'தினமணி'க்குப் பதிலடி! - 1 - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 25, 2021

'தினமணி'க்குப் பதிலடி! - 1

'தினமணி'யில் (22.1.2021) "காலத்தின் கட்டாயம்எனும் தலைப்பில் நடுப்பக்கக் கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது.

இப்பொழுதெல்லாம் உள்ள கேள்வி பார்ப்பனீயத்தைத் தூக்கிப் பிடிப்பதில் முதலிடத்தில் இருப்பது 'தினமலரா - தினமணியா' என்பதுதான்.

திருக்குறளும் மனுதர்மமும் ஒன்றுதான் - மனுதர்மத்தைத் தடை செய்ய வேண்டும் என்றால் திருக்குறளையும் தடை செய்ய வேண்டும் என்கிற அளவுக்கு 'தினமணி' பார்ப்பன மூர்க்கத்தனத்துடன் முண்டாதட்டி எழுதுகிறது என்றால் பார்த்துக் கொள்ளலாமே.

கடந்த 22ஆம் தேதி 'தினமணி' நடுப்பக்கக் கட்டுரை என்ன கூறுகிறது?

1) "கோயில்கள்முன் பகுத்தறிவு என்ற பெயரில் "கடவுள் இல்லை கடவுளைக் கற்பித்தவன் முட்டாள். கடவுளை வணங்குபவன் காட்டுமிராண்டி" என்றுள்ள வாசகங்களை எதிர்த்து வழக்குத் தொடுத்ததுண்டா?" என்று கேள்வி கேட்கிறது.

எந்த யுகத்தில் 'தினமணி' சஞ்சரிக்கிறது? இதற்குமுன் வழக்குகள் தொடுக்கப்பட்டு உயர்நீதிமன்றத்தால் தள்ளுபடி செய்யப்பட்டன என்பதை இந்தப் பதில் மூலமாவது தெரிந்து கொள்ளட்டும்.

2) "கடந்த 70 ஆண்டுகளாக நாத்திகக் கட்சிகள், அவர்களின் அரசுகள் மக்களைக் கோயில்களிலிருந்து அந்நியப்படுத்தி விட்டன" என்று புலம்புகிறது 'தினமணி'.

இந்து மதத்தில் நாத்திகத்துக்கு இடம் உண்டா - இல்லையா? என்பதை முதலில் 'தினமணி' கட்டுரையாளர் தெரிந்து கொள்ள வேண்டும்.

தசரதன் அமைச்சரவையில்கூட ஜாபாலி என்ற நாத்திகர் இருந்தார் என்கிறதே இராமாயணம்! ஒழுங்காக இராமாயணத்தைப் படிக்கவில்லையா?

'தென்னாட்டின் ஜாபாலி' என்று தந்தை பெரியார் படத்தை அட்டைப் படத்தில் போட்டு, பிறந்த நாள் வாழ்த்து கூறியுள்ளதே 'கல்கி' - அதாவது தெரியுமா?

கடந்த 70 ஆண்டுகளாக நாத்திகக் கட்சிகள், அவர்களின் அரசுகள் மக்களைக் கோயில்களிலிருந்து அந்நியப்படுத்தி விட்டன என்று வேதனைப்படுகிறது.

அப்படியென்றால் நாத்திகம் நாட்டு மக்களுக்கு நல்லது செய்துள்ளது என்று பொருள்.

கோயில்கள் மக்களின் பணத்தையும், அறிவையும், உழைப்பையும் சுரண்டுபவையாயிற்றே! அந்தச் சுரண்டலை நாத்திகர்கள் தடுத்தது நல்ல காரியம்தானே! "பக்தி ஒரு பிசினஸ், பக்தர்களிடம் வர்த்தக மனப்பான்மை காணப்படுகிறது" என்று 'ஜெகத்குரு' சங்கராச்சாரியார் ஜெயேந்திர சரஸ்வதியே ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்தபின், 'தினமணி' புலம்புவது ஏன்?

இதில் குறிப்பிடத்தக்கது என்னவென்றால் சங்கராச்சாரியார் இப்படிக் கூறியதை 'தினமணி'யே வெளியிட்டதுதான் ('தினமணி' 7.9.1976).

