பஞ்சாப் விவசாயிகள் பாடம் கற்பிப்பார்கள்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, December 4, 2020

பஞ்சாப் விவசாயிகள் பாடம் கற்பிப்பார்கள்!


  • அத்தியாவசிய பொருட்கள் சட்டத்திருத்தம்

  • வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம்

  • விவசாயிகளுக்கான விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசரச் சட்டம்


மேற்கண்ட சட்டத்திருத்தங்களை ஆராய்ந்து பார்த்தால் தான் இது விவசாயிகளுக்குக் கொடுக்கப்படும் நஞ்சு என்பது தெரியும்.


அத்தியாவசியப் பொருட்கள் சட்டத்திருத்தம் :


இது 1955-இல் கொண்டுவரப்பட்ட சட்டத்தின் மீதான திருத்தம் ஆகும். அதாவது உணவு பொருட்களை பதுக்குதல் மற்றும் செயற் கையாக விலை உயர்த்துவதை தடுக்கும் அந்தச் சட்டத்தில்தான் திருத்தம் கொண்டுவரப்படுகிறது.


இதனடிப்படையில் வெங்காயம், உருளைக்கிழங்கு, சமையல் எண்ணெய், எண்ணெய் வித்துக்கள், தானியங்கள், பயிறு வகைகளுக்கு இச்சட்டத்திருத்தம் விலக்களிக்கிறது.


இதனால் மேற்கண்ட பொருட்களின் விலைகள் தாறுமாறாக உயரும் வாய்ப்புள்ளது. ஏனெனில் இனி இவையனைத்தும் கார்ப்பரேட் கம்பெனிகளின் குடோன்களில்தான் பாதுகாக்கப்பட்டு இருக்கும்.


இவையனைத்துமே அன்றாட உணவு சார்ந்த பொருட்கள் ஆகும். நாடு முழுவதும் பலகோடி மக்கள் வறுமையிலும், வாங்கும் சக்தி இல்லாமலும் வாடுகின்றனர். இச்சட்டத் திருத்தத்தின் மூலம் இந்தியா முழுவதும் மக்கள் கொத்து கொத்தாக பட்டினியால் சாகும் அபாயம் ஏற்படும்.


வேளாண் உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் :


இது மாநில அரசுகளின் அதிகாரத்தை அடியோடு பறிக்கிறது. தமிழக விவசாயிகள் காஷ்மீர் வரை சென்று நேரடியாக கார்ப்பரேட் நிறுவனங்களிடம் விற்றுக் கொள்ளலாமாம். அங்கு உரிய விலை கிடைப்பதை கண்காணித்து அரசு உத்திரவாதப்படுத்துமாம். யாரி டம் கதை சொல்கிறார்கள்?


தற்போது அரசே உள்ளூரில் கொள்முதல் செய்து உரிய விலை கொடுப்பது என்ற நிர்வாக முறையுள்ள போதே அதை அதிகாரிகளும், அரசியல்வாதிகளும், வியாபார மாஃபியாக்களும் தங்களுக்கு சாதகமாக வளைத்துக் கொண்டு கொள்ளையடித்து வருகின்றனர்.


இனி அடிமாட்டு விலைக்குத்தான் விவசாயிகளின் விளை பொருட்களை முதலாளிகள் வாங்குவார்கள். "கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன், வானம் ஏறி வைகுண்டம் போன கதை" என்று கூறுவார்களே அதையே நம்மிடம் சொல்கிறார்கள்.


இனி வேளாண் விளை பொருட்களை கொள்முதல் செய்வதிலிருந்து இந்திய அரசு, மாநில அரசுகள் ஒதுங்கிக் கொள்ளும். கார்ப்பரேட் கொள்ளையர்கள் மட்டுமே விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்வார்கள். இந்திய உணவு கழகம் மூடப்படும். அப்புறம் ரேசன் கடைகளுக்கு என்ன வேலை ? இழுத்துப்பூட்டி திண்டுக்கல் பூட்டைப் போட்டுவிடுவார்கள்.


