தினமலரே! குறும்பார்வையல்ல - குற்றப் பார்வை! - 1 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 31, 2021

தினமலரே! குறும்பார்வையல்ல - குற்றப் பார்வை! - 1

* மின்சாரம்

நேற்றைய 'தினமலரில்' (30.1.2021) பக்கம் 17இல் ஒரு கட்டுரை.

"நாத்திகம் - பகுத்தறிவு - ஆன்மிகம் - ஒரு குறும்பார்வை" என்பது தலைப்பு.

வழக்கம் போல  நாத்திகர்களை, பகுத்தறி வாளர்களை சாடுவது - தந்தை பெரியார்மீது வசை பாடுவது - ஆரியத்திற்கே உரித்தான அபாண்டம் பேசுவது - இவற்றின் வடிவமாகவே அந்தக் கட்டுரை அமைவது என்பது எதிர் பார்க்கப்பட வேண்டிய ஒன்றே.

(1) "நாத்திகம் என்றால் கடவுள் மறுப்பு - பாவ புண்ணியம் மறுப்பு - மோட்சம் மறுப்பு - மொத்தத் தில் எதுவும் இல்லை என்று சொல்லுவது என்று பீடிகை - கண்ணுக்குத் தெரியும் காட்சியை மட்டுமே நம்புபவர்கள். இந்தக் கடவுள் மறுப்பு என்பதும் ஏதோ .வெ.ரா.வின் கண்டுபிடிப்பு என  நினைக்கக் கூடாது. வேத காலம் தொட்டு இந்த இன்மைக் கொள்கை இருந்து வருகிறது."

(2) "விலங்குகளில் இருந்தும், பறவைகளில் இருந்தும் மாறுபடும் மனிதர்கள் எதைக் கொண்டு வேறுபடுகின்றனர்? அய்ந்தறிவு விலங்கில் இருந்து மனிதனை எது பிரிக்கிறது? ஆறாவது அறிவு எனச் சொல்லப்படும் பகுத்துப் பார்க்கும் அறிவு பிரிக்கிறது. அது அன்பை வளர்க்கிறது. அருளைத் தருகிறது.

இந்தப் பகுத்தறிவு தான் ஏற்கெனவே பேசப்பட்ட நாத்திகக் கருத்தை அவர்களுக்கு உண்டு பண்ணு கிறது. காணுவது மட்டும்தான் உண்மை. மற்ற தெல்லாம் உண்மையல்ல எனச் சொல்ல வைக்கிறது.

இவ்வாறு சொல்லும் அறிவைத்தான், நம் பெரியோர்கள், ஞானிகள் போலி பகுத்தறிவு என் கின்றனர்" என்று கூறி மணிமேகலை முதலியவற்றை ஆதாரம் காட்டுகிறது 'தினமலர்'.

முன்னுக்குப் பின் முரண்பாடு என்னும் முகாரியைப் பாடும் தினமலரைப் படித்தால் வயிறு குலுங்க சிரிக்க வைக்கிறது.

விலங்குகளிலிருந்தும், பறவைகளில் இருந்தும் பிரிப்பது பகுத்தறிவு என்று ஒப்புக் கொண்டு விட்டு, அந்தப் பகுத்தறிவின் அடிப்படையில் ஆய்வு செய்து கடவுள் என்ற ஒன்று இல்லை என்று சொன்னால் அது போலி பகுத்தறிவாம்.

கண்ணுக்குத் தெரியும் காட்சியை மட்டும் நம்புபவர்கள் நாத்திகர்கள் - பகுத்தறிவுவாதிகள் என்று எழுதுவதே தவறானது.

கண்ணுக்கு மட்டுமல்ல- அய்ம்புலன்களுக்கும் புலப்படாதவர் கடவுள் என்று சொல்லி விட்ட பிறகு - கடவுள் எங்கே இருந்து குதித்தது?

அய்ம்புலன்களுக்குப் புலப்படாதது மட்டுமல்ல, பகுத்தறிவோடு  கருத்தைச் செலுத்தும் நிலையில்  கடவுள் என்ற ஒன்று இருக்க முடியாது என்பது தெளிவு.

கடவுள் உண்டு - அவர் இருக்கிறார் என்று சொல்பவர்களிடத்திலும் ஏகப்பட்ட முரண்பாடுகள் உண்டே!

கடவுள் உண்டு என்று ஒப்புக் கொண்டு ஒரு மதக்காரன் இன்னொரு மதக்காரனின் கடவுளை மறுப்பது எப்படி? மற்றொரு மதக்காரனின் வழி பாட்டுத் தலத்தை இடித்து, உடைத்து நொறுக்குவது எப்படி?

