முனைவர் துரை.சந்திரசேகரன்
சீரிய சமூக சிந்தனையாளர்களான - சீர்திருத்தக் கருத்துகளை, முற்போக்குக் கோட்பாடுகளை வழங்கியவர்களான கவுதம புத்தர், திருவள்ளுவர், வள்ள லாரைத் தொடர்ந்து ஜோதிராவ்பூலே, நாராயணகுரு, அயோத்திதாசபண்டிதர், அம்பேத்கர் போல சமுதாயத்தை உய்விக்க வந்த உத்தமத் தலைவரே தந்தை பெரியார்! சமுதாயத்தில் நிலவிடும் ஏற்றத் தாழ்வு களைக் களைந்து பொதுவுரிமையுடன் கூடிய பொதுவுடைமைச் சமுதாயத்தை மலரச் செய்வதற்காக தமது கருத்துகளை யும், உழைப்பையும் நல்கியவர் அய்யா பெரியார்! இருபதாம் நூற்றாண்டு கண்ட இணையற்ற சிந்தனையாளரான அய்யா வின் வழிநின்று அவரின் கொள்கைப் பணியை தொடர்பவர்தான் இன்றைய தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி! போராட்டம் -பிரச்சாரம் என சமுதாய மேம்பாடு காண பெரியார் உழைத்ததைப் போலவே சற்றேறக்குறைய 78 ஆண்டு களுக்கும் மேலாக தமது உழைப்பை, தொண்டை ஈந்து வருபவர் ஆசிரியர் அய்யா. தந்தை பெரியார் நெறியைப் பரப்பிட, பெரியாரியலை விதைத்திட நூற்றுக்கணக்கான நூல்களை ஆக்கிய பெருந்தகையும் கூட! தமது நுண்மாணுழை புலத்தால் ஆய்வு நோக்கில் அளப்பரிய சிந்தனைகளை திராவிடர் சமுதாயம் உய்வதற்காக நூலாக்கம் பெறச் செய்துள்ளார். பெரியாரியலை எளிதாக மக்களைச் சென்றடையும் வண்ணம் அவரின் பேச்சும், எழுத்தும் பலன் விளைந் துள்ளன. சிறந்த தலைமைக்கு தலைமைத் துவத்துக்கு எடுப்பான எழுத்தும் பேச்சும் அவசியம். ஆசிரியருக்கு 10 வயது முதலே பகுத்தறிவுப் பயிற்சிக்கான களம் அமைந் ததால் சாத்தியமானது. எத்தனை எத்தனை ஆய்வுச் சொற்பொழிவுகள் அவரால் நிகழ்த்தப் பெற்றன. பல்லாயிரம் பேர் அவரின் பகுத்தறிவு கருத்து வளத்தால் பயன் பெற்றனர். அவரின் நூல் வரிசை நூலோரின் வாலறுத்தது; மேலோர் என்று தம்பட்டம் அடித்தோரின் கொட்டத்தை ஒடுக்கியது!
பலரின் கருத்துகளுக்கு மறுப்புரை வழங்கியவர் ஆசிரியர். மாறுபட்ட, முரண் பட்ட வெகுமக்களின் நலனுக்கு எதிரான நூல்களுக்கு பதிலடி தந்த ஆசிரியரின் நூல்கள் பல. ஆனால், ஆசிரியரின் நியாயமான மக்கள் நலமேம்பாட்டுச் சிந்தனைக் கேள்விகளுக்கு இன்று வரை பதில் உரைப்பார் எவருமில்லை. தந்தை பெரியார் எண்ணிய எண்ணங்களுக்குச் செயல்வடிவம் கொடுத்தவர் ஆசிரியர் கி.வீரமணி என்பது மட்டுமல்ல, அய்யா வின் லட்சியங்கள் அவனியெங்கனும் புகழ் மணக்கச் செய்த சாதனையாளரும் ஆவார்.
ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறுபதம் என்பதற்கொப்ப, அவரின் நூல் வரிசையில் 5 நூல்கள் மட்டும் இக்கட் டுரையில் ஆய்வு நோக்கில் அலசியுள் ளோம். அவரின் நுண்மான் நுழைபுலம் வியக்க வைத்தது! எந்த தலைவரும் சிந்திக்காத தடத்தில் உலக அறிஞர்கள், சிந்தனையாளர்கள், மக்கள் நலக் கோட் பாட்டினர் கருத்துகளை பொறுக்கிப் பொறுக்கி எடுத்து, தேர்ந்து -ஓர்ந்து ஒப்பற்ற சிந்தனைத் துளிகளாக நம் வாழ்வு சிறக்க வாழ்வியல் சிந்தனைகளாக வழங்கியவரும் அறிவுலக வள்ளல் அவர். ஆய்வு நெறி முறைக் கோட்டிபாட்டின் அடிப்படையில் ஆசிரியர் நூல்களை ஆய்வு செய்தால் எத்தனை டாக்டர் பட்டங்கள் அவருக்கு தரப்பட்டிருக்க வேண்டும் என்ற கேள்வியே எழுந்தது! பல்கலைக் கொள் கலனாக ஆசிரியர் திகழ்வதை அவரின் ஒப்பற்ற நூல்களும், தொண்டு செயல் பாடுகளும் எடுத்தியம்புகின்றன.
வரலாற்றுச் சான்றுகளின் அடிப் படையில் ஆராயப்பட்டு எவ்வித விருப்பு வெறுப்புமின்றி நடுநிலைப் போக்குடன் அவரின் ஆய்வுச் சொற்பொழிவுகள் உண்மையை உலகுக்கு வழங்கி இருப் பதைக் கண்டு மகிழ்ந்தோம். கீதையின் மறுபக்கம், இராமாயண ஆராய்ச்சி, சங்கராச்சாரி யார்? வெறுக்கத்தக்கதே பிராமணீயம், சுயமரியாதைத் திருமணம் - தத்துவமும் வரலாறும் ஆகிய அய்ந்து நூல்களும் தமிழனத்தின் அறிவு விடு தலைக்கு சுற்றம் காக்கும் போர்க்கருவிகள் என்பதைப் பட்டியலிட்டுள்ளோம்... இப்படி யாய் நூற்றுக்கணக்கான போர்க்கருவி களைத் தயாரித்துள்ள அவர் 100 ஆண்டுகள் வாழ்க என வாழ்த்துகிறோம்.
கீதையின் மறுபக்கம்
தந்தை பெரியார் தாம் மறைவதற்கு முப்பத்தொரு "நாள்களுக்கு முன்பு, நமது நாட்டில் நடைபெறுகிற முட் டாள்தனங்களிலும், பச்சை அயோக்கித்தனங்களிலும் தலைசிறந்த முதல்தரமான காரியங்களில் முதலாவது காரியம் என்னவென்றால் பகவத் கீதை என்ற காட்டு மிராண்டி அயோக்கியத் தனம் கொண்ட நூலை - விஷயத்தைப் பிரச்சாரம் செய்வதும், மக்களிடையே பரப்புவதுமாகும். அதன் வண்டவாளத்தை வெளியிட ஆசைப் படுகிறேன் அது விசயமாக ஆராய்ச்சி உள்ளவர்கள் அதில் உள்ள மடமையை, நமது சமுதாயத்திற்கும் கேடான விஷ யங்களை உணர்ந்தவர்கள் அருள்கூர்ந்து விடுதலை பத்திரிகைக்கு எழுதி அனுப்ப வேண்டுகிறேன். பிரசுரித்து பிறகு புத்தக மாக்க ஆவலாயிருக்கின்றேன்" என்று அறிக்கை வெளியிட்டார். கீதையைப் பற்றி ஆய்வு செய்த தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி 1998 ஆம் ஆண்டு கீதையின் மறுபக்கம் நூலை வெளியிட்டார். மகாபாரதப் போரில் 3,83,660 ரதங்கள், 3,93.660 யானைகள், 11,80,990 குதிரைகள், 19,68,300 வீரர்கள் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்னும் புள்ளி விவரத்தை எடுத்துக்காட்டி எந்த ஒரு நாட்டிலும் இவ்வளவு பெரிய போர்கள், மைதானம், இவ்வளவு பெரிய படைகள் இருக்க வாய்ப்பு உண்டா? இது ஓர் அதீதக் கற்பனை அல்லாமல் வேறு என்னவாக இருக்க முடியும்? என்று வினா எழுப்புகிறார்.
