68 ஆண்டுகளில் 50 ஆண்டு பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர் தளபதி ஸ்டாலின்! 234 தொகுதிகளிலும் கலைஞரும், தளபதி ஸ்டாலினும்தான் போட்டியிடுகிறார்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 1, 2021

68 ஆண்டுகளில் 50 ஆண்டு பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர் தளபதி ஸ்டாலின்! 234 தொகுதிகளிலும் கலைஞரும், தளபதி ஸ்டாலினும்தான் போட்டியிடுகிறார்கள்!

வெற்றி பெறச் செய்வீர் - நாட்டைமதவாத சக்திகளிடமிருந்து மீட்பீர்!

தி.மு.. கிழக்கு மாவட்டம் சார்பில் நடைபெற்றதளபதி மு..ஸ்டாலின் பிறந்த நாள் விழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் சங்கநாதம்

சென்னை, மார்ச் 1  ‘‘68 ஆண்டுகளில் 50 ஆண்டு பொதுவாழ்வுக்குச் சொந்தக்காரர் தளபதி மு..ஸ்டாலின்; 234 தொகுதிகளிலும் கலைஞரும், தளபதி ஸ்டாலினும்தான் போட்டியிடுகிறார்கள் - வெற்றி பெறச் செய்வீர் - நாட்டை மதவாத சக்திகளிடமிருந்து மீட்பீர்'' என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நீதி அரங்கம் - நல்லதை எடுத்துரைப்போம் - நாமே விடிய வைப்போம்!' கருத்தரங்கம்

துறைமுகம் தொகுதியில் திமுக கிழக்கு மாவட்டம் சார்பில் கடந்த 26.2.2021 அன்று மாலை சென்னை பாரிமுனை - ராஜா அண்ணாமலை மன்றத்தில், இரண்டு (ஓய்வு பெற்ற) சென்னை உயர்நீதிமன்ற மூத்த நீதிபதிகள் கலந்துகொண்ட  'நீதி அரங்கம்' - நல்லதை எடுத்துரைப்போம், நாமே விடிய வைப்போம்' எனும் தலைப்பில் திராவிட முன்னேற்றக் கழகத்  தலைவர் தளபதி மு.. ஸ்டாலின் அவர்களின்  பிறந்த நாள் விழா கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து தமிழர் தலைவர் திராவிடர் கழகத்  தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் சிறப்புரையாற்றினார்.

அவரது சிறப்புரை வருமாறு:

மிகுந்த பெருமைக்கும், பாராட்டுக்கும் உரிய அற்புதமான பிறந்த நாள் பெருவிழா - விரைவில் திருவிழா என்று சொல்லக்கூடிய அளவில், மிகச் சிறப்பான ஒரு தலைப்பில் நம்முடைய அருமை நண்பர், திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற மாவட்டச் செயலாளர்களில் ஒருவரும், சட்டப் பேரவை உறுப்பினரும், எதை, எப்போது எப்படி செய்வது என்பதற்கு இலக்கணமாக இருக்கக்கூடிய ஒருவரும், செயல்வீரருமான அருமை சகோதரர் சேகர் பாபு அவர்கள், அருமையான நிகழ்ச்சிக்குநீதி அரங்கம்' என்று தலைப்பிட்டு, அதிலும் சிறப்பாக  உள்தலைப்பாகலட்சியம் 6', ‘லட்சியத் தலைவரின் எழுச்சி நாள்', ‘நல்லதை எடுத்துரைப்போம்',  நாமே விடிய வைப்போம்' என்ற அருமையான தலைப்பு களைக் கொடுத்து, எங்களையெல்லாம் அழைத்து அருமை சகோதரர் திராவிட முன்னேற்றக் கழகத்தி னுடைய வரலாற்றில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் இவர்களை யெல்லாம் வார்ப்பிடமாகக் கொண்டிருக்கக் கூடிய நம்முடைய தலைவராக தளபதி விளங்குகிறார்.

நம்முடைய பெருமைக்கும், பாராட்டுதலுக்கும் உரிய  நம்முடைய பாரம்பரியமான இயக்கத்தினுடைய - நம் நாட்டில் வாரிசு அரசியல், வாரிசு அரசியல் என்று சொல்கிறார்கள் - அரசியலில் மட்டுமல்ல - நியாயங்கள் பேரிலும் வாரிசுகள் வருகிறார்கள் - அதுதான் மிகவும் முக்கியம்.

இங்கே வந்திருக்கின்ற இளைய தலைமுறையினருக்குச் சொல்லிக் கொள்வது என்னவென்றால், நீதியரசர் செல்வம் அவர்கள்  உயர்நீதிமன்ற நீதிபதி என்பது சிறப்புதான் - ஆனால், அதைவிட இந்த மேடைக்கு இன்னொரு சிறப்பு என்னவென்று தெரி யுமா? திராவிட இயக்கத்தினுடைய விழுதுகளில், பழுது படாத விழுது என்பதுதான் மிகவும் முக்கியம்.

திராவிட லெனின் என்று தந்தை பெரியாரால் போற்றப்பட்ட சர்..டி.பன்னீர்செல்வம்

சர்..டி.பன்னீர்செல்வம் அவர்களைத்தான் திராவிட லெனின் என்று தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்.

‘‘சிங்கத்தை நரிய டிக்கும்

திறமில்லை எனினும் சிங்கம்

பொங்குற்றே இறந்த தென்றால்

நரிமனம் பூரிக் காதோ?

எங்குற்றான் செல்வன் என்றே

தமிழர்கள் ஏங்கும் காலை

இங்குற்ற பூணூல் காரர்

எண்ணம்பூ ரிக்கின் றார்கள்.''

என்று புரட்சிக்கவிஞர் எழுதினார்.

சர்..டி.பன்னீர்செல்வம் அவர்கள் ஒரு விமான விபத்து ஏற்பட்டதினால் மறைந்தார். அவருடைய பெயரன்தான் நீதிபதி செல்வம் அவர்கள்.

மூத்த நீதிபதியும், மாணவர் பருவந்தொட்டே திராவிடர் இயக்கத்தில் பற்றுள்ளவருமான ஜஸ்டிஸ் அக்பர் அலி அவர்களாவார்கள்.

இந்த இயக்கம் என்றால் என்ன? சுயமரியாதை இயக்கம் - பெரியாருடைய இயக்கம் - அண்ணா வினுடைய வழி - கலைஞருடைய வழி  - தளபதி ஸ்டாலினின் தடம் என்று இன்றைக்கு வருகிறது என்று சொன்னால், இந்த வரலாறு இருக்கிறதே - கொள்கை பூர்வமானது. இது ஒரு கொள்கைக் குடும்பம். அந்தக் கொள்கைக் குடும்பத்தைச் சார்ந்தவர்தான் அய்யா நீதியரசர் செல்வம் அவர்கள்!

இந்நிகழ்ச்சிக்குத் தலைமை ஏற்றிருக்கக் கூடிய பாராட்டுதலுக்குரிய அருமைத் தோழர் பொதுக்குழு உறுப்பினர் மானமிகு விஜயகுமார் அவர்களே,

முன்னிலை ஏற்றிருக்கக்கூடிய முரளி எஸ்.இராஜ குமார் அவர்களே, திராவிடர் கழகப் பொருளாளர் குமரேசன் அவர்களே,

நீதியரசரையொட்டி வந்திருக்கக்கூடிய அருமை நண்பர்களே!

