தமிழர் தலைவர் அறிக்கை
பேரறிவாளன் உள்பட எழுவரை விடுதலை செய்யப்படவேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தின் உறுதி வெறும் நீர் எழுத்துக்களா? என்று திராவிடர் கழகத் தலைவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:
29 ஆண்டுகளாக சிறையில் வதியும் எழுவர்களான பேரறி வாளன், முருகன், சாந்தன், நளினி, ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன், ஜெயக்குமார் ஆகியோரை விடுதலை செய்ய கடந்த பல மாதங்களுக்கு முன் தமிழக (அ.தி.மு.க.) அரசு முடிவெடுத்து ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி கிடப்பில் உள்ளது.
இதற்கிடையில் உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் சென்ற 10 நாட்களுக்குமுன் கூட, ஆளுநர் முடிவு செய்து அறிவிக்கவேண்டியதுபற்றி மத்திய அரசின் வழக்குரைஞரைக் கேட்டபோது, இன்னும் 3 நாளில் முடிவு எடுத்து அறிவிப்பார் என்று கூறி, உச்சநீதிமன்றமும் ஒரு வாரம் அவகாசம் அளித்தது!
எல்லாம் முடிந்து பல நாட்கள் ஓடிவிட்டன. இன்னமும் ஆளுநர் ஏனோ தனது முடிவை அறிவிக்காமல் இருப்பது அரசியல் சட்ட அவமதிப்பு மட்டுமல்ல; உச்சநீதிமன்ற அவமதிப்பாகவும் கருதப்படவேண்டிய ஒன்று.
எழுவரின் உயிர்களோடு விளையாடுவது மத்திய அரசுக்கும், ஆளுநருக்கும் என்ன வேடிக்கையோ புரியவில்லை. சி.பி.அய். போன்ற அமைப்புகள் உள்பட தங்களுக்கு எந்த மறுப்பும் இல்லை என்று கூறியுள்ளன.
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், சில நாட்களுக்கு முன்பு ஆளுநரை சந்தித்து வற்புறுத்தியும், ஆளுநர் உரைக்கு முன்பும் சரி, பின்பும் சரி, ஏனோ இந்தக் கொடிய மவுனம்? புரியவில்லை!
தமிழ்நாடு அரசு அழுத்தம் தர ஏன் தயக்கம்?
விடை - மக்கள்தான் தரவேண்டும்!
கி.வீரமணி
தலைவர்
திராவிடர் கழகம்
சென்னை
3.2.2021
No comments:
Post a Comment