ஜாதி தர்மத்தை காப்பாற்றுவதாலேயே கீதைக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படு கின்றது என்று கூறும் தலைவர் கி.வீரமணி, கடவுள் அவதாரம்தான் நால்வகை வர்ணத் தையும், வர்ணதர்மத்தையும் படைத்தவர் என்று காட்டி னால்தான் இந்தப் பேதத்தை நிலைக்க வைக்க முடியும் என்பதற்காகச் சூழ்ச்சியாளர் களால் திட்டமிட்டு உருவாக் கப்பட்டவர் தான் கிருஷ்ணன் என்கின் றார்.
சாதுர்வர்ண்யம் மயா சிருஷ்டம் நான்கு வரு ணங்கள் என்னால் உருவாக் கப்பட்டவை என்ற கீதை வாசகங்களை எடுத்துக்காட்டி இதன்படி ஜாதி என்பது மனி தனால் உண்டாக்கப்பட்டது அல்ல. கடவுளால் உண்டாக் கப்பட்டதாகும் என்கிறார்.
தர்மம் என்று இதிகாசங்களிலும், இராமாயணத்திலும், பாரத்திலும், பாரதத் தில் முளைத்துக் கிளம்பிய பகவத் கீதை யிலும் அதற்கு முன் புழக்கத்தில் இருந்த வேதங்களிலும் கூறப்பட்டவை வர்ண தர்மத்தையே அல்லாமல் வேறு எந்த தர்மத்தையும் பற்றி அல்ல என்பதால், அதற்கு ஆபத்து ஏற்பட்ட போதெல்லாம் அந்தப் பழைய வர்ண அமைப்பு - சமத் துவப் புயலாலும், பகுத்தறிவுப் பூகம்பத் தாலும் ஒரே அடியால் அசைக்கப்பட்டு அழிவைப் போக்கிய போதெல்லாம் அதைக் காப்பாற்றி நிலைக்க வைக்கவே கீதை போன்ற ஆயுதங்கள் - பண்பாட்டுப் படையெடுப்பை நிகழ்த்திய பஞ்ச தந்திரத் தின் கருவிகளாக மிக அருமையாகப் பயன்படுத்தப்பட்டன. என்று கீதையின் நோக்கம் வர்ணக் காப்பே என்று உறுதியாக மொழிகின்றார் ஆசிரியர் கி.வீரமணி.
நாதுராம் விநாயக்கோட்சே நீதிமன்றத் தில் அளித்துள்ள வாக்குமூலத்தை எடுத் துக்காட்டி, அர்ச்சுனன் பல கொலைகளைப் புரிவதற்குத் தூண்டுகோலாய் இருந்தது கீதை. அக்காலத்தில் மட்டுமல்ல, நம் கண்ணெதிரே நிகழ்காலத்தில் தேசப்பிதா என வர்ணிக்கப்பட்ட காந்தியாரையும் பழி வாங்கிய கீதை ஒரு கொலை நூல்தான் என்பதில் அய்யமில்லை என்று வாதிடுகின்றார் ஆசிரியர் கி.வீரமணி.
