வேளாண் சட்டங்கள்: சமாதானத்துக்குள் சமாதானம் சாத்தியமா? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 23, 2021

வேளாண் சட்டங்கள்: சமாதானத்துக்குள் சமாதானம் சாத்தியமா?

சிறீராம் பஞ்சு

கடுமையான குளிர், பனி, மழைக்கு இடையேயும், அண்மையில் மத்திய அரசால் நிறைவேற்றப்பட்ட வேளாண் சட்டங்களை எதிர்த்து வட இந்திய விவசாயிகள் டில்லியில் தொடர்ந்து 50 நாட்களுக்கும் மேலாகப் போராடி வருகின்றனர் என்பதுடன், போராளிகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் கூடிக் கொண்டே செல்கிறது. பெரும்பாலும் அமைதியாகப் போராடிக் கொண்டிருக்கும் அவர்கள் தங்களது மரியாதையையும் கவுரவத்தையும் காத்தும் வருகின்றனர்.  எவ்வளவு காலத்துக்கு வேண்டுமோ அவ்வளவு காலத்துக்கு இந்தப் போராட்டத்திற்கு ஆதரவு தருவதற்கு அவர்களது சமூகத்தினர் தயாராக இருப்பதாகத் தெரிகிறது. இப்போராளிகளை தேசவிரோதிகள் என்று முத்திரை குத்தியோ, காலிஸ்தான் ஆதரவாளர்களால் இந்தப் போராட்டம் தூண்டிவிடப்பட்டதாகக் கூறியோ இந்தப் போராட் டத்தை பிசுபிசுத்துப் போகச் செய்யலாம் என்று அரசு நினைக்குமேயானால், அதற்கு பெரும்பாலான  பொதுமக்களின் ஆதரவு கிடைக்காது என்றே தோன் றுகிறது. இந்திய விவசாயத்துறையின் வாழ்வாதாரத் தைப் பெரிய அளவில் பாதிக்கும் சட்டங்களை மிக அவசரம் அவசரமாக நிறைவேற்ற முயன்றதன் மூலம் டில்லி ஆட்சியாளர்கள் ஒரு பெரிய தலை வலியை சம்பாதித்துக் கொண்டிருக்கின்றனர்.

அரசு பற்றி விவசாயிகள் கொண்டிருக்கும் நம்பிக்கையின்மை

அரசின் நோக்கங்கள் பற்றி விவசாயிகள்  நம்பிக்கை இன்மையை வளர்த்துக் கொண்டுள்ளனர் என்பது  ஒன்று மட்டும் தெளிவாகத் தெரிகிறது. இந்த சட்டங்கள்  கார்ப்பரேட் நிறுவனங்களின் தயவுக்கும் கருணைக்கும் தங்களைத் தள்ளிவிட்டுவிடும் என்று அவர்கள் கூறுகின்றனர். பல்வேறுபட்ட முக்கிய துறைகளிலும் ஆதிக்கம் செலுத்த இயன்ற உச்சக் கட்ட நிலைக்கு வளர்ச்சி அடைந்துள்ள கார்ப்பரேட் நிறுவனங்களுடன் ஆட்சியாளர்கள் கொண்டிருக் கும் நெருக்கத்தை வைத்துப் பார்க்கும்போது, இந்தக் குற்றச்சாட்டை எளிதாக மறுத்துவிட முடியாது. விவ சாயிகளின் கவனம் முக்கியமாக நெல், கோதுமை போன்ற உற்பத்திப் பொருள்களுக்கு குறைந்த அளவு நியாயமான விலை நிர்ணயிக்கப்பட வேண் டும் என்றும், அதற்காக ஒரு சட்டம் இயற்றப்பட வேண்டும் என்றும் விவசாயிகள் வலியுறுத்தி வரு கின்றனர். அத்துடன் வெளிப்படையான வர்த்தகம் நடைபெறுவதற்கு, ‘மண்டிநடைமுறை தொடர வேண்டும் என்பதையும் அவர்கள் வலியுறுத்தி வருகின்றனர். தனது பங்காக அரசு பல உறுதி மொழி களை அளித்த போதிலும், அவை சட்டங்களைக் கட்டுப்படுத்துபவையாக இருக்கவில்லை.  அதன் பொருள் என்னவென்றால், அனைத்தும் நல்லதா கவே நடக்கும் என்று கருதி அரசு கூறுவதை விவசாயிகள் நம்பவேண்டும் என்று அரசு கூறுவது, மத்திய அரசின் மீது நம்பிக்கை இல்லை என்ற பிரச்சி னைக்கே திரும்பத் திரும்ப  தாங்கள் தள்ளப்படுவதாக அவர்கள் கூறுவதுதான்.

