சத்தியம்தான் சர்க்கரைப் பொங்கல்!
வாக்களிக்கப் பணம் வாங்கவில்லை என சத்தியப் பிரமாணம் பெறவேண்டும் என்று தொடுக்கப்பட்ட வழக்கில் - இது நீதிமன்ற வேலையல்ல என்று சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.
வாக்காளர்களுக்குப் பணம் அளிக்க மாட்டோம் என்று வேட்பாளர்களிடம் சத்தியப் பிரமாணம் வாங்கலாமே!
ஓ, சத்தியம்தான் சர்க்கரைப் பொங்கல் ஆயிற்றே - அதுவும் சரிதான்!
பூஜை அறையில் கள்ளப் பணம்!
ஆம்புலன்சில் கஞ்சா கடத்திய 4 பேர் கைது.
பூஜை அறையில் கள்ளக் கணக்கை - பணத்தைக் கைப்பற்றவில்லையா?
முன்னாள் பிரதமருக்கு இன்னாள் பிரதமர் பதில்!
வேலையின்மை அதிகரித்துள்ளது : - முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங்
அதனால் என்ன? பகோடாவிற்கலாம் என்று இந்நாள் பிரதமர் சொல்லி இருக்கிறாரே!
என்ன நாயகமாம்?
ஓட்டுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க 702 பறக்கும் படைகள்.
வாக்குரிமை வாங்குவது - வாக்குரிமையை விற்பது என்ற ஜனநாயக வியாபாரப் பரிவர்த்தனை வெகுஜோர்தான்.
ஜனநாயகமா - பண நாயகமா என்று கேட்டுவிடாதீர்கள்!
கட்டம் கட்டத் தயார்!
அ.தி.மு.க. - பா.ஜ.க.வுடன் நான்காம் கட்டப் பேச்சுவார்த்தை.
எத்தனைக் கட்டப் பேச்சுவார்த்தை நடத்தினாலும் வெகுமக்கள் இந்தக் கூட்டணிக்குக் கட்டம் கட்டத் தயார்தான்!
தேர்தல் வரை... முழங்கலாமே!
‘‘வெற்றிக்கொடி ஏந்தி தமிழகம் வெல்வோம்!'' - பா.ஜ.க.வின் தேர்தல் முழக்கம்
தேர்தல் வரை இப்படி முழங்கலாம்தான் - தேர்தலுக்குப் பிறகு?
No comments:
Post a Comment