புதுடில்லி, மார்ச் 10 பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டதால் தொடர்ந்து 2ஆவது நாளாக நாடாளு மன்றத்தின் இரு அவைகளும் நாள் முழுவதும் முடங்கின.
நாடாளுமன்றத்தில் 2ஆம் கட்ட பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று முன்தினம் தொடங்கியது. இதில், பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் விலை உயர்வு குறித்து விவாதிக்க வேண்டுமென எதிர்க்கட்சிகள் கடும் அமளி செய்தன. இதனால், முதல் நாளில் எந்த அலுவலும் நடைபெறாமல் இரு அவைகளும் ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், 2ஆம் நாளான நேற்று (9.3.2021) மாநிலங்களவை காலை 11 மணிக்கு தொடங்கியதும் எதிர்க்கட்சிகள் மீண்டும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு விவகாரத்தை எழுப்பின. எதிர்கட்சி தலைவரான மல்லிகார்ஜூனா கார்கே, பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து விவாதம் நடத்த வலியுறுத்தினார். ஆனால், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் நடுவர் மற்றும் சமரச திருத்த மசோதாவை அவையில் தாக்கல் செய்தார். இதற்கு காங்கிரஸ் எம்பிக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனால், அவை 11.20 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. 2 மணிக்கு பிறகும், எதிர்க்கட்சி எம்பிக்கள் அவையின் மய்யப் பகுதியை முற்றுகையிட்டு அமளி செய்ததால், துணைத்தலைவர் ஹரிவன்ஸ் நாள் முழுவதும் அவையை ஒத்திவைத்தார். இதேபோல், மக்களவையிலும் இதே விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டன. அவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது. அதன்பிறகும் காங்கிரஸ், திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அவையின் மய்யப்பகுதியை முற்றுகையிட்டு முழக்கமிட்டபடி இருந்ததால், நாள் முழுவதும் அவை ஒத்திவைக்கப்பட்டது.
பெட்ரோல், டீசல் விவகாரத்தில் தொடர்ந்து 2ஆவது நாளாக நாடாளுமன்றத்தில் எந்த அலுவலும் நடக்கவில்லை.
தொலைக்காட்சி ஒளிபரப்பில் டிஜிட்டல் பாகுபாடு
மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்திரி நேற்று பேசுகையில், அரசு தரப்பு, எதிர்க்கட்சி என எந்த உறுப்பினராக இருந்தாலும், சம உரிமை வழங்கப்பட வேண்டும். ஆனால், இங்கு டிஜிட்டல் பாகுபாடு நடக்கிறது. இங்கு எதிர்க்கட்சி எம்பிக்கள் என்ன செய்தாலும், அவற்றை நாடாளுமன்ற தொலைக்காட்சி சேனலில் காட்டப்படுவதில்லை. எதிர்க்கட்சிகள் இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. இதை தவிர்க்க வேண்டும். கேமராக்கள் அனைவரையும் காட்ட வேண்டும் என்றார். இதற்கு அவைத்தலைவர் ஓம்பிர்லா, மதிப்பிற்குரிய எதிர்க்கட்சி தலைவர், இங்கு நடக்கும் அமளியை நாட்டு மக்களுக்கு காட்ட வேண்டும் என விரும்புகிறாரா? என கேட்டார்.
வழக்கமான நேரம் மாற்றம்
கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைக்காக கடந்த செப்டம்பரில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் 2 பகுதிகளாக நடந்தது. காலை 9 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மாநிலங்களவையும், மாலை 3 மணி முதல் இரவு 7 மணி வரை மக்களவையும் நடந்தன. இதே முறை பட்ஜெட் கூட்டத் தொடரிலும் தொடர்ந்த நிலையில், நேற்று முதல் இரு அவைகளும் வழக்கமான நேரத்திற்கு மாற்றப்பட்டன. அதன்படி, இரு அவைகளும் நேற்று காலை 11 மணிக்கு தொடங்கின. இரு அவையிலும் சமூக இடைவெளியை பின்பற்றும் விதமாக ஒரு இருக்கை விட்டு ஒரு இருக்கையில் எம்பிக்கள் அமர வைக்கப்பட்டுள்ளனர்.
நாட்டில் 42 பயங்கரவாத அமைப்புகள்;
மத்திய அரசு அறிவிப்பு
புதுடில்லி, மார்ச் 10 இந்தியாவில் உள்ள அமைப்புகளில் 42 அமைப்புகளை மத்திய அரசு பயங்கரவாத அமைப்புகள் என அறிவித்துள்ளது என்று மத்திய உள்விவகார அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதுபற்றி அமைச்சகம் வெளியிட்டுள்ள எழுத்துப்பூர்வ பதிலில் கூறப்பட்டுள்ளதாவது:
42 அமைப்புகளின் பெயர்களை சட்டவிரோத செயல்கள் (தடுப்பு) சட்டம், 1967ன்படி பட்டியலிட்டு உள்ளது.
எல்லை வழியே இந்தியாவில் பயங்கரவாதம் பெரிய அளவில் ஊக்குவிக்கப்பட்டு வருகிறது என தெரிவித்து உள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டு ஆகஸ்டில் இருந்து, பிரிவினைவாதிகள், கல் வீசுபவர்கள் என 627 பேர் பல்வேறு தருணங்களில் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
அவர்களில், சீரான ஆய்வு அடிப் படையிலும் மற்றும் நடப்பு நிலைமைக்கு ஏற்ப 454 பேர் இதுவரை விடுவிக்கப்பட்டு உள்ளனர் என அமைச்சகம் தெரிவித்து உள்ளது.
ஜம்மு மற்றும் காஷ்மீர் பொது பாதுகாப்பு சட்டத்தின் கீழ் யாரும் வீட்டு சிறையில் வைக்கப்படவில்லை என்று காஷ்மீர் அரசு தெரிவித்து உள்ளது.
No comments:
Post a Comment