வேலை வாய்ப்புக்கு - ஆட்சியை மாற்றுவதுதான் முதல் வேலை! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 4, 2021

வேலை வாய்ப்புக்கு - ஆட்சியை மாற்றுவதுதான் முதல் வேலை!

அரசு அலுவலகங்களில் இரண்டாம் நிலை மற்றும் மூன்றாம் நிலைப் பதவிகளில் சேர, ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கிலான இளைஞர்கள் யு.பி.எஸ்.சி. தேர்வை எழுதுகிறார்கள்.

மத்தியப் பிரதேச மாநிலத்தின் இந்தூரைச் சேர்ந்த ரஞ்சித் ரகுநாத் என்கிற இளைஞர், கடந்த ஆண்டு விவசாயத் துறையில் தன் முதுகலை அறிவியல் பட்டத்தைப் பெற்றார். தற்போது அரசின் விவசாயத் துறையில் ஒரு வேலையைப் பெறக் கடினமாக போராடிக் கொண்டிருக்கிறார். இவருக்கு வயது 26, ஏற்கெனவே அரசின் பணித் தேர்வுகளில் சலிப்படைந்து இருக்கிறார்.

"முதலில் அரசு போதுமான வேலை வாய்ப்புகளோடு வராது, அப்படியே வந்தாலும் அரசு முறையாக தேர்வுகளை நடத்தாது, அதை அரசு செய்தாலும் தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் பல சிக்கல்கள் எழும். நான் பல முறை விவசாயத் துறையின் தேர்வுகளை எழுதி இருக்கிறேன், இதுவரை ஒரு நியாயமான வாய்ப்புக்காகப் போராடிக் கொண்டிருக்கிறேன். தேர்வு முடிவுகளில் பல மோசடிகளும் நிகழ்கின்றன" எனப் பிபிசியிடம் தொலைபேசி மூலம் கூறினார் ரஞ்சித்.

மத்தியப்பிரதேசத்தைச் சேர்ந்த இளைஞர் ரஞ்சித் "வேலைகொடு மாமா" என்று முழங்கியுள்ளார்.  இதில் 'மாமா' எனக் குறிப்பிடுவது மத்தியப் பிரதேசத்தின் முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகானைத் தான். அம்மாநிலத்தில் அவரை அப்படித்தான் அழைக்கிறார்கள்.

"உரிமைகளுக்காகப் போராடும் இளைஞர்கள் குழுவில் நானும் ஒருவன். ஒரு விவாதத்தைத் தொடங்க நாங்கள் சமூக வலைதளத்தைப் பயன்படுத்துகிறோம். இந்தப் பிரச்சினை தொடர்பாக நாம் எதையாவது செய்ய வேண்டும்" என்கிறார் ரஞ்சித்.

2021-ஆம் ஆண்டு ஜனவரி மாத நிலவரப்படி, இந்தியாவில் மொத்தம் நான்கு கோடி பேருக்கு வேலை இல்லை என்கிறது 'சென்டர் ஃபார் மானிட்டரிங் இண்டியன் எகானமி' (சி.எம்.அய்..) என்ற அமைப்பு. இதில் தொடர்ந்து வேலை வாய்ப்புகளைத் தேடிக் கொண்டிருப்பவர்கள் மற்றும் வேலையைத் தேடாதவர்கள் என இரு தரப்பினரும் அடக்கம்.

இந்தியாவில் கடந்த 2021 ஜனவரியில் வேலை வாய்ப்பின்மை 6.5 சதவீதம் ஆக இருக்கிறது. கடந்த 2020 டிசம்பரில் இது 9.1 சதவீதமாக இருந்தது.

சி.எம்.அய். அமைப்பின் தரவுகளின்படி, 2019 - 2020 நிதி ஆண்டில், இந்தியாவில் சுமார் 40 கோடி பேர் வேலையில் இருக்கிறார்கள். 3.5 கோடி பேருக்கு வேலை இல்லை.

ஒவ்வோர் ஆண்டும் இந்தியாவில் தோராயமாக இரண்டு கோடி பேர், வேலை பார்க்கத் தகுதியான 15 - 59 வயதில் இணைகிறார்கள்.

