நாடகம், திரைப்படங்களில் மட்டுமல்ல - இயற்கையாகவே நகைச்சுவை உணர்வு உடையவர் கலைவாணர்.
ஒரு முறை வெளியூரிலிருந்து சென்னைக்குத் திரும்பி வந்து கொண்டிருந்த கலைவாணரின் வேன் விபத்துக்குள்ளானது. உயிர்ச் சேதம் ஏதுமில்லை. செய்தியறிந்த கலைவாணர் சென்னையிலிருந்து விபத்து நடந்த இடத்துக்கு விரைந்தார்.
வேனைச் சுற்றிப் பார்த்தார். பழங்கள் சிதறிக் கிடந்தன. அவற்றை எடுத்து அங்கிருந்தவர்களுக்கெல்லாம் கொடுத்துத் தானும் சாப்பிட்டார்.
ஒரு விரிப்பில் அமர்ந்து பேசிக் கொண்டு இருந்தார். அவ் வழியே சென்று கொண்டிருந்த பேருந்து நின்றது. பயணிகள் கலை வாணரைச் சூழ்ந்து கொண்டு விட்டனர். 'என்னவேன் இப்படிக் கவிழ்ந்து கிடக்குதே' என்று பரபரப்போடு கேட்டனர். 'கலைவாணர் சொன்னார்.
'ஒண்ணுமில்லே நடு வழியில் பழம் சாப்பிடனும்னு நினைச் சோம். அதான் வேனைக் இப்படி சாத்தி வச்சிப்புட்டு பழம் சாப்பிட் டுக்கிட்டிருக்கோம்" என்று சர்வ சாதாரணமாகச் சொன்னார். விபத்து நடந்தும்கூட கலைவாணருக்குப் பழச்சுவையும், நகைச் சுவையும் கலந்த உணர்வு!
***
ஒரு நண்பர் வீட்டுக்குக் கலைவாணரும் டி.ஏ. மதுரம் அவர்களும் சென்றனர். இருவருக்கும் 'டீ' கொடுத்தனர். 'டீ'யை ருசித்துச் சாப்பிடுவதைக் கண்ட நண்பர் கலைவாணரைப் பார்த்து 'டீ' எப்படி இருக்கிறது என்று கேட்டார்.
பக்கத்திலிருந்த மதுரம் அவர்களைப் பார்த்து 'டீ ஏ மதுரம்' என்று சட்டென்று பதில் சொன்னார் கலைவாணர். நகைச்சுவை உணர்வு என்பது அவருடன் பிறந்த ஒன்று.
***
"எனக்குக் குதிரை வண்டிக்காரர்களைக் கண்டால் மிகவும் மரியாதை உண்டு. அவர்கள் மாதிரி மற்றவர்கள் முன்னுக்கு வருவதில் அக்கறை கொண்டவர் யாரும் இல்லை. உங்களுக்கு இதில் சந்தேகம் இருந்தால் இன்றைக்கே ஒரு குதிரை வண்டியில் ஏறிப் பாருங்கள். நீங்கள் வண்டியிலே ஏறியதுமே 'முன்னுக்கு வா சார், முன்னுக்கு வா சார்' என்று சொல்லுகிறார்களா இல்லையா பாருங்கள்" என்று கூறினார் கலைவாணர்.
***
1934ஆம் ஆண்டு நாடகக் குழு ஏற்பாடு செய்திருந்த 'கம்பெனி' வீட்டில் நாடக நடிகர்கள் தங்கி இருந்தனர்.
நடிகர் எம்.வி. மணி பார்ப்பனர். அவரும் இதர பார்ப்பன நடிகர் களும் சமையல் அறையில் தனியே அமர்ந்து சாப்பிடுவார்கள்.
இந்த உயர் ஜாதித் திமிரை அடக்கவேண்டும் என்று கலை வாணர் திட்டம் போட்டார்.
ஒரு நாள் மணியும், பார்ப்பனர்களும் சமையலறையில் தனியே சாப்பிட்டுக் கொண்டு இருந்தனர். கலைவாணர் என்ன செய்தார்?
"என்னய்யா இது? எவ்வளவு நாழியா ரசம் கேட்கிறது? சேச்சே!"என்று சொல்லியபடியே என்.எஸ்.கே. இருவருடன் சமையல் அறைக்குள் சென்றார். ரசம் பாத்திரத்தைத் தூக்கிக் கொண்டு வந்தார். எம்.ஜி. ராமச்சந்திரனும், மற்றவர்களும் பொரி யல், கூட்டு, சாம்பார், மோர் பாத்திரங்களைக் தூக்கிக்கொண்டு வந்தனர். உணவுப் பாத்திரங்கள் தீட்டாகி விட்டன என்று புலம்பி பார்ப்பன நடிகர்கள் சாம்பாருடன் உணவை முடித்துக் கொள்ள வேண்டியதாயிற்று.
இது போல எத்தனை எத்தனையோ நிகழ்வுகள் கலைவாணர் வாழ்க்கையில் உண்டு.
No comments:
Post a Comment