ஓய்வு வயதை உயர்த்தியும், வெளி மாநிலத்தவருக்கு வாய்ப்பளித்தும் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பில் மண்ணை அள்ளிப் போடுவதா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 28, 2021

ஓய்வு வயதை உயர்த்தியும், வெளி மாநிலத்தவருக்கு வாய்ப்பளித்தும் தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பில் மண்ணை அள்ளிப் போடுவதா?

தமிழக இளைஞர்களே, நடக்கவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில்

உதயசூரியனை உதிக்கச் செய்வீர்!

உதவாக்கரைகளை வீட்டுக்கு அனுப்புவீர்!!

ஓய்வு வயதை உயர்த்தியும், வெளி மாநிலத்த வருக்கு வாய்ப்பளித்தும்  தமிழக இளைஞர்களின் வேலை வாய்ப்பில் மண்ணை அள்ளிப் போடுவதா? தமிழக இளைஞர்களே, நடக்கவிருக்கும் சட்டப் பேரவை தேர்தலில் உதயசூரியனை உதிக்கச் செய்வீர், உதவாக் கரைகளை வீட்டுக்கு அனுப்புவீர் என திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் விடுத்துள்ள முக்கிய அறிக்கை வருமாறு:

கடந்த சில ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் நடைபெறும் எடப்பாடி கே. பழனிசாமி அவர்களது தலைமையிலான .தி.மு.. அரசின் நிதி நிலை மிகவும் மோசமாகியுள்ளதைப் பற்றிக் கவலைப் படாமல் ஏராளமான கடன் வாங்கி, இப்போது அளிக் கப்பட்ட வரவு - செலவுத் திட்டத்தின்படி இக்கடன் தொகை ரூ.5 லட்சத்து 70 ஆயிரம் கோடி ஆக உயர்ந்துள்ளது.

பிறக்கப் போகும்  ஒவ்வொரு குழந்தைக்கும்கூட ரூ.63 ஆயிரம் கடனோடு பிறக்கும் 'கீர்த்தியை' அதன் தலையில் கிரீடமாகச் சூட்டியுள்ளது அதிமுக அரசு.

இந்த நிதி நிலை நெருக்கடியால் ஓய்வு பெறும் அரசு ஊழியர்களுக்குரிய தொகையை உடனடியாக தர இயலாத  நிலையில், நிதித்துறை அதிகாரிகளா கிய சில 'துன்மந்திரிகள்' தவறான யோசனைப்படியோ என்னவோ, குறுக்கு வழியாக அரசு ஊழியர்களில் ஓய்வு பெறுவோரை ஓய்வு பெற விடாமல் தடுத்துள் ளனர். முதலில் ஓய்வு  பெறும் வயதை 59 ஆக ஆக்கி அறிவித்து, பிறகு இப்போது நிதியமைச்சர் .பன்னீர் செல்வம் சமர்ப்பித்த இடைக்கால துண்டு விழும் பட்ஜெட்டில் ஓய்வு  பெறும் வயதை 60 ஆக உயர்த்து கிறோம் என்று கூறப்பட்டுள்ளது. வேலை கிட்டாமல் தற்கொலை எண்ணத்திற்குக்கூட தள்ளப்பட்டு  மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ள பல இலட்சக்கணக்கான இளைஞர்கள், பட்டதாரிகளின் எதிர்பார்ப்பை  இந்த அறிவிப்பு  - ஆணை  நாசமாக்கியுள்ளது.

அத்துடன் பல ஆண்டுகளாக அரசுப் பணிகளை ஆற்றிடும் பல அரசு ஊழியர்களுக்கு நியாயமாகக் கிடைக்க வேண்டிய பதவி உயர்வு வாய்ப்புகளும் கதவடைக்கப்பட்டவைகளாகி விட்டன.

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சலாமா?

ஆசிரியர்கள் தகுதித் தேர்வில், 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் வேலைக்காகக் காத்திருக்கும் நிலையில் அவர்களுக்குச் சென்ற ஆண்டும் வேலை வாய்ப்பு - இந்த ஓய்வு பெறும் வயது நீட்டிப்புக் காரணமாக கிட்டவில்லை. இரண்டு ஆண்டுகள் - அதுவும் கரோனா தொற்று, ஊரடங்கு, தொழில் முடக்கம், வறுமை இதற்கிடையில் "வெந்த புண்ணில், அவர்தம் நொந்த உள்ளங்களில் வேல் பாய்ச்சலாமா?"

வேலை வாய்ப்புக்காக காத்திருப்போர் வயது ஏறுவதினால் வயது வரம்பும் தாண்டி அவர்கள் வேலை வாய்ப்பை வருங்காலத்திலும் இழக்கும் நிலைதானே யதார்த்தம்?

ஓய்வூதியப் பலன்களுக்குரிய நிதியை ஒதுக்குவதில் இயலாமையை திசை திருப்பி, இப்படி ஒரு தந்திரம் எத்தனை லட்சம் குடும்பங்களின் அடுப்புகளில் "பூனை உறங்கும் நிலையை" ஏற்படுத்தி யுள்ளது என்பதை உணர வேண்டாமா?

1000 கோடி ரூபாய் செலவில்

சாதனை விளம்பரங்கள்!

இதில் மற்றொரு வேடிக்கை "குடிப்பது கூழ்; கொப்பளிப்பது பன்னீர்" என்பது போன்று பக்கம் பக்கமாக நேற்று முன்னாள் வரை 1000 கோடி ரூபாய்  செலவில் அரசு சாதனை  என்று முழுப் பக்க விளம் பரங்களை பரிசாக தங்களுக்கு ஆதரவு தரும் ஏடு களுக்குத் தந்த  டம்பாச்சாரித்தனத்தை  என்னவென்று சொல்வது?

ஏப்ரல் 6ஆம் தேதி வாக்குச் சாவடிக்குள் சென்று வாக்களிக்கவிருக்கும் வேலை கிட்டாத வாலிபர்களே, உங்கள் வாழ்வில் மண் போட்ட ஆட்சியை - 'ஜனநாயக ரீதியில் வீட்டுக்கனுப்பி' சிறப்பான நல்லாட்சி தர - நாளும் மக்களின் நாயகனாக செய லாற்றும் திமுக கூட்டணியை வெற்றி பெறச் செய்து, புதியோர் ஆட்சியை நிறுவினால் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வு மலரும்.

வயிற்றிலடிக்கும் ஆட்சியை வீழ்த்த....

இளைஞர்களே! உங்கள் வேலைவாய்ப்பை மற்ற மாநிலத்தவர்களுக்குத் தாரை வார்த்தும், இதுபோல வயதை உயர்த்தி, உங்கள் வயிற்றிலடிக்கும் ஆட்சியை வீழ்த்த, துயரைப் போக்கும் புதியதோர்  மாற்றத்தைத் தர தி.மு.. கூட்டணிக்கு வாக்களித்தால் பழைய ஆட்சியின் தவறுகள் திருத்தப்படும். புதிய  திட்டங்கள் உதய சூரியனால் உதிக்கும் என்பது உறுதி! ஏமாந்து விடாதீர்கள்!!

ஆட்சி மாற்றம் நம் இனத்தின் மீட்சிக்கான மாற்றம் - விடியலுக்கான வித்தூன்றுவீர்! மறவாதீர்!!

 

கிவீரமணி

தலைவர்

திராவிடர் கழகம்

சென்னை

28.2.2021

No comments:

Post a Comment