ஆரூயிர் இளவல் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அவர்கள் மிக அருமையாக, ஆராய்ச்ச்சி பூர்வமாக, அரிய பெரிய மேற்கோள்களுடன் எழுதி வெளியிட்டுள்ள பயனுள்ள பகுத்தறிவு நூல் ஒன்று - கீதையின் மறுபக்கம். பகவத் கீதை படிக்கத் துவங்கும் யாராயினும் அல்லது பகவத் கீதையை படித்து முடித்த யாராயினும் இந்நூலையும் படிக்க வேண்டும் என்றார் கலைஞர் மு.கருணாநிதி. ஒரு பண்பாட்டுப் படை யெடுப்பை எவ்வளவு லாவகமாக, நளின மாக, மூளைக்குச் சாயமேற்றி, மழுங்கடித்து அந்தப் போதையை மெல்லக் கொல்லும் நஞ்சு போல உள்ளே தள்ளி, அது எந்த உறுப்பை எப்போது செயலற்றதாக்குகிறது என்பதையே எளிதில் எவரும் புரிந்து கொள்ள முடியாதவாறு ஆரியம் செய் துள்ளது. அரசியலிலும், தத்துவ இயலிலும், விளம்பரத்திலும், சமயத்திலும், இலக்கியத் திலும் செல்வாக்கும், அமோகப் புகழும் பெற்றவர்களின் கையில், பையில், சொல் லில், மேற்கோளில், கீதையைக் தவழச் செய்து, அதன் பெருமை பலமடங்கு உயர்த்திக் காட்டப்பட்டு அதன் அஸ்தி வாரமின்மை, முரண்பாடுகள், சமூக விரோதச் சிந்தனைகள்,கேலிக்கூத்துகள் நாட்டோருக்கு சரியாகத் தெரியாமற் செய்யப்பட்டு விட்டன என்பதை ஆசிரியரின் நூல் அம்பலப்படுத்துகிறது. கீதையை ஆய்வு செய்வதே மிகப் பெரிய குற்றம் போல் சித்தரிக்கப்பட்டிருந்த மாயையை கீதையின் மறுபக்கம் எனும் ஆசிரியரின் நூல் உடைத்து உருக் குலைத்தது என்றே சொல்ல வேண்டும். ஆரியத்தை அலறவிட்ட நூல் வரிசையில் கீதையின் மறுபக்கம் எனும் ஆய்வு நூல் அறிவியக்கத்தின் போராயுதம் எனலாம்!
சுயமரியாதைத் திருமணம் - தத்துவமும் வரலாறும்
இந்நூல் 1997 ஆம் ஆண்டு வெளியிடப் பெற்றது. திருமணம் என்கிற பேரால் அறிவுப் பறிமுதலும், பொருள் இழப்பும் ஒரு வேதத்துக்கு ஒரு நீதி என்ற முறையில் ஆண் சமுதாயம் எஜமானத் தத்துவத்திலும், பெண் குலம் அடிமைத்தனத்தில் உழலும் புழுக்களாகவும் இருந்த நிலைக்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்கப் புகுத்தப்பட்டது தான் சுயமரியாதைத் திருமண முறை என்று ஆசிரியர் கி.வீரமணி விளக்கமளிக்கின்றார். பெண்ணடிமை, ஜாதி, கடவுள், மதச் சடங் காச்சாரம் முதலியவற்றை ஒழித்து மூடநம் பிக்கைகள் ஒழிந்த தனித்ததோர் புதிய முறைத் திருமணம் என்று சுயமரியாதை திருமணத்தின் தன்மையினை ஆசிரியர் கி.வீரமணி சுட்டிக்காட்டுகின்றார்.
ஆசிரியர் கி.வீரமணி மனுதர்ம சாத்தி ரத்தின் சூத்திரங்களை எடுத்துக்காட்டி பெண்ணடிமை பேணுவதைக் கண்டிக் கிறார். வைதிகமுறை, புரோகிதமுறை திருமணப் பெயர்களான தாரா முகூர்த்தம், கன்னிகாதானம் முதலான சொற்களே பெண்ணடிமையைப் புலப்படுத்துகின்றன என்கின்றார்.
பெண்ணடிமையைப் போக்குதல், பெண்ணுரிமையைப் பேணுதல், ஜாதி ஒழிப்பு, சடங்கு ஒழிப்பு, புரோகிதர்கள் இன்றி திருமணம், தாலி இல்லாமை, கடவுள் மறுப்பு, விதவைகளுக்கு மறுவாழ்வு, குடும் பக் கட்டுப்பாடு எனப் பல கொள்கைகளை உள்ளடக்கிய சுயமரியாதைத் திருமண மத்தின் சிறப்புகளை ஆசிரியர் கி.வீரமணி இந்நூலில் பட்டியலிட்டிருக்கிறார்.
