும், கட்லெட்டும் தின்றுகொண்டு செரிமானம் செய்வதற்கு இரண்டு லார்ஜ் பிராந்தி குடிக்கிறார்கள். ஒரு நாளைக்கு இரண்டு முறை இப்படிச் சாப்பிடும் பழக்கம் வைத்திருக்கிறார்கள். ஆனால் சாஸ்திரோக்தமாகத் திருஷ்டி தோஷத்தைப் போக்கிடக் கூடுதலாக ஒரு மறைப்பைக் கட்டிக் கொள்கிறார்கள். (பார்ப்பனர் சாப்பிடுவதையோ, பானம் குடிப்பதையோ சூத்திரர் பார்க்கக் கூடாது. பார்த்தால் திருஷ்டி தோஷம்)" என்று மஞ்சேரி ராமையர் தியேலசாபியும் லிபரல் பார்ப்பனரும் எனும் தலைப்பில் ‘நியூ இண்டியா‘ (29.3.1917) ஏட்டில் எழுதினார்.
இதே ஏட்டில் (8.6.1917) நாகர்கோயில் ஆர்.பத்மநாப அய்யர் என்பார், தற்காலக் கல்வியை குறை கூறி விட்டு சனாதன தர்மம் பற்றிப் படிக்க வேண்டும் என்றும் இதற்கான தனிப்பள்ளி தொடங்கப்பட வேண்டும் என்றும் எழுதினார். ஆசிரியராக தியோசோபிஸ்ட் (ஆத்ம ஞானம்) ஒருவர் இருக்க வேண்டும் என்றும் எழுதினார். அவர்கள் பார்ப்பன ஹிந்து மதத்தைப் பரப்பி, அதுவே அறிவியல் பூர்வ ஹிந்துமதம் என்றும் தம்பட்டம் அடித்தனர்.
இன்றைய ஹிந்துக்கள் உண்மையானவர்கள் அல்லர் என்றும் தங்களின் தர்மத்தை கைவிட்டு விட்டவர்கள் என்றும் எம்.கே. ஆச்சார்யா எனும் மத வெறிப்பார்ப்பனர் கூறினார். (இவரே மிலேச்ச பாஷை படித்துவிட்டு டில்லி சட்டமன்ற உறுப்பினராக இருந்தார்) தற்கால வாழ்க்கை முறைகளை மாற்றி, வேதங்களும் உபநிஷத்களும் கூறும் வாழ்வை நடத்த வேண்டும் என்று கூறினார். திருவல்லிக்கேணிப் பார்ப்பனர்கள் கூட்டத்தில் பேசினார், 5.5.1921இல். பார்ப்பனரின் தர்மம் கெடாமல் காப்பாற்றுகிற மாதிரியான வேலைகளை மட்டுமே பார்ப்பன இளைஞர்கள் நாட வேண்டும் என்று அக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியவர், ஊருக்கு உபதேசம் செய்தவர்.
ஆத்மஞான சபையை ஆரம்பித்தவர்களில் ஒருவரான கர்னல் ஆல்காட் 1895இல் ஆரிய பால சமாஜம் தொடங்கினார். தமிழ்நாட்டின் பல ஊர்களில் கிளைகளையும் தொடங்கினார். ஹிந்து மதத்தின் சாரத்தை அறியவும் கற்று ஏற்றிடவும் மதச்சடங்குகளைச் செய்திடவும் இளம் பருவத்திலிருந்தே பழகிடவும் தொடங்கினார். (ஆரிய பால போதினி - பக்கம் 12) ஹிந்துக்கள் என்று பேசப்பட்டாலும் அது பார்ப்பனச் சிறுவர்களுக்கும் சத்சூத்திரர்களுக்கும் மட்டுமே இயங்கியது. இவர்கள் சென்னையில் இலவசப்பள்ளி ஒன்றை நடத்தினர். கிறித்துவரல்லாத “பறையர்” ஜாதி மாணவர்கள் மட்டுமே சேர்த்துக் கொள்ளப்பட்டனர். சமைக்கவும் வீட்டு வேலைகளைச் செய்யவும் கற்றுத் தந்தார்கள். ஏனெனில் இதைக்கொண்டு அவர்கள் வேலைக்காரர்களாகவும், காவல்காரர்களாகவும் வேலை பார்க்கலாம். இது கருணையினால் அல்ல. போன ஜென்மத்தில் செய்த பாவங்களுக்கான கர்மவினையாகப் பறையர்களாகப் பிறந்த இவர்கள், இந்த ஜென்மத்தில் நல்லவாறு நடந்து, அடுத்த ஜென்மத்தில் பார்ப்பனராக பிறந்து மோட்சமடையலாம் என்பதற்கான ஏற்பாடாம். இத்தகைய கர்மவினை ஹிந்து மதத்திற்கு உரியது. அதனால் ஆத்மஞான சபை இதில் மிகுந்த அக்கறை கொண்டது. எல்லாமே பார்ப்பன (மாறாத) சனாதனத்தை அடிப்படையாகக் கொண்டதே. ஆனால் எம்.கே.ஆச்சார்யா போன்றவர்கள் இரட்டை வாழ்க்கை வாழ்ந்தவர்கள். ஆச்சார அனுஷ்டானம் என்று சனாதனம் பேசிக்கொண்டே அதற்கு எதிரான வாழ்க்கை வாழ்ந்தவர்கள். அதுபோல தங்களைப் பார்ப்பனர்கள் என பெருமையுடன் அழைத்துக்கொண்டவர்கள். பிராந்தி குடித்து இறைச்சித் தின்று வாழ்ந்தனர். இவர்களை மஞ்சேரி ராமையர் லிபரல் பார்ப்பனர் என்றும் பிறப்பினால் மட்டுமே பார்ப்பனர்கள் என்றும் பிரித்துப் பேசுகிறார். சங்க இலக்கியமான பரிபாடல் கூட பார்ப்பனர்களைப் புரி நூல் அந்தணர் என்றும் விரிநூல் அந்தணர் என்றும் பிரித்துப் பேசும். பூணூல் மட்டும் தொங்கவிட்டிருப்போர் புரிநூல் அந்தணராம். மற்றவர் விரிவாகப் பார்ப்பனர் பற்றிய நூலறிவு கொண்டோராம். எனவே இது இரண்டாயிரமாண்டு குணாதிசயம். இவர்களெல்லாம் சேர்ந்த அமைப்பு தார்மீக பிராமண சங்கம் எனப்பட்டது. இதன் தலைவர் ஜஸ்டிஸ் சதாசிவ அய்யர். டி.வி.கோபாலசாமி அய்யர் செயலாளர் (ஓய்வு பெற்ற டெபுடி கலெக்டர்). இவர்கள் நடத்திய விருந்துகளில் திருஷ்டி தோஷம் பார்ப்பதில்லை. பஞ்ச திராவிடப் பார்ப்பனர்கள் உறுப்பினராக முடியாது என்ற தடை நீக்கப்பட்டது. மரக்கறி உணவுப் பழக்கமுள்ள, குடிப்பழக்கம் இல்லாத எல்லா வகை பார்ப்பனர்களும் சேரலாம். மதுரை ஏ.ரங்கசாமி அய்யர் கொடுத்த தீர்மானப்படி தூய (குணா மற்றும் கர்மா உள்ள) பார்ப்பனரல்லாதாரும் சேர்த்துக் கொள்ளப்பட்டனர். இவர்களின் நடத்தை பற்றி இரு பார்ப்பன உறுப்பினர்கள் நற்சான்றிதழ் வழங்க வேண்டும் என்பதே நிபந்தனை. இது என்ன வகை சனாதனம்? பார்ப்பனர்க்கே வெளிச்சம். இதைத்தான் பெரியார் குறிப்பிட்டார், “பலித்தவரை பார்ப்பனியம்“ என்று.