தெளிவாகத் தெரியும் மற்றொரு செய்தி என்ன வென்றால், பிரதமரோ அல்லது வேறு ஒரு உயர் மட்டத் தலைவரோ விவசாயிகளின் பிரதிநிதிகளு டன் நடத்தப்பட்ட பேச்சு வார்த்தைகளில் பங் கெடுத்துக் கொள்ளவில்லை என்பதுதான். முடி வெடுக்கும் அதிகாரம் அற்ற இளைய அமைச்சர் கள்தான் இந்தப் பேச்சு வார்த்தைகளில் கலந்து கொண்டனர். நமக்கு உணவு அளித்து நம்மைப் பாதுகாப்பதற்காக நிலத்தில் பாடுபடும் விவசாயிகள் கூறுவதைக் கேட்பதற்கு அரசு தயாராக இருந் திருக்குமேயானால், இந்தப் பிரச்சினைக்கு ஒரு நியாயமான தீர்வைக் காண்பதற்கு அரசு கொண் டிருக்கும் அக்கறையை வெளிக் காட்டுவதாக இருந் திருக்கும். அவ்வாறு கேட்பது ஒன்றே, உங்களது மனதைத் திறந்து ஒரு மேலான கண்ணோட்டத்தைத் தரும். தங்களது கவலைகள் தீர்க்கப்பட வேண்டும் என்று போராடுபவர்களுக்கு அது ஆறுதல் தருவ துடன் நம்பிக்கையையும் தரும்.

நடுநிலைக் குழுவும் அதற்கு அளிக்கப்பட்டுள்ள பணிகளும்

போராட்டக்காரர்களை அப்புறப்படுத்தவும், வேளாண் சட்டங்களை எதிர்த்தும் உச்ச நீதி மன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இந்தப் போராட்டத்திற்கு ஒரு சுமுகமான முடிவு எட்டப்பட இயலாததொரு சூழலில், உச்சநீதி மன்றம் திடீரென்று ஒரு குழுவை அமைத்துள்ளதுடன், இந்த சட்டங்களை நடைமுறைப் படுத்துவதற்கு.  ஓர் இடைக்காலத் தடையை பிறப்பித்துவிட்டு,  போராட் டக்காரர்கள்  போராட்ட களத்தில் தொடர்ந்து இருக்கத் தேவையில்லை என்றும் தெரிவித்துள்ளது.  பல காரணங்களுக்காக இது பிரச்சினை மிகுந்த ஒன்றாகும். அரசமைப்பு சட்டத்திற்கு எதிரானது என்று கூறி, நியாயமான சட்ட அடிப்படையில் ஒரு சட்டத்திற்கு இடைக்காலத் தடை விதிப்பது என்பது வேறு.  குழுவின் பணிகளை எளிதானதாக்க உதவுவ தற்கும், போராட்டக்காரர்களை கலைத்து வெளி யேற்றுவதற்காகவும் இந்த சட்டங்களை செயல்படக் கூடாது என்று நிறுத்தி வைப்பது என்பது வேறு. மற்றொரு காரணம்,  சட்ட நீதி மன்றத்துக்குப் பரிந்துரை செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ள நிபுணர் குழுவிற்கு அளிக்கப்பட்டுள்ள ஆணையே ஆகும். சட்டமன்றத் துறையும், நிருவாகத் துறையும் செயல்படவேண்டிய களத்தின் காட்சியில், நீதித் துறை எவ்வாறு வந்தது என்பதுதான் அது? ஒரு நீதிமன்றம் தானாகவே விதிமீறல்கள் பற்றிய பரிசீலனையை மேற்கொண்டு அந்த சட்டங்களை ஒட்டு மொத்தமாக செல்லாதவை என்று அறிவிப்பது என்பது வேறொரு விஷயமாகும்.

