* மின்சாரம்
நாத்திகம் - பகுத்தறிவு - 'ஆன்மிகம்' பற்றி எல்லாம் எழுத வந்த 'தினமலர்' 'ஆன்மிகம்'பற்றி தனக்குத் தெரிந்த சொற்களை எல்லாம் போட்டு எந்த அளவு குழப்பியுள்ளது?
ஆத்மா, ஆன்மா, ஜீவன், உயிர் என்பன ஒரு பொருளையே சுட்டிச் சொல்பவை. இதுதான் உயிர் எனக் காட்டுவதில் கருத்து வேறுபாடுகள் உள்ளன.
கருத்து வேறுபாடுகள் உள்ளன என்ற பிரச்சினையை எடுத்துக் கொள்வதில் ஏதாவது பொருள் இருக்க முடியுமா?
'ஆன்மா' பற்றிய கொள்கையை 'ஆன்மிகம்' என்கிறோம் என்கிறது 'தினமலர்'.
"ஆன்மிகம் என்ற சொல் அகராதிகளில் காணக் கிடைக்கவில்லை. நிகண்டுகளிலும் இல்லை, அபிதான சிந்தாமணியிலும் இல்லை. சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக அகராதி, ச.வே. சுப்பிரமணியம் தொகுத்த தமிழ் அகராதி, பவானந்தம் பிள்ளை தமிழ் அகராதி, செந்தமிழ் சொற்பிறப்பியல் அகர முதலி, சென்னை பல் கலைக் கழகம் தமிழ் லெக்சிகன் தமிழ்ப் பேரகராதி (1968) இவை எதிலும் இல்லை" என்று திராவிட இயக்க ஆய்வாளர் தோழர் க. திருநாவுக்கரசு அறுதியிட்டு உறுதியாகக் கூறியுள்ளார். ('முரசொலி', பொங்கல் மலர் 2021)
உயிருக்கு உருவம் கிடையாது, உடலுக்கு உருவம் உண்டு. உயிர் அழியாது, உயிர் அறியும் ஆற்றலுடையதாம் - சொல்கிறது 'தினமலர்'.
புத்தர் கோசல நாட்டில் பயணம் மேற்கொண்டி ருந்தபோது, ஒரு பார்ப்பனர், "ஆத்மா (உயிர்) பற்றி உங்கள் கருத்தென்ன" என்று வினவினார்.
அதற்குப் புத்தர் சொன்ன பதில்:
"ஆத்மா (உயிர்) எதையும் அறியக் கூடியது என்று வாதத்திற்காக வைத்துக் கொள்ளுவோம்.
"கண்களைத் தோண்டிவிட்டால் அந்த ஆத்மாவால் பார்க்க முடியுமா? காதுகளை செவிடு ஆக்கி விட்டால் ஆத்மாவால் கேட்க முடியுமா? மூக்கை எடுத்து விட்டால் நாற்றத்தை ஆத்மாவால் உணர முடியுமா? நாக்கை அறுத்துவிட்டால் ருசி அறிய, பேச ஆத்மாவால், உயிரால் முடியுமா?" என்று கேட்டு விட்டு மக்களின் அன்றாட வாழ்க் கைக்குத் தேவையற்ற சிந்தனைகள் இவையென்றும் புத்தர் சொல்லிக் கொண்டே நடந்தார்.
சிவவாக்கியர் எழுதிய பாடல் ஒன்று (பாடல் எண் 48)
கறந்தபால் முலைப்புகா கடைந்த
வெண்ணெய் மோர் புகா
உடைந்து போன சங்கினோசை
உயிர்களும் உடற்புகா
விரிந்தபூ உதிர்ந்த காயும்
மீண்டும் போய் மரம்புகா
இறந்தவர் பிறப்பதில்லை
இல்லை இல்லை இல்லையே!
யார் யாரையோ சாட்சிக்கு அழைக்கும் 'தின மலர்' - சித்தர் சிவ வாக்கியரின் இந்தப் பாடலுக்கு என்ன பதில் சொல்லப் போகிறது?
"கடவுளை மறுப்பவனும் அன்புடையவனாக, அறிவுடையவனாக இருக்க முடியும். ஒழுக்கம் உடையவனாக இருக்க முடியும். இப்படிப்பட்டோர் கூட அரசியலில் இறங்கினால் தன்னிலை மாறித் தடுமாறிப் போகின்றனர் என்பது கண்கூடு.
கடவுளை மறுப்பவன் அன்புடையவன் என்றும், அறிவுடையவன் என்றும் 'தினமலர்' ஒப்புக் கொள்கிறது.
ஆன்மிகவாதிகள் என்ற பட்டியலில் சங்கராச் சாரியார்கள் வர மாட்டார்களா?
காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி யின் ஒழுக்கம்பற்றி நாடறியாததா?
ஜெயேந்திரரால் கொலை செய்யப்பட்டவர் என்று கூறப்பட்ட சங்கரராமன் (அவரும் பார்ப் பனர்தான்) 'ஆன்மிகவாதியான' சங்கராச்சாரியார் ஜெயேந்திரர்பற்றி வண்டி வண்டியாக எழுதிய துண்டே. காமகோடியல்ல - காமவெறியர் என்று கழறியதுண்டே.
