இந்து என்ற சொல், இந்தியாவிலே பிறந்த வேதங்களிலோ, உபநிஷதங்களிலோ, ஆரண்யகங்களிலோ, பிராமண்யங்கள் என்று சொல்லக்கூடிய வேறு வகையான பழைய இலக்கியங்களிலோ இல்லை. இதிகாசங்களிலும் கிடையாது. இந்தச் சொல் 18-ஆம் நூற்றாண்டின் நடுப் பகுதியிலே அய்ரோப்பிய Orientalist அதாவது கீழ்த்திசை நாடுகளைப் பற்றி ஆராய வந்தவர்கள் பயன்படுத்திய சொல். இந்தச் சொல்லுக்கான ‘மரியாதை’ என்ன என்று கேட்டால், ‘இது வெள்ளைக்காரர்கள் கண்டு பிடித்த சொல்’ என்பது தான். இந்திய மொழிகளில் எந்த மொழியிலும் இந்து என்ற சொல்லுக்கு வேர்ச் சொல்லே கிடையாது.
மறைந்து போன சங்கராச்சாரியார் எழுதிய ‘தெய்வத்தின்
குரல்’ என்ற புத்தகத்தைப் படித்துப் பார்த்தால் தெரியும். அதிலே வெள்ளைக்காரன்
வந்து நமக்கு இந்து என்று பொதுப்பெயர் வைத்தானோ இல்லையோ, நாம் பிழைத்தோம் என்று சொல்கிறார்.
‘இந்து’ என்று வெள்ளைக்காரன் பெயர் சூட்டியதாலே ஆதாயம் அடைந்தது பிராமணர்கள்
மட்டும்தான். எப்படியென்றால் அந்தச் சொல்லுக்கான அதிகார அங்கீகாரத்தை காலனி ஆட்சிக்
காலத்திலேயே பிராமணர்கள் பெற்றுக் கொண்டார்கள். 1799இல் உள்நாட்டு நீதிநெறிகளைத் தொகுக்க
வேண்டிய ஒரு கட்டாயம் வந்தபொழுது கல்கத்தாவில் இருந்த சர். வில்லியம் ஜோன்ஸ் (இந்தப்
பெயரை இன்றும் ஆர்.எஸ்.எஸ்-காரர்கள் கொண்டாடுவார்கள்) உள்நாட்டு நீதி நெறிகளைத் தொகுத்து
அதற்கு Hindu law என்று பெயரிட்டார். அப்பொழுதுதான் Hindu இந்து என்ற சொல்
முதன்முதலாக அரசியல் அங்கீகாரம் பெறுகிறது. இந்தச் சொல் வெள்ளைக்காரன் கண்டுபிடித்த
சொல். இந்த நாட்டிலே எந்த மொழியிலும் இல்லாத சொல். திராவிட மொழியிலும் கிடையாது ஆரிய
மொழிகளிலும் கிடையாது.
- தொ.ப. எழுதிய ‘நான் இந்துவல்ல நீங்கள்...?' நூலிலிருந்து...
No comments:
Post a Comment