"அயோத்தியில்  கட்டடத்தை இடிப்பது கிரிமினல் நடவடிக்கை எனக் கூற முடியாது. அதற்காக மத்திய அமைச்சர்கள் அத்வானி, முரளி மனோகர் ஜோஷி, உமாபாரதி ஆகியோர் பதவி விலகத் தேவையில்லை!" ('தினமணி' 27.11.2000 பக்கம் 1) என்று சொன்னவர் சாதாரணமானவரா? ஜெகத் குரு என்று தூக்கித் தூக்கிப் பேசுகிறார்களே - சாட்சாத் அந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி தானே!

இன்னொரு மதக்காரர்களது வழிபாட்டுத்தலம் - வெறும் கட்டடமாம் - இதுதான் இவர்களின் ஆத்திகம் - ஆன்மிகம் காட்டும் வழிமுறை  என 'தினமலர்' வகையறாக்களே ஒப்புக் கொண்டதாகத் தானே பொருள். அதைவிட ஒரு படி தாண்டி இடித்தவர்கள் குற்றவாளிகள் அல்லவாம்! இதுதான் ஆத்திகம் கடைப்பிடிக்கும் ஒழுக்கமா?

கடவுள் நம்பிக்கை என்ற நிலையில் பார்த்தாலும் கூட ஒரே மதத்தில் பல கடவுள்கள் - பல பிரிவுகள் - அவர்களுக்குள் தெருச் சண்டை - இவைதான் கடவுள் பக்தி ஊட்டிய நெறியா - வெறியா? இந்து மதத்தில் - அதுவும் ஒரே வைணவத்தில் வடகலை, தென் கலை சண்டை தெருப் பொறுக்கிகள் போல வீதிகளில் கட்டிப் புரளுவதுதான். கடவுள்பக்தி போதிக்கும் கண்ணியமா?

"நம் நாட்டில் மற்றவர்கள் சண்டையைக் காட்டிலும் பக்தர்கள் சண்டையே அதிகம், என் தெய்வம் பெரிதா?, உன் தெய்வம் பெரிதா என்ற சண்டைகள்தான் அதிகம்"

இப்படி சொன்னவர் நாத்திகர் அல்லர் - 'வைணவ  சிரோன்மணியான' சாட்சாத் சக்ரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்தான் (ராஜாஜி) சென்னை தமிழிசை சங்கக் கட்டடத் திறப்பு விழாவில் - (15.4.1953).

கடவுள் மறுப்பாளர்களை நாத்திகவாதிகள் என்று முத்திரை குத்தும் 'தினமலருக்கு' ஒரு கேள்வி. இந்து மதத்தில் நாத்திகத்துக்கு இடம் உண்டா, இல்லையா? இந்து மதத் தத்துவப்படி கடவுள் மறுப்பாளர் நாத்திகன் அல்லவே!

அப்படி என்றால் யார் நாத்திகர், நாம் சொன்னால் நாத்திகவாதிகள் என்று முத்திரை குத்தி ஒதுக்கித் தள்ளவும் கூடும்.

அவர்களால் ஒதுக்கவே முடியாத, கனவிலும்கூட மறுதலிக் கவே முடியாத ஜெகத் குரு ஸ்ரீலஸ்ரீ சங்கராச்சாரியார் - அதுவும் 'மகாபெரியவாள்' சந்திரசேகரேந்திர சரஸ்வதி 'திருக்கரம்' நீட்டி எழுதினால்.. 'அட்டி யில்லை - அட்டியில்லை அடியேன் சரணம் - சரணம்' என்று சாஷ்டாங்கமாக விழுந்து ஏற் பார்களே!

"நாஸ்திகம் என்றால் ஸ்வாமியில்லை என்று சொல்கிற நிரீச்வர வாதம் என்று தானே இப்போது நாம் நினைத்துக் கொண்டிருக்கிறோம். இது தப்பு. ஸ்வாமி இல்லை என்று சொல்லிக் கொண்டே கூட ஆஸ்திகர்களாக இருக்க முடியும்"

"அப்படிப்பட்ட பல பேர் இருந்திருக்கிறார்கள். இது என்ன வேடிக்கையாக இருக்கிறது? அப்படியா னால் ஆஸ்திகம் என்றால் என்ன? ஆஸ்திகம் என்றால் வேதத்தில் நம்பிக்கை இருப்பது என்றுதான் அர்த்தம்"

"வைதிக வழக்கை ஆட்சேபிப்பதுதான் நாஸ்திகம் என்பதே ஞான சம்பந்தரின் கொள்கை யாகவும் இருந்திருக்கிறது, ஈசுவர பக்தி இல்லாம லிருப்பதுங்கூட அல்ல" (தெய்வத்தின் குரல் - இரண்டாம் தொகுதி, பக்கம் 407- 408).