30 வயதான, மகாராட்டிர மாநிலத்தின் சிக்ஹல்தராவைச் சேர்ந்த பியுஷ் மால்வியா போன்றவர்கள் பல முறை வேலை தேடும் முயற்சிகளில் தோல்வியடைந்ததால் , வேலை தேடுவதையே நிறுத்திவிட்டார்கள்.

"நான் என்னுடைய முதுகலைப் பட்டப்படிப்பை அரசியல் அறிவியலில் கடந்த 2016-ஆம் ஆண்டு நிறைவு செய்தேன். அதன் பின் அரசு வேலைக்காக பல முறை முயற்சித்தேன், வேலை கிடைக்கவில்லை. 2011-ஆம் ஆண்டு என் பி.எட் இளங்கலைப் பட்டப் படிப்பை நிறைவு செய்துவிட்டு ஆசிரியராக முயற்சித்தேன் அதுவும் நடக்கவில்லை" என்கிறார் பியுஷ்.

தற்போது பியுஷ் தன் தந்தையின் "மொபைல் எலெக்ட்ரானிக்ஸ்" தொழிலை ஏற்று நடத்தி வருகிறார். இவரும் மேலே குறிப்பிட்ட "ஹேஷ்டேகு"களோடு சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருக்கிறார். வேலை இல்லாததைப் பற்றிப் பேச வேண்டும் என தான் நம்புவதாகவும் கூறினார்.

"ஒன்றுமே நடக்கவில்லை என்றால் கூட பரவாயில்லை, குறைந்தபட்சம் அதைக் குறித்துப் பேசுகிறார்கள். இளைஞர்களுக்கு வேலை கிடைக்காததற்குப் பல காரணங்கள் இருக்கின்றன. நாம் அதைக் குறித்துப் பேச வேண்டும். அதற்கு சமூக வலைதளம் ஒரு முக்கிய இடம்" என்கிறார் பியுஷ்.

இந்த நேரத்தில் ஒரு கேள்வி எழுகிறது. எப்படி? இந்தியா வில் வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரித்தது. இந்த நிலைக்குக் காரணம் பணமதிப்பிழப்புதான் என்கிறார் முன்னாள் முதன்மைப் புள்ளியியல் துறைத் தலைவர் பிரனாப் சென்.

"இந்தியாவின் அமைப்புசாரா துறையைப் பணமதிப்பிழப்பு கடுமையாக பாதித்துவிட்டது. அதிலிருந்து நாம் மீண்டு கொண்டிருந்த போது கரோனா வந்துவிட்டது. பிரச்சினை பல மடங்கு அதிகரித்துவிட்டது" என்கிறார்

"அரசு தன் கொள்கை அளவில் வேலை தொடர்பான பிரச்சினைகளை ஒரு பிரச்சினை என்றே கருதவில்லை அல்லது எடுத்துக் கொள்ளவில்லை" என சி.எம்.அய். அமைப்பின் முதன்மைச் செயல் அதிகாரி மகேஷ் வியாஸ் கூறுகிறார்.

"இந்தியாவின் வளர்ச்சி தொழிலாளர்கள் அதிகம் தேவைப்படும் துறை மூலம் முன்னெடுக்கப்படாமல், முதலீடு அதிகம் தேவைப்படும் துறை மூலம் முன்னெடுக்கப்பட்டது. அரசு போதுமான தரமான வேலை வாய்ப்புகளை உருவாக்காமல் இருக்கிறது. பொருளாதாரம் எப்படி வேலை வாய்ப்புகளை உருவாக்கும் என்பதைப் பற்றிக் கவலைப்பட வேண்டும். ஆனால் இந்தியப் பொருளாதார ஆய்வறிக்கை மற்றும் நிதிநிலை அறிக்கை- 2021 அதைக் குறித்துப் பேசவே இல்லை" என்கிறார் மகேஷ் வியாஸ்.

2 கோடி பேர்களுக்கு வேலை வாய்ப்பு என்று பிரதமர் அறிவித்தது வெறும் வாய்ச் சவடால்தானா? பகோடா விற்பதும் ஒரு வேலைதானே என்று சொல்லவில்லையா? ஆட்சி மாற்றம் என்ற ஒரு வேலைதான் இப்போது வேலையற்றவர்களுக்கு இருக்க முடியும்.

No comments:

Post a Comment