இந்நிகழ்வில் கலந்துகொண்டு சிறப்பிக்கின்ற மாவட்டக் தி.மு. கழக நிர்வாகிகள் ஏகப்பன் அவர்களே, புனிதவதி எத்திராஜ் அவர்களே, ஆசாத் ஷேக் அப்துல்லா அவர்களே, பி.வி.செம்மொழி அவர்களே, சாமிக்கண்ணு அவர்களே மற்றும் ஏராளமாக இங்கே வந்திருக்கும் தோழர்களே,

நன்றியுரை கூறவிருக்கக் கூடிய தி.மு.. மாவட்டச் செயலாளர் ஜனார்த்தனன் அவர்களே, அருமைத் தாய்மார்களே உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள் கிறேன்.

முத்திரைப் பதிக்கின்ற வகையில் எதையும் செய்யக்கூடியவர் செயல்வீரர் சேகர்பாபு

செயல்வீரர் சேகர்பாபு அவர்கள் எந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தாலும், முத்திரைப் பதிக்கின்ற வகையில்தான் செய்வார். நீதி அரங்கம் என்று சொன்னால் - நம்முடைய திராவிடர் இயக்கத்திற்கும், நீதிக்கும் சம்பந்தம் உண்டு.

ஏனென்றால், திராவிடர் இயக்கத்திற்கு தொடக்கத்தில் என்ன பெயர் என்று நீங்கள் எல்லாம் தெரிந்துகொள்ளவேண்டும்.  நீதிக்கட்சி என்றுதான் பெயர் இருந்தது. ஏனென்றால், அந்த நீதியை இன்றைக்கும் நாம் கேட்கவேண்டி இருக்கிறது. நாம் கேட்பதைவிட, நம்முடைய சகோதரர் சேகர்பாபு அவர்கள் எந்த நிகழ்ச்சி நடத்தினாலும், ஆண்கள் அதிகமாக வருகிறார்களோ இல்லையோ, சகோதரிகள் அதிகமாக வருவார்கள்.

எனக்கு பெருமகிழ்ச்சி என்னவென்றால், பெண் கள் அதிகமாக பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதுதான். ஏனென்றால், இன்றைய கால கட்டத்தில் கேஸ் விலை எவ்வளவு ஏறிப் போயிருக் கிறது என்பது அவர்களுக்குத்தான் மிக நன்றாகத் தெரியும்.

இப்பொழுது நாட்டில் நல்ல ஆட்சி எப்படி நடக்கிறது?

நீர் உயர.... நெல் உயரும்

நெல் உயர வரப்பு உயரும்

என்று உயரும் உயரும் என்று சொல்லி சொல்லி,

இப்பொழுது எல்லாம் உயர்ந்துவிட்டது.

பெட்ரோல் விலைதான் உயர்ந்தது

கேஸ் விலைதான் உயர்ந்தது;

பெட்ரோல் விலை உயர்ந்ததினால், காய்கறி விலைகளெல்லாம் உயர்ந்துவிட்டது.

வெங்காயத்தை உரித்தால்தான் நம்முடைய தாய் மார்களின் கண்ணீர் வரும் முன்பெல்லாம் - இப்பொழுது வெங்காயத்தின் விலையைக் கேட்டாலே கண்ணீர் வருகிறது.

இதுதான் இன்றைய ஆட்சியாளர்களின் சாதனை!

இதையெல்லாம் குறைப்பதற்கு ஒரே வழி மீண்டும் தி.மு.., தளபதி கையில் ஆட்சி வருவதுதான்! அதுதான் நடக்கப் போகிறது - அதிலொன்றும் சந்தேகமில்லை.

அதற்கு நீதி வழங்கவேண்டும் என்று கேட்பதுதான் நீதி அரங்கம். இப்பொழுது எங்கே பார்த்தாலும் நீதி, நீதி, நீதி என்ற குரல்கள்தான் கேட்கின்றன.

மேல்முறையீட்டுக்குஅப்பாற்பட்ட தீர்ப்புகள்

ஒரு பக்கத்தில் தாய்மார்கள் வீட்டிற்குள்ளே நீதி கேட்கிறார்கள். தளபதி அவர்கள் ஊர்தோறும் சென்று நீதி கேட்கிறார். இங்கே அதைப்பற்றி நீதியரசர்கள் மிக அழகாக சொன்னார்கள். நீதியரசர்கள் சொன்னால்,  தீர்ப்புகள் - நாங்கள் சொன்னால் வெறும் உரை.

இங்கே இருக்கின்ற நீதிபதிகள் எழுதிய தீர்ப் பெல்லாம் - மேல்முறையீடு செய்ய முடியாத தீர்ப் பாகும். மேல்முறையீட்டுக்கு அப்பாற்பட்ட தீர்ப்பு களாகும்.

இன்றைக்கு ஆட்சி மாற்றம்  ஏன் தேவை?

ஏன் தளபதி தேவை?

நாமே விடிய வைப்போம்!

இது வெறும் அலங்கார வார்த்தையல்ல - அர்த்த முள்ள அடுக்கு மொழி.

அது யார் கைகளில் இருக்கிறது? தளபதி அவர் களின் கைகளில்தான் இருக்கிறது.

நீதி வேண்டும்? என்று யார் கேட்கிறார்கள்.

வீட்டிற்குள் இருக்கும் சாதாரண பெண்கள், விலைவாசி ஏறிப் போய்விட்டதே என்று கண்ணீர் விட்டு நீதி கேட்கிறார்கள்.

தந்தை பெரியாரும், பேரறிஞர் அண்ணாவும், கலைஞர் போன்றவர்களும் போராடியதால் சமூகநீதி வந்தது. அந்த சமூகநீதியால்  படித்து  மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளராக இருக்கக் கூடிய பெண்ணுக்கே இன்றைக்குப் பாதுகாப்பில்லை.

அடுப்பூதும் பெண்களுக்குப் படிப்பெதற்கு என்று கேட்டார்கள் முன்பொரு காலத்தில் - கலைஞர் ஆட்சிக்கு வந்ததும் ஊதுகின்ற அடுப்பே இல்லாமல் செய்தார்.

இன்றைக்குப் பெண்கள் பல துறைகளில் பதவியில் இருக்கிறார்கள். உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியாக இருந்து ஓய்வு பெற்று செல்லும்பொழுது நடைபெற்ற பிரிவு உபசார விழாவில், ‘‘தமிழ்நாட்டில் உள்ள உயர் நீதிமன்றத்தைப் பார்க்கிறேன், 13 பெண்கள் நீதிபதி களாக இருக்கிறார்கள்; வேறு மாநிலங்களில் இது போன்று இல்லை'' என்று பெருமையாக சொன்னார்.

தலைமை நீதிபதியின் பெருமிதம்: சென்னை உயர்நீதிமன்றத்தில் 13 பெண் நீதிபதிகள்!

இந்தியா முழுவதும் உள்ள உயர்நீதிமன்றங்களில்  மொத்தம் 23 பெண் நீதிபதிகள்தான் இருக்கிறார்கள். அந்த 23 பெண் நீதிபதிகளில் 13 பெண் நீதிபதிகள் சென்னை உயர்நீதிமன்றத்தில் மட்டுமே உள்ளார்கள். இது எப்படி சாத்தியம்? யாராவது மந்திரம் செய்த தினால் வந்ததா? அல்லது மாலையில் வீடுகளில் விளக்கேற்றியதால் வந்ததா? அல்லது எல்லோரும் இரவு 7 மணிக்குமேல் கைதட்டுங்கள் என்று சொன்ன தினால் வந்ததா? இல்லை நண்பர்களே, திராவிடர் இயக்கம் அரும்பாடுபட்டு உழைத்ததின் விளை வாகத்தான் நடந்தது.

படி,படி' என்று பெண்களைப் படிக்க வைத்தார்கள். எங்களுடைய சகோதரிகள், ஆண்களுக்கு எந்த வகையிலும் குறைந்தவர்கள் அல்ல - ஆற்றலில், அறிவில்.

