சமத்துவபுரம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 30, 2021

சமத்துவபுரம்

கிராமமா அல்லது நகரமா? ஒரு கிராமத்தின் அமைப்பும் நகரத்தின் நளினமும் உண்டு. அது கிராமமா நகரமா முடிவில் பார்ப்போம்.

நடுவே கோயில், கோயிலைச் சுற்றி உள்மாடத் தெரு, கோயிலுக்கு நேரே  சன்னதித் தெரு.  இரு தெருக்களின் கொல்லைப்புறத்தில் இடை தொடை மக்கள், இடை தொடைகளின் கொல்லைப்புறத்தில் நான்காம் நிறம், இது தான் ஊரும் அழகும், ராமானுஜம் வந்தான். குளம், குட்டை, மேடு, பள்ளம் எல்லாம் நிலந்தான் என்றான். உள்மாடமும் சன்னதியும் ஒத்துக்கொள்வ தாக இல்லை. இறுதியில் ஒரு நிபந்தனை யின்கீழ் வாய்மொழி ஒப்பந்தம் உருவானது. உள் மாடத்திற்கும் சன்னதிக்கும் உரித்தான குறுக்கு நூல் கொல்லைப்புற வகையறாக் களுக்கு நூல் வேறுபாட்டில் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. கொல்லைப்புற வகைய றாக்களுக்கு சாத்தாதவர் என்ற மதிப்புறு பட்டம் வழங்கப்பட்டது. இப்போதும் சாத் தாதவர் தெரு உள்ளது.

இனி நாம் சாத்தியவர் சாத்தாதவர் என்றே பார்ப்போம். இப்போது சாத்தியவர் தெருக்களில் சாத்தாதவர் ஒருவர் கீரை விற்கப் போகிறார். சாத்தியவர் தெருவின் நுழைவுப் பகுதியில் கீரையை வைத்து விட்டு யார் கண்ணிலும் படாமல் வெளியே வருகிறார். இப்போது சாத்திய பெண்மணி கள் தங்களுக்கு தேவையான கீரையை எடுத்துக் கொண்டு மாமிகள் கூடியோ கூடாமலோ கீரைக்கு விலை வைக்கிறார் கள். அதிகப்படியான விலையாக கைப்பிடி அரிசியென போடுகிறார்கள். கீரையின் அளவை பெரிதாகக் கருதுவதில்லை. எழு பது வயது சாத்தாத பெண்மணியை ஏழு வயது சாத்திய முதிர்ச்சியாளர் "ஏய் பேச்சியம்மா" என்று அழைப்பதைக்  கேட்டு பேச்சியம்மாக்கள் 'எடு செருப்பை' என்று சொல்வதில்லை. பேச்சியம்மாக்களுக்கு முதிர்ச்சி பத்தாது. பேச்சியம்மாக்கள் அது ஒரு பொற்காலம் என்றே கருதினார்கள்.

பின்னாளில் ராமசாமி வந்தார். கருப்பாய் நெருப்பாய் கொதித்தார். ராமானுஜம் பெறாத இன்னலைக் கண்டார், விடுவதாயில்லை ராமசாமி, மலைக்கும் மலத்திற்கும் அஞ்சாத ராமசாமி சாத்தியவர்களை சாத்தோ சாத்தென்று சாத்தினார். தன் எழுத்தால் தன் கருத்தால் தன் பேச்சால் ராமசாமி ஆயுத எழுத்தை எடுக்காமலே புரட்டிப் போட்டார் - சாத்தாதவர்களின் வாழ்வை. இப்போது ராமசாமியின் வழி வந்தவர்க்கு கீரை நினைவுக்கு வருகிறது. ஊர்தோறும் ஓர் உழவர் சந்தை உரு வாக்குகிறார்.

இப்போ போய் பாருங்கள் உழவர் சந்தைகளில் பேச்சியம்மாக்கள் முத்தம்மாக்களாக உருப்பெற்று பேச்சியம்மாக்களின் பெயர்த்திகள் உழவர் சந்தையில் கீரையோடு உட்கார்ந்து இருக்கிறார்கள். சாத்திய வகையறாக்கள் கீரை வாங்க வரிசையில் வருகிறார்கள். நின்று கொண்டே , விலை சொல்கிறாள் முத்தம்மாக்களின் மகள். நல்ல விலை போகிறது கீரை இப்போது உட்கார்ந்து இருப்பவளைப் பார்த்து சாத்தியவரோ, சாத்தாதவரோ "அக்கா அம்மா" என்றே அழைக்கிறார்கள். ஊர் இப்போது ராமசாமியின் பெயரால் சமத்துவபுரம் ஆனது.

- நெல்லை சு.நயினார்

No comments:

Post a Comment