இந்தக் குழுவிற்கு நடுநிலைக் குழு என்ற பெயர் அளிக்கப்படவுமில்லை; நடுநிலை செய்யும்படி அது கேட்டுக் கொள்ளப்படவும் இல்லை. விவசாயிகளுக்கும் அரசுக்கும் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தைகளுக்கு உதவும் ஒரு பணி இக்குழுவிற்கு உச்சநீதிமன்றத்தால் அளிக்கப்பட்டு உள்ளது என்று பொதுமக்களால் பேசப்பட்டு வரு கிறது. முறைப்படியானதொரு நடுநிலை அணுகு முறையே மாறுபட்டதாக இருக்க வேண்டிய ஒன்றாகும். முதலாவதாக, இந்தப் பிரச்சினையுடன் தொடர்புள்ள அனைவரும்  நடுநிலை செய்யப் படுவதை ஏற்றுக் கொள்ள வேண்டும். நடுநிலையின் பலமே, அது தானாக முன்வந்து செய்யப் படுவது தான். இதில் முக்கியமானது,  விவசாய சங்கங்கள் குழு முன் ஆஜராகாமல் புறக்கணித்து விட்டனர். என்பதுதான். ஒரு மேஜையின் மேல் முடிவு செய்யப்படுவதை விட, அரசியல் போராட்ட களத்தின் மூலம் எட்டப்படும் முடிவே மேலானது என்பதால், தங்களுக்கு பொதுமக்களின் ஆதரவு அதிகரித்து வருவதாக விவசாயிகள்  கருதுவதும் ஒரு காரணம்.  நடுநிலை குழு நிராகரிக்கப்பட்டதற்கான மற்றொரு காரணமாக விளங்கும், நடுநிலையாளர்கள்; நியாயமாகவும், ஒரு தலை சார்பின்றியும் நடந்து கொள்வார்கள் என்று அனைத்து தரப்பினரும் நம்பி எதிர்பார்ப்பது இரண்டாவது அடிப்படைத் தேவை யாகும். வேளாண் சட்டங்களை பலமாக ஆதரிக்கும் நிலையை மேற்கொண்டவளர்களை நடுநிலையா ளர்களாக நியமித்ததே, இந்த நடைமுறை தொடங் கவே கூடாது என்று கேட்பது போல இருக்கிறது.

