சு.அறிவுக்கரசு
இந்திய
நாட்டை ஆண்ட பலரில் வணிகம் செய்ய வந்த கிழக்கிந்திய கம்பெனியும் ஒன்று என்பதை நாம் அறிவோம். 1833ஆம் ஆண்டு வரை கிறித்துவ மதம் பரப்பும் மிஷனரிகள் நாட்டில் அனுமதிக்கப்பட்டு வந்தனர். பிரிட்டிஷ் அரசின் ஆணைப்படி அது நிறுத்தப்பட்டது. அதன் பிறகு, மிஷனரிகளுக்குத் தொல்லைகள் ஏற்பட்டன. தரப்பட்டன எனச்சொல்வது பொருத்தமாக இருக்கும். பல கடவுள்களை வணங்கிக்
கொண்டிருந்த இந்தியர்கள் (இன்றைக்கும் அதுதானே நிலைமை) மதம் மாறிக் குழம்பிக் கொண்டு ஏற்படுத்திய தொல்லைகள் மிஷினரிகளை வெறுத்துப் போகச் செய்தது. மிஷினரிகள் மக்களை அணுகித் தம் கடவுள், தம் மதம் பற்றிப் பேசிப் பிரச்சாரம் செய்து திருப்தியடையச் செய்து தம் கொள்கைக்குச் சம்மதிக்க வைக்க வேண்டியிருந்தது. பல்லாண்டுகளாகக் கொண்டிருந்த கொள்கைகளை உடனே கை கழுவிட முடியாதுதானே.
அப்படி கைவிடச் செய்வதற்காக மிஷினரிகள் செய்த தந்திர உபாயங்களை முறியடிக்கும் வகையில் இந்து மதத்தவர் செயல்பட்டனர். எதிர்ப் பிரச்சாரம் நடத்தினர். பேச்சுக்குப் பேச்சு, எழுத்துக்கு எழுத்து என்று பதிலடி நடத்தினர்.
கிறித்துவ
மிஷனரியாக வந்த ராபர்ட் கால்டுவெல் (1814-1891) குறிப்பிட்டதுபோல, “இந்தியா எனும் நாடு” என்பதைப் போலவே இந்துமதம் என்பதும் அய்ரோப்பியர் தந்த பெயர் என்று அவர் குறிப்பிட்டார். இந்தியா எனும் நிலப்பரப்பு ஒரே நாடாக இரண்டாயிரம் ஆண்டுகளாக இருந்ததில்லை. முகலாயர் வருகைக்குக் முன்னர் 56 தேசங்களாக இருந்தது. 56 அரசர்களால் ஆளப்பட்டது. இன்றைய இந்தியாவில் புராதன தேசங்களான 56இல் 50 மட்டுமே உள்ளன. மீதி தனித்தனி நாடுகளாக உள்ளன. அதுபோலவே ஷண்மதங்களாக - ஆறு மதங்களாக - இருந்தவற்றை வில்லியம் ஜோன்ஸ் என்பவர் கூட்டிப் பிடித்து, ஒரே பெயரைச் சூட்டி ஹிந்து எனும் பாரசீகச் சொல்லால் அழைத்தார். 1801இல் இருந்து அப்பெயர். ஆறு மதங்களின், கடவுள்களின் பெயரால்தான் சிவபக்தி, விஷ்ணு பக்தி என்றெல்லாம் வழங்கப்பட்டது, வழங்கப்படுகிறது.
ஹிந்துத்துவத்தைப்
பரப்பிட சிறு நூல்கள் 1832இல் 40 ஆயிரத்திற்கும் மேற்பட்டவை அச்சிடப்பட்டன. இருபது ஆண்டுகளில் அவற்றின் எண்ணிக்கை 210 ஆயிரமாக உயர்ந்தன. இவை கிறித்துவத்தின் சிறப்புகளைப்(?) பேசின. சில ஹிந்து மதத்தை தூஷித்தன. சில ஆதரிப்பது போலப் பேசி, முழுமையான கொள்கைகள் அல்ல எனக் குறிப்பிட்டன. ஸ்கட்டர் என்பார் எழுதிய கண்டன வெளியீடு, சிவன் தன் மகள் மீது ஆசைப்பட்டான், அவள் மறுக்கவே, வன்முறையால் தன் காமத்தைத் தீர்த்துக் கொண்டான் என எழுதப்பட்டுள்ளது. இடையர்குலப் பெண்களைக்
கெடுத்த கிருஷ்ணன் பற்றியும் கம்சனின் வேலைக்காரி கூனியைக் கெடுத்தது பற்றியும் வெண்ணெய், தயிர் திருடியது பற்றியும் ஒரு நூல் எழுதப்பட்டது. “பஜார் புத்தகம்“ என்ற தலைப்பிலான வெளியீடு திருக்குறள், தாயுமானவர் பாடல் போன்றவற்றை எடுத்துக்கூறி, புராணங்களையும் விஷ்ணு, சிவன் போன்ற கடவுள்களைக் கடுமையாக விமர்சித்தும் எழுதிப் பரப்பப்பட்டது.
