அண்ணா நினைவு நாள் சிந்தனை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, February 3, 2021

அண்ணா நினைவு நாள் சிந்தனை

தந்தை பெரியாரின் மாணாக்கர் அறிஞர் அண்ணா அவர்களின் நினைவு நாள் இந்நாள் (3.2.1969). பகுத்தறிவாளர் பெர்ட்ரண்ட் ரசலின் நினைவு நாளும் இந்நாள்தான் (1970).

அண்ணா என்று வரும்போது நாட்டு மக்கள் நினைவிற்கு வருவது - தந்தை பெரியார் அவர்களின் பகுத்தறிவுக் கொள்கை களை வாலிபர்களிடத்திலே கொண்டு சென்றது. புராண, இதிகாச ஆரிய சனாதனங்களை அழகு தமிழில் எழுத்திலும், பேச்சிலும் கொண்டு சென்றது. அதன்மூலம் பெரும் எழுச்சியை ஏற்படுத் தியது. அரசியலுக்குச் சென்ற நிலையிலும், ஆட்சிப் பீடத்தில் அமர்ந்த நிலையிலும் குறுகிய காலத்தில் அவர் நிகழ்த்திக் காட்டி நிலை நிறுத்திய முப்பெரும் சாதனைகள் எல்லாம் கல்வெட்டுகளாக நாட்டு மக்கள் நெஞ்சிலே நிலைத்திருக்கக் கூடியவையாகும்.

மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில் அவரின் கன்னிப் பேச்சு என்பது இன்றைக்கும் அனைத்துத் தரப்பிலும் பேசப்பட்டு வருகிறது - என்றென்றும் பேசப்படவும் போகிறது.

"நான் திராவிட மரபு வழிப் பிரிவைச் சேர்ந்தவன். நான் என்னைத் திராவிடன் என்று சொல்லிக் கொள்வதில் பெருமை அடைகிறேன். இதற்குப் பொருள் நான் ஒரு வங்காளிக்கோ, அல்லது மராட்டியனுக்கோ, அல்லது குஜராத்திக்கோ எதிரான வன் என்பதல்ல. ராபர்ட் பேர்ன்ஸ் குறிப்பிடுவது போல "என்ன வாக இருந்தாலும் மனிதன் மனிதன்தான்". திராவிடர்களிடம் திண்ணியமானதும், தனித் தன்மை பெற்றதும், வித்தியாசமானது மான ஒன்று நாட்டிற்கு வழங்குவதற்கு இருக்கிறது என்பதுதான் நான் திராவிடன் என்று சொல்லிக் கொள்வதற்கு ஒரே காரண மாகும்" என்று மாநிலங்களவையில் முழங்கினார் அறிஞர் அண்ணா (1962 ஏப்ரல்).

திராவிட என்ற இன வரலாற்றுச் சொல்லைத் தம் கட்சிகளில் இணைத்துக் கொண்டிருப்போர் தங்கள் தலைமை அலுவலகத்தில் அண்ணாவின் இந்த வரலாற்றுப் பிரகடனத்தைக் கண்ணாடி சட்டம் போட்டு மாட்டி வைத்து ஒவ்வொரு நாளும் படித்துப் பார்த்து, இந்தப் பாட்டையில் கண்ணியமாகக் கடமையாற்று கிறோமா என்று தனக்குத்தானே சுய விமர்சனம் செய்து கொள்வது மிக மிக முக்கியம்.

"பிரிவினையைக் கை விட்டாலும், அந்தப் பிரிவினைக்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன" என்று அண்ணா சொன்னதையும் மனப்பாடமாக வைத்திருக்க வேண்டும்.

இன்றைக்கு இந்தியத் துணைக் கண்டத்தில் ஒரு மாநிலமாக தமிழ்நாடு இருக்கிறது. அண்ணா சொன்ன அந்த மாநில சுயாட்சி என்பது இப்பொழுது ஓரத்தின் ஒரு முனையில் தொங்கிக் கொண்டு இருக்கிறது!

இரு மொழிதான் இங்கு - மூன்றாவது மொழிக்கு இடமில்லை என்று சட்ட ரீதியாக நிலை நிறுத்திச் சென்றார் அண்ணா.