உச்சநீதிமன்றம் மேலும் செயல்படுவதற்கான வழி

இது ஒரு சிக்கல் மிகுந்த சூழ்நிலை என்பதால், அரசியல் கண்ணிவெடிக் களத்தில் கால் பதித்து விடாமல் இருப்பதற்கு உச்சநீதிமன்றம் எச்சரிக் கையுடன் செயல்படவேண்டும். இந்தப் பேச்சு வார்த்தைகள் எந்த வித முன்னேற்றத்தையும் ஏற்படுத்தவில்லை என்று தோன்றுவதால், அவசர மாக எதாவது செய்யப் படவேண்டும் தலைமை நீதிபதி திரும்பத் திரும்பக் கூறி வருகிறார். போராட் டக்காரர்களை அணுகி, அவர்களுடனான அமைதி என்னும் பாலத்தைக் கட்டி, பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கான விருப்பத்தையும் ஆற்றலையும் இன்றைய அரசியல்வாதிகள் இழந்துவிட்டது போலவே தோன்றுகிறது. ஆனால், இந்த விஷயத்தில் குறுக்கிடுவது   தங்களுக்கு பொதுமக்களால் அளிக் கப்பட்டிருக்கும் மிகப் பெரிய கடமை,   என்று நீதி மன்றம் கருதினால், இன்றியமையாத சில விஷயங் களை அது கடைப்பிடிக்க வேண்டும்.  முதலாவதாக ஒரு தலை சார்பற்றவர்களாகவும், மிகுந்த துணிவு கொண்டவர்களாகவும், அனைவரது மரியாதை யையும் பெற்றவர்களாகவும், நடுநிலைப் பற்றி சந்தேகப்படுபவர்களை நடுநிலைக்கு ஒரு முறை முயற்சி செய்து பார்ப்பது என்பதை மனநிறைவுடன் ஏற்றுக்கொள்ளச் செய்ய இயன்றவர்களாகவும் உறுப் பினர்கள் உள்ள ஒரு குழுவை உச்சநீதிமன்றம் நிய மிக்க வேண்டும். இந்த நோக்கத்தை நிறைவேற்று வதற்கு தகுதி படைத்த மேனாள் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகள் இன்றும் சிலர் இருக்கவே செய்கின்றனர். இரண்டாவதாக, அரசின் மிக உயர்ந்த நிலை அதிகாரம் பெற்றவர்கள் இந்தக் குழுவை சந்தித்து அதன் நடவடிக்கைகளில் பங்கெடுத்துக் கொள்வார்கள் என்பதற்கான உறுதி மொழியை அரசிடம் இருந்து பெறவேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்ட அனைவரின் சம்மதமும் பெறப்பட வேண்டும்.

கலந்துரையாடலும் விவாதமும் ஒரு முறை துவங்கி நடைபெறத் தொடங்கிவிட்டால், தீர்வுகள் காணப்படுவது இயலக் கூடியதேயாகும். முக்கிய மான விஷயங்கள் மீது கவனம் செலுத்தப்பட்டு, கவலைகள் தெரிவிக்கப்பட்டு விட்டால், அவர்களது நியாயமான கவலைகளை முடிந்த அளவுக்கு மிகமிக அதிக அளவில் தீர்ப்பதற்கான அணுகுமுறைகள் தாங்களாகவே திறந்து கொள்ளும். இப்போது, சட்டங் களைத் திரும்பப் பெறுவது மற்றும் திருத்தங்கள் கொண்டு வருவது என்ற கோரிக்கைகள் வலியுறுத் தப்பட்டு வருகின்றன. இந்தத்தடையை உச்சநீதிமன்ற ஆணை பின்னுக்குத் தள்ளிவிடும். அனைத்து அம்சங்களும்  மேஜை மீது வைக்கப்பட்ட பின், ஒரு சமரசத் தீர்வை எட்டுவதும், பழைய சட்டங்களைத் திரும்பப் பெற்றுக் கொண்டு புதிய சட்டங்களை இயற்றுவதும் இயலக்கூடும். இது ஒன்றே சட்டத் தீர்வுக்கான கருவி என்று கருதப்படுகிறது.

ஏற்றுக் கொள்ளப்பட்ட கொள்கைகள் மற்றும் வழிகளில் நடுநிலை மேற்கொள்ளப்படுமானால்,  இவை அனைத்துமே நடக்க இயன்றவையாகும். ஆனால் இப்போதைய நிலை அவ்வாறு இருக்க வில்லை. இந்த விஷயத்தில் தொடர் நடவடிக்கை களை மேற்கொள்வதில் உச்சநீதிமன்றம் மிகுந்த கவனத்துடன் இருப்பது மிகவும் இன்றியமையாதது ஆகும். அதன் மீது பொதுமக்கள் வைத்திருக்கும் நம்பிக்கை மேலும் குறைந்து போக அனுமதிக்கக் கூடாது.

நன்றி: ‘தி இந்து’, 15-01-2021

தமிழில்: ..பாலகிருட்டிணன்

No comments:

Post a Comment