26.8.1953 இல் சென்னை உயர்நீதிமன் றத்தில் நீதிபதி இராஜகோபாலன் அய்.சி.எஸ், நீதிபதி சத்தியநாராயணராவ் அடங்கிய பெஞ்ச் இந்துமத சடங்குகளுக்கு விரோதமான வகையில் சடங்குகளை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணத்துடன் உருவாக்கப்பட்ட திருமண முறை ஆனபடியால் சுயமரியாதைத் திருமணம் சட்டப்படி செல்லத்தக்கதல்ல என்று தீர்ப்பு வழங்கினார்கள்!
சுயமரியாதைத் திருமணச் சட்டம் கொண்டு வருவதற்கு இராஜகோபாலாச் சாரியார் ஆட்சிக்காலத்திலும், காமராசர் ஆட்சிக் காலத்திலும் நடைபெற்ற முயற்சி களை இந்நூல் விரிவாக எடுத்துரைக்கின்றது. 1967 தேர்தலில் தி.மு.க. ஆட்சியைக் கைப்பற்றியவுடன் அறிஞர் அண்ணா பத்திரிகையாளர்களுக்கு அளித்த முதல் பேட்டியிலேயே சுயமரியாதைத் திருமணங் களைச் சட்டபூர்வமாகச் செல்லுபடியாக்கும் முயற்சிகளை மேற்கொள்வோம் என்று அறிவித்தார். அதன்படி சட்டம் கொண்டு வந்த போது பெரியார் சொன்ன திருத்தம் - அதில் தலைவர் கி.வீரமணி அவர்களின் பங்கு முதலியன இந்நூலில் விளக்கப்பட் டிருக்கின்றன. தமிழகத்தின் 70 ஆண்டுக் கால சமூகச் சீர்திருத்த வரலாற்றில் ஒரு முக்கியமான பகுதியை ஆவணப்படுத்திய மைக்காக நூலாசிரியரைப் பாராட்ட வேண்டும் என்று தினமணி' இந்நூலைப் பாராட்டியது குறிப்பிடத்தக்கதாகும்.
"சுயமரியாதைத் திருமண முறை, அவரவர் அறிவின் ஆழத்தைப் பொறுத்து அதில் நிகழ்வுகள் நீளலாம்; குறுகலாம்; மாற்றங்கள் ஏற்படலாம் - இறுதியில் இப்படி ஓர் அமைப்பு (Institution of marriage) என்பதே தேவையா? என்ற கட்டத்திற்குக் கூட சிந்தித்து, தேவையில்லை என்று அறிவின் உச்சிக்கே சென்று முடிவுகள் முளைக்கலாம் எனும் நூலாசிரி யரின் கருத்து பகுத்தறிவின் உச்சம் என்று சொல்லும் வண்ணம் நூலில் பதிவிடப்பட்டுள்ளமை போற்றத் தக்கதே! மனிதத்தின் தலைசிறந்த மாண்புகளில் ஒன்றே சுயமரியாதை! என்பது. மனிதம் - மொழி - இனம் மாண்புறப் பிறந்ததே சுயமரி யாதைத் திருமணம். அதன் தத் துவத்தை - வரலாற்றை ஆய்வு நோக்கில் அற்புதமாக வடித்தி ருக்கும் ஆசிரியரை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.