காஞ்சி மச்சேந்திரநாதன் கோயில் அர்ச்சகன் தேவநாதனும், சிறீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் அர்ச்சகன் பத்ரிநாத்தும் கோயில் கருவ றைகளை கரு உண்டாக்கும் பள்ளியறையாக மாற்றிய 'மகாத்மியத்தை' எந்த 'ஆன்மிகப்' பட்டி யலில் சேர்ப்பது?
தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பார்ப்பானுக்கு மோட்சம் கொடுத்தானே சிவன் (திருவிளையாடல் புராணம் - மாபாதகம் தீர்த்த படலம்) அதனை எந்த 'ஆன்மிகக்' கருவூலத்தில் சேகரித்து வைப்பது?
'பகவான் கிருஷ்ணன் செய்ததைத்தான் நானும் செய்தேன்' என்று நீதிமன்றத்தில் சொன்ன ஆசாராம் ஆன்மிகவாதியில்லை என்று சொல்லப் போகிறார்களா? மோடிக்கு மன உளைச்சல் வந்த போது எல்லாம் அவர் சென்று ஆசுவாசம் பெறுவது அவரின் ஆசிரமத்தில்தான் என்று படத்தோடு ஏடுகளில் வெளிவரவில்லையா?
12 வருடம் பஞ்சமாபாதகங்களைச் செய்தாலும் மகாமகத்தன்று குடந்தை மகா மகக் குளத்தில் ஒரு முழுக்குப் போட்டால் செய்த பாவங்கள் எல்லாம் பஞ்சாய்ப் பறந்து விடும் என்றால், நாட்டில் பாவங்கள் செய்யவோ ஒழுக்கக் கேட்டில் ஈடு படவோ யார்தான் தயங்குவர் - அஞ்சுவர்?
நாத்திகர்களை, பகுத்தறிவாளர்களை இழிவு படுத்த கவிஞர் கண்ணதாசனை சாட்சிக்கு அழைத் துள்ளது 'தினமலர்'.
அதே கண்ணதாசன் நாற்றம் பிடித்த இந்து மதம் என்று நார் நாராகக் கிழித்ததுண்டே!
"கண்ணனிடத்திலே பக்தி கொண்ட மீரா தன் கணவனின் வாழ்வைப் போர்க்களமாக்கி, அணு அணுவாய் அவன் வாழ்வைச் சிதைத்த கதையி லிருந்து, சிவநேசன் ஒருவன் பிள்ளைக் கறி சமைத் ததுவரை பலவிதக் கதைகளும் பக்தியின் இழித் தன்மையைத்தான் பாடுகின்றன.
பக்தியினாலே வாழ்வில் நல்லின்பங் கண்டவன் ஒருவனை இதுவரை எந்த ஏடும் எடுத்தோதவில்லை. ஒவ்வொருவனும் வாழத் தெரியாத வறட்டுத் தனத்தில் பக்தனாக மாறி நடைப் பிணமாய் வாழ்ந்து செத்திருக்கின்றான். பகுத்தறிவில் வாழ்க்கையை சமைத்துக் கொண்டவன் தான் வாழ்வாங்கு வாழ்ந்து சுகம் பெற்றிருக்கிறான். வீர வரலாற்றிற்கும், புராணத் திற்கும் உள்ள பேதமை பகுத்தறிவின் உயர்வையும், பக்தியின் கேவலத்தன்மையையும் எடுத்துக்காட்ட நல்ல உதாரணமாகும்."
(கண்ணதாசன் - 'தென்றல்' இதழில் எழுதிய கட்டுரையிலிருந்து 1.1.1955).
"தமிழர்கள் திருப்பதிசாமிக்கு மயிர் கொடுப்பது போல் ஆச்சாரியார் குடும்பத்தினர் கொடுப்ப தில்லை. தமிழன் மயிரில்தான் கடவுள்களுக்கும் ஏகப்பட்ட பிரியம்." இப்படியெல்லாம் எழுதியதும் சாட்சாத் கண்ணாதாசன்தான். சங்கராச்சாரியார்பற்றி அக்குவேர் ஆணி வேர் அசைத்ததுண்டே அவற் றையும் கப்பல் ஏற்ற வேண்டுமா?
பக்திக்கு சங்கராச்சாரியார் கொடுத்த 'சர்டிபிகேட்' என்ன தெரியுமா? இதோ:
"பத்துப் பதினைந்து வருடங்களைக் காட்டிலும் இப்பொழுது பக்தி மக்களிடையே நிறைய தென்படு கின்றது. ஆனாலும் ஜனங்களுக்குக் கஷ்டங்களும், வியாதிகளும் நிறைய இருக்கின்றது. இவைகள் நிறைய வரவரப் பக்தியும் மேன்மேலும் வளருகிறது. இவ்விதம் பக்தி நம்மிடையே வளர்ந்தும்கூட துக்கங்களும், வியாதிகளும் அதிகமாக வளருவ தற்குக் காரணங்கள் என்ன? ஓரளவுக்கு நமக்குக் கடவுள் பக்தி இருந்தபோதும் பேராசையும், ஒழுக்க மின்மையும், சுயநலமும் அதிகமாக நம்முடைய வாழ்க்கையைப் பிடித்துக் கொண்டு விட்டன"
என்றார் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி. எந்த நிகழ்ச்சியில்? காஞ்சி கோயில் கும்பாபிஷேகத்தில். ஆதாரம்: ('தினமணி' 7.9.1976)
போதுமா தினமலரே - இன்னும் கொஞ்சம் வேண்டுமா?
No comments:
Post a Comment