இதுவரையில் அவர்களுக்கு வாய்ப்புக்கிடைக்காமல் இருந்தது. பெண் புத்தி பின் புத்தி என்று முன்பு சொன்னார்கள். ஆனால், இப்பொழுது பெண் புத்திதான் முன் புத்தி என்பதைத் தெளிவாக நிரூபித்து இருக்கிறார்கள். அதற்கு அடையாளம்தான் பெண்கள் நீதிபதிகள். இந்த மண்ணுக்கு என்ன பெயர் தெரியுமா? பெரியார் மண் - சமூகநீதி மண் இந்த மண். அந்தப் பாரம்பரியத்தினுடைய தொடர்ச்சி, அதை எடுத்துக் கொண்டு நம்மை விடிய வைப்பதற்குத்தான் இன்றைய கதாநாயகராக நாம் யாரைப் பாராட்டுகிறோமோ -  அந்தத் தளபதி மு..ஸ்டாலின் அவர்களுடைய விழா என்று சொல்லும்பொழுது - அந்த விடியல் வரவேண்டும்.

காவல்துறை அய்.பி.எஸ். அதிகாரியான பெண்ணுக்கே இந்த ஆட்சியில் பாதுகாப்பில்லை!

சமூகநீதியால் படித்து, மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளராக இருக்கக்கூடிய ஒரு பெண் ணுக்கே பாதுகாப்பில்லை என்றால், வெட்கப்பட வேண்டாமா?

அவர் ஒரு, காவல்துறை தலைமை உயரதிகாரியால், பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டு இருக்கிறார்.

பொள்ளாச்சி, பொள்ளச்சி, பொள்ளச்சி என்று சொல்லிக் கொண்டிருந்தார்கள்; பொள்ளாச்சி என்னய்யா, இங்கே என்னாச்சு என்று முதலமைச்சர் பாதுகாப்புக்குப் போயிருக்கிறார் சட்டம் ஒழுங்கு  அமைதியைப் பாதுகாக்கின்ற காவல்துறையின் தலைவராக போடப்பட்ட ஒருவர் - ஏற்கெனவே இருந்தவரை ஒரு பக்கம் ஒதுக்கிவிட்டு, இவரை சிறப்பு அதிகாரியாகக் கொண்டு வந்தார்கள். அவர் என்ன செய்திக்கிறார் தெரியுமா? ‘கிருஷ்ண லீலை'  செய்திருக்கிறார்.

அவருடைய சீண்டலை எல்லோரும் பொறுத்துக் கொண்டு போவார்களா? தைரியமுள்ள அந்தப் பெண் எஸ்.பி.யைப் பாராட்டுகிறோம். அவர் புகார் கொடுக்கவேண்டும் என்று சொன்னபொழுது, அவர் புகார் கொடுக்காதவாறு செய்திருக்கிறார்கள்; இது ரகசியமல்ல - இன்றைய பத்திரிகையில் வெளிவந்தி ருக்கிறது;  தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்பட்டு இருக்கிறது. அதை சொல்வதற்கு வெட்கப் படுகிறோம்.

ஏன் ஆட்சி மாற்றம் வேண்டும் என்றால் - இது போன்ற காட்சி மாற்றங்கள் வேண்டும் என்பதற்காகத் தான் - அதற்காக ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும்.

அந்தப் பெண் எஸ்.பி. புகார் கொடுப்பதற்கு முன் தடுக்கிறார்கள் - ஆனால், பெண்கள் ஒரு முடிவெடுத்து விட்டார்கள் என்றால், அதிலிருந்து பின்வாங்க மாட் டார்கள். ஆண்களுக்கும், பெண்களுக்கும் அதுதான் வித்தியாசம். ஆண்கள் தடுமாறுவார்கள்; ஆனால், பெண்கள் முடிவெடுக்கமாட்டார்கள்; அப்படி எடுத்துவிட்டால், தடுமாறமாட்டார்கள்.

பெண்கள் முடிவெடுத்துவிட்டால்,அந்த முடிவிலிருந்து மாறமாட்டார்கள்!

நம்முடைய இயக்கத்தில் சிற்றரசு என்ற ஒரு நகைச்சுவை பேச்சாளர் அடிக்கடி ஒரு கதை சொல்வார்,

‘‘ஒரு ஆண் தற்கொலை செய்துகொள்ளவேண்டும் என்று முடிவெடுத்து, தண்டவாளத்தில் தலை வைத் துப் படுத்திருப்பானாம்; ரயில்கிட்டே வரும்பொழுது, அடுத்த ரயில்  வரட்டும், பார்க்கலாம் என்று எழுந்து வந்துவிடுவானாம்.

கிணற்றில் விழுந்து தற்கொலை செய்துகொள் ளலாம் என்று நினைத்து கிணற்றைப் பார்க்கும் பொழுது, தண்ணீர் நன்றாக இல்லையே என்று திரும்பி வந்துவிடுவானாம்.

ஆனால், பெண்கள் அப்படியில்லையாம். ஒரு முடிவெடுத்துவிட்டால், அது சரியான முடிவோ, தவறான முடிவோ  உடனே அதனை நடைமுறைப் படுத்தி விடுவார்களாம் என்று  பேசும்பொழுது பேச்சாளர் சிற்றரசு சொல்வார்.

அதுபோன்று, அந்த மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் புகார் கொடுப்பதிலிருந்து பின் வாங்கவில்லை.

நாங்கள் நியாயத்திற்காகப் பேசுகின்றோம். அந்தப் பெண் எஸ்.பி. யாரென்று எங்களுக்குத் தெரியாது.

சிறப்பு காவல்துறை தலைவர்மீது புகார் கொடுக்கச் சென்றபொழுது, அவருடைய உயரதிகாரி தடுத்த பொழுது, இந்தப் பெண் காவல்துறை அதிகாரி, ‘‘இது என்னுடைய உரிமை; என்னை தடுக்காதீர்கள்; நான் உங்களைவிட அதிகம் படித்தவர்'' என்று சொல்கிறார்.

போராடித்தான் புகாரையே கொடுத்திருக்கிறார்!

நான் சொல்லிக் கொண்டே இருக்கிறேன்,

நீங்கள் கேட்கமாட்டேன் என்கிறீர்களே என்று சொல்லி, நூறு காவல்துறையினரைக் கொண்டு அந்தப் பெண் எஸ்.பி.யைத் தடுத்திருக்கிறார்கள்;  அதையெல்லாம் மீறி, போராடித்தான் அந்தப் புகாரை கொடுத்திருக்கிறார்.

ஒரு காவல்துறை எஸ்.பி.க்கே இந்த நிலைமை என்றால், இந்த ஆட்சி நீடிக்கலாமா? அது நியாயமா?

வேலியே பயிரை மேய்வது என்கிற ஒரு சொற் றொடர் உண்டு. இன்னும் அந்த காவல்துறை தலைவர் பதவியிலிருந்து  நீக்கப்படவில்லை.

நீதிபதிகள் எல்லாம் இந்த மேடையில் இருக் கிறார்கள்; ஒரு சாதாரண அரசு ஊழியர்கூட தவறு செய்தால், அவரை பதவி இடைநீக்கம் செய்கிறார்கள். அதுபோன்றுகூட பாலியல் சீண்டல் செய்த காவல் துறை இயக்குநரை பதவியிலிருந்து நீக்காமல் விசாரணை செய்தால்,  ‘‘நாளைக்கு என்னாகுமோ?'' என்று நினைத்து, எந்த அதிகாரியாவது உண்மையைச் சொல்வார்களா?

