தமிழ்நாடு தழுவிய அளவில் போராட்டம் நடத்தப்பட வேண்டுமா?
தமிழர் தலைவர் ஆசிரியரின் எச்சரிக்கை அறிக்கை
சீர்காழியில் தந்தை பெரியார் சிலை அவமதிப்பு - அ.தி.மு.க. ஆட்சியில் தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், திருவள்ளுவர் சிலைகள் அவமதிக்கப் படுவது தொடர்கிறது - தேர்தல் பிரச்சாரத்தில் இப்பிரச்சினை முக்கிய இடம்பெறும்; பொறு மைக்கும் ஓர் எல்லை உண்டு - எச்சரிக்கை, எச்சரிக்கை! என்று திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:
தந்தை பெரியாரின் சிலையை அவமதிப்பது என்பது - பா.ஜ.க.வை வழிகாட்டியாகக் கொண்ட அ.தி.மு.க. ஆட்சியில் தொடர் கதையாகிவிட்டது. சில நாட்களுக்குமுன் ஒரத்தநாட்டில் இந்த அவமதிப்பு நடந்தது - அனைத்துக் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
குற்றவாளியை இதுவரை கண்டுபிடிக்கவில்லை; அந்த ஈரம் காய்வதற்கு முன் சீர்காழியில் தந்தை பெரியார் சிலை சிறுமைப்படுத்தப்பட்டு உள்ளது.
நெற்றியில் திருநீற்றுப் பட்டைப் போட்டு, குங்குமத்தையும் அப்பி, கீழ்த்தரமான புத்தியைக் காட்டியுள்ளனர்.
தகவல் தெரிந்தவுடன் மயிலாடுதுறை மாவட்ட திராவிடர் கழகத் தலைவர் மானமிகு கடவாசல் குணசேகரன் தலைமையில், அனைத்துக் கட்சியினரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியுள்ளனர்.
காவல் நிலையம் எதிரிலேயே....
இதில் என்ன கொடுமையென்றால், காவல் நிலையம் எதிரிலேயே தந்தை பெரியார் சிலைக்கு இந்த அவமரியாதை நடந்திருக்கிறது என்பதுதான்.
காவல் நிலையத்தில் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.
வழக்கம்போலவே மனநலம் பாதிக்கப்பட்டவர் இந்த வேலையைச் செய்துவிட்டான் என்று கூறி, கோப்பை முடித்துவிடப் போகிறார்களா?
தமிழகம் தழுவிய அளவில் - தந்தை பெரியார் சிலை அவமதிக்கப்படுவதையும், காவல்துறையின் அலட்சியத்தையும் கண்டித்து அனைத்துக் கட்சியினரும் ஒருங்கிணைந்து மிகப்பெரிய அளவில் போராட்ட நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டும் என்று அண்ணா தி.மு.க. அரசு எதிர்பார்க்கிறதா?
தேர்தல் பிரச்சாரத்தில்
முக்கிய இடம்பெறும்
தந்தை பெரியார், அண்ணல் அம்பேத்கர், திருவள்ளுவர் சிலைகள் அ.தி.மு.க. ஆட்சியில் அவமதிக்கப்படுவதும், குற்றவாளிகளைக் கண்டுபிடிப்பதில் அலட்சியம் காட்டுவதும் தேர்தல் பிரச்சாரத்தில் முக்கிய இடம்பெறும் என்பதையும் தெரிவித்துக் கொள்கின்றோம்.
பொறுமைக்கும் ஓர் எல்லை உண்டு - எச்சரிக்கை! எச்சரிக்கை!!
கி.வீரமணி
தலைவர்,
திராவிடர் கழகம்
சென்னை
6.3.2021
No comments:
Post a Comment