திருமண பதிவு சட்டத்தில் திருத்தம் - தமிழக அரசு அறிவிப்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 2, 2021

திருமண பதிவு சட்டத்தில் திருத்தம் - தமிழக அரசு அறிவிப்பு

சென்னை,ஜன.2 திருமண பதிவு சட்டத்தில் செய்யப்பட்டுள்ள திருத்தம் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

தமிழ்நாடு திருமணங்கள் பதிவு சட்டப்படி, மாநிலத்தில் திருமணம் நடைபெறும் இடத்தின் எல்லைக்குட்பட்ட சார்பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணம் பதிவு செய்யமுடியும் என்ற நிலை இருந்தது. இதை எளிமைப் படுத்தும் விதமாக 2020-21-ஆம் ஆண்டு பதிவுத்துறை மானிய கோரிக்கையில், மணமகன் மற்றும் மணமகள் இருப்பிடம் அமைந்துள்ள சார்பதிவாளர் அலுவலகங்களிலும் திருமணத்தை பதிவு செய்யும் புதிய வசதியை ஏற்படுத்தும் விதமாக திருமணங்கள் பதிவுச் சட்டத்தில் திருத்தம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது.

இந்த அறிவிப்பை செயல்படுத்தும் விதமாக தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டத்தில் கீழ்க்கண்ட சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-

தமிழ்நாடு திருமணங்கள் பதிவுச் சட்டத்தின்படி அனைத்து தரப்பினருக்கான திருமணங்களும் கட்டாய பதிவு செய்யப்பட வேண்டும் என்பதை அனைவரும் பின்பற்றும் விதமாக, திருமணம் நடைபெற்ற இடத்திலுள்ள சார்பதிவகம் மற்றும் மணமக்கள் இருவரின் நிரந்தர வசிப்பிடம் அமைந்துள்ள சார்பதிவகம் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றில் திருமணப்பதிவை மேற்கொள்ளலாம். இந்த வசதியை பொதுமக்கள் பயன்படுத்தி கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

30 ஆண்டுகால போராட்டத்துக்கு முடிவுகருக்கலைப்பு செய்வதற்கு அர்ஜென்டினா அனுமதி

பியூனஸ் ஏர்ஸ்,ஜன.2, அர்ஜென்டினாவில் கருக் கலைப்பை சட்டப்பூர்வமாக்க கோரி பெண்கள் உரிமை களுக்கான அமைப்பினர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக போராடி வந்தனர். ஆனால், இதற்கு அனுமதி அளிக்கக் கூடாது என பெரும்பான்மையான கிறித்துவ மத அடிப்படைவாதிகள் (கத்தோலிக்கர்கள்) எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்நாட்டில், கடந்த 1983 முதல் 3,000க்கும் மேற்பட்ட பெண்கள் ரகசிய கருக்கலைப்பின் போது இறந்துள்ளனர்.

இந்நிலையில், பெண்கள் அமைப்பினர்களின் தொடர் போராட்டம், கத்தோலிக்க மதத் தலைவரான போப் பிரான்சிஸ் ஆதரவு தெரிவித்ததைத் தொடர்ந்து, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் 31.12.2020 அன்று கருக்கலைப்புக்கு அனுமதி அளிக்கும்  சட்டம் நிறைவேற்றப்பட்டது.

இந்த சட்டத்தின்படி, 14 வாரம் வரையிலான கருக் கலைப்பு, பாலியல் வன்முறை, பெண்ணின் உடல்நிலைக்கு ஆபத்து உள்ளிட்ட சூழல்களில் கருக்கலைப்பு செய்யலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

 

சபரிமலையில் தமிழக பக்தர்களிடம் பல ஆயிரம் மோசடி

திருவனந்தபுரம்,ஜன.2, சபரிமலைக்கு சென்ற பக்தர்களிடம் போலியாக கரோனா பரிசோதனைக்கூடம் நடத்தி,  பல ஆயிரம் மோசடி செய்தவர்களை காவல்துறை கைது செய்துள்ளது.

கடந்த 30 ஆம் தேதி அன்று சபரிமலை அய்யப்பன் கோயில் நடை  திறக்கப்பட்டது.அங்கு செல்லும் பக்தர்கள் 31ஆம் தேதி முதல் 48 மணி நேரத்துக்குள் எடுக்கப்பட்ட ஆர்டிபிசிஆர், ஆர்டி லேம்ப், எக்ஸ்பிரஸ் நாட் இதில் ஏதாவது ஒன்றில் கரோனா பரிசோதனை செய்ததற்கான சான்றிதழ் உள்ளவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.   

நேற்று முன் தினம் நிலக்கல்லில் கோட்டயத்தை சேர்ந்த தனியார் பரிசோதனை கூடம் அமைக்கப்பட்டிருந்தது. பக்தர்கள் அங்கு சென்று பரிசோதனை  செய்தனர். அதற்கு கட்டணமாக ரூ.2,500 வசூலித்துள்ளனர்.

பின்னர்,  அவர்கள் வழங்கிய சான்றிதழ்களுடன் பக்தர்கள் தரிசனத்துக்கு சென்றனர். அந்த சான்றிதழ்களை போலி என  தெரிவித்து, தரிசனத்துக்கு அனுமதிக்க அதிகாரிகள் மறுத்து விட்டனர். அதிர்ச்சி அடைந்த பக்தர்கள், காவல்துறையில் புகார் தெரிவித்தனர்.  காவல்துறையினரும், சுகாதாரத் துறை அதிகாரிகளும் பரிசோதனைக்கூடத்துக்கு சென்று ஆய்வு செய்து, போலியாக ஆய்வுக்கூடம் நடத்தியவர்கள்மீது நடவடிக்கை மேற்கொண்டனர். ஆய்வகத்தில் பணிபுரிந்த சரண் (34), சச்சின் விவேக் (25), அனந்து  கிருஷ்ணன் (27) ஆகியோரை காவல்துறையினர் கைது செய்தனர்.

 

No comments:

Post a Comment