இங்கே நீதியரசர்கள்முன் இதனை நான் சமர்ப் பிக்கின்றேன்.

இதைக் கண்டித்து, கேட்டு, இந்த நிலைமையை மாற்றக் கூடிய ஒரு சூழல் வேண்டுமானால், அந்த விடியலை உண்டாக்கவேண்டிய கதாநாயகருடைய பிறந்த நாள் விழாவைத்தான் நாம் இன்றைக்குக் கொண்டாடுகிறோம்.

நியாயங்கள் தோற்கக்கூடாது - நீதி கிடைக்க வேண்டும்; நீதி கிடைப்பதற்காகத்தான் இந்த இயக்கமே தோன்றிற்று.

வடக்கே இருந்து ஒருவர் வருகிறார், ‘‘ஊழல் செய்துவிட்டார்கள், ஊழல் செய்துவிட்டார்கள்'' என்கிறார்.

68 வயதில், 50 ஆண்டு பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர் நம்முடைய தளபதி!

1976 ஆம்ஆண்டு நெருக்கடி காலத்தில் (எமர் ஜென்சி) இங்கே இருப்பவர்களில்  பலர் பிறந்திருக்க மாட்டீர்கள்;  ஏனென்றால், 68  வயதைத் தொடக்கூடிய அனுபவம் உள்ளவர்; அவருடைய பொதுவாழ்க்கை என்பது அரை நூற்றாண்டுப் பொதுவாழ்க்கை. 68 வயதில், 50 ஆண்டு பொதுவாழ்க்கையைத் தாண்டி யவர் இன்றைய விழா நாயகராக இருக்கக்கூடிய நம்முடைய தளபதி அவர்கள் என்பதை விளக்கி சொல்கிறபொழுது,

வாரிசு அரசியலால் இப்படிப்பட்ட பொறுப்புக்கு வரவில்லை அவர். கட்டுப்பாடு மிகுந்த, கலைஞருக்கே நம்பிக்கை ஏற்படுத்தக் கூடிய, தந்தை பெரியார் வழி வந்து, அறிஞர் அண்ணா அவர்களுடைய வழி வந்து, கலைஞர் அவர்களுடைய வழி வந்து - அவர்களால் தயாரிக்கப்பட்ட நான்காவது தலைமுறையாக  - கொள்கை தீபத்தை எடுத்துக் கொண்டு செல்லக்கூடிய ஆற்றல்மிகுந்த ஒரு தளபதி அவர்.

இங்கே அவருடைய பெருமைகளைப்பற்றியெல்லாம் எடுத்துச் சொன்னார்கள். இவையெல்லாவற்றையும்விட, நான் ஒன்றை சொல்கிறேன். தியாகத்தில் புடம்போட்டு எடுக்கப்பட்டவர் நம் தளபதி அவர்கள்.

நீதியரசர் இஸ்மாயில் ஆணைய அறிக்கை

சாட்சியமாக நானே இங்கே இருக்கிறேன்; நீதி அரங்கம் என்று தலைப்பு இருப்பதினால், நீதி சம்பந்த மான விஷயங்களை சொல்லவேண்டும். இதோ என்னுடைய கையில் இருப்பது அரசு நியமித்த இஸ்மாயில் விசாரணை கமிஷன் அறிக்கை. நீதியரசர் இஸ்மாயில் ஆணையத்தின் அறிக்கை 1978 ஆம் ஆண்டு வந்தது.

மத்தியில் இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலகட்டத்தில், தமிழ்நாட்டில் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்த காலகட்டத்தில், மத்திய ஆட்சியை எதிர்த்து முதலமைச்சர் கலைஞர் தீர்மானம் போடுகிறார்.

உடனே மத்திய அரசிடமிருந்து தூது வருகிறது - எங்களை ஆதரியுங்கள் என்று. ஆதரித்தால்தான் உங்களுக்கு நல்லது என்று  சொல்லி தூது வந்தார்கள்.

இன்றைக்குப் போல்  டில்லி அரசிடம் சரணா கதியடைந்தாரா? அல்லது சலாம் போட்டாரா? என்றால், அதுதான் இல்லை.

ஜனநாயகத்தைக் காப்பாற்றுவோம் - எதிர்த்து தீர்மானம் போட்டு சுயமரியாதையோடு பெரியார் வழியில் நின்றவருக்குப் பெயர்தான் கலைஞர்.

அந்தக் கலைஞரிடம் பயின்றவர்தான் இன்றைய விழா கதாநாயகர். அந்தப் பாசறையில் உருவான வர்தான்.

தி.மு.. இளைஞரணியைப்பற்றி இங்கே சொன் னார்கள் அல்லவா -  அன்றைய காலகட்டத்தில் தி.மு.. இளைஞரணியில் மிகத் தீவிரமாகப் பணியாற்றினார். தளபதி ஸ்டாலின் அவர்களுக்குத் திருமணமாகி ஒரு மாதம்கூட ஆகவில்லை. மிசா சட்டத்தில் எங்களையெல்லாம் இரவில் கைது செய்து சிறைச்சாலையில் அடைத்தார்கள்.

எனது மிசா கைதி எண்: 1546/76

நான்மிசா' சட்டத்தில் கைது செய்யப்பட்டபொழுது எனக்கு வழங்கப்பட்ட கைதி எண்: 1546/76.

மிசா' சட்டத்தினால் கைது செய்யப்பட்டு

சிறையில் அடைக்கப்பட்டோம்!

எதற்காக கைது செய்தார்கள்? நாங்கள் என்ன குற்றம் செய்தோம்? என்பதைப்பற்றியெல்லாம் கைதான எங்களுக்கும் தெரியாது; கைது செய்த வர்களுக்கும் தெரியாது; எப்பொழுது வெளியே வரப் போகிறோம் என்று யாருக்கும் தெரியாது.

அந்த சட்டத்தினுடைய தன்மை அப்படி -     MISA  (Maintanance of Internal Security Act  என்ற அந்த சட்டத்தில் எங்களை கைது செய்து 1976, ஜனவரி 31 ஆம் தேதி சிறையில் அடைத்தார்கள்.  எங்களை யெல்லாம் அடித்தார்கள்; அதனால் காயமடைந்தோம்.   நான் இருந்த அறையில் என்னுடன் சேர்த்து இன்னும் ஏழு பேர் இருந்தோம்.  அந்த அறையில் இரண்டு பானை இருக்கும். ஒரு பானை குடி தண்ணீருக்காக - இன்னொரு பானை எதற்காக என்று உங்களுக் கெல்லாம் தெரியும் - தாய்மார்கள் மன்னிக்கவேண்டும் - அந்தப் பானை சிறுநீர் கழிப்பதற்காக. ஒருவர் முன்பாக, இன்னொருவர் சிறுநீர் கழிக்க முடியுமா? வேறு வழியில்லை, மற்றவர்கள் திரும்பிக் கொள்ளுங்கள் என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட கொடுமை நடந்த காலம்; அதற்கு இரண்டு நாள் கழித்து, விடியற்காலை 2 மணியளவில் சத்தம் கேட் டது. அந்த அறையின் கதவைத் திறந்து ஒருவரைப் பிடித்துத் தள்ளுகிறார்கள்; அந்த அறையில் லைட் கிடையாது. வெளியில் மட்டும்தான் லைட் இருக்கும். மேலே வந்து விழுந்த இளைஞன் யார் என்று பார்த்தால், தளபதி அவர்கள்.

அன்றைக்குக் கொடுத்த கரம்தான்- இன்றைக்கும் அவரைத் தூக்கிப் பிடிக்கக்கூடிய  இந்தக் கரம்!

