தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க. செய்யும் துரோகம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 10, 2021

தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க. செய்யும் துரோகம்!

கருநாடக மாநில சட்டமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட்ட நிதி நிலை அறிக்கையில், மேகதாது அணை கட்ட ரூ.9 ஆயிரம் கோடி ஒதுக்கப்பட்டது, முன்பு; இந்த தொகை வெறும் ரூ.5500 கோடியாக இருந்த நிலையில் தற்போது கூடுதலாக ரூ.4000 கோடி ஒதுக்கியுள்ளது

கருநாடக அரசின் நடப்பு சட்டமன்றக் கூட்டத்தொடரில் எடியூரப்பா தலைமையில் 2021-22 ஆண்டிற்கான நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப் பட்டது, இதில் தமிழகம் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தும், மேகதாது அணை கட்ட நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

பெங்களூரு நகரில் குடிநீர் தேவை அதிகரித்துள்ளது. குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்ய அர்காவதி, காவிரி திட்டத்தின் கீழ் காவிரியின் குறுக்கே ரூ.9,000 கோடி செலவில் மேகதாது தடுப்பணை கட்டி, அதன் மூலம் பெங்களூரு நகருக்குக் குடிநீர் வினியோகிக்கப்படும். இத்திட்டத்தை அமல்படுத்த ஏற்கெனவே, மத்திய அரசிடம் திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்ததும் காவிரியின் குறுக்கே மேகதாது தடுப்பணை கட்டும் பணி தொடங்கப்படும். என்று கூறப் பட்டுள்ளது,

 ஏற்கெனவே மத்திய சுற்றுச்சூழல் அமைச்சரகம் இந்தத் திட்டம் குறித்த அறிக்கையைப் பாராட்டி உள்ளது, மேலும் கருநாடகாவில் இருந்து மத்திய அமைச்சர்களாக உள்ள ரமேஸ் ஜகஜினங்கி, சதானந்த கவுடா போன்றோர் மோடியைச் சந்தித்து மேகதாது அணைத்தொடர்பான அனுமதியை விரைவில் வழங்க மத்திய நீர்வளத்துறைக்கு உத்தரவிடவேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தனர். இது குறித்து அவர்களது சுட்டுரை (டுவிட்டர்) பக்கத்திலும் படத்தோடு செய்தியை வெளியிட்டனர்.  காவிரியின் குறுக்கே தமிழக எல்லையில் இருந்து 60 கிலோ மீட்டர் தூரத்தில், 5 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.6 ஆயிரம் கோடி செலவில் இந்தப் புதிய அணையைக் கட்ட கருநாடக அரசு முடிவு செய்திருந்தது. இந்த அணையின் மூலம், 67 டி.எம்.சி. தண்ணீரை கருநாடகாவால் தேக்கி வைக்க முடியும், பெங்களூரு நகரத்தின் குடிநீர் வசதிக்காகவே இது கட்டப்பட முடிவு செய்ததாகக் கூறப்பட்டது.

ஆனால், மேகதாது அணை கட்டப்பட்டால், தமிழகத்திற்குத் தண்ணீர் வருவது தடைபடும். இருப்பினும் மேகதாது அணையைக் கட்டியே தீருவோம் என்று எடியூரப்பா தலைமையிலான கருநாடக அரசு உறுதியாக உள்ளது.  இதற்கிடையே, காவிரியின் குறுக்கே கருநாடக அரசு மேகதாது அணை கட்டுவதற்கான வரைவு திட்ட அறிக்கைக்கு மத்திய நீர்வள ஆணையம் அனுமதி அளித்தது. அத்துடன் அணை தொடர்பான ஆய்வுப் பணிகளை மேற்கொண்டு விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் அனுமதி அளித்தது.

இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. இவ்வழக்கு  விசாரணைக்கு வந்தது. அப்போது, மேகதாது அணை தொடர்பான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க தடை விதிக்க வேண்டும் எனத் தமிழகம் தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

ஆனால் இந்த கோரிக்கையை ஏற்க மறுத்த உச்ச நீதிமன்றம், அணை தொடர்பான பணிகள் ஆரம்ப கட்டத்தில் இருப்பதால் விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பதற்குத் தடை விதிக்க முடியாது என 2019-ஆம் ஆண்டு  தெரிவித்திருந்தது, இதனை அடுத்து சுற்றுப்புறச்சூழல் அமைச்சரகத்திடமும் பிரதமர் மோடியிடமும் கருநாடகாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வரும் நிலையில், தற்போது முன்பை விட கூடுதலாக நிதி நிலை அறிக்கையில் மேகதாது அணைகட்ட அதிகம் நிதி ஒதுக்கி உள்ளது குறிப்பிடத்தக்கது ஆகும்.

கருநாடக மாநிலத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருப்பது பா...தான் - அந்தப் பா...வோடு தான் அதிமுக கூட்டு சேர்ந்துள்ளது என்பதைக் கவனிக்கத் தவறக் கூடாது. கருநாடக மாநில பா... அரசு மட்டுமல்ல; மத்தியில் உள்ள பா...வும் தமிழ் நாட்டுக்கு எதிராகப் பச்சைக் கொடி காட்டி விட்டது.

இவற்றிற்கெல்லாம் வரும் சட்டமன்ற தேர்தலில் தகுந்த பாடத்தைத் தமிழ்நாட்டு மக்கள் கற்பிக்க வேண்டும் - கற்பிப்பார்கள் என்பதிலும் அய்யமில்லை.

No comments:

Post a Comment