செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 2, 2021

செய்தியும், சிந்தனையும்....!

ஆளுங்கட்சி எதற்கு?

நூறு நாள் வேலைத் திட்டத்தில் மூன்று மாத நிலுவை ஊதியத்தை உடனடியாக வழங்கவேண்டும்: - எதிர்க்கட்சித் தலைவர் மு..ஸ்டாலின்

கரோனா காலத்தில் வேலை வாய்ப்பே அரிது - இந்த நிலையில் செய்த வேலைக்கு ஊதியம் தருவதில்கூட நிலுவையா? இது என்ன அநியாயம்? ஒவ்வொன்றுக்கும் எதிர்க்கட்சித் தலைவர்தான் குரல் கொடுக்கவேண்டுமா?

கொள்ளைக்காரனுக்கு கோவிலில் விழாவா?

சீரங்கம் ரங்கநாதர் கோவிலில் திருமங்கை மன்னன் வேடுபதி நிகழ்ச்சி நடைபெற்றது.

நாகப்பட்டினத்தில் இருந்த அய்ம்பொன்னாலான புத்தர் சிலையைக் களவாடி சீரங்கம் கோவில் மதிற்சுவரை எழுப்பினான்  திருமங்கை மன்னன் என்று தஞ்சைவாணன் கோவை கூறுகிறது. ஆக ஒரு கொள்ளைக்காரனுக்கு ஒருகோவில்  விழாவாம்! பக்தி வளர்க்கும் ஒழுக்கம் இதுதான்!

இன்னும் காவல்துறை அதிகாரியாகத்தான்...

புதுவை மாநில ஆளுநரை எதிர்த்து நடைபெறும் போராட்டத்தில், மாநில முதலமைச்சர் நாராயணசாமி பங்கேற்பு.

ஆளுநராக அல்ல - இன்னும் திகார் ஜெயில் காவல் துறை அதிகாரியாகத்தான் செயல்படுகிறார் ஆளுநர். எல்லாம் தெரிந்தும் பி.ஜே.பி. அரசுபலே, பலே' என்று வேடிக்கை பார்க்கிறது. ஏன், இரசிக்கவும் செய்கிறது.

சூரியன் உதித்துவிட்டான்!

நாட்டு மக்களுக்கு ஆங்கிலப் புத்தாண்டுக்கான பிரதமர் மோடி யாத்த கவிதை, சூரியன் உதித்துவிட்டான் என்று முடிந்துள்ளது.

பிரதமருக்கே தெரிந்துவிட்டது - தமிழ்நாட்டு அரசியலில், தேர்தலில் சூரியன் உதிக்கப் போகிறது என்று.

தேவை எலுமிச்சை!

புத்தாண்டையொட்டி திருவொற்றியூர் கோவில் ஒன்றில் 2 லட்சம் எலுமிச்சைப் பழங்களால் அம்மனுக்கு அலங்காரம்!

பக்தி முற்றினால்தலையில் தேய்க்க எலுமிச்சை பழம் தேவையே!

சின்னப்பம்பட்டி நடராசனுக்கு வாழ்த்துகள்!

ஆஸ்திரேலியாவில் நடைபெறும் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியில் சின்னப்பம்பட்டி நடராசன் விளையாடுவார்!

வெற்றியைக் குவித்து நிரந்தரமாக இந்திய அணியில் இடம்பெற வாழ்த்துகள்!

விழா வெறியாக விடலாமா?

புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் ஆங்காங்கே கொலை - கலாட்டா இத்தியாதி... இத்தியாதி...

விழா - வெறியானால் விபரீதம்தான்!

வேறு எடுத்துக்காட்டு தேவையோ?

சில தொழிலதிபர்களுக்கு ரூ.2.37 லட்சம் கோடி அளவிலான கடன்களை பிரதமர் மோடி கடந்த ஆண்டு தள்ளுபடி செய்தார். இந்தக் கரோனா காலகட்டத்தில் 11 கோடி குடும்பங்களுக்குத் தலா ரூ.20 ஆயிரம் நிதி உதவி செய்திருக்கலாம்: - இராகுல் காந்தி எம்.பி.,

நியாயமான கருத்துதானே! இன்றைய மத்திய பி.ஜே.பி. அரசு என்பது காரப்பரேட்டுகளுக்கான அரசு என்பதற்கு வேறு எடுத்துக்காட்டும் தேவையோ!

வளர்ச்சியும் - தேய்வும்!

முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு 73% அதிகரிப்பு.

பி.ஜே.பி. ஆட்சியில் கார்ப்பரேட்டுகள் வளர்கிறார்கள் - வெகுமக்கள் தேய்கிறார்கள்.

பக்தி பிசினஸ்

ஆங்கிலப் புத்தாண்டையொட்டி கோவில்களில் இரவு முழுவதும் சிறப்பு வழிபாடு.

இந்துக் கோவில்கள் நடை சாத்தப்படுவது- மீண்டும் திறப்பது என்பதற்கான ஆகம விதிகள் உண்டு. ஆனால், ஆங்கிலப் புத்தாண்டு நாளில் மட்டும் இரவு முழுவதும் கோவில்கள் திறக்கப்படுவது எப்படி? மறைந்த சங்கராச்சாரியார் ஜெயேந்திரர் கூட சொல்லிப் பார்த்தாரே - யார் காதில் விழுந்தது? இரவு முழுவதும் சிறப்பு வழிபாடு என்பது தட்டில் விழும் பணத்துக்காகத்தானே! பக்தி பிசினஸ் என்பது விளங்கவில்லையா?

No comments:

Post a Comment