இலங்கையின் முடிவும் இந்தியாவின் ஏமாற்றமும் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, February 5, 2021

இலங்கையின் முடிவும் இந்தியாவின் ஏமாற்றமும்

இலங்கையின் துறைமுகங்களை மோடியின் ஆதரவோடு தன்வசம் கொண்டுவரும் அதானியின் கனவை இலங்கை அரசு நொறுக்கி விட்டது. இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு கொழும்பு துறைமுகத்தில் கிழக்கு முனையத்தை கொடுக்கமாட்டோம் என்று கூறி அதை இலங்கை துறைமுக வாரியமே தன்வசம் எடுத்துக் கொள்ள இலங்கை அமைச்சரவை அனுமதி கொடுத்துள்ளது.

மோடி அரசு தனது கார்ப்பரேட் நண்பர்களுக்காக இந்தியாவின் சொத்துக்களை மட்டுமின்றி இந்தியப் பெருங்கடல் பகுதியில் உள்ள தீவுநாடுகளின் துறைமுகங்களையும் குத்தகைக்கு எடுத்து வழங்க முனைப்போடு செயல்பட்டு வருகிறது.

இதன் ஒரு பகுதியாக மாலத்தீவு துறைமுகத்தை கைவசமாக்க முனைந்தது, ஆனால் அங்கு சீனாவின் ஆதரவு ஆட்சியாளர்கள் இருப்பதால் ஆரம்பத்திலேயே இந்தியாவின் தலையீட்டைத் தடுத்து நிறுத்து விட்டனர்.

இதனை அடுத்து இலங்கையின் துறைமுகத்தை கைக்கு கொண்டுவந்து அதானி போர்ட்-வசம் கொடுக்கும் வேலையைத் துவங்கியது.

இலங்கையில் கிழக்கு முனையம் எனப்படும் கொழும்பு சரக்குகள் கையாளும் துறைமுகத்தை இந்தியாவிற்கு வழங்க வேண்டும் என்று 2019ஆம் ஆண்டில் ஒப்பந்தம் ஒன்று கையெழுத்திடப்பட்டது,  இதில் இந்தியாவும் இலங்கையும் ஒன்றிணைந்து கிழக்கு முனைய வேலைத்திட்டத்தை விரிவாக்கம் செய்வதற்குத் திட்டம் முன்வைக்கப்பட்ட நிலையில், அங்கு கடும் எதிர்ப்பு எழுந்தது.

இதனை அடுத்து அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தியாவிற்குக் கொழும்பு சரக்குகள் கையாளும் துறைமுகத்தை கொடுக்கும் ஒப்பந்தத்தை ரத்து செய்வதாக அறிவிக்கப் பட்டது, இது தொடர்பாக பேசிய பிரதமர் மகிந்த ராஜபக்சே, தற்போது, கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பிறநாட்டு நிறுவனத்திற்கு விற்பனை செய்யவும், குத்தகை அடிப்படையில் வழங்கவும் அரசாங்கம் தீர்மானிக்கவில்லை என்று கூறினார்.

தேசிய வளங்களை பாதுகாப்பது அரசாங்கத்தின் முக்கிய கொள்கையாகும். பொதுவான  எதிர்கால கொள்கை அடிப்படையில் அரசு செயல்படும் என அமைச்சரவை இணைப்பேச்சாளர் உதயகம்மன்பில தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முனையத்தை பிற நாட்டு நிறுவனங்களுக்கு விற்கவோ, குத்தகை அடிப்படையில் வழங்கவோ,  இனி வழிவகை செய்ய முடியாதவகையில், சட்ட திருத்தம் கொண்டு வரப்படும்; கிழக்கு முனையம் விற்பனைக்கு அல்ல என்ற தீர்மானத்தை பிரதமர் மஹிந்த ராஜபக்சே பகிரங்கமாக அறிவித்துள்ளார் என்று தெரிவித்தார்.

