நிதிநிலை அறிக்கையில் சந்தடி சாக்கில் 15 ஆயிரம் பள்ளிகளில் புதிய கல்விக் கொள்கை திணிக்கப்பட்டுள்ளது.
கல்வியாளரே இல்லாத ஒரு குழு கல்வித் திட்டத்தைத் தயாரித்துள்ளது என்பது இந்த நாட்டில் மட்டுமே நடக்கக் கூடிய விபரீதமாகும்.
மாநிலப் பட்டியலில் இருந்த கல்வியை பொதுப் பட்டிய லுக்குக் கொண்டு சென்றதே அத்துமீறலாகும். பொதுப் பட்டியல் என்று வழக்கத்தில் கூறப்பட்டாலும் உண்மையிலேயே மத்திய அரசு - மாநில அரசு இரண்டுக்கும் இடையிலான ஒத்திசைவுப் பட்டியலேயாகும்.
இந்த நிலையில் தானடித்த மூப்பாக மத்தியில் பிஜேபி தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) அரசு இப்படி யொரு கல்வித் திட்டத்தை செயல்படுத்தத் துடிக்கிறது. இப்பொழுது முதற் கட்டமாக 15 ஆயிரம் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
இந்த 15 ஆயிரம் பள்ளிகளும் எந்தெந்த மாநிலத்தில் எத்தனை எத்தனைப் பள்ளிகள் என்பது இனிமேல்தான் தெரியவரும்.
இந்தத் திட்டம் எந்த மாநிலத்தில் கொண்டு வரப்பட்டா லும் - அம்மாநிலத்தில் உள்ள ஒடுக்கப்பட்ட மக்களைப் படுகுழியில் தள்ளும் பார்ப்பனத் திட்டமே - குலக்கல்வித் திட்டமே.
தமிழ்நாட்டில் தந்தை பெரியாரும், திராவிட இயக்கமும் அடித்தளத்தில் ஏற்படுத்தியிருக்கும் விழிப்புணர்வு காரண மாக தொடக்கத்திலேயே தன் எதிர்ப்பு முனை ஈட்டியைக் கூர் தீட்டிப் பாய்ச்சியது. இத்தகு விழிப்புணர்வு வேறு மாநிலத்தில் அறவே இல்லாத ஒரு நிலை - பார்ப்பனீயப் பார்த்தீனியம் படர்ந்திட வாய்ப்பு ஏற்பட்டு விட்டது.
"இந்தியாவில் மற்ற மற்ற மாநிலங்கள் எல்லாம் வரவேற்கும் நிலையில் தமிழ்நாடு மட்டும் முன் வரிசையில் நின்று எதிர்ப்புக் குரல் கொடுப்பது ஏன்?" என்று ஆதிக்க வாதிகளும், வட மாநில அரசியல்வாதிகளும் கேள்வி கேட்கிறார்கள். அதற்கு காரணம் மேலே நாம் சுட்டிக் காட்டிய நிலைதான்.
இப்பொழுதும் கல்வித் திட்டம் என்பது வெறும் மனப்பாடக் கல்வியாகவே இருந்து வருகிறது! மாணவனிடம் உள்ள திறனை வெளியில் கொண்டு வரும் கல்வி முறையாக இல்லை.
இதைப்பற்றி எல்லாம் சிந்தித்துத் திட்டம் வகுக்கப்பட்டால் முதலில் மலர்ச் செண்டு கொடுத்து வரவேற்பது தந்தை பெரியார் பிறந்த தமிழ் மண்ணாகவே இருக்கும்.
ஆனால் இந்தி - சமஸ்கிருதத் திணிப்பு, இட ஒதுக்கீடு மறுப்பு, நுழைவுத் தேர்வு, இந்தியக் கலாச்சாரம் என்ற பெயரால் மாநில மொழி, கலாச்சாரம் இவற்றிற்கு எதிரான பாடங்கள் - இன்னோரன்ன பார்ப்பன மயக் கல்வி திட்டத்தை கண்டிப்பாக மேலே தமிழக மக்கள் நிராகரிக் கவே செய்வர்.
5, 8, 10, 11, 12ஆம் வகுப்புகளில் எல்லாம் அரசு தேர்வு என்ற முறையால் மாணவர்கள் மேனிலைப் பள்ளியைத் தொடும் முன்பே இடை நிற்றல் என்ற பள்ளத்தில் விழுந்து கல்வியால் வளரும் நிலையைக் கனவிலும் காண முடியாத ஒரு நிலைதான்.
அய்ந்தாம் வகுப்பில் தேர்ச்சி பெறாவிட்டால் அவர்கள் தொழில் கல்விக்குப் போக வேண்டுமாம். கிராம நிலைகளில் எந்தத் தொழிலகங்கள் இவர்களை அரவணைக்கக் காத்துக் கொண்டுள்ளன? அப்பன் தொழிலைத்தான் சார்ந்து வாழ வேண்டிய கொடுமை.
1952இல் ராஜகோபாலாச்சாரியார் கொண்டு வந்த குலக்கல்வித் திட்டத்தின் இன்னொரு முகம்தான் இது. இன்றும்கூட ‘கல்கி'களும், ‘துக்ளக்'குகளும் ஆச்சாரியார் அன்று கொண்டு வந்த குலக்கல்வியை ஆதரித்து எழுதிக் கொண்டு தானே இருக்கின்றன!
வாஜ்பேயி பிரதமராக இருந்த போது (1998) ஆர்.எஸ்.எஸின் கல்வி நிபுணர் என்று கூறப்பட்ட சிட்டியங்லா என்பவரால் தயாரிக்கப்பட்ட கல்வித் திட்டம் அகில இந்திய கல்வி அமைச்சர்கள் மாநாட்டில் நிராகரிக்கப்பட்டதுண்டு.
1998இல் முடியாத ஒன்றை இப்பொழுது 2020 முதற் கொண்டு செயல்படுத்திட முனைப்பு காட்டுகின்றனர்.
மருத்துவக் கல்லூரிக்கே ‘நீட்' தேர்வு கூடாது என்று உரத்த முறையில் குரல் எழுப்பப்படும் நிலையில், இனிமேல் +2 முடித்து, சாதாரண பட்டப்படிப்புக்காக கலைக் கல்லூரியில் காலடி எடுத்து வைக்க வேண்டும் என்றாலும் தேசிய நுழைவுத் தேர்வாம்.
கல்வி, மற்றும் விவசாயத்தில் மத்திய பிஜேபி அரசு எப்பொழுது கைவைத்ததோ, அதுதான் இந்த ஆட்சியின் வீழ்ச்சிக்கான சவக்குழியை தனக்குத் தானே தோண்டிக் கொண்டு விட்டது என்று பொருளாகும்.
இது கல்லின்மேல் எழுத்தாகும். இதற்கெல்லாம் ஒரே தீர்வு கல்வி மீண்டும் மாநிலங்களின் பட்டியலுக்குக் கொண்டு வரப்படுவதே!
No comments:
Post a Comment