ஹிந்து
மதத்தில் ஆழ வேரூன்றியிருக்கும் தீமை ஜாதி,
அது வேரோடும் கிளைகளுடனும் வெட்டி வீழ்த்தப் படவேண்டும் என்றது புரொடஸ்டன்ட் கிறித்துவப் பிரிவு 1850இல். கத்தோலிக்கம், லூதரன் பிரிவு கிறித்தவர்கள் 1860இல் இம்மாதிரிப் பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். இதனடிப்படையில் அமெரிக்க மதுரை மிஷன் அமைப்பு, தன் உறுப்பினர் அனைவரும் தீண்டத்தகாதோருடன் சேர்ந்து தேனீர் குடிக்க வேண்டுமென்று கூறியது. 1847இல் இப்பரீட்சை நேர்ந்தபோது, 72 கிறித்தவர்கள், மறுத்ததால் அவர்கள் சபையிலிருந்து நீக்கப்பட்டனர். மறு ஆண்டில், தீண்டப்படாதவர் சமைத்த உணவைச் சாப்பிடுவோருக்கு மட்டுமே மதமாற்றச் சடங்கான ஞானஸ்நானம் செய்விக்கப்பட வேண்டுமென முடிவு செய்தனர். ஒரே மேய்ப்பவனை ஏற்றவர்கள் ஒரே மந்தை என்பதையும் ஏற்கச் செய்ய வேண்டும் என்பதற்கான முயற்சி இது. ஆனால், மேல்சாதி எனச் சொல்லிக்கொண்டோர் இதை ஏற்கவில்லை. ஜாதி என்பது சமூகம் சார்ந்தது, மதம் சார்ந்தது அல்ல என்று வித்தாரம் பேசினர். தங்களுக்கென தனியாக வழிபாட்டிடம் கட்டிக்கொண்டனர். ஒரே மேய்ப்பனை ஏற்றவர்கள் ஒரே மந்தையாக இருக்கத் தயாரில்லை. ஜாதி அந்த அளவுக்கு ஹிந்து மதத்தில் வேர்பிடித்து வளர்ந்துள்ளது
வியக்கத்தக்க
உறவு என்னவென்றால், சைவ சித்தாந்தமும், கிறித்தவ மிஷினரிகளும் ஒத்துப் போயின. “கிறித்துவத்தின் சரித்திரம்“ எனும் நூலில் கிராஃபே என்பார் இதனை விளக்கிக் கூறியுள்ளார். (பக்கம் 144-145) சைவ சித்தாந்த சபைக் கூட்டங்களில் மிஷனரிகள் பங்கு பெற்றனர். காரணம் என்னவென்றால், சைவ சித்தாந்தம் என்பது வேதாந்தத்திற்கு எதிரானது. மிஷனரிகளின் இச்செயல் மக்களின் பாராட்டைப் பெற்றது என நூலாசிரியர் எழுதினார்.
வேதாந்தத்திற்கு எதிராக இருப்போர் பார்ப்பனர் அல்லாதார் தானே! பார்ப்பனர் வேதங்களின் முடிவை ஏற்பவர்கள் எனும் வகையில் ஜாதி முறையை ஏற்பவர்கள் மட்டுமல்லாது காப்பாற்றுபவர்கள் ஆயிற்றே. அப்படிச் செய்தால்தானே மேல் ஜாதி எனக்கூறிப் பிற ஜாதியினர் மீது சவாரி செய்ய முடியும்.
7.10.1846இல்
சென்னையில் ஒரு முக்கிய நிகழ்வு. ஆளுநர் ட்வீடேல் என்பாரைக் கண்டனம் செய்வதற்காக நடந்தது. அரசு பணியில் சேருவோர்க்கு பைபிளில் பரிச்சயமும் படித்தும் இருக்க வேண்டும் என்றார் ஆளுநர். அடுத்து, LexLoci Act எனப்படும் உள்ளூர்ப் பழக்கவழக்கச் சட்டம் 1845 ஜனவரியில் கொண்டு வந்து மதம் மாறிய இந்துக்கள், முஸ்லிம்கள் ஆகியோருக்கு குடும்பச் சொத்தில் பங்கு இல்லை என்றிருப்பதை எதிர்த்துச் சட்டத்தை கண்டிப்பது. இந்த இரண்டு நோக்கங்களுக்காகக் கூட்டப்பட்ட கூட்டம். சென்னை ஹிந்து சமூகத்தின் சார்பில் நடப்பதாக அறிவிப்பு. சென்னை நகர ஷெரிஃபின் அனுமதி பெற்ற கூட்டம். சட்டப்படி, கூட்ட ஏற்பாட்டாளர்களும் கலந்து கொண்டோரும் தங்களை ஹிந்துக்கள் என அறிவித்துக் கொண்ட
கூட்டம். நெல்லை மாவட்டம் திருச்செந்தூரில் உள்ள விபூதி சங்கமமும் சதுர்வேத சித்தாந்த சபா எனும் அமைப்பும் ஏற்பாடு செய்தன.
