யாங்கூன், பிப்.1 மியான்மரில் ராணுவ புரட்சி ஏற்பட்டு ஆங் சான் சூகி சிறைபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மியான்மர் நாட்டில் கரோனா தொற்று அச்சுறுத்தலுக்கு மத்தியில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. மொத்தமுள்ள 642 இடங்களுக்கு அந்த நாட்டின் தலைவர் ஆங் சான் சூகி தலைமையிலான தேசிய ஜனநாயக கட்சி உள்பட 90-க்கும் மேற்பட்ட கட்சிகளைச் சேர்ந்த வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.
இந்த தேர்தலில் எதிர்பார்த்ததைவிட அதிக எண்ணிக்கையிலான வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. தேர்தலில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில், ஆட்சி அமைப்பதற்கு தேவையான பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றதாக ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி அறிவித்தது.
இந்தநிலையில் ஆங் சான் சூகி ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது. மியான்மரில் ஆங் சான் சூகி உள்ளிட்ட தலைவர்கள் ராணுவத்தினால் சிறைபிடிக்கப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.
முன்னதாக ஆங் சான் சூகி கூறுகையில், நான் எங்கள் மக்களிடம் கடுமையாக பதிலளிக்க வேண்டாம் என்று சொல்ல விரும்புகிறேன். அவர்கள் சட்டத்தின்படி செயல்பட வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்றார்.
மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம்
அரசு பதிலளிக்க உயர் நீதிமன்றம் உத்தரவு
சென்னை, பிப்.1- மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி அரசு மருத்துவர்கள் தொடர்ந்த வழக்கில், 2009ஆம் ஆண்டு அரசாணை நிலை குறித்து தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவர் எஸ்.பெருமாள் பிள்ளை, தேனி மருத்துவக் கல்லூரி மருத்துவர் நளினி, மதுரை மருத்துவக் கல்லூரி மருத்துவர் தாஹிர், தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவர் பாலமுருகன் உள்ளிட்ட 8 பேர் வழக்குத் தாக்கல் செய்தனர்.
அந்த மனுவில், ''தமிழகத்தில் முதுநிலை அரசு மருத்துவர்களுக்கும், மத்திய அரசுப் பணியில் உள்ள இளநிலை மருத்துவர்களுக்கும் இடையே 40 ஆயிரம் ரூபாய் வரை ஊதிய வித்தியாசம் உள்ளதாகவும், அரசு மருத்துவர்களுக்கு 8, 15, 17, 20 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஊதிய மறு ஆய்வு செய்யும் வகையில் கடந்த 2009 ஆம் ஆண்டு பிறப்பித்த அரசாணை 354-அய் அமல்படுத்தாதது அரசு மருத்துவர்களுக்குப் பெரும் இழப்பை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு மருத்துவர்களுக்கு இணையான ஊதியம் வழங்கப்பட வேண்டும் என்பன உள்ளிட்ட நியாயமான கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும்'' எனக் கோரப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதி மகாதேவன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அரசாணையை வெளியிட்ட அரசே அதை அமல்படுத்தாததால், கடந்த 11 ஆண்டுகளாக பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகியுள்ளதாக மனுதாரர் தரப்பில் வழக்குரைஞர் கவுதமன் ஆஜராகி வாதிட்டார். அப்போது அரசு சிறப்பு வழக்குரைஞர் பாப்பையா வழக்கு குறித்து பதிலளிக்க கால அவகாசம் கோரினார்.
இதையடுத்து 2009ஆம் ஆண்டு அரசாணை அமல்படுத்தப்படுமா, அமல்படுத்தப்படாதா? என பிப்ரவரி 3ஆம் தேதிக்குள் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதி, வழக்கை ஒத்திவைத்துள்ளார்.
No comments:
Post a Comment