1921இல் திருவல்லிக்கேணி பார்ப்பனர் சங்கக் கூட்டத்தில் நிறைவேற்றிய தீர்மானப்படி பார்ப்பன தர்மத்திற்குப் புறம்பான வேலைகளைச் செய்யாதிருக்குமாறு வேண்டு கோள் விடப்பட்டது. சர்.பி.எஸ்.சிவசாமி அய்யர் 1864இல் பிறந்து 1946இல் இறந்தவர். சென்னை சட்டக்கல்லூரியில் உதவிப்பேராசிரியர். மெட்ராஸ் லா ஜர்னல் ஏட்டின் இணை ஆசிரியர். சென்னை சட்டமன்றக் கவுன்சில் உறுப்பினர். சென்னைப் பல்கலைக் கழகத் துணைவேந்தர் (1916-1918). பெனாரஸ் ஹிந்துப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் (1918-1919) டில்லி சட்டமன்ற உறுப்பினர். வெள்ளைக்கார பாரிஸ்டர்களைப்போல் பத்து மடங்கு பணம் சம்பாதித்தவர். ஆடம்பரமாக வாழ்ந்தவர். ஃபிரான்ஸ் நாட்டு கட்டடக் கலைஞரால் 1912இல் கட்டப்பட்ட வள மனையில் குடியிருந்தவர். வீட்டின் பெயர் சுதர்மா. பளபளக்கும் ஷூ ஆடம்பர கோட் சூட். இரண்டு சென்ட் தெளிக்கப்பட்ட கைக்குட்டைகள் வைத்திருப்பார். பாக்கெட்டில் ஒரு கடிகாரமும், மணிக்கட்டில் ஒரு கடிகாரமும் கட்டியிருப்பார் என்று அவரின் நண்பர் சந்திரசேகரன் எழுதிய நூலில் 102ஆம் பக்கத்தில் குறித்துள்ளார்.
இதுவெல்லாம் பார்ப்பன தர்மத்தில் சேர்த்தியா?
குறித்த நேரத்தில் உணவு உண்பது உட்பட எல்லா பழக்க வழக்கங்களிலும் மேலைநாட்டுக் கலாச்சாரம் ஒட்டியே. கோடையில் உதகமண்டலம் போய்விடுவார். இவைத்தவிர மற்றவையெல்லாம் “சம்பிரதாயப்படியே”. மூன்று வேளை சந்தியாவந்தனம், வருடாந்திர சிரார்த்தம், சிறீமத் பாகவதம், தேவி பாகவத உபன்யாசங்கள் நடத்தி கேட்பார். பொள்ளாச்சி நகர சபையில் உணவு உண்ணும் விடுதிகளில் பார்ப்பனருக்கும், பார்ப்பனர் அல்லாதார்க்கும் தனித்தனி இடங்கள் இருந்ததை ஒழித்துத் தீர்மானம் நிறைவேற்றியதை “தனிநபர் சுதந்திரத்தில் தலையிடல்” என திருவாய் மலர்ந்து அருளியவர் இவர். அவரின் மனைவி இறந்தபோது பிணத்தை எடுக்க “நல்ல நேரம்“ வரை காத்திருந்தவர். வெள்ளையர் போல் பழக்கவழக்கங்கள், நடை, உடை, பாவனைகள், வாசனை திரவியங்கள் பூசுதல் போன்றவை, எந்த சாஸ்திரத்தில் விதிக்கப்பட்டுள்ளன? பதில் கூற முடியாது. என்றாலும் இரட்டை வாழ்க்கை வாழ்வதுதான் பார்ப்பன சனாதனம்.
பார்ப்பனரல்லாதாரைச் சிறுமைப்படுத்திடும் கருத்துக் களின் படி வாழ்வதும் அதற்கான சாஸ்திர ஆதாரங்களைத் தூக்கிப் பிடிப்பதுமே “அவாளின்” சனாதனம்.
“ஆரிய ஜன அய்க்கியமே, காங்கிரஸ் கட்சி” எனும் தலைப்பில் நூல் எழுதிய ஜி.சுப்ரமணிய அய்யர் தான் 20.8.1878இல் மிலேச்ச பாஷையான இங்கிலீஷில் 'தி ஹிண்டு' வார ஏட்டைத் தொடங்கினார். பின்னர் 1.4.1880 முதல் நாளேடு ஆனது. 1882இல் இவர் தொடங்கிய ‘சுதேசமித்திரன்’ வார ஏடு தான் நாளேடாக வளர்ந்தது. இந்தத் தொழில் பார்ப்பன “தர்மம்“ கூறும் தொழிலா? பத்திரிகை நடத்துவது பார்ப்பனர் களின் தர்மமா? எந்த சாஸ்திரம் கூறுகிறது? சிறுமியாக இருந்தபோதே கைம்பெண் ஆகிவிட்ட தம் மகளுக்கு மறுமணம் செய்து வைத்தாரே, அது பார்ப்பன தர்மமா? மானுட தர்மமா?. எனவே, சனாதனமும் சுதர்மமும் சுயநல தர்மம்தானே தவிர, வேறல்ல. ஆனால், இவற்றால் தான் பார்ப்பன வல்லாண்மை வளர்ந்தது!
No comments:
Post a Comment