மோடி தனது நண்பர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கும் அதானியிடம் இந்தியாவின் அனைத்து சிறிய துறைமுகங்களையும் தாரைவார்த்துவிட்டார், அதே போல் சில பெரியதுறைமுகங்களில் சரக்குகளைக் கையாளும் பிரிவிலும் சிலவற்றை ஒப்படைத்து விட்டார். மேலும் சிலவற்றை ஒப்படைக்க முடிவெடுத்துள்ளார். இந்த நிலையில், இந்தியாவிற்குச் சாதகமான நாடுகளான இலங்கை, மாலத்தீவு போன்ற தீவு நாடுகள் பன்னாட்டு கடல்வழித்தடத்தில் அதிமுக்கிய இடத்தில் உள்ளன, இந்த நாடுகளின் துறைமுகங்களை கைவசம் வைத்துக்கொள்ள திட்டமிட்டு இந்த நாடுகளோடு இந்திய அரசு துறைமுக மேம்பாடு என்ற பெயரில் ஒப்பந்தங்களில் கடந்த ஆண்டு கையொப்பமிட்டது; இதில் மாலத்தீவு துறைமுக ஒப்பந்தம் கையொப்பம் ஆகும் முன்பே அங்கு சீன தலையீட்டால் இந்திய அரசு பின்வாங்கியது. இந்தியாவின் நட்பு என்று சொல்லிக்கொள்ளும் இலங்கையின் துறைமுகத்தை அதானிக்குக் கொடுக்க தந்திரமாக மேம்பாடு அபிவிருத்தி என்ற பெயரில் கடந்த ஆண்டு ஒப்பந்தமானது. இதனைத் தொடர்ந்து கோவிட் முழு முடக்க காலத்திலும் இலங்கையில் கடுமையான போராட்டங்கள் நடந்தன.

மகிந்தாவின் பல உத்தரவாதங்களையும் தொழிலாளர்கள் ஏற்கவில்லை. ஒப்பந்தத்தை ரத்து செய்வதோடு மட்டுமல்லாமல் எதிர்காலத்தில் இதை மீண்டும் விற்காமல் இருக்க துறைமுகத்தை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கடுமையாகப் போராடினர்.  இது தொடர்பாக பேசிய ராஜபக்சே நாம் அதிகம் இந்தியாவையே நம்பி உள்ளதாகவும்  இந்தியாவைப் பகைத்துக் கொள்வது தவறானது என்றும் பேசிப்பார்த்தார்.

இந்தியாவிற்கு கிழக்கு முனையம் வழங்கப்படாத பட்சத்தில், இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியாவினால் பல்வேறு அழுத்தங்கள் ஏற்படும் சாத்தியம் உள்ளதாகவும், இந்தியாவிலிருந்து மிக அதிகளவிலான பொருட்கள் இறக்குமதி செய்யப்படுவதாக கூறிய அவர், அவ்வாறான பொருள்களின் இறக்குமதிகளுக்கும் தட்டுப் பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்பு உருவாகும் என்றெல்லாம் சொல்லிப் பார்த்தார். ஆனால் தொழிலாளர்கள் பிரதமரின் பேச்சிற்குச் செவிசாய்க்காமல் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் துறைமுகத்தை அதானிக்கு தாரைவார்க்கும் முடிவைக் கைவிட்டு தொழிலாளர்களிடமே துறைமுகத்தை திருப்பி கொடுத்துவிட்டது இலங்கை அரசு.

ஆஸ்திரேலியாவில் அதானி தொழில் தொடங்க அதானியையும் தன்னோடு விமானத்தில் அழைத்துச் சென்றதோடு மட்டுமல்லாமல், தொழில் தொடங்குவதற்கு வங்கிக்கடன் கொடுக்க வங்கி அதிகாரியையும் அழைத்துச் சென்ற முகவராக இந்தியப் பிரதமரே நடந்து கொண்டது உலக வரலாற்றில் கேள்விப்பட முடியாத ஒன்றே!

போகும் போக்கைப் பார்த்தால் ஒரு கார்ப்பரேட் அதிபரையே பிரதமராகவோ அல்லது குடியரசுத் தலைவராகவோ ஆக்கினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

 

No comments:

Post a Comment