மார்ச் 6 ஆம் நாள்: தமிழர் தலைவருக்கு மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சார பணிக்கான விருது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, March 4, 2021

மார்ச் 6 ஆம் நாள்: தமிழர் தலைவருக்கு மூடநம்பிக்கை ஒழிப்புப் பிரச்சார பணிக்கான விருது

போராளி நரேந்திர தபோல்கர் நினைவு விருதினைஅமெரிக்காவாழ் மராட்டியர்களின் அறக்கட்டளை வழங்குகிறது


வாஷிங்டன்
, மார்ச் 4 அமெரிக்காவில் வாழுகின்ற மராட்டிய பெருமக்கள் நிறுவிய மராட்டிய அறக்கட்டளை ஒவ்வொரு ஆண்டும் பல துறைகளிலும் சிறந்து விளங்குகின்ற தலைவர்கள், அறிஞர்கள், செயல்பாட்டாளர்கள் ஆகியோ ருக்கு விருதுகளை வழங்கிப் பெருமைப்படுத்துகிறது. மூடநம்பிக்கை ஒழிப்புப் போராளியும், மதவெறியர்களால் சுட்டுக் கொல்லப்பட்டவருமான டாக்டர் நரேந்திர தபோல்கரின் நினைவினைப் போற்றிடும் வகையில் கடந்த  7 ஆண்டுகளாக அவரது பெயரில் விருது வழங்கப்பட்டு வருகிறது. தந்தை பெரியாரின் கொள்கை வழியில் மூடநம்பிக்கை ஒழிப்பிற்கு அயராது பாடுபட்டு பணி செய்து, அறிவியல் மனப்பான்மையினை தொடர்ந்து பெருக்கிவரும் தலைவருமான தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் 2020 ஆம் ஆண்டுக்கான டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருதிற்குத் தெரிந் தெடுக்கப்பட்டுள்ளதாக மராட்டிய அறக்கட்டளை கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தது.

விருது வழங்கிடும் நிகழ்ச்சி

டாக்டர் நரேந்திர தபோல்கர் நினைவு விருதினை தமிழர் தலைவருக்கு வழங்கும் விழா மார்ச் 6-ஆம் நாள் மாலை 6 மணி (இந்திய நேரப்படி) அளவில் தொடங்கி நடைபெற உள்ளது. கரோனா தொற்று முற்றிலும் நீங்காத நிலையில், விருது வழங்கப்படும் நிகழ்ச்சி இணைய வழியில் நடைபெறுகிறது. விருது வழங்கிடும் நிகழ்ச்சிக்கு இணைய வழியில் வருகை தந்தோரை வரவேற்று விருது தெரிவுக் குழுவின் தலைவரும், போராளி நரேந்திர தபோல்கரின் மகனுமான டாக்டர் ஹமீது தபோல்கர் உரை ஆற்றுகிறார்.

வழங்கப்படவிருக்கும் விருது பற்றிய விளக்க உரையினை அமெரிக்காவிலிருந்து மராட்டிய அறக் கட்டளையின் பொறுப்பாளர் சுனில் தேஷ்முக் வழங்கு கிறார். விருது வழங்கப்பட உள்ள தமிழர் தலைவர் பற்றிய உரையினை மராட்டிய அறக்கட்டளையின் விருதுகளுக் கான ஒருங்கிணைப்பாளர் மனிஷ் குப்தா ஆற்றுகிறார்.

விருது வழங்கல்

நரேந்திர தபோல்கர் விருது வழங்கப்படும் பொழுது விருதுப் பட்டயமும், ரூபாய் ஒரு லட்சத்திற்கான விருதுத் தொகையும் வழங்கப்படுவது வழக்கம். தமிழர் தலைவருக்கு வழங்கப்பட விருக்கும் விருதினை மும்பை நிகழ்ச்சி யிலேயே பெற்றுக்கொள்ள ஏற்பாடு செய்துள்ளனர். மும்பை வாழ் கழகத் தோழர்கள் தமிழர் தலைவர் சார்பாக நரேந்திர தபோல்கர் விருதினைப் பெற்றுக்

கொள்கிறார்கள்.

தமிழர் தலைவரின் ஏற்புரை

விருது வழங்கப்பட்ட பின்னர் விருது நாயகர் தமிழர் தலைவர் உரையாற்றுகிறார்.

விருது வழங்கும் நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக மூத்த விஞ்ஞானியும், எழுத்தாளரும், டாக்டர் நரேந்திர தபோல்கரின் சகோதரருமான டாக்டர் தத்தா பிரசாத் தபோல்கர் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

விருது வழங்கிடும் இணைய நிகழ்ச்சி ஒரு மணி நேரத்தில் நிறைவு பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ள தாக மராட்டிய அறக்கட்டளையினர் தெரிவித்து உள்ளார்கள்.

No comments:

Post a Comment