கேள்வி: வணிகம் செய்வது அரசின் வேலை அல்ல, பொதுத்துறை நிறுவனங்கள் தனியார் மயமாக்கப்படும் என்று பிரதமர் மோடி கூறி இருப்பது அதிர்ச்சி அளிப்பதாக உள்ளதே!
- இல.சீதாபதி, மேற்கு தாம்பரம்.
பதில்: ஆர்.எஸ்.எஸ். கொள்கை சமதர்மத்தை ஒழிப்பது. பொதுநலம் கருதி மேற்கொள்ளும் அரசு பணிகள் வணிகம் ஆகாது. பொது விநியோகத்தை அரசு கைகளில் எடுத்து நடத்துவது வியாபாரத்திற்காகவா? மக்கள் நலனுக்காகவா?
இவர்களைப் புரிந்து கொள்ள இத்தகைய பதில்கள் மிகவும் காத்திரமான ஆதாரங்கள்!
கேள்வி: காவிரி - குண்டாறு இணைப்பு
திட்டத்திற்கு கருநாடக அரசு எதிர்ப்புத் தெரிவித்துள்ளதே?
- புவியரசன், காரைக்குடி
பதில்: அவர்கள் தங்களது மாநில உரிமைகளைப் பாதுகாப்பதாகக் காட்டும் பாசாங்கு நடவடிக்கையின் ஒரு பகுதி இது! மத்தியில் ஆளும் பா.ஜ.க. ஆட்சி கருநாடகாவிலும் ஆட்சியில் இருப்பதால், இதில் ஏதாவது குளறுபடி இல்லாமல் தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும். இது அதிமுகவின் தேர்தல் அறிவிப்புக்குரிய திட்டம்தான் என்றாலும் கூட!
கேள்வி: பி.எஸ்.எல்.வி.சி-51 செயற்கைக் கோளின் மேல்பகுதியில் பகவத்கீதை வாசகங்கள் மற்றும் பிரதமர் மோடி அவர்களின் பெயர், அவரது படம் பொறிக்கப்பட்டது அவசியம்தானா?
- மல்லிகா, மாங்காடு.
பதில்: மதச்சார்பின்மை என்ற அரசியல் சட்டத்தின் அடிக்கட்டுமானத்தையே தகர்க்கும் தகாத செயல், அதைவிடக் கொடுமை அது ஒற்றுமையை (oneness) ஏற்படுத்துவதாக கூறியது மாபெரும் குற்றம்.
‘நாலு வர்ணத்தை நானே சிருஷ்டித்தேன்’ என்பதும், சூத்திரர்களும் பெண்களும் பாவயோனியில் பிறந்தவர்கள் என்பதும் மக்களை ஒன்று படுத்துவதா? பிரிப்பதா? கேவலப்படுத்தி இழிவுபடுத்துவது!
இதெல்லாம் இஸ்ரோ விஞ்ஞானிகள் அறிய வேண்டாமா? வன்மையான கண்டனம் குவிய வேண்டும்.
கேள்வி: நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெறும் என்று நமக்கு நம்பிக்கை இருந்தாலும், இன எதிரிகளின் சூட்சுமத்தையும் கணக்கில் கொண்டு விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் அல்லவா?
- வே.பெருமாள்சாமி, திண்டிவனம்.
பதில்: பல கோடி ரூபாய் ஓவ்வொரு தொகுதியிலும் இறக்கி, எதிர்க்கட்சியின் முக்கிய பொறுப்பாளர்களை ‘வைட்டமின் - ப’ மூலம் ஆள்தூக்கி, அய்ஜாக் (Hijack) செய்யும் “அலாவுதீனின் அற்புத விளக்கோடு”(?) வருகிறார்கள். மக்களின் விழிப்புணர்வை விபீடணர்கள் மாற்றிவிடாதபடி தேர்தல் வேலை பார்ப்போரையும் சேர்த்து திமுக கூட்டணியினர், பாதுகாக்க வேண்டிய வேலையும் கூடுதல் வேலையாகும்.
