கவிஞர் யுகபாரதி
பெண்ணே உனது பெரும்பேற்றைப்
பேதமை கொண்டோர் மறைத்திடலாம்;
எண்ணாத் துயரில் உன்னை வீழ்த்தி
ஏளனம் செய்தே சிரித்திடலாம்;
ஆனால் அதனைத் தடுத்திடவே
அனலாய் எழுவார் ஆசிரியர்!
தானைத் தலைவர் அவரைவிட
தரணியில் இலையே வேறொருவர்!
பெண்ணே நீயும் அவர் புகழை
பேசத் துணிந்தால் விடுதலையே!
கண்ணீர் வாழ்வும் கரைந்துவிட
ஏறிடலாம் அரியணையே!
தாய்வழி வந்தோர் பெண்ணைத் தவிர்த்தல்
தகுமோ என்றே முழங்கிடுவார்!
பேய் என இன்றும் பெண்ணை இகழ்பவர்
பிணியைக் கொல்ல மருந்திடுவார்!
சாதனை செய்யப் பிறந்தவளென்று
பெண்ணே உன்னை ஊக்கிடுவார்!
வேதனை வெல்ல எழுந்திடு என்று
பெரியார் சிந்தனை ஊட்டிடுவார்!
ஆதாரத்தின் துணைகொண்டே
அமையும் அவரது உரை வீச்சு!
சேதாரங்கள் குறுக்கிட்டால்
தடுக்கும் அணையே அவர் மூச்சு!
ஆணவம் கொள்வோர் அய்யா எழுதும்
அறிக்கை கண்டால் திருந்திடுவார்!
சாவென உன்னை கொல்லத் துணியும்
செயலைச் சொல்லால் பொசுக்கிடுவார்!
காண்பவை எல்லாம் உனதேயென்று
கண்ணே உன்னை காத்திடுவார்!
மாண்புகள் கண்டே உயர்வாயென்று
மேலே மேலே ஏற்றிடுவார்!
பேராட்டத்தின் விலையென்ன?
அறிய அவரது நிழலாவோம்!
ஏமாற்றங்கள் எதும் இல்லை
பொழுதும் அவர்க்கே துணையாவோம்!
No comments:
Post a Comment