கிறிஸ்தவர்கள்
போலவே புத்தகம் படித்தல், பரப்புரை செய்தல், பாடுதல், மும்மூர்த்திகளை எழுப்புதல் (சிவன், பிரம்மா, விஷ்ணு) போன்றவற்றை இவர்களும் செய்தனர். 1839இல் நிறுவப்பட்ட கல்விக் களஞ்சியம் அச்சகத்தில் கிறித்துவ எதிர்ப்புப் பிரசுரங்களை அச்சடித்தனர். அச்சு இயந்திரத்தை மும்மூர்த்திகளோ, ஹிந்து மதத்தவரோ கண்டுபிடிக்கவில்லை. கிறித்துவர் கண்டுபிடித்தது என்பது இவர்களுக்கு தெரியவில்லையோ?
இம்மாதிரிக்
கூட்டம் 1880இல் நடந்தது. 1881இல் ஹிந்து பிரச்சார சங்கம் அமைக்கப்பட்டது. ஹிந்து நூல் வெளியீட்டுச் சங்கம் சிவசங்கர பாண்டையா எனும் குஜராத்திப் பார்ப்பனரால் அமைக்கப்பட்டது. கிறித்துவ மிஷனரிகள் பரப்புரை செய்த இடங்களிலெல்லாம் இவர்கள் பரப்புரை செய்தனர். கிறித்துவர் போன்றே, ஹிந்துக்கள் தெருக்களில் பரப்புரை செய்தனர். பள்ளிகளில் மதக்கருத்தைப் போதித்தனர். பாடம் தொடங்கும் முன் கடவுள் வணக்கம் பாடினர். மதுரை மீனாட்சி கோயில் பணத்தில் ஹிந்து மதத்தைப் பரப்பிட “உண்டு உறைவிடப்பள்ளி” தொடங்கினர். “கிறித்துவும் கடவுளா?” எனும் நூலை 1889இல் 15 ஆயிரம் படிகள் அச்சிட்டு விநியோகித்தனர். (நூல்: பண்பாட்டு அசைவுகள் தொ.பரமசிவம், பக்கம்
105)
இப்படி,
எல்லா வகைகளிலும் கிறித்துவர்களைக் காப்பியடித்தும் பிரச்சாரம் செய்தனர். கிறித்துவ நூல் வெளியீட்டமைப்புப் போலவே ஹிந்து நூல் வெளியீட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டது. கிறித்துவ இளைஞர் அமைப்பு (ஒய்.எம்.சி.ஏ.) போலவே
இந்திய இளைஞர் அமைப்பு (ஒய்.எம்.அய்.ஏ,) ஏற்படுத்தினார்கள். ஏன் இளைஞர் ஹிந்து அமைப்பு என்று பெயர் வைக்கவில்லை? என்ற கேள்வி எழுவதைத் தடுக்க முடியவில்லையே. ஹிந்து மதம் சைவர்களுக்கான மதமா? பார்ப்பனர்களுக்கான மதமா? இந்தக் கேள்விக்கு விடை கண்டால் தானே பெயர் வைக்க முடியும்? உண்மையில் ஹிந்து மதம் என்பதே பார்ப்பனர் மதம் தானே.
திருநெல்வேலி
ஆளுநர் ராபர்ட் டிஎஸ்கார்ட் ஆஷ் என்பவரை ரயிலில் சுட்டுக் கொன்ற வாஞ்சி அய்யர் எனும் வனத்துறைக் கடைநிலை ஊழியன் ஏன் அதைச் செய்தான்? அய்ந்தாம் ஜார்ஜ் மன்னர் சனாதன தர்மத்தை மதிக்காமலும் மாட்டிறைச்சி தின்பதாலும் மிலேச்சன் என்றும் பஞ்சமன் என்றும் திட்டி எழுதி சட்டைப்பையில் வைத்திருந்தான். விடுதலை வேட்கை போன்ற எந்தப் பிண்ணாக்கும் கிடையாது... ஜாதி வெறி மட்டுமே.
1858இல்
வெளிவந்த ‘தி மெட்ராஸ் டைம்ஸ்'
ஏட்டின்படி பொருள் புரிந்தே ஆங்கில உயரதிகாரிகள் தங்களைப் பறையர் என்றும் தீண்டத்தகாதவர் என்றும் கூறிக்கொண்டனர். அதனால், பார்ப்பனர் அவர்களைக் கேவலமாகக் கருதி நடந்து கொண்டனர். அதன்படியே வாஞ்சி அய்யர் ஆஷ் துரையை சுட்டுக் கொன்றான். அவன் பெயரினும் ரயில் நிலையமா? செங்கோட்டையில் அவனுக்குச் சிலையா?
சிந்திக்க
வேண்டுகிறேன்.
No comments:
Post a Comment