கேள்வி: மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள் பட்டியலில் (OBC) உள்ள வன்னியர்களுக்கு மட்டும் தனியாக 10.5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க தமிழக அரசு மசோதா நிறைவேற்றி, அதற்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளது பற்றி தங்கள் கருத்து என்ன?
- சீதாலட்சுமி, திண்டிவனம்.
பதில்: வகுப்புவாரி உரிமை ஆணையாக அமைதலே சிறப்பு. தற்காலிக இடஒதுக்கீடு என்பதும் ஆறுமாதம் கழித்து மறுபரிசீலனை என்பதும் - இடஒதுக்கீட்டை கொச்சைப்படுத்தும் தேர்தல் காலத்து அரசியல் அவலம் ஆகும்.
கேள்வி: அதிமுக - பாரதிய ஜனதா கூட்டணி திமுகவை வீழ்த்த முடியுமா?
- அ .தமிழ்க்குமரன், ஈரோடு.
பதில்: முதுகில் மூன்றாவது கை முளைத்தால் முடியும்! வீண் கனவு அது!
கேள்வி: அண்மைக் காலமாக ராகுல் காந்தி பி.ஜே.பி. என்று கூறாமல் ஆர்.எஸ்.எஸ். என்றே குறிப்பிடுவது அவரது சித்தாந்த புரிதலைக் காட்டுகிறதா?
- திராவிட விஷ்ணு, வீராக்கன்
பதில்: ஆம். விஷவிருட்சத்தின் வேரை வெட்டுவதே சரியான அணுகுமுறை. இதற்காக காங்கிரஸ் - இதன் தலைவர் ராகுலுக்குப் பாராட்டு தெரிவிக்க அனைத்து முற்போக்காளர்களும் ஒன்று சேரவேண்டும்.
கேள்வி: 21 ஆம் நூற்றாண்டிலும் சிறுமியை பாலியல் வன்முறைக்கு உட்படுத்திய அதிகாரியே சிறுமிக்கு 18 வயது ஆனபின் திருமணம் செய்துகொள்ள ஒப்புக்கொண்டால் தண்டனையில் இருந்து விடுவிப்பதுப் பற்றி பரிசீலிக்கப்படும் என்று உச்சநீதிமன்ற நீதிபதியே குறிப்பிடுவது எதைக் காட்டுகிறது?
- தமிழ் மைந்தன், சைதாப்பேட்டை
பதில்: கடைந்தெடுத்த பிற்போக்குத் தனம். தவறான தீர்ப்பு இது! ஏற்க இயலாத ஒன்று.
கேள்வி: திமுக ஆட்சிக்கு வந்தால், மத்திய அரசிடமிருந்து எந்த உதவியும் கிடைக்காது என்று ஆளும் பாஜக பிரமுகர்கள் வெளிப்படையாக கூறுவது எதைக் காட்டுகிறது?
- செ.பாக்யா, விருத்தாசலம்
பதில்: இப்படியே பேசட்டும். தேர்தலில் அவர்களது இந்த கொள்ளிக்கட்டையே அவர்களைத் தோற்கடிக்கப் போதுமானது. மத்திய அரசு எவர்வீட்டுத் தனிச் சொத்து?
கேள்வி: அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்படாத, உலக சுகாதார நிறுவனத்தின் அங்கீகாரம் பெறாத பதஞ்சலி நிறுவனம் தயாரித்த கரோனா தடுப்பு மருந்து அறிமுக விழாவில் மத்திய அமைச்சர்கள் பங்கேற்பது சரியா?
- க.கருணாமூர்த்தி, ஆவடி
பதில்: பச்சையான, அரசமைப்பு சட்ட அப்பட்டமான மீறல் - அருவருப்பான அவலக்காட்சி இது! யாருக்கும் வெட்கமில்லை போலும்!
No comments:
Post a Comment