இராமாயண ஆய்வுச் சொற்பொழிவுகள்
சென்னையில் ஆசிரியர் கி.வீரமணி நிகழ்த்திய இராமாயண ஆய்வுச் சொற் பொழிவு 2003 ஆம் ஆண்டு நூலாக வெளியிடப் பெற்றது. இராமாயணங்கள் எத்தனை எத்தனை என பட்டியலிட்டி ருக்கின்ற ஆசிரியர், அது வருண தர்மத்தின் அரணாக இருக்கிறது என்றும், பெண் ணடிமையை நிலைநிறுத்துகின்றது என்றும் கூறி இராமாயணத்தைப் பெரியார் 1922 முதலே எதிர்த்து வந்ததை இந்நூலில் விவரித்திருக்கின்றார். இராமாயணத்திற்குப் பிறமாநிலங்களில் ஏற்பட்ட எதிர்ப்பையும் இந்நூலில் தெரிவித்திருக்கின்றார். அமிர்த லிங்கம் அய்யர் எழுதிய இராமாயண விமர்சா (Ramayana vimarasa), பவுலா ரிச்மன் எழுதிய ‘Questioning Ramayana’, ‘A south Asian Tradition’, இ.மு.சுப்ரமணியபிள்ளை சந்திரசேகர பாவலர் எனும் புனை பெயரில் எழுதிய இராமாயண ஆராய்ச்சி, இராசமாணிக் கனார் எழுதிய கம்பர் யார்?, இராகுல சாங் கிருத்தியாயன் எழுதிய வால்காவிலிருந்து கங்கை வரை?, பெரியார் எழுதிய இராமாயணப் பாத்திரங்கள், விகாஷா எழுதிய The Glimpses of Indian Culture,மறைமலை அடிகள் எழுதிய மாணிக்க வாசகர் வரலாறும் - காலமும், பிரேம்நாத் பாஸ் எழுதியThe shadow of Ramarajya over India’ வி.ஆர் நார்ளா எழுதிய ‘The Last word on Ramayana’ முதலிய நூல்களிலிருந்து ஆசிரியர் கி.வீரமணி மேற்கோள்கள் காட்டியிருக்கின்ற இராமாயண எதிர்ப்பு என்பது திராவிடர் கழகத்தின் முக்கியப் பணியாக இருக்கின்றது. ஆசிரியர் கி.வீரமணி ஆக்கிய இந்நூல் இராமாயண எதிர்ப்பை தீவிரமாகச் செய்திருக்கின்றது. தொடர்ந்து செய்தும் வருகின்றது. இராமன் - இன்று அரசியல் கருவியாகவும் ஆக்கப்பட்டுள்ள நிலையில், பண்பாட்டுப் படையெடுப்பு, அரசியல் ஆக்கிரமிப்பு, சனாதன சாம்ராஜ்யம், இராமராஜ்ஜியம் என்கிற ஆதிக்கப் போக்குகளை, ஆரியர் அடைந்துள்ள இன்றைய ஆபத்தான காலக்கட்டத்தினைத் திராவிட இனத்தவர் சிந்தித்துச் செயலாற்ற ஒரு கலங்கரை விளக்கைப் போல் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் இராமாயண ஆய்வுச் சொற் பொழிவுகள் சிறப்பான நூலாக தமிழர் சமுதாயத்துக்குப் பயன்படும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. இராமாயண அரசியலை, பழமையின் மீதான பக்தியைப் பதம் பார்த்திடும் கைக்கருவியே இந்நூல்.
வெறுக்கத் தக்கதே
பிராமணீயம்
சோ இராமசாமி துக்ளக்' இதழில் வெறுக்கத்தக்கதா பிராமணீயம் என்னும் தலைப்பில் தொடர் கட்டுரை எழுத, ஆசிரியர் கி.வீரமணி விடுதலை இதழில் வெறுக்கத்தக்கதே பிராமணீயம்! என்ற தலைப்பில் மறுப்புக் கட்டுரை எழுதினார். அக்கட்டுரைகளின் தொகுப்பே இந்நூல் ஆகும். பிராமணீயத்தின் சீர்கேடுகளை அப்பட்டமாக இந்நூல் விளக்குகின்றது.
திரு.சோ இராமசாமி அவர்கள் அவரது ஏடான துக்ளக் இதழில் வெறுக்கத்தக்கதா பிராமணீயம்? என்ற தலைப்பில் தொடர் கட்டுரை ஒன்றை எழுதப் போவதாக விளம்பரப்படுத்தியவுடன் அதற்கு மறுப்பாக வெறுக்கத்தக்கதே பிராமணீயம் என்ற தலைப்பில் கட்டுரைத் தொடர் வெளிவரும் என்று உண்மை வாசக நேயர்களுக்கு தமிழர் தலைவர் அறிவிப்புச் செய்தார். (துக்ளக் வார ஏட்டில் அதனை விளம்பரமாகவும் கூட கொடுத்தார்) சோ தமது முதல் கட்டுரையை 4.10.2000 துக்ளக் இதழில் எழுதினார்.