இப்படி சங்கராச்சாரியார் கூறுவதற்கு ஆழமான பொருள் உண்டு. வேதம் தானே வருணா சிரமத்தின் ஊற்று; வேதத்தின்படி பிறப்பின் அடிப்படையில் பிராமணன்தானே மேலான தெய்வம். அவனுக்கு அடிபணிந்து கிடக்கத்தானே மற்ற வருணத்தார்கள் குறிப்பாக சூத்திரர்கள் படைக்கப்பட்டுள்ளனர்.

"தெய்வாதீனம் ஜகத் சர்வம்

மந்த்ராதீனம் துதெய்வதம்

தன்மந்த்ரம் - பிரம்மணாதீனம்

தஸ்மத் பிராமணா - பிரபு ஜெயத்

(ரிக் வேதம் 62ஆம் பிரிவு 10ஆம் சுலோகம்)

"இந்த உலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது. கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர். மந்தி ரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை. எனவே பிராமணனே நமது தெய்வம்" என்று வேதம்தானே கூறுகிறது.

புரிகிறதா - பூதேவர்கள் புத்தி எப்படி மேய்கிறது என்ற உண்மை? கடவுளுக்கு மேல் வேதம் பெரிது என்று கூறும் நோக்கம் விளங்குகிறதா, இல்லையா?

நாத்திகம் என்பது கடவுள் மறுப்பு அல்ல - வேத மறுப்பே என்று அடித்துக் கூறும் அய்யன்மார்களின் அந்தரங்கம் பேசுவதன் சூட்சமம் புரிகிறதா?

"எந்த ஆட்சியாக இருந்தாலும் பிராமணர் சொற்படிதான் நடந்திருக்கிறது என்பதைப் பழைய நூல்கள் கூறுகின்றன. இராமர் ஆட்சி செய்தாலும் அவர் வசிஷ்டர் சொல்படிதான் நடந்தார். மதுரை நாயக்கர்கள் ஆண்ட போதும் அந்தணர்தான் குருவாக இருந்தார். தஞ்சையை மராட்டிய மன்னர்கள் ஆண்டபோது கோவிந்த தீட்சதர் என்பவர்தான் குரு! அவர் வம்சத்தில் வந்தவர்தான் மறைந்த காஞ்சி பெரியவாள். ஆண்டவன்கூட அப்புறம்தான் அந்தணன் (பிராமணன்) தான் முதலில்" ('நக்கீரன்' - 15.11.2002).

கடவுளுக்கு மேலே பிராமணர்களாம்; அதனால் தான் கடவுளை மறுத்தாலும் மறுத்து விட்டுப் போகட்டும் - வேதங்களை மட்டும் மறுக்கக் கூடாது - ஆம் மறுக்கவே கூடாது அப்படி மறுப்பவர்கள்தான் நாஸ்திகர்கள்.

அதனால்தான் திருப்பதி ஏழுமலையானுக்கே மூன்று கிலோ தங்கத்தில் பூணூல் அணிவித்தார் காஞ்சி சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதி ('மாலைமலர்' 16.3.2002).

திருப்பதி ஏழுமலையானோடு நிற்கவில்லை. திருப்பரங்குன்றம் சுப்பிரமணியனுக்கும்ரூ.15 லட்சம் செலவில் தங்கப் பூணூல் சூட்டியவர் சாட்சாத் இந்த ஜெயேந்திரரே!

('தினமணி' 27.2.2014 பக்கம்  -  2

பூணூல் 17 வைரக் கற்களுடன்)

கடவுள்களையும் தங்கள் பூணூல் கூட்டணிக்குள் கொண்டு வந்துவிட்டார்களே! இந்து மதக் கடவுள்கள் கற்பிக்கப்பட்டது யாருக்காக என்று இப் பொழுதாவது தெரிகிறதா? 'தினமலர்' திரிநூல் ஏடு ஆத்திகத்தைத் தூக்கி நாத்திகத்தைத் தாக்குவதன் நோக்கம் புரிகிறதா?

(தொடரும்)

No comments:

Post a Comment