அவரைப் பார்த்தபொழுது உடலில் ரத்தம் வழிகிறது  - அவருடைய கையைப்பற்றி, ‘‘தம்பி, இது தான் பொதுவாழ்க்கை - தைரியமாக இரு!'' என்று சொல்லி, அன்றைக்குக் கொடுத்த கரம்தான் நண்பர்களே, இன்றைக்கும் அவரைத் தூக்கிப் பிடிக்கக்கூடிய  இந்தக் கரம்.

அதற்குப் பிறகு நாங்கள்எல்லாம் வெளியே வந்த பிறகு, மிசா கைதிகளை எவ்வளவு கொடுமையாக நடத்தினார்கள் என்பதற்காக ஒரு விசாரணை ஆணையம் நீதிபதி இஸ்மாயில் தலைமையில்  ஜனதா ஆட்சியில் அமைக்கப்பட்டது. அந்த ஆணையத்தின் பெயர்தான் நீதிபதி இஸ்மாயில் ஆணையம். அந்த ஆணையத்தின் அறிக்கைதான் என்னுடைய கைகளில் இருக்கின்ற அறிக்கை - புத்தகம். நாங்கள் எதைச் சொன்னாலும், ஆதாரத்தோடுதான் சொல் வோம் நண்பர்களே!

இப்பொழுதுள்ள அமைச்சர்களுக்கு

வரலாறே தெரியவில்லை!

இப்பொழுது நடைபெறுகின்ற ஆட்சியில் இருக் கின்ற அமைச்சர்களுக்கு வரலாறே தெரியவில்லை. அந்த அமைச்சரில் ஒருவர் சொல்கிறார், ஸ்டாலின் அவர்கள் மிசா கைதியாக சிறைக்குச் செல்லவில்லை என்று.

அரசாங்க ஆவணம் இருக்கிறது; அதெல்லாம் தெரியாமல் ஒரு அமைச்சர் பேசுகிறார்.

திடீரென்று நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த அல்லது நட்ட காளான் அல்ல தளபதி ஸ்டாலின் அவர்கள்; பாரம்பரியமாக தியாகத்தால் புடம்போட்டு உருவாக்கப்பட்ட தலைவர்.

வெறும் பதவிக்காக அல்ல - லட்சியத்திற்காக அடிபட வேண்டுமா? சிறைச்சாலைக்குப் போக வேண்டுமா? எல்லாவற்றிற்கும் தயாராக இருந்தார்.

அவர், இந்த இயக்கத்திற்கு வருவதற்கு முன்னால், ஒரு இளைஞன், தி.மு.. இளைஞரணி செயல் வீரர், திருமணமாகி ஒரு மாதம்கூட ஆகவில்லை. அந்த இளைஞனை மிசா சட்டத்தில் கைது செய்து சிறைச் சாலையில் அடைத்தார்கள்.

சிட்டிபாபுவின் டைரிக் குறிப்பு!

மிசாவில் கைது செய்யப்பட்ட சிட்டிபாபுவை அடித்தே கொன்றார்கள். அவருடைய டைரிக் குறிப்பை  எடுத்து, நீதிபதி இஸ்மாயில் அறிக்கையில் பதிவு செய்துள்ளவற்றை படிக்கிறேன் கேளுங்கள்.

திரு.எம்.கே.ஸ்டாலினை அடித்தது குறித்து எழுதுகிறார்:

ஸ்டாலின் அவர்களிடம் மன்றாடியதை அவர் குறிப்பிடுகிறார். ஸ்டாலினை அடித்தே கொன்றிருப்பார்கள் என்று கருதியதாகக் கூறினார். மேலும், அவர் தொடர்கிறார்: ‘‘ஏனையோர் தரையில் படுத்துக் கிடந்தனர். அவர்கள் உதவிக்காக எழுந்து வர முடியாத நிலையில் இருந்தனர். ஏனெனில், வந்தவர்கள் எமதூதர்கள். உடனே நான் ஒரு முடிவுக்கு வந்தேன். உடனே, நான் என் தம்பியைத் தள்ளிக் கொண்டு குறுக்கே ஓடினேன். தடி அடிகள் என் கழுத்தில் விழுந்தன. அவை, அடிகளே அல்ல! கொல்லன் உலைக் களத்தில் பழுக்கக் காய்ச்சிய இரும்பின்மீது சம்மட்டி கொண்டு அடிப் பதைப் போன்று அவை இருந்தன. அவை என் கழுத்தில் சம்மட்டிக் கொண்டு தாக்குவதைப் போல் விழுந்தன. இந்தக் கொடுமைகளைத் தாங்கிக் கொண்ட பின்னர், என் அருமைத் தம்பியை அறைக்குள் தள்ளிக் கொண்டுவர என்னால் முடிந்தது. இச் செயல் எனக்கு நிம்மதியைத் தந்தது. இதேபோல, அவர்கள் வீராசாமியைத் தூக்கி, ஒரு குத்துவிட்டு அறைக்குள் தள்ளினர். நீல.நாராயணன் மூச்சுவிடத் திணறினார். அவர் வி.எஸ்.ஜி.க்கு முன்னதாக அறைக்குள் தள்ளப்பட்டார். ஸ்டாலின் இந்த அடிகள் எல்லாவற்றையும் மறந்து, அவரது உடன் பிறப்புகள் போன்றவர்கள் அறைக்குள் வர உதவினார். அவர்கள் தரையில் படுக்க அவர் தனது மேல் துண்டை விரித்தும் போட்டார்.''

‘‘திரு.ஸ்டாலின், தம்மிடம், தன்னைப் பற்றி என்னென்ன கேட்டறிந்தார் என்றும், தான் எவ்வாறு அவருக்கு ஆறுதல் அளித்தார் என்பதையும் தொடர்ந்து திரு.சிட்டிபாபு கூறியுள்ளார். திரு.வீரமணியின் முகம், அவர் பட்ட அடிகளின் காரணமாக வீங்கி இருந்தது என்றும், திரு.என்.எஸ். சம்பந்தம் அடி யின் காரணமாக முன்பு ஆபரேஷன் செய்யப்பட்ட இடத்தில் மீண்டும் வலி எடுப்பதாகக் கூறிய தையும் இந்த நோட்டுப்  புத்தகம் குறிப்பிடுகிறது.

 மறைந்த திரு.சிட்டிபாபு அவர்கள், சிறை அதிகாரிகளின் நடவடிக்கையை ஜாலியன் வாலாபாக் படுகொலையில் ஜெனரல் டையர் என்ன செய்தாரோ அவ்வாறே இருந்தது என்று அதனுடன் ஒப்பிட்டுக் குறிப்பிட்டுள்ளார்.''

இப்படிப்பட்ட கொடுமைகளையெல்லாம் சந் தித்து, சிறைச்சாலைகளையெல்லாம் சந்தித்து, தியாகத்தில் புடம்போட்டு எடுக்கப்பட்டவர்தான் - இன்றைக்குக் கோட்டையில் அமர வேண்டும் என்று நாம் நினைக்கின்றவர் - திடீரென்று பதவிக்காக வந்த இயக்கமல்ல இந்த இயக்கம்.

அதை இளைஞர்கள் புரிந்துகொள்ளவேண்டும் - எதிரிகள் புரிந்துகொள்ளவேண்டும். அதிகாரம் இருக்கிறது - அடக்குமுறையை ஏவிவிடலாம் என்று நீங்கள் நினைக்கக் கூடாது.

தளபதி அவர்களைப்பற்றி இதுபோன்று பட்டிய லிட்டுக் கொண்டே போகலாம்.

பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்த

இயக்கம் எது?

