மதுரை,டிச.2, பொதிகை தொலைக்காட்சியில் சமஸ் கிருதத்தில் செய்தி வெளியிட தடை விதிக்கக் கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முறையீடு செய்யப்பட்டது.
உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புககேழந்தி ஆகியோர் நேற்று (டிச.1) காலை வழக்கம் போல் வழக்குகளை விசாரித்தனர். அப்போது வழக்குரைஞர் ஏ.கண்ணன் ஆஜராகி, ‘‘மத்திய அரசின் பிரசார் பாரதியின் கீழ் செயல்படும் பொதிகை தொலைக்காட்சியில் 15 நிமிடத்திற்கு சமஸ்கிருத செய்தி தொகுப்பை ஒளிபரப்ப உத்தரவிடப்பட்டுள்ளது. புழக்கத்தில் இல்லாத சமஸ்கிருத மொழியை திணிக்கும் வகையில் இச்செயல் உள்ளது. தமிழை தாய்மொழியாக கொண்ட தமிழகத்தில் சமஸ்கிருதத்தை திணிப்பது அரசியல் சட்டத்திற்கு எதிரானது. எனவே, பொதிகை தொலைக்காட்சியில் சமஸ்கிருத செய்தி ஒளிபரப்ப தடை விதிக்கக் கோரி மனு செய்கிறேன். அதை அவசர வழக்காக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்’’ என்றார். அப்போது நீதிபதிகள் ‘‘மனுவாக தாக்கல் செய்தால் விசாரிக்கப்படும்’’ என்றனர். இதைத் தொடர்ந்து மனுத்தாக்கல் செய்யப்பட உள்ளது.
இந்தி, ஆங்கிலத்தில் மட்டுமின்றி மத்திய அரசு வெளியிடும் அறிவிப்பு
மாநில மொழியிலும் இருக்க உத்தரவு அரசாணைக்கு இடைக்கால தடை விதிப்பு
மதுரை,டிச.2, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மண்டல எல்லை தொடர்பான அரசாணைக்கு இடைக்காலத் தடை விதித்த உயர்நீதிமன்ற கிளை, மத்திய அரசின் அறிவிப்புகள் அந்தந்த மாநில மொழிகளில் இருக்க வேண்டும் என்றும் கூறியுள்ளது.
குமரி மாவட்டம், தோவாளையைச் சேர்ந்த சதீஷ், உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘குமரி மாவட்டத்திலுள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டது. சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டல எல்லையை 0-3 கி.மீ. தூரம் என நிர்ணயம் செய்வது தொடர்பாகவே கருத்து கேட்பு கூட்டம் நடந்தது. ஆனால் பொதுமக்கள் தங்களது கருத்தை தெரிவிக்க போதுமான வாய்ப்பு வழங்கவில்லை. ஆனால், செப். 22இல் சுற்றுச்சூழல் உணர்திறன் பாதுகாப்பு மண்டல எல்லையை 3 கி.மீ வரை என நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இந்த அரசாணையை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. வழக்குரைஞர் புகழ்காந்தி ஆஜராகி, ‘‘எல்லை நிர்ணயம் தொடர்பாக முறைப்படி பொதுமக்களின் கருத்து கேட்கப்படவில்லை. கண்துடைப்பாக நடத்தினர். இதுதொடர்பான அரசாணை பொதுமக்கள் எளிதில் அறிந்து கொள்ளும் வகையில் உள்ளூர் மொழியில் வெளியிடப்படவில்லை. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்தது’’ என்றார். இதையடுத்து நீதிபதிகள், பொதுமக்களிடம் முறையாக கருத்து கேட்காமல் பிறப்பிக்கப்பட்ட அரசாணைக்கு இடைக்கால தடை விதித்தனர். மேலும் குமரி மாவட்டத்திலுள்ள விதிமீறல் குவாரிகளை மூடவும், புதிய குவாரிகளுக்கு அனுமதி தரக்கூடாது என்றும், மத்திய அரசு அறிவிப்புகளை வெளியிடும்போது இந்தி மற்றும் ஆங்கிலத்தில் மட்டுமின்றி அந்தந்த மாநில மொழியிலும் அறிவிப்புகளை வெளியிட வேண்டும் என்றனர். இதுதொடர்பாக மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பதில்மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை டிச. 14க்கு தள்ளி வைத்தனர்.
No comments:
Post a Comment