உருவ பொம்மைகளை எரித்து இந்து அமைப்பினர் வெறியாட்டம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 24, 2021

உருவ பொம்மைகளை எரித்து இந்து அமைப்பினர் வெறியாட்டம்!

 அய்தராபாத், ஜன.24 ‘‘அயோத்தியில் ராமர் கோவில் கட்ட நிதி கொடுக்காதீர்'' என்று சொன்ன தெலங்கானா சட்டமன்ற உறுப்பினர் மற்றும் முதலமைச்சர் உருவ பொம்மைகளை எரித்து இந்து அமைப்பினர் வெறியாட்டம் போட்டுள்ளனர்.

தெலங்கானா ராஷ்ட்ர சமிதி சட்டமன்ற உறுப்பினர் வித்யாசாகர் ராவ் என்பவர், அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு எதிராக கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு தெலங்கானா மாநில இந்து அமைப்புகள் எதிர்ப்பை தெரிவித்துள்ளன.

அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு, நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது. இதனை விமர்சித்து வீடியோவில் அறிக்கை வெளியிட்டுள்ள வித்யாசாகர் ராவ்அயோத்தியில் மட்டும் ராமர் கோயில் கட்டினால் போதுமா? நமது ஊர்களில் கட்ட வேண்டாமா? எனவே அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு நிதி கேட்டு வந்தால், யாரும் நன்கொடை கொடுக்க வேண்டாம், நமது ஊரிலேயே ராமர் கோயில் கட்டுவோம்என குறிப்பிட்டுள்ளார்.

இதனால் ஆத்திரம் அடைந்த இந்து அமைப்பினர் அய்தராபாத்தில், முதலமைச்சர் கே.சந்திரசேகர ராவ் மற்றும் வித்யாசாகர் ராவின் உருவ பொம்மைகளை எரித்து வெறியாட்டம் நடத்தியுள்ளனர்.

இதுதான் மதச்சார்பற்ற அரசா?

ராமர் கோவில் கட்ட அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க வேண்டுமாம்!

உத்தரப்பிரதேச அரசு உத்தரவு

லக்னோ, ஜன. 24  ராமர் கோவில் கட்ட அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று உத்தரப் பிரதேச அரசு உத்தரவிட்டுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமஜென்ம பூமி வழக்கில் ராமர் கோவில் கட்ட அனுமதி அளிக்கப் பட்டது. அதற்கான அடிக்கல்லும் நாட்டப்பட்டு கோவில் கட்டுமான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.

நாடு முழுவதும் பல பகுதிகளில் உள்ள இந்து அமைப்பு கள் தங்கத்திலான செங்கற்கள், கட்டுமான நிதி என ராம ஜென்ம அறக்கட்டளைக்கு நிதி அளித்து வருகின்றனர்.

இந்நிலையில் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோவிலுக்கு அரசு ஊழியர்கள் ஒருநாள் ஊதியத்தை வழங்க வேண்டும் என்று உத்தரப்பிரதேச அரசு உத்தரவிட்டு உள்ளது. இதுகுறித்த அறிவிப்பை அம்மாநில முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறியிருப்பதாவது:

ராமர் கோவில் கட்டுமானத்தில் உத்தரப்பிரதேச மாநில அரசு ஊழியர்கள் ஒவ்வொருவரின் பங்கும் இருக்க வேண்டும். எனவே அரசு ஊழியர்கள் தங்கள் ஒருநாள் ஊதியத்தை ராமர் கோவில் பணிகளுக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இது மதச்சார்பற்ற நாடா - கடும் புலி வாழும் காடா?

No comments:

Post a Comment