அக்கட்டுரைக்கு தமிழர் தலைவரும் பதிலாக 16.10.2000 உண்மை' இதழில் தொடங்கி அவர் எழுதிய கட்டுரைகளுக்கு மறுப்புக் கட்டுரைகளையும் தொடர்ந்து எழுதினார். அந்தக் கட்டுரைத் தொடரை அவர் முடித்த பிறகும் கூட தமிழர் தலைவர் விளக்கம் கருதி சில வாரங்கள் கூடுதலாகவும் எழுதினார். அதன் திரட்டே இந்த நூல்.
பிராமணீயம் என்ற ஒன்று தனியாக இல்லை என்பது போல சிற்சில சமயங்களில் சோ வாதாடுகிறார்! அப்படி ஒரு தத்துவ நடைமுறையும் இல்லை என்றால் அது வெறுக்கத்தக்கதல்ல என்று அவரோ, அவர் போன்றவர்களோ வாதாடவே முடியாது!
இருக்கிறது என்று எண்ணி அல்லது ஒப்புக் கொண்டு அதை நியாயப்படுத்தவே ஒரு தொடர் கட்டுரையை எழுதினார். பார்ப்பனீயத்தை, பார்ப்பனீயத்தின் பயங்கரவாதத்தை ஆணிவேறு அக்கு வேறாக வெளுத்து வாங்கிடும் நூல் இது.!
வெறுக்கத் தகுந்ததா பிராமணீயம்? என்ற தலைப்பில் சோ அவர்கள் தொடர் கட்டுரை எழுதியது எதைக் காட்டுகிறது? பிராமணீயம் - பார்ப்பனீயம் வெறுக்கத் தகுந்ததே என்ற கருத்து ஆழமாகப் பரவிய தால் தானே! முன்பெல்லாம் அலட்சியப் படுத்தி - இருட்டடித்து - பதில் சொல்லாமல் இருந்தவர்கள் இப்பொழுது அதற்குப் பதில் அளித் தாக வேண்டும் என்கிற கட்டா யத்திற்கு ஆளாகியுள்ளார்கள் எனும் நூலாசிரியர் கி..வீரமணி அவர்களின் கருத்தை எவரே மறுப்பர்?
ஒரு நூலுக்கு மறுப்பு நூல் என்பதையும் தாண்டி ஒரு தத்து வதத்துக்கு - ஒரு நிறுவனத்துக்கு - சாம, பேத, தான, தண்டத்தை யெல்லாம் பாவித்து தங்கள் ஆதிக்கத்தை எப்போதும் நிலைப்படுத்திக் கொள்ள வேண்டும் எனும் பார்ப்பனியத்துக்கு எதிரான ஒரு திராவிட போராயுதமே இந்நூல் என்பதே சரி. பார்ப்பனீயத்தைச் சதிராடும் படைக்கலனே ஆசிரியர்
கி.வீரமணி அவர்களின் இந்நூல்!
சங்கராச்சாரி யார்?
சங்கராச்சாரியார்? என்ற தலைப்பில் தலைவர் கி.வீரமணி ஆற்றிய பத்து ஆய்வுச் சொற்பொழிவுகளின் தொகுப்பே இந்நூலாகும். சங்கராச்சாரி ஒரு தனி மனிதரல்ல - அவர் ஒரு நிறுவனம் என்று கூறி, அதன் தலைமை என்ன? அது யாருக்குப் பயன்படுகிறது? எதற்குப் பயன் படுத்தப்படுகின்றது? என்பதை இச்சொற் பொழிவுகளில் விளக்குகின்றார் ஆசிரியர் கி.வீரமணி. பல்கலைக்கழகங்களில் டாக்டர் பட்டம் பெற விரும்பும் மாண வர்கள் எவ்வாறு சான்றுகளையும், ஆதா ரங்களையும் தயார் செய்து ஆய்வுக் கட்டுரை வெளியிடுகின்றனரோ அதே முறையில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் இந்த ஆய்வுச் சொற்பொழிவுகளை நிகழ்த்தி இருக்கின்றார். இந்த முயற்சிக்குப் பின்னால் இருக்கும் கடும் உழைப்பு நன்கு புலனாகிறது என்று உயர்நீதிமன்ற மேனாள் நீதிபதி பி.வேணுகோபால் இந்நூலினைப் பாராட்டிச் சான்று அளிப்பது குறிப்பிடத் தக்கதாகும்.
No comments:
Post a Comment