அண்ணாவின் கடைசி கடிதம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, January 30, 2021

அண்ணாவின் கடைசி கடிதம்

பேரன்புடைய பெரியார் அவர்கட்கு, வணக்கம். என் உடல் நிலை நல்லவிதமாக முன்னேறி வருகிறது. வலியும் அதற்குக் காரணமாக இருந்து வந்த நோய்க் குறியும் இப்போது துளியும் இல்லை. பசியின்மையும் இளைப்பும் இருக்கிறது. டாக்டர் மில்லரின் யோசனையின்படி இந்தத் திங்கள் முழுவதும் இங்கு இருந்துவிட்டு நவம்பர் முதல் வாரம் புறப்பட எண்ணியிருக்கிறேன். இங்கு ராணி, பரிமளம், செழியன், ராஜாராம், டாக்டர் சதாசிவம் ஆகியோர் உடனிருந்து கனிவுடன் என்னைக் கவனித்துக் கொள்கிறார்கள். சென்னை மருத்துவமனையிலும், விமான தளத்திலும் தாங்கள் கவலையுடனும், கலக்கத்துடனும் இருந்த தோற்றம் இப்போதும் என்முன் தோன்றியபடி இருக்கிறது. ஆகவேதான், கவலைப்பட வேண்டிய நிலை முற்றிலும் நீங்கி விட்டது என்பதனை விளக்கமாகத் தெரிவித்திருக்கிறேன். தங்கள் அன்புக்கு என் நன்றி; தங்கள் பிறந்த நாள் மலர் கட்டுரை ஒன்றில் மனச்சோர்வுடன் துறவியாகிவிடுவேனோ என்னவோ என்று எழுதியிருந்ததைக் கண்டு மிகவும் கவலை கொண்டேன். தங்கள் பணி, மகத்தான விழிப் புணர்ச்சியைச் சமூகத்தில் கொடுத் திருக்கிறது. புதியதோர் பாதை மக்களுக்குக் கிடைத்திருக்கிறது. நான் அறிந்த வரையில், இத்தனை மகத்தான வெற்றி, வேறு எந்தச் சமூகச் சீர்த்திருத்தவாதிக்கும் கிடைத்ததில்லை. அதுவும் நமது நாட்டில்! ஆகவே, சலிப்போ, கவலையோ துளியும் தாங்கள் கொள்ளத் தேவையில்லை. என் வணக்கத்தினை திருமதி. மணி அம்மையார் அவர்களுக்குத் தெரி விக்கவும். அன்பு வணக்கங்கள்.


தங்கள் அன்புள்ள

அண்ணாதுரை

10.10.1968

நியூயார்க்

No comments:

Post a Comment