சமூகநீதி என்பது இருக்கிறதே, நம்முடைய தாய்மார்களான பெண்களுக்கு  33 சதவிகித இட ஒதுக்கீடு வேண்டும். பெண்களுக்குச் சொத்துரிமை கொடுத்த இயக்கம் எது? இந்த இயக்கம்தான்.

பெண்களுக்கு வாக்குரிமையை நூறாண்டுகளுக்கு முன்பு கொடுத்த இயக்கம் எது? நீதிக்கட்சிதான்.

உலகத்தில் வேறு  எங்கும் கிடையாது; அமெரிக் காவிலேகூட நமக்குப் பிறகுதான் பெண்களுக்கு வாக்குரிமை வந்தது.

எனவே, சமூகநீதி, பாலியல் நீதி போன்ற நீதிகள் எல்லாம் தொடரவேண்டும் என்றால், நீதிக்கட்சியினுடைய பாரம்பரியமாகவும், திராவிடர் இயக்கம் - அதனுடைய தொடர்ச்சியாக வந்திருக்கக்கூடிய திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒப்பற்ற தலைவர் - அவர் மிக அருமையாக இன்றைக்கு எல்லாவற் றையும் செய்துகொண்டு இருக்கிறார். மக்கள் அவரை விரும்புகிறார்கள். அதனுடைய விளைவு அவர் கோட்டையில்  அமர்வது நிச்சயம் - அதனை யாராலும் மாற்ற முடியாது.

நீங்கள் உங்களுடைய வித்தைகளையெல்லாம் காட்ட முடியாது; வடக்கே இருந்து வந்து ‘‘தமில் ரொம்ப நல்ல மொலி'' என்றெல்லாம் சொல்லலாம். ஆனால், அந்த வார்த்தைகளைக் கேட்டு ஏமாறுவதற்குத் தமிழக மக்கள் தயாராக இல்லை.

தாய்நாட்டில், தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழுக்கு இடமில்லை என்று சொல்கிறார்கள். அதைத் தட்டிக் கேட்பதற்கு இந்த இயக்கத்தைத் தவிர வேறு இயக்கம் உண்டா?

தளபதி மு..ஸ்டாலின் அவர்களின்

குரல்தானே முதல் எதிர்ப்புக் குரல்!

இங்கே சமஸ்கிருதம் திணிக்கப்படுகிறது - அதனைத் தட்டிக் கேட்பதற்கு எதிர்க்கட்சியாக இருக்கின்ற தளபதி மு..ஸ்டாலின் அவர்களின் குரல்தானே முதல் எதிர்ப்புக் குரல்!

69 சதவிகித இட ஒதுக்கீடே இன்றைக்கே இவர்களுடைய ஆட்சியில் ஆட்டம் காணுதே!

ஒடுக்கப்பட்ட சமுதாய மக்களுக்கு சமூகநீதி என்று சொல்லி - இட ஒதுக்கீடு அரசமைப்புச் சட்ட ரீதியாக இருக்கின்ற அத்தனை உரிமைகளும் இன்றைக்குப் பறிபோகின்றன; அதற்கெல்லாம் உடந்தையாக இருக்கின்ற ஆட்சிதான் .தி.மு.. ஆட்சி - இதற்கெல்லாம் தலை ஆட்டுகின்ற ஆட்சிதான் .தி.மு.. ஆட்சி.

அந்த ஆட்சியை வீட்டுக்கு அனுப்பவேண்டிய மகத்தான பொறுப்பு நமக்கெல்லாம் உண்டு. இன் றைக்குத் தேர்தல் தேதியை அறிவித்து இருக்கிறார்கள். தேர்தல் தேதி அறிவித்த பிறகு நடைபெறக்கூடிய முதல் கூட்டம் இதுதான்.

இந்தக் கூட்டத்தில் நாம் உறுதியெடுக்கவேண்டிய உறுதிமொழி என்னவென்று சொன்னால், ‘‘திராவிடம் வெல்லும்'', ‘‘திராவிடம் வெல்லும்'', ‘‘திராவிடம் வெல்லும்'' என்ற அந்த உறுதிமொழியைத்தான்.

இதை எந்தக் கொம்பனாலும் அசைக்க முடியாது; இது ஆயிரங்காலத்துப் பயிர்!

வெறும் பாராட்டைக் கேட்டு

வளர்ந்த இயக்கமல்ல!

தியாகத்தில் புடம்போட்ட இயக்கம் - எதிர்நீச்சல் அடித்த, அடிக்கும் இயக்கம், இந்த இயக்கம். வெறும் பாராட்டைக் கேட்டு வளர்ந்த இயக்கமல்ல - பாறாங்கல்லைத் தூக்கிப் போட்டாலும், அதைத் தாங்கக் கூடிய ஆற்றல் பெற்றவர்கள் நாங்கள். அந்த உணர்வோடு இருக்கக் கூடியவர்கள்தான் எங் களுடைய தோழர்கள், தாய்மார்கள், சகோதரிகள்.

எனவே, இந்தக் காலகட்டம் - சரியான கால கட்டமாகும். வடக்கே இருந்து வருகின்றவர்கள் வித்தை காட்டுகிறார்கள்; அதிலும் மோடி வித்தை என்பது மிகவும் வித்தியாசமான வித்தையாகும். அந்த வித்தைகளுக்கு இங்கே இருப்பவர்கள்  பலியாகியிருக்கிறார்கள்; ஏனென்றால்,  அவர்கள் எல்லாம் சொத்தைகள் - ஆகவேதான் பலியாகிறார்கள் அந்த வித்தைகளுக்கு. ஏனென்றால், இவர்களுக்கு மடியில் கனம் இருக்கிறது; ஆகவே, வழியில் பயம் இருக்கிறது. அதை வைத்து அவரும் மிரட்டிக் கொண்டிருக்கிறார்.

திராவிட முன்னேற்ற கழகக் கூட்டணிதான் வெற்றி பெறும்!

தளபதியினுடைய அறிவு, ஆற்றல் என்பது கலைஞரிடமிருந்து படித்தது; அண்ணாவிட மிருந்து கற்றது; பெரியாரிடமிருந்து பாரம் பரியமாக வந்தது. ஆகவே, திராவிட முன்னேற்ற கழகக் கூட்டணிதான் வெற்றி பெறும்.

நீங்கள்  எவ்வளவு தான் பணத்தை வாரி இறைத்தாலும், அதிகார துஷ்பிரயோகம் செய்தாலும் - மே 2 ஆம் தேதிக்குப் பிறகு - வாக்கு எண்ணிக்கை நடைபெற்ற பிறகு - கோட்டையில்  அமரப் போகின்ற ஆட்சி - திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய ஆட்சிதான் - அடுத்த முதல்வர் - நம்முடைய கலைஞரின் பிரதிபலிப்பாக இருக்கக்கூடிய தளபதி ஸ்டாலின் அவர்கள்தான்.

இதை நாம் சொல்வதைவிட, மக்கள் முடிவு செய்துவிட்டார்; ஒருவேளை மக்களுக்குத் தடுமாற்றம் வந்துவிடக் கூடாது; உறுதியாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் - கேஸ் சிலிண்டர் விலை உயர்வு; பெட்ரோல் விலை உயர்வு; வெங்காய விலை உயர்வு.

தி.மு.. கூட்டணியை எப்படியாவது கலைக்க வேண்டும் என்று நினைக்கிறார்கள். இது கொள்கைக் கூட்டணி - வெறும் தேர்தலுக்காக அமைந்த கூட் டணியல்ல நண்பர்களே!

இந்தக் கூட்டணி லட்சியக் கூட்டணி!

