முருகன்களால் பதில் சொல்ல முடியாது! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 1, 2021

முருகன்களால் பதில் சொல்ல முடியாது!

தேர்தலுக்காக பழனிக்கு காவடி தூக்கிச் சென்ற தமிழக பா... தலைவர் திரு. எல். முருகன் ஊடகவியலாளர்களை சந்தித்தார். அப்போது ஊடகவியலாளர்கள் நீங்கள் கருவறைக்குள் செல்ல முடியுமா? என்று கேட்டனர், இதற்கு நேரடியாக பதில் கூற துணிச்சல் இன்றி, 'நீங்கள் புரபசர் ஆகமுடியுமா, நான் ஏன் கருவறைக்குச் செல்லவேண்டும்? ஆகம விதிகளின் படி உள்ளவர்கள், குறிப்பிட்டவர்கள் மட்டுமே கருவறைக்குச் செல்லவேண்டும். அதற்கு  என்று விதிகளை நியமித்து இருக்கின்றனர். ஆகவே நான் கருவறைக்குச் செல்லத் தேவையில்லை' என்று கூறி உடனடியாக எழுந்து சென்றுவிட்டார்.

பாரதிய ஜனதாவில் சேர்ந்து விட்டால் யாராக இருந்தாலும் உண்மைக்கும் சுயமரியாதைக்கும் மாறாக இப்படித்தான் பேச வேண்டும். இதே முருகன் வருணாசிரம தர்மத்தை ஆதரித்துக் கருத்துச் சொன்னதும் உண்டு.

நீங்கள் அர்ச்சகர் ஆக முடியுமா என்ற கேள்விக்கு, நீங்கள் புரபசர் ஆக முடியுமா என்பது எப்படி சரியான - நேர்மையான அறிவு ரீதியான பதிலாக இருக்க முடியும்?

புரபசராக எந்த ஜாதியினரும் ஆகலாம், அதற்கு எந்தவிதத் தடையும் கிடையாதே!

ஆனால் அர்ச்சகராக எந்த ஜாதியினரும் ஆக முடியுமா? வேறு மதத்தைச் சேர்ந்தவர்கள் இந்துக் கோயிலில் அர்ச்சகர் ஆக முடியுமா என்பதல்ல கேள்வி.

இந்து மதத்தைச் சேர்ந்த திருவாளர் முருகன் ஏன் அர்ச்சகராக முடியாது- ஏன் கூடாது என்பதுதான் கேள்வி.

சாலையில் போகிற ஓர் ஆசாமியைக் கூப்பிட்டு அர்ச் சகராக்க வேண்டும் என்று கூறிடவில்லை.

இந்து மதத்திலே பிறந்து இந்து மதக் கோயிலில் அர்ச்ச கராவதற்கான ஆகமப் பயிற்சிகளையும் முறையாகப் பெற்ற ஒருவர் ஏன் அர்ச்சகராக முடியாது - கூடாது? என்பது தான் கேள்வி.

அதற்கு நாணயமான முறையில் பதில் அளிக்க வக்கு இல்லாமல் பொருத்தமில்லாமல் திசை திருப்பு(ம்) கேள்வியை எழுப்பிப் பேட்டியை முடித்துக் கொண்டு ஓடுவது - அவர்களின் இயலாமையைத் தான் வெளிப்படுத்தும்.

எல். முருகன்கள் என்ன செய்வார்கள் பாவம்? வைத்துக் கொண்டா வஞ்சனை செய்கிறார்கள்?

பார்ப்பானாக பிறந்தவன் தான் அர்ச்சகனாக முடியும் - மற்றவர்கள் ஆகமம் கற்றாலும், அர்ச்சகர் பயிற்சி பெற்றாலும் கோயில் கருவறைக்குள் நுழைந்தால், சாமி சிலையைத் தொட்டால் சாமி தீட்டுப்பட்டு விட்டும், ஏன் சாமி செத்தே போய் விடும் என்று சொல்லுகிறார்களே - உச்சநீதிமன்றம் வரை சென்று, வைகனாச ஆகமத்தை எடுத்துக்காட்டி வாதிடுகிறார்களே - இதெல்லாம் திருவாளர் எல். முருகனுக்குத் தெரியுமா?

பா...வின் மாநில தலைவராக முருகன் போன்றவர் களை வைத்திருப்பதற்குக் காரணமே - தமிழகச் சூழல்தான் - திராவிட இயக்கத் தாக்கம்தான்.

தமிழக பா...வுக்கு டாக்டர் கிருபாநிதியைத் தலைவ ராக நியமித்தார்களே - அவரால் தாக்குப்பிடிக்க முடிந்ததா?

வெளிப்படையாகவே பேட்டி கொடுத்தாரே - எப்படி எல்லாம் பா... உயர் ஜாதி கூட்டம் தன்னை அவமதித்தது பற்றியும் - தேசிய செயலாளராக இருந்த திருவாளர் இல. கணேசன் தன் கையைப் பிடித்து முறுக்கியதாகவும் கூறியதுண்டே.

இந்து ராஜ்ஜியம் அமைப்பதுதான் பா...வின் நோக்கம் என்கிறார்களே - அப்படியானால் அந்த இந்து ராஜ்ஜியத்தில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலைப்பாடு என்ன?

திராவிடர் கழகத் தலைவர் கூறினாரே - ஒரே மதம், ஒரே மொழி, ஒரே கலாச்சாரம் எனும் பா... ஒரே ஜாதி என்று சொல்லுமா  என்று கேட்டாரே, - அதற்கு இதுவரை பதில் இல்லையே ஏன்?

கோயில் கட்டியவன் தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அரசன், கோவில் கட்டுமானத்தில் உழைத்தவர்கள் எல்லாம் தமிழர்கள். ஆனால் அந்தத் தமிழன் அர்ச்சகனாக முடியாது - அவனின் தாய்மொழியான தமிழில் வழிபாடு நடத்த முடியாது என்பது குறித்து தமிழனாகிய முருகன்கள் என்றாவது சிந்தித்ததுண்டா?

வேல் யாத்திரையை எடுத்துச் சென்றாரே முருகன், அந்த வேலையே கருவறைக்குள் அனுமதிக்கவில்லையே அனுபவத்தில் இதனைத் தெரிந்து வைத்திருந்தாலும் திருவாளர் முருகன் போட்ட வேடத்துக்கு ஏற்ப நடந்து கொள்கிறார் என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது. அவரை சங்கடப்படுத்தி என்ன பயன்?

No comments:

Post a Comment