கிந்தனார் கதாகாலட்சேபம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, December 1, 2020

கிந்தனார் கதாகாலட்சேபம்


கலைவாணரின் கிந்தனார் கதாகாலட்சேபம் தந்தை பெரியார் அவர்களின் இந்தக் கருத்தாக்கத் தின் பொருளைக் கொண்டது. ஜாதி ஒழிப்புக்கும் கல்வி ஒரு கருவி என்பதால், தீண்டப்படாத மக்களின் கல்வி உரிமைக்காகக் குரல் கொடுத்தவர், தொடர்ந்து போராடியவர் பெரியார்.


புராணகால அந்த நந்தன், தில்லை நடராஜன் கோயிலுக்குச் சென்று தரிசிக்க வேண்டும் என்று தவம் கிடந்தான். ஆனாலும் அவன் தாழ்த்தப்பட் டவனாயிற்றே - அனுமதி கிடைக்குமா?


அந்தத் தாழ்த்தப்பட்டவன் படித்து அதிகாரியானால் அவன் மீது பிறந்த தீண்டாமை அகலாமல் நிற்குமா?


இந்தக் கேள்விதான் ‘கிந்தனார் கதாகாலட்சேபம்' என்ற விடையைத் தந்தது.


இந்தக் கிந்தனார் உருவானதற்கும் காரணம் சுயமரியாதைதான்.


பிரபல திரைப்பட நடிகை டி.ஆர்.ராஜகுமாரி, சென்னை தியாகராயர் நகரில் மாளிகை ஒன்றைப் புதிதாகக் கட்டினார். திறப்பு விழாவுக்கு சேங்காலிபுரம் அனந்தராம தீட்சதரின் 'நந்தன் சரித்திரம்' கீர்த்தனைக் கதாகாலட்சேபம் நடத்துவதற்கு அவரை விரும்பி அழைத்தார். ஆனால் தீட்சதர் கொஞ்சம் மடியானவர். சூத்திரப் பெண்மணி கட்டிய வீட்டில், அதுவும் நடிகை வீட்டில் கதாகாலட்சேபம் நடத்திக் கொடுக்க மறுத்துவிட்டார்.


இதனை என்.எஸ்.கிருஷ்ணனிடம் சொல்லி வருத்தப்பட்டார் அந்த நடிகை. "வருத்தப்படாதே, நான் காலட்சேபத்தை நடத்தித் தருகிறேன்" என்று வாக்களித்தார் கலைவாணர்.


"ஒரு சூத்திரப் பெண் வீட்டில் காலட்சேபம் நடத்த மாட்டேன்" என்று சொன்ன பார்ப்பனர் ஒருவரின் ஜாதி ஆதிக்கத் திமிரின் பிடரியை முறிக்கும் அந்த சுயமரியாதை உணர்வு பெற்றெடுத்த பிள்ளைதான் 'கிந்தனார் கதாகாலட்சேபம்',


உடுமலை நாராயண கவியோடு இணைந்து அது தயாரிக்கப்பட்டு, நாடகமும் நடத்தப்பட்டது. நையாண்டியும், நயமும், இசையும் கைகோத்து கலகலப்பையூட்டின.


தாழ்த்தப்பட்ட குடும்பத்தில் பிறந்த கிந்தன் பட்டணம் போய்ப் படிக்க ஆசைப்பட்டான்.


தந்தையார் சீறுகிறார்.


 'மடப்பயலே - நாயந்தானா நீ சொல்லு - நம்ம ஜாதிகளுக்கு நாயந்தானா - நீ சொல்லு காடுகரை உழும் பிழைப்பு - அது கடவுள் நமக்களித்த அமைப்பு  - கையில் ஏடெழுத்தாணி படிப்பு - மிக்க ஏற்றமான ஜாதிக்காகும் - அந்தப் பொறுப்பு - நாயந்தானா நீ சொல்லு' என்று அந்தக் கால ஜாதி சீழ்ப்பிடிப்பு சமுதாயத்தை ஏளனமான முறையில் இசையோடு படம் பிடித்துக் காட்டுகிறார். அந்தக் கதாகாலட்சேபத்தில், ரயிலில் பட்டணத்துக்கு போகிறான். வெள்ளைக்காரன் கண்டுபிடித்த அந்த ரயில் எப்படி ஜாதியை ஒழிக்கிறது என்பதையும் நயமாகக் கலைவாணர் சொல்லும் பாங்குதான் என்னே. என்னே!


ரயிலே. ரயிலே.... ரயிலே


மறையவரோடு பள்ளு பறையரை ஏற்றி


 மத பேதத்தை ஒழித்திட்ட ரயிலே


என்று சன்னமாகச் சொட்டு வைக்கும் பிரச்சாரம் கலைவாணருக்கே உண்டு.


காலட்சேபம் எந்த அளவுக்கு ஈர்த்தது என்றால், திருநெல்வேலியில் நெல்லையப்பர் கோயில் வசந்த மண்டபத்தில் நந்தனார் கதாகாலட்சேபம் நடத்திய பாகவதர். மற்றொரு முறை அந்தப் பகுதியிலே கலைவாணர் நடத்திய கிந்தனார் காலட்சேபத்தைக் கேட்க முதல் வரிசையில் உட்கார்ந்து வெகுவாக ரசித்தார் என்றால், கலைவாணரின் அந்தக் கதாகாலட்சேபத்தின் நேர்த்தியையும், கீர்த்தியையும் தெரிந்துகொள்ளலாம்.


சென்னையில் கல்லூரியில் படித்து, பிறகு கல்வி அதிகாரியான அந்தக் கிந்தன் உள்ளூருக்கு வரும்போது, தனக்கு ஆசிரியராக இருந்த உயர்ஜாதி பார்ப்பன ஆசிரியரே வரவேற்று மகிழ்ந்து, தம் வீட்டுக்கும் அழைத்துச் சென்று உபசரித்தார் என்பதுதான் கலைவாணரின் அந்தக் கிந்தனார் காலட்சேபத்தின் 'சுப முடிவு'


தந்தை பெரியாரே, கலைவாணரின் கதாகாலட்சேபத்தைப் பார்த்து ரசித்துப் பாராட்டியது பெருமைக் குரியது.


"நாட்டுக்கு நல்லது செய்யவும், முன்னேற்றவும் கிருஷ்ணன் போன்ற அறிஞர்களும், பகுத்தறிவாளர்களும் பெருஞ்சேவை செய்கின்றனர். இவ்வளவு பெரிய புரட்சிகரமான செயல் செய்து அதில் பெரும் வெற்றி பெற்றிருக்கும் கிருஷ்ணனுக்கு உள்ள அபார சக்தியெல்லாம் தன்னலம் இல்லாத தன்மைதான்" என்ற தந்தை பெரியாரின் பாராட்டு மொழிக்கு இணை ஏது?


No comments:

Post a Comment