தொ. பரமசிவன் அவர்களைப் பற்றி முதலில் அறிய
நேர்ந்தது அவருடைய ‘சீடர்’, சிகாகோ பல்கலைக்கழக ஆய்வாளர்,
மறைந்த பேராசிரியர் பார்ணி பேட் (Bernard Bate) வாயிலாக. நேரில்
சந்தித்தது 1995 பிற்பகுதியில் அவர் இதயத் தாக்குதலுக்கு
உள்ளாகி மதுரை மருத்துவமனையில் இருந்தபொழுது.
’அறியப்படாத தமிழகம்’ என்ற தலைப்பில் அவர்
எழுதிக்கொண்டிருந்த தொடர் கட்டுரைகளைப் பற்றி
உற்சாகத்துடன் எனக்கு முதலில் அறிவித்தவர்
சுந்தர் காளி.
’அறியப்படாத
தமிழகம்’ கட்டுரைகளைப் படித்ததும் ஏற்பட்ட கிறக்கம் மறக்க முடியாதது. அதன்
மீதூரலைத் ‘தமிழியல் ஆய்வின் புதிய களங்கள்’ என்ற
தலைப்பில் அந்நூலுக்கு நான் எழுதிய முன்னுரையில்
காணலாம்.
மனோன்மணியம்
சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறைக்குத் தொ.பவை வரவழைக்கும்
முயற்சியின் ஒரு பகுதியாக ’அறியப்படாத
தமிழகம்’ கட்டுரைகளை நூலாக்கு வது என்று முடிவுசெய்தேன்.
(துணை முயற்சியாக, மதுரைக் கோயில் நுழைவு பற்றிய
ஆய்வுக் கட்டுரையை சுந்தர் காளி ஆங்கிலத்தில் மொழிபெயர்க்க,
அது எம்.எஸ்.எஸ்.
பாண்டியன் ஆசிரியத்துவத்தில் வெளியான South Indian Studies ஆய்விதழில் வெளிவந்தது.)
அதுவரை
தொ.ப. எழுதியிருந்த கட்டுரைகள்
நூலாக்கப் போதுமானதல்ல என்பதால் மேலும் சில கட்டுரைகளை
எழுதுமாறு அவரை வற்புறுத்தினேன். பாளையங்கோட்டை
மேடை காவல் நிலையை தெருவிலிருந்த
என் வீட்டிலிருந்தவாறே ‘இசுலாமியப் பாணர்’ முதலான சில
கட்டுரைகளை அவர் சொல்ல நான்
எழுதினேன்.
அச்சுக்கு
ஏற்பக் கையெழுத்துப்படியைச் செப்பம் செய்வதும் வரிசைப்படுத்துவதும் மெய்ப்புத் திருத்துவதும் என் வேலையாயின. தொ.பவின் குருநாதர் சி.சு. மணி அவர்களிடம்
தேவைப்படும் ஆலோசனைகளைப் பெறுவேன். (சி.சு. மணி
அவர்களை ‘மகா பெரியவா’ என்றும்,
தொ.பவைப் ‘பெரியவா’ என்றும்,
என்னை ‘பால பெரியவா’ என்றும்
‘நீடாமங்கலம்’ நூலாசிரியர் ஆ. திருநீலகண்டன் நகைச்சுவையாகக்
குறிப்பிட்டுவந்த காலம் அது.) ஒளியச்சுக்கோப்பும்
அச்சீடும் மதுரைத் தோழர் மாறனின் அன்பு
அச்சகத்தில் நடந்தது. மினி ஆப்செட்டின் எல்லைக்குட்பட்டு
எவ்வளவு முடியுமோ அவ்வளவு சிறப்பாக அவர் நூலை அச்சிட்டுத்தந்தார்.
தொ.பவின் உற்ற நண்பர்,
கட்டபொம்மன் ஆராய்ச்சி யாளர் பேராசிரியர் வே.
மாணிக்கம் அவர்களின் வீட்டு முகவரியிலிருந்த ‘ஜெயா
பதிப்பக’ வெளியீடாக அக்டோபர் 1997இல் ’அறியப்படாத தமிழகம்’
முதல் பதிப்பு வெளியானது. கிரவுன் 1/8 அளவில் 154 பக்கம். தனிப் படி 30 ரூபாய்.
மும்மாத
இதழாக அப்பொழுது வெளிவந்த ‘காலச்சுவடு’ இலவச விளம்பரம் வெளியிட்டு
உதவியது. தமுஎகச ச. தமிழ்ச்செல்வன்
தம் தனி முயற்சியில் 300-400 பிரதிகள் விற்றுத்தந்தார்.
50 பிரதிகள் எடுத்துச்செல்வார். பின்னிரவில் கதவைத் தட்டிக் காசைக்
கொடுத்துவிட்டு, அடுத்த சிப்பத்தை எடுத்துச்
செல்வார்.
ஆறேழு
மாதங்களிலேயே அச்சடித்த ஆயிரம் படிகளும் விற்றுத்
தீர்ந்தன. 1998 ஏப்ரலில் தொ.ப. மனோன்மணியம்
சுந்தரனார் பல்கலைக்கழகத் தமிழியல் துறைப் பேராசிரியரு மானார்.
’அறியப்படாத
தமிழகம்’ மேலதிகக் கவனம் பெற வேண்டும்
என்று விரும்பினேன். வெறும் மறுபதிப்பு வெளியிடுவதில்
அந்நாளில் காலச்சுவடு கண்ணனுக்கு ஆர்வம் இருக்கவில்லை. எனவே
’அறியப்படாத தமிழகம்’, ‘தெய்வங்களும் சமூக மரபுகளும்’ ஆகிய
இரண்டு நூல்களையும் சேர்த்து, கட்டுரைகளை வேறு வரிசையில் நிரல்படுத்திப்
‘பண்பாட்டு அசைவுகள்’ என்ற புதிய தலைப்பில்
செப்டம்பர் 2001இல் காலச்சுவடு பதிப்பகம்
நூலாக்கியது. வெ. செந்தில் செல்வன்
என்பவர் வடிவமைத்த முகப்பட்டை பலரின் கவனத்தை ஈர்த்தது.
வாசக வரவேற்பைக் கருதி 2009 முதல் ’அறியப்படாத தமிழகம்’
தனிநூலாக வெளிவருகின்றது.
இதுவரை
இருபதாயிரம் படிகளுக்கு மேல் விற்று, தமிழ்ப்
பண்பாட்டியல் நூல்களில் கிளாசிக் என்ற இடத்தைப் பெற்றுவிட்ட
’அறியப்படாத தமிழகம்’ நூலின் பதிப்பு வரலாறு
இது.
- ஆ.இரா.வேங்கடாசலபதி
No comments:
Post a Comment