பன்னீர் செல்வமே மறைந்து விட்டாயா? - தந்தை பெரியார் துயரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 27, 2021

பன்னீர் செல்வமே மறைந்து விட்டாயா? - தந்தை பெரியார் துயரம்

காலஞ் சென்ற. பன்னீர் செல்வமே! காலஞ்சென்று விட்டாயா? நிஜமாகவா? கனவா? தமிழர் சாந்தி பெறுவாராக!’’ எனத் தலைப்பிட்டுவிடுதலைஇதழில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கண்ணீர்க் கட்டுரை.

நமது உண்மைத் தோழரும் உற்ற துணை வரும்உள்ளும் புறமும் ஒன்றாய் உள்ளவரும். தமிழர் இயக்கத்தில் உறுதி யான பற்றுக் கொண்டு அல்லும் பகலும் உழைத்து வந்தவரும், நம்மிடத்தில் களங் கமற்ற அன்பும் பற்றுதலும் விசுவாசமும் கொண்டிருந்தவரும் நினைத்தால், திடுக் கிடும்படி எதிரிகள் நெஞ்சில் எப்பொழுதும் திகிலை, உண்டாக்கிக் கொண்டிருந்தவரு மான அருமைப் பன்னீர் செல்வம் அவர் களை, இன்றுகாலம் சென்ற பன்னீர் செல்வம்என்று எழுத நேரிட்டதற்கு மனம் பதைக்கிறது; நெஞ்சு திக் திக்கென்று அடித்துக் கொள்ளுகிறது; மெய் நடுங்கு கிறது; எழுதக் கையோட வில்லை; கண் கலங்கி மறைக்கிறது; கண்ணீர் எழுத்துக் களை அழிக்கிறது; பன்னீர் செல்வத்திற்கு பாழும் உத்தியோகம் வந்ததும் போதும், அது அவரது உயிருக்கே உலையாய் இருந் ததும்போதும், தமிழர்களைப் பரிதவிக்க விட்டு விட்டு மறைந்து விட்டார்.

இந்த உத்தியோகம். ஏன் வந்ததென்றே ஒவ்வொரு வினாடியும் தோன்றுகிறது. அவருக்கடுத்தாற்போல். யார் யார், என்று மனம் ஏங்குகிறது, தேடுகிறது, தேடித் தேடி ஏமாற்றமடைகிறது.

என் மனைவி முடிவெய்திய போதும் நான் சிறிதும் மனம் கலங்கவில்லை. ஒரு சொட்டுக் கண்ணீர் வடிக்கவில்லை. என் தாயார் இறந்த போதும் இயற்கை தானே, 95 வயதுக்கு மேலும் மக்கள் வாழவில் லையே, என்று கருதலாமா! இது பேராசை அல்லவா என்று கருதினேன்-10-வயதி லேயே லண்டனுக்கு அனுப்பி படிக்க வைத்த ஒரே அண்ணன் மகன் படித்து விட்டு இந்தியா வந்த சேர்ந்து, சரியாக 20ஆவது வயதில் இறந்து போனதற்தாக வும் பதறவில்லை. கதறவில்லை.

பன்னீர் செல்வத்தின் மறைவு மனதை வாட்டிடுகிறது. தமிழர்களைக் காணுந் தோறும் காணுந்தோறும் தமிழர் நிலையை எண்ணுந் தோறும் நெஞ்சம். பகீரென் கின்றது.

காரணம். முன் சொல்லப்பட்ட. மனைவி, தாயார், குழந்தை ஆகியவர்கள் மறைவு என் தனிப்பட்ட சுக துக்கத்தைப் பொறுத்தது. தன்னலம் மறையும்போது அவர்களது மறைவின் நினைவும் மறந்து போகும். பன்னீர் செல்வத்தின் மறைவு பொது நலத்தைப் பொறுத்தது, ‘தமிழர் களின் நிலையைப் பொறுத்தது. எனவே தமிழர்களை காணுந்தோறும் நினைக்குந் தோறும் பன்னீர் செல்வம் ஞாபகத்துக்கு வருகிறார். இது என்று மறைவது? இவருக்குப் பதில் யார் என்றே திகைக்கிறது. பாழாய்ப்போன உத்தி யோகம் சர்க்கரை பூசின நஞ்சுருண்டைக்குள் குத்திய தூண்டில் முள்ளாக இருந்து விட்டது. ஆம், முள்ளில் பட்ட மீனாக ஆகிவிட்டார் செல்வம், இனி, என் செய்வது? தமிழர் இயக்கமானது தோன்றிய நாள் முதல் இப்படியே பல தத்துக்களுக்கு ஆளாகி வந்திருக்கிறது என்றாலும் நாளுக்கு, நாள் முன்னேறியே வந்திருக்கிற அனுபவம் தான் நமக்கும் தமிழ் மக்களுக்கும் சிறிது ஆறு தலளிக்கும் என்று கருதுகிறேன்.

(1.3.1940  சர் .டி.பன்னிர் செல்வம் நினைவு நாள்)

No comments:

Post a Comment