அதேநேரத்தில், எதிர்முகாம் என்ன நிலைமை? ஒரு சினிமாக்காரரை நம்பினார்கள்; மாயக் குதிரையை நம்பினார்கள். அந்த நடிகர் உண்மையைப் புரிந்து கொண்டு, ‘‘நமக்கு இதெல்லாம் ஒத்து வராது'' என்று சொல்லிவிட்டார்.

சுவற்றுக் கீரையை

வழித்துச் சாப்பிட்ட கதை!

நம்முடைய தாய்மார்களுக்கு ஒரு கதை தெரியும்; அதுபோன்றுதான் அந்தக் கூட்டணி அமைந் திருக்கிறது.

அந்தக் கதை என்னவென்றால்,

கணவன்- மனைவிக்கிடையே சண்டை வந்த பொழுது, ஆண்கள் எப்பொழுதும் வீண் பிடி வாதத்தில் இருப்பார்கள்; கணவர் சாப்பிடுவதற்காக மனைவி வைத்திருந்த சாப்பாட்டைப்  பார்த்து, ‘‘இந்த சாப்பாட்டை யார் சாப்பிடுவார்கள்'' என்று சொல்லி, சுவற்றில் தூக்கி அடித்துவிட்டு, போய் படுத்துக் கொண்டார்.

மனைவியும், அதனை  லட்சியம் செய்யாமல் போய் படுத்துவிட்டார்.

2 மணியளவில் கணவனுக்கு வயிறு பசியால் கிள்ள ஆரம்பித்திருக்கிறது. உள்ளே போய் பார்த்திருக்கிறார், சாப்பிடுவதற்கு எதுவுமில்லை. சாப்பாட்டை சுவற்றில் அடித்திருந்தது  அங்கே இருந்தது - யாரும் பார்க்காத நேரத்தில், சுவற்றுக் கீரையைக் கொஞ்சம் கொஞ்சமாக வழித்து போட்டு சாப்பிட்டானாம்'' என்று சொல்வார்கள்.

அதுபோன்று, அவர்கள் கூட்டணி அமைத்தி ருக்கிறார்கள். ஏற்கெனவே யாரைப்பற்றி சொன் னார்களோ - அவருடைய பெருமையையே தூக்கிக் கொண்டு போகிறார்கள்.

தி.மு.. தலைவருக்குவேல்' கொடுத்தார்கள்; அதை  அவர் வாங்கி விட்டாராம் -  அதைப்பற்றி ஒரு பிரச்சினையை எழுப்பினார்கள்.

நான் கடவுள் மறுப்பாளன்தான்; ஆனால், எந்த நிகழ்ச்சியிலாவது கலந்துகொள்ளும்போது - கடவுள் வாழ்த்துப் பாடும்பொழுது, நான் எழுந்துதான் நிற்பேன் - அதுதான் பண்பாடு - தந்தை பெரியார் காட்டிய பண்பாடு.

நாகரிகம், பண்பாடு கொண்டவர்கள் நாங்கள்!

நம்முடைய சேகர் பாபு அவர்களுக்கு கடவுள் நம்பிக்கை உண்டு. எங்களோடு சேர்ந்து சேர்ந்து  இப்பொழுது கொஞ்சம் மாறியிருக்கிறார்;  அவர் எந்த நிலையில் இருந்தாலும்,  அவருடைய உருவமா முக்கியம் எங்களுக்கு? அவருடைய உள்ளம்தான் மிகவும் முக்கியம். அதுபோன்ற ஒரு நாகரிகம், பண்பாடு கொண்டவர்கள் நாங்கள்.

தளபதி ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரத்திற்காக திருத்தணி செல்லும்பொழுது, திடீரென்று ஒருவர்வேல்' கொடுக்கிறார். அதை அவர் வாங்கி எறிந்து விட்டாரா? என்னிடம் கொடுத்தாலும்கூட, தூக்கி எறியமாட்டேன் -அதுதான் பண்பாடு.

முன்பு திடீரென்று ஒருவர் தளபதி நெற்றியில் பொட்டு வைத்தார்; அதற்காக ஒன்றும் சொல்ல வில்லையே அவர். பிறகு அதை அழித்தார். அதுதான் பண்பாடு.

வேலை' கையில் வாங்கிவிட்டார்;  ஆகவே, இவர்கள் கொள்கையை விட்டுவிட்டார்கள் என்று சொன்னார்கள்;  ஒருபோதும் கொள்கையை விட மாட்டார்கள் என்பதை நன்றாக நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ளுங்கள்.

தி.மு.. பொதுக்குழுவில் தலைவராகப் பொறுப்பேற்றுக்கொண்ட தளபதியின் உரை!

கலைஞர் அவர்கள் மறைந்து, 28.8.2018 அன்று நடைபெற்ற திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுக்குழுவில், மானமிகு மு..ஸ்டாலின் அவர் களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவராக - திராவிட இயக்கத்தினுடைய மூத்த தலைவர் -  தன்மானப் பேராசிரியர் மானமிகு அன்பழகன் அவர் கள் முன்மொழிந்து, ஒருமனதாகத் தேர்வு செய்யப் பட்டார்.

அந்தக் காலத்தில் கலைஞருக்குக்கூட  கொஞ்சம் போட்டியிருந்தது. ஆனால், தளபதி ஸ்டாலின் அவர்கள் போட்டியில்லாமல் ஒருமனதாகத் தேர்ந் தெடுக்கப்பட்டார் என்று சொல்வதில்கூட எவ்வளவு சிறப்பு அவருக்கு.

தி.மு.. தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட நம்முடைய தளபதி அவர்கள் என்ன சொன்னார் என்பதை கேளுங்கள் - 68-க்குரிய விழா நாயகர் பேசுகிறார்; அவர் எடுத்த உறுதிமொழியும் - எடுத்து வைக்கின்ற அடியும் எப்படிப்பட்டது என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்.

‘‘பகுத்தறிவு என்பது அறிவென்னும் விழிகொண்டு, உலகைக் காண்பது என்பதை உரக்கச் சொல்லுதல்.

ஆண் - பெண் இங்கு சமம் என மதித்தல்.

திருநங்கையர், மாற்றுத் திறனாளிகளுக்கு சமூகத்தில் சம உரிமை பெற்றுத் தருதல் -

தனி மனித மற்றும் ஊடகக் கருத்துச் சுதந்திரத்தை மீட்டெடுத்தல், கருத்துச் சுதந்திரத்தைப் போற்றிப் பாதுகாத்தல்,

பிற மொழிகளை அழித்து, இந்தியா முழுவதற்கும் மதச் சாயம் பூச நினைக்கும் கட்சிகளை எதிர்த்தல் -

இவையெல்லாம் என் நீண்ட கனவில் சில துளிகள் -

இந்த எதிர்காலம் தூரத்தில் இல்லை - இதோ நொடியில் மெய்ப்படப் போகிறது என்று சொன்னார்.

அதை மெய்ப்பட வைக்கக் கூடிய நாள்தான் தேர்தல் நாள் என்பதை மறந்துவிடாதீர்கள்.

எனவே, நண்பர்களே நீங்கள் தெளிவாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடல்!

நம்முடைய கூட்ட மேடைகளில் கூட்டம் தொடங் குவதற்கு முன்பாக புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் அவர்களின் பாடலைப் பாடுவார்கள்.

வெண்ணிலாவும் வானும் போலே

வீரனும்கூர் வாளும் போல!

     வெண்ணிலாவும் வானும் போலே...

வண்ணப் பூவும் மணமும் போலே

மகர யாழும் இசையும் போல

கண்ணும் ஒளியும் போல எனது

கன்னல் தமிழும் நானும் அல்லவோ!

     வெண்ணிலாவும் வானும் போலே...