இந்திய மத்திய அரசு இந்தியையும், சமஸ்கிருதத்தையும் தேசிய கல்விக் கொள்கை என்ற முகமூடி அணிந்து கொண்டு உள்ளே நுழைக்கவில்லையா? அந்த மத்திய ஆட்சியின் கட்சியுடன் அண்ணா பெயரைக் கட்சியில் வைத்துக் கொண்டு இருக்கும் அகில இந்திய அண்ணா தி.மு.. நகமும், சதையுமாக குழைந்து குழைந்து ஒட்டி உறவாடுவது எப்படி - எப்படி?

தன் இறுதி மூச்சு அடங்கும் வரை பகுத்தறிவாளராக பளிச்சென்று காணப்பட்டவர் அண்ணா. இப்பொழுது என்ன நடக்கிறது?

அண்ணா திமுக கட்சியின் நிறுவனர் என்று சொல்லிக் கொண்டு எம்.ஜி. இராமச்சந்திரன், ஜெயலலிதா ஆகியோருக்கு அதிகாரப் பூர்வமாகக் கோயில் எழுப்பப்பட்டு இருக்கிறதே - அண்ணா திமுகவில், அண்ணா சிந்தனையாளர் ஒரே ஒருவர் கூடக் கிடையாதா?

"நாலு தலைச்சாமிகள், மூன்று கண் சாமிகள், மூன்று தலைச் சாமிகள், ஆயிரம் கண் சாமி, ஆறு தலைச்சாமி, ஆனைமுகச் சாமி, ஆழிவாய்ச் சாமி, பருந்தேறும் சாமி, காளை ஏறும் கடவுள், காக்கைமீது பறக்கும் கடவுள், தலைமீது தையலைத் தாங்கிச் செல்லும் தெய்வம், ரிஷி பத்தினிகளிடம் சுகமனுபவிக்க நடுநசியில் போகும் தெய்வம் என்று புராண அட்டவணைகளிலே உள்ளனவே. நாம் இந்து என்று கூறிக் கொண்டு தொழ வேண்டுமே  -இந்தச் செய்தியைக் கேட்டால், உலக நாகரிக மக்கள் நம்மை நீக்ரோக்களைவிட கேவலமானவர்கள் என்று கேலி செய்வார்களே!" என்றாரே அறிஞர் அண்ணா.

அரசியலிலும் சரி, ஒருவனே தேவன் என்று சொன்ன போதும் உருவமற்ற தேவன், ஊண் வேண்டாத சாமி, ஊரார் காசைக் கரியாக்கும் உற்சவம் கேட்காத சாமி, அங்கே இங்கே என்று ஆளுக்கு ஆள் இடத்தைப் பிரித்து கதைக்கூறா சாமி உண்டா? என்று அண்ணா அவர்கள் அடுக்கிக் கொண்டே போகிறார். (திராவிட நாடு 26.9.1948) உருவச் சிலைகளைக் கடவுள் என்று கூறி வீழ்ந்து கும்பிடுபவர்களை எள்ளி நகையாடுகிறார்.

இத்தகைய பகுத்தறிவாளர் அண்ணாவின் பெயரைக் கட்சியில் வைத்திருப்பவர்கள் அவரின் பகுத்தறிவுச் சிந்தனை யைக் காலில் போட்டு மிதித்து கட்சியின் தலைவர்களுக்கு (எம்.ஜி.ஆர். - ஜெயலலிதா) கோயில் கட்டும் பேதமையை என்னவென்று சொல்ல! இந்தக் கோயிலுக்கு பெயர் தமிழர் குலச்சாமியாம்.

இந்தக் குலச்சாமி ஏன் சிறை சென்றது என்று எப்படி ஸ்தலபுராணம் எழுதுவார்களாம்?

கோயில்கள் எப்படி எல்லாம் தோன்றின என்பதற்கு இது ஒன்று போதாதா?

சிவாச்சாரியார்களை அழைத்து இந்தக் கோயிலுக்கு கும்பாபிஷேகமாம்! ஆரியமாயை எழுதிய அண்ணா எங்கே? ஆரியத்திற்கு அடிமையான இந்த அண்ணா திமுக எங்கே? அண்ணா நினைவு நாளில் சிந்திக்க வேண்டும்.

No comments:

Post a Comment