"கோயில்கள்  தோற்றுவிக்கப்பட்டதே பணம் பறிக்கத்தான் - அரசர் அதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும்" என்று கவுடில்யன் என்ற சாணக்கியன் அர்த்தசாஸ்திரத்தில் கூறவில்லையா?

கோயில்கள் விபச்சார விடுதிகள் என்று பக்திமான் காந்தியாரே கூறி விட்டாரே - என்ன பதில்?

"சிலைகளும், சிலை வணக்கமும், ஜெப மாலைகளும், சாயம் பூசப்பட்ட கற்களும் நமக்குத் தேவையில்லையென்றால், கீழ்நிலையில் உள்ள மக்களுக்கும் அவை தேவையில்லை. பித்தளை, மரம், கல்லென்று எதனால் செய்யப்பட்ட சிலையானாலும்; அவற்றை எல்லா நகரங்களிலிருந்தும், கிராமங்களிலிருந்தும் எல்லாக் கோயில்களில் இருந்தும் அகற்றிக் கடலில் எறிந்து விட்டு நாம் இருக்கும் இடங்களைத் தூய்மைப்படுத்துவேன்" என்று நோபல் பரிசு பெற்ற இரவீந்திரநாத் தாகூர் காந்தியாரிடமே முகத்துக்கு முகம் சொன்னதுண்டே! கோயில்களுக்காகக் கசிந்துருகும் 'தினமணி' பதில் சொல்லட்டுமே பார்க்கலாம்.

நாத்திகம் பகுத்தறிவையும், நல்ஒழுக்கத்தையும் போதிக்கிறது - நம்புகிறது. ஆனால் ஆத்திகம், வைதிகம், ஆன்மிகம் மூடநம்பிக்கையையும், ஒழுக்கமின்மையையும் தானே போதிக்கின்றன!

'பக்தி தனிச் சொத்து; ஒழுக்கம் பொதுச் சொத்து' என்றார் தந்தை பெரியார் (சென்னை பச்சையப்பன் கல்லூரிப் பேச்சு 24.11.1964).

"நல்ல ஒழுக்கம் இருந்தால் போதுமென்றும், கடவுள் அவசியம் இல்லை என்றும் சிலர் கூறுகின்றனர். இது தவறான கருத்து. கடவுள் அருள் இல்லையானால் ஒரு நபருக்கோ, நாட்டுக்கோ விமோசனம் ஏற்பட முடியாது" ('கல்கி' 8.4.1958) என்கிறார் மறைந்த காஞ்சி சீனியர் சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி.

பெரியார் கருத்தையும், 'பெரியவாள்' கருத்தையும் ஒப்பிட்டுப் பாருங்கள். எது அவசியம், மேன்மையானது என்பது தெற்றென விளங்குமே!

பிராயச் சித்தம், கழுவாய் என்ற ஒன்று இருக்கும் வரை எப்படி ஒழுக்கம் வளரும் என்று கேட்டவர் பெரியார்.

தந்தையைக் கொன்று தாயைப் புணர்ந்த பக்தன் மதுரை பொற்றாமரைக் குளத்தில் குளித்தவுடனேயே பாவம் நீங்கி, மோட்சம் போகிறான். சிவபெருமான அந்தக் கயவனுக்குக் காட்சி தருகிறான். (திருவிளையாடல் புராணம் - மாபாதகம் தீர்த்தபடலம் - அன்னையைப் புணர்ந்து என்று தொடங்கி.... மேன்மை என்று முடியும் பாடல்)

நாக்கினில் நரம்பின்றி நாத்திகத்தைக் கேலியும், கேவலமும் கலந்த சொற்களில் ஏசும் -  பேசும் பேர்வழிகள் இவற்றிற்கெல்லாம் பதில் சொல்வார்களா?

இதற்கெல்லாம் பதில் சொல்லி 'தினமணி' நடுப்பக்கத்தில் ஒரு கட்டுரையைத் தீட்டத் தயாரா?

No comments:

Post a Comment