என்ற பாடலில்,

கன்னல் தமிழும் நானும் அல்லவோ என்ற பாடலில் மிக முக்கியமான பகுதி என்ன தெரியுமா?

தளபதி ஸ்டாலின் அவர்கள் கொள்கையை விட்டுவிட்டார் என்று சொல்கிறார்களே, அவர் எந்தக் கொள்கையையும் விடமாட்டார்; விட, விட மாட் டோம். நாங்கள் இரட்டைக் குழல் துப்பாக்கிகள்.

மேற்கண்ட புரட்சிக்கவிஞர் பாடலில் என்ன இருக்கிறது என்பதை நம்முடைய தோழர்களுக்குப் புரியவேண்டும் என்பதற்காகச் சொல்கிறேன்.

வையகமே உய்யுமாறு

வாய்ந்த தமிழ் என் அரும்பேறு!

துய்யதான சங்க மென்னும்

தொட்டிலில் வளர்ந்த பிள்ளை

(தம்)கையிலே வேலேந்தி-இந்தக்

கடல் உலகாள் மூவேந்தர்

கருத் தேந்திக் காத்தார்-அந்தக்

கன்னல் தமிழும் நானும் நல்ல

வெண்ணிலாவும் வானும் போலே...

என்ற பாடல் வரிகளில்

கையிலே வேலேந்தி-இந்தக்

கடல் உலகாள் மூவேந்தர்

கருத் தேந்திக் காத்தார்-அந்தக்

கன்னல் தமிழும் நானும் நல்ல

     வெண்ணிலாவும் வானும் போலே...

என்று பாடினார் அல்லவா புரட்சிக்கவிஞர் - அந்த வேல்தானடா அது.

எங்களிடம் திருடிக் கொண்டு போன வேல். இன்னுங்கேட்டால்,  வேல்  காணாமல் போய்விட்டது என்பதைக் கண்டுபிடிப்பதற்காகவே நடந்தவர் கலைஞர்.

திருச்செந்தூர் கோவிலில் வேல் காணாமல் போய் விட்டது என்பதற்காக நீதி கேட்டு, மதுரையிலிருந்து காலெல்லாம் கொப்புளமாகும் அளவிற்கு நடந்தவர் - நெடிய பயணம் மேற்கொண்டவர் நம்முடைய கலைஞர்.

வேல், பக்தர்களுக்குத்தானே என்று நினைக்க வில்லை. வேல் காணாமல் போன பிரச்சினையில், சுப்பிரமணிய பிள்ளை என்ற அதிகாரி கொலையுண்டார் என்ற விவரத்தையெல்லாம் சொன்னார்.

நம்முடைய பண்பாட்டினுடைய

வீரத்தின் சின்னம்!

எனவேதான், வேல் என்பது இருக்கிறதே, நம்மு டைய பண்பாட்டினுடைய வீரத்தின் சின்னம்.

‘‘வேல் வடித்துக் கொடுத்தல்

கொல்லருக்குக் கடனே!''

இதுதான் புறநானூறு!

திருவள்ளுவருடைய திருக்குறளில், முயல் வேட்டை - வேல் - யானை பரிந்து - என்று திறக்குறளில் வருகிறது.

ஆகவேதான், வேல் என்பது  தமிழர்களுடைய பண்பாட்டுக் கருவிகளில் ஒன்று. அதற்கு வெறும் பக்திச் சாயம் மட்டும்தான் இருக்கிறது என்று நினைக் காதீர்கள்; அப்படியே இருந்தாலும், பண்போடு நடந்துகொள்ளக் கூடியவர்கள்தான் நாங்கள் என்று காட்டிய பெருமை தளபதி அவர்களுக்கு உண்டு.

எனவேதான், யாரையும் சங்கடப்படுத்தக் கூடிய ஆட்சியாக அவருடைய ஆட்சி இருக்காது.

எல்லோருக்கும் எல்லாமும் -

அனைவருக்கும் அனைத்தும்

இதுதான் சமூகநீதி!

‘‘மயக்க பிஸ்கெட்டுகளுக்கு''

ஏமாற விடக் கூடாது!

அந்த சமூகநீதியைக் காப்பாற்றவேண்டு மானால் நண்பர்களே,  வருகின்ற தேர்தல் தேதி தெளிவாக்கப்பட்டு விட்டது. ஏப்ரல் 6 ஆம் தேதியன்று வாக்குச் சாவடிக்குச் சென்று நாம், நம்முடைய கடமைகளை ஆற்றினால் மட்டும் போதாது; தாய்மார்களே, உங்களுடைய கட மையை மட்டும் ஆற்றினால் போதாது; மற்றவர் களிடமும் தெளிவாகச் சொல்லவேண்டும்; பணத் திற்கு ஏமாந்துவிடக் கூடாது. அந்த நேரத்தில், மயக்க பிஸ்கெட்டுகளைக் கொடுத்து அடித்துக் கொண்டு போய்விடுவதுபோல -  மயக்க பிஸ்கெட் டுகளுக்கு நீங்கள் ஏமாறமாட்டீர்கள்; அதை நீங்கள் மற்றவர்களுக்குத் தெளிவாக எடுத்துச்  சொல்லவேண்டும்.

உதயசூரியன் வந்தால்தான் இருட்டுப் போகும் -

உதய சூரியன் ஒளி வந்தால்தான் இருட்டுப் போகும் என்று சொல்லி,

தளபதிக்கு நாம் என்ன செய்யப் போகிறோம் என்று சொன்னால் - அது தளபதிக்காக  அல்ல -

நம் இனத்தின் மீட்சிக்காக -

அவர் ஆட்சிக்கு வரவேண்டும் என்று சொல்வது -

அவர் ஆட்சிக்காக அல்ல -

இந்த இனத்தின் மீட்சிக்காக - எழுச்சிக்காக என்பதை நன்றாக நினைத்துப் பார்க்கவேண்டும்.

234 தொகுதிகளிலும்

கலைஞர் - தளபதிதான் வேட்பாளர்கள்!

அந்த உணர்வோடு, 234 தொகுதிகளிலும் உதய சூரியன்தான் - அந்தக் கூட்டணிதான் - வேறொன் றுக்கு  இடமில்லை என்று சொல்லக்கூடிய அளவிற்கு -

யார் வேட்பாளர்? என்று யோசிக்காதீர்கள்;

எல்லா இடங்களிலும் கலைஞர்தான் 

வேட்பாளர் -

எல்லா இடங்களிலும் தளபதிதான் வேட்

பாளர் -

எல்லா இடங்களிலும் உதயசூரியன்தான்  வேட்பாளர் -

அது எந்த சின்னமாக இருந்தாலும் - இந்த அணி என்று சொன்னால், பிணி போக்கும் அணி இதுதான்.

எனவேதான், இந்த அணிக்கு நீங்கள் எல்லாம் போர்வீரர்களாக ஆகுங்கள் - வீராங்கனைகளாக ஆகுங்கள் தாய்மார்களே!

வெறும் பேச்சு மாலை அல்ல-

செயல்! செயல்!!

அதைத்தான் நாம் தளபதிக்கு அன்புக் காணிக் கையாக ஆக்குகிறோம். வெறும் பேச்சு மாலை அல்ல- செயல்! செயல்!!

நேரமில்லை - தொடங்குங்கள்! வேகமாகச் செல்லுங்கள்!!

சந்திப்போம்! வெற்றியோடு சந்திப்போம்!!

வாழ்க பெரியார்! வளர்க பகுத்தறிவு!! வருக திராவிட  முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி!!!

நன்றி, வணக்கம்!

இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் உரை யாற்றினார்.

No comments:

Post a Comment