கார்ப்பரேட் முதலாளிகள் சந்தையில் நிர்ணயிப்பதுதான் விலை. இது கற்பனை அல்ல. ஆப்பிரிக்க நாடுகளைப் பாருங்கள்.


விவசாயிகளுக்கான விலை உத்திரவாதம் மற்றும் வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப்பாதுகாப்பு அவசரச் சட்டம் :


ஏற்கெனவே 24 வேளாண் பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதாரவிலை மய்ய அரசால் நிர்ணயிக்கப்படுகிறது. ஆனால் சேமிப்பில் இருப்பது அரிசி, கோதுமை மட்டுமே. அதுவும் அதானி போன்ற முதலாளிகளிடம் இருப்பதை விட குறைவாகவே உள்ளது.


எம்.எஸ்.சுவாமிநாதன் தலைமையிலான கமிட்டி, 50 விழுக்காடு இலாபம் கிடைக்கும் வகையில் விலை நிர்ணயம் அரசு செய்ய வேண்டும் என்று கூறியது. உண்மையில் நடப்பது என்ன ? தமிழக விவசாயிகள் ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.2400 தர வேண்டும் என்று கோரிவரும் நிலையில் அரசோ ரூ.1888 நிர்ணயித்துள்ளது. வெளிச் சந்தையிலும் ஆதார விலைக்கெல்லாம் யாரும் எடுப்ப தில்லை.


அரசே நேரடியாக அதிகாரம் செலுத்தும் போதே ஆயிரம் குளறுபடிகளும், ஊழலும் தலைவிரித்தாடுகின்றனஎனும் போது, இச்சட்டத்திருத்தமானது தனியார் முதலாளிகள் விலையை நிர்ணயிப்பதற்கு முழுச் சுதந்திரம் வழங்குகிறது. அரசு இனி குறைந்த பட்ச ஆதார விலையை நிர்ணயிக்காது. சந்தையில் முதலாளிகள் தீர்மானிக்கும் விலைக்கு விவசாயிகள் இனி விற்றாக வேண்டும். இது விவசாயத்தை விட்டு விவசாயிகளைத் தூக்கி  எறிவதன்றி வேறென்ன?


இனி கார்ப்பரேட் கொள்ளையர்களே ஒட்டுமொத்த இந்திய விவசாயத்தையும் தீர்மானிப்பார்கள். சிறு, குறு நடுத்தர விவசாயிகள் சுயசார்பை இழந்து கார்ப்பரேட் நிறுவனங்களின் குத்தகை விவசாயிகளாக மாறுவார்கள். மத்திய காலப் பண்ணையார்களின் இடத்தில் இனி கார்ப்பரேட் முதலாளிகளும், பன்னாட்டு உணவு கழகங்களும் ஓட்டுமொத்த விவசாயிகளையும் சுரண்டிக் கொழுப்பார்கள்.


இது விவசாயிகள் பிரச்சனை மட்டுமல்ல, உணவு உண்ணும் ஒட்டுமொத்த உழைக்கும் மக்களின் பிரச்சினை. வாழ்விழந்து வீதிக்கு வந்துவிட்ட விவசாயிகளும், வறுமையால் வாடும் கோடானு கோடி உழைக்கும் மக்களும் போராட்டக்களத்தில் இறங்கினால் அவர்களை ஒடுக்குவதற்கான வேலையை மட்டுமே இனி பாசிஸ்டுகள் செய்வார்கள். கார்ப்பரேட் - காவி பாசிசம் தலைவிரித்தாடும்.


 பஞ்சாப், அரியானா விவசாயிகளின் போராட்டத்தை ஒடுக்கலாம் என்று மனப்பால் குடிக்க வேண்டாம்.


மத்திய அரசின் வழக்கமான ஆணவப் போக்குக்கு தலைநகரைத் திணற அடிக்கும் இந்தப் போராட்டம் நல்ல பாடத்தைக் கற்பிக்கும் என்பதில் அய்யமில்லை.


இந்தியாவிலேயே மத்திய அரசின் வேளாண் சட்டங்களை வரவேற்கும் ஒரே மாநில அரசு தமிழ்நாடுதான் என்பது வெட